இன்றைக்கு இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைகள், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சவால்கள் ஆகியவற்றைக் காணும் மக்கள், இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுத்து முஸ்லிம்களுடைய நிலை உயர்வது எவ்வாறு? அது இயலாத காரியம் என்ற கொள்கை முடிவுக்கு வந்து விடுகின்றார்கள். தோல்வி மனப்பான்மையானது, அவர்களைக் கவ்விக் கொண்டு, மன ரீதியாகக் கோழைகளாக மாற்றி விடுகின்றது. உண்மையில் இன்றைக்கு முஸ்லிம் உம்மத் மீது பொழியப்படும் ஏவுகணை போன்ற எதிர்ப்புகள் மிகவும் கொடூரமானவை தான், கடுமையானவை தான். ஆனால் இவற்றுக்கெல்லாம் ஈடு கொடுத்து, முஸ்லிம்களுடைய நிலையை சீர்திருத்துவது என்பது இயலாது காரியம் என்பது தவறான வாதமாகும். நம்முடைய முதல் குறைபாடு என்னவென்றால் நம்மைப் பற்றி நமக்கே சரியாகத் தெரியாதது தான். நம்மைப் பற்றிய சரியான கணக்கீடு நம்மிடையே கிடையாது என்பது தான். நாம் யார், நம்முடைய கொள்கை என்ன, நம்முடைய வாழ்க்கைப் போக்கு சரியானதா அல்லது பிழையானதா, நம்முடைய பண்புகள், நோக்கங்கள் எதனைச் சார்ந்தது, நம்மைச் சுற்றிலும் உள்ளவர்களிடம் நம்முடைய உறவு முறைகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதைப் பற்றிய மதிப்பீடு நம்மிடையே இருப்பது அவசியமாகும். எது ஒன்றை நம்மால் இயலவே இயலாது என்ற முடிவுக்கு வருகின்றோமோ, முயற்சித்தால் நிச்சயமாக அதனை நம்மால் சாதித்து முடிக்க முடியும் என்பதே உண்மையாகும். இறைவன் படைத்திருக்கின்ற படைப்புகளில் மாற்றங்களைச் செய்வது, விண்ணில் நீந்துகின்ற கோள்களின் இயக்கங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்பதைத் தவிர்த்து, மற்ற பிற மனிதர்களினால் செய்யக் கூடிய அனைத்தும்.., முயற்சி செய்தால் நம்மாலும் செய்ய முடியும் என்பதே நிதர்சனமாகும். இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான் : அல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனித்தீரா? இப்ராஹீம் கூறினார்; ''எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)'' என்று; அதற்கவன், ''நானும் உயிர் கொடுக்கிறேன். மரணம் அடையும் படியும் செய்கிறேன்'' என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; ''திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்; நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்!'' என்று (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்; தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும் கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை. (2:258) எனவே, எது நம்மால் முடியும், இன்னும் எதனை நம்மால் செய்யவே இயலாது, எவை நம்முடைய சக்திக்கும் அப்பாற்பட்டவை என்பதனைப் பிரித்துப் பார்க்க வேண்டும். உதாரணமாக, ஒருவருக்கு எது இயலாததாக இருக்கின்றதோ, அது இன்னொருவருக்கு மிகவும் எளிதானதாக இருக்கும் அல்லது குறிப்பிட்ட செயலை ஒருவருக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலாமல் இருக்கும், ஆனால் அதனை பல தடவைகளுக்குப் பிறகு அவரால் அதை நிறைவேற்றி விட முடியும். இன்னும் சில திட்டங்கள் சில இடங்களில் செயல்படுத்த இயலாத நிலை இருக்கும். ஆனால் அதே திட்டம் இன்னொரு