Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Monday, October 17, 2011

அறிவைத் தேடி...!

            
மௌலானா மௌதிதியின் குத்பா உரை ஒன்றிலிருந்து.




புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே,  இறைவனின்; தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களைப் பின்பற்றி வாழும் அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறுகின்றான்:

''அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?  நல்லுபதேசம் பெறுவோரெல்லாம்; அறிவுடையோரே!'  (அல்குர்ஆன் 39:9)

என்னருமைச் சகோதரர்களே!

நாம் அனைவரும் ''சுவனத்தை'' அடையவே விரும்புகிறோம்... ஆம் எந்த ஒரு ஆரோக்கியமான மனமும் ''சுவர்க்கம்'' எனும் சுந்தரவனப் பாதையை விரும்பாமலும் நரகம் எனும் நாசகாரப் பாதையை வெறுக்காமலும் இல்லை.  ''சுவனச் சோலையில்... பரவச பானங்கள், பல்சுவைக்கனிகள், முத்தழகுக்கன்னிகள், எழில்மிகும் இல்லங்கள்... இன்னும் உளம் கொள்ளை கொள்ளும் யாவையும்'' உயர்நாயன் தருவதாய் வாக்களித்துள்ளான்.  எனவே நாம் சுவர்க்கத்தை அடைவது  எப்படி?  நரகத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவது எப்படி? வெந்ததைத் தின்றுவிட்டு விதி வந்துச் செத்தால் சுவர்க்கம் கிடைத்துவிடுமா?.  சுவர்க்கம் யாருக்கு...? சிந்திக்கவேண்டாமா...?

''முஸ்லிமுக்கும் மாற்றாருக்கும் பாரதூர வேறுபாடு''!

இறை நிராகரிப்பாளனைவிட (காஃபிரை விட) ''முஸ்லிமை'' இறைவன் விரும்புகின்றான் இறை நிராகரிப்பாளனை அவன் விரும்புவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிந்ததுதான்.  ''ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கக்  கூடிய) செயல்களைச் செய்யாத ஏகத்துவக் கொள்கையுடைய முஃமின்கள்,  அவர்கள் செய்த பாவங்களுக்காக நரகத்தில் சில காலம் தண்டிக்கப்பட்டாலும்  காஃபிர்களைப் போன்று அவர