Sunday, April 15, 2012

அழைப்புப் பணி



தங்களது தாயகத்தை விட்டு விட்டு அந்நிய பூமியில் வசிக்கக் கூடிய முஸ்லிம்கள், தற்பொழுதுள்ள கால கட்டத்தில் இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடிய முஸ்லிம்களாக தங்களை சொல்லாலும், செயலாலும் மாற்றிக் கொள்வது அவசியமானதொன்றாகும்.

ஏனெனில், இன்றைய மேலை நாட்டுச் சமூகம் இதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட்டு உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்காக ஒரு ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நீங்களும், உங்களது பழக்க வழக்கங்களும், பண்பாடுகளும் இஸ்லாத்திற்குச் சான்று பகர வேண்டுமே ஒழிய, இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை ஏற்படுத்தி விடக் கூடாது. இதற்கான காரணம் மிகவும் பாரதூரமானது. பல புதிய சகோதரர்களிடம் உங்களை இஸ்லாத்தில் கவர்ந்த அம்சம் எது என்று கேட்கும் பொழுது, பலர் தங்களுடன் பழகும் நபர்கள் மூலமாக, அதைப் போலவே வணக்க வழிபாடுகள் மூலமாக ஈர்க்கப்பட்டதாக விளக்கமளித்திருக்கின்றார்கள்.

எனவே, பெரும்பான்மை சமூகத்தில் சிறுபான்மையினராக வாழக் கூடிய முஸ்லிம்கள் இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடியவர்கள் தங்களது நடத்தைகளை மாற்றிக் கொள்வதே ஒரு மிகப் பெரிய அழைப்புப் பணியாகும்.


சில அறிவுரைகள்


உங்களது சொல்லும் செயலும் இறைவனுக்கு அடிபணிந்து இருக்கட்டும். உங்களது செயல்பாடுகள் எப்பொழுது இறைவனையும் அவனது தண்டனையையும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கட்டும். இதன் மூலம் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தையும் பிற சமூக பழக்கவழக்கங்களின் பாதிப்பிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மற்ற கலாச்சாரங்களுக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதையும், மற்ற கலாச்சாரங்களினால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறுவது அவசியமாகும்.

ஷரீஆ அங்கீகரிக்காத எந்தவொரு வணக்க வழிபாடுகள், பழக்க வழக்கங்களை சற்றும் அனுமதிக்கக் கூடாது. இதற்கு ஷரீஅத் அனுமதித்த மற்றும் அனுமதி வழங்காத அம்சங்கள் பற்றிய தெளிந்த அறிவு இருப்பது அவசியமாகும். இன்னும் பிக்ஹு போன்ற இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைச் சட்டங்கள் (ஒளு, குளிப்பு, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.. இன்னும்) போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவும், தகுந்த சந்தர்ப்பங்களில் இவற்றைக் கையாண்டு, சிறு உரைகள் வழங்கக் கூடிய திறமையும் பெற்றிருத்தல் அவசியமாகும்.

திருமறைக் குர்ஆனை தெளிவாக ஓதக் கூடிய மற்றும் அதன் சில வசனங்களுக்காகவாவது பொருளுடன் விளக்கமளிப்பதற்கு தங்களை பயிற்று வித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சமூகத்தில் உள்ளவர்களை ஒர் அணியில் நின்று, கூட்டுத் தொழுகை (ஜமாத்) நிறைவேற்றுவதற்கு தூண்டிக் கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தின் அனைத்துச்செய்திகளும் அனைவருக்கும் பொதுவானவை, அனைத்து மக்களுக்கும் அருளப்பட்டவை என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்வதோடு, இது நமக்கு மட்டும் அருளப்பட்ட மார்க்கம் என்ற சுயநலத்தைக் கைவிட்டு, இஸ்லாமியச் செய்திகள் அடையாத உள்ளங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் பற்றி தெளிவான விளக்கத்தை மாற்றுமத நண்பர்களுக்கு வழங்க வேண்டியது, முஸ்லிம்களின் மீதுள்ள கடமையாகும். இன்றைக்கு மாற்றுமத நண்பர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி தவறான அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களது உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக புரிந்துணர்வு நிறைந்து கிடக்கின்றது. அவற்றை உரிய முறையில் விளக்கமளித்துக் களைய வேண்டியது, அவர்களைச் சுற்றி உள்ள முஸ்லிம்களின் மீதான கடமையாகும்.





No comments:

Post a Comment