பகுதியில் செயல்படுத்துவற்குண்டான அனைத்து சாதகங்களையும் பெற்றிருக்கும். ''இயலாமை'' என்பது நாம் எதைச் செய்கின்றோம், எங்கே செய்கின்றோம், எவ்வாறு செய்கின்றோம் என்பதைப் பொறுத்தது. ஆனால் ''நம்மால் முடியவே முடியாது'' என்பது, அந்தச் செயலுக்குரிய திட்டங்களை நாம் எவ்வாறு திட்டமிட்டிருக்கின்றோம் என்பதைப் பொறுத்தது, அதில் நம்முடைய ஆர்வம் மற்றும் உழைப்பு, செயல்திறன் ஆகியவற்றைப் பொறுத்தது. முந்தைய இயலாமை என்பதில் உள்ள ஆபத்து என்னவென்றால், தனிப்பட்ட அந்த நபரின் இயலாமை அல்லது அது சார்ந்த அம்சங்கள் இறுதியாக அவரை முடியவே முடியாது என்ற முடிவுக்குக் கொண்டு வந்து விடுகின்றது. நம்மால் முடியாததொன்று பிறருக்கு எளிதானது என்ற முடிவுக்கும் அவரால் வர இயலாமல் ஆகி விடுகின்றது. மேலும், அவரது இந்த முடிவின் காரணமாக, மற்ற மனிதர்களையும் அந்த முயற்சியில் ஈடுபடுவதனின்றும் தடுக்க விளைகின்றார், தான் தோல்வியடைந்ததற்கான காரணத்தையே இங்கும் கற்பிக்க விரும்புகின்றார். இன்றைக்கு நம்முடைய முஸ்லிம் சமுதாயத்திற்குத் தேவையானதெல்லாம், ''உன்னால் முடியும்'' என்ற தன்னம்பிக்கையை ஊட்டுவதொன்றே அறிஞர்கள் மற்றும் உலமாக்களின் பணியாக இருக்க வேண்டும். மன ரீதியாக அவர்களைத் தயார் செய்வது இன்றைக்கு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது. ஏனெனில், பல மனிதர்கள் இன்றைக்கு, ''என்னால் முடியாது'', ''கனவிலும் நடந்தேறாதது'' என்று கூறுவதானது அவர்களின் பலவீனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது. இத்தகைய பலவீனர்கள் இஸ்லாத்தின் பலத்திற்கு வலுச் சேர்க்க மாட்டார்கள் என்பது நிதர்சனம். இயலுமான வகையில் சட்ட ரீதியாகவும், வளங்கள் ரீதியாகவும் நாம் எதிர்பார்க்கின்ற அந்த இஸ்லாமிய மறுமலர்ச்சியை அடைவதற்காக கடினமாக உழைக்க வேண்டிய தேவையில் இருக்கின்றோம் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்..! இந்த உலகத்தில் சாதனைகளைப் படைத்த அனைவரும் ஒரே முயற்சியில் சாதனையின் சிகரத்தைத் தொட்டு விடவில்லை. மாறாக, பல தடவைகள் தடுக்கி விழுந்தார்கள், தடுமாற வைக்கப்பட்டார்கள். ஆனால் அவை எல்லாம் அவர்களிடம் சோர்வை உண்டாக்கவில்லை. மாறாக, சுவற்றில் எறிந்த பந்தாக மீண்டும் மீண்டும் எழுந்தார்கள். தோல்விக்கான காரணத்தைத் தேடினார்கள். தவறைத் திருத்தி மறுபடியும் மறுபடியும் முயற்சித்தார்கள். அவர்கள் சாதனைச் சிகரத்தை எட்டும் வரை ஓயவில்லை. இன்னும் உலகப் புகழ் பெற்ற புத்தகங்கள் யாவும் ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்டவை அல்ல. மாறாக, பல தடவை அடித்தல், திருத்தல் போன்றவற்றிற்கு உட்பட்டு, விடுபட்டுப் போன கருத்துக்களை இணைத்து, சேர்த்து, சுருக்கி என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வெளிவந்து, வெற்றி பெற்றன என்பது தான் உண்மை. நமது விவாதங்களில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது இல்லாமல், அதனை விட நாம் எதனைச் செய்து முடித்தால் வெற்றி நமது கரங்களில் தவழும் என்பதாக நமது பார்வை இருக்கட்டும். நாமும் அந்த சுலோகத்தை சொல்லிக் கொள்வோமா? ''முடியவே முடியாது என்று என்னிடம் சொல்லாதீர்கள்''. |
Sunday, February 12, 2012
முடியாது என்பதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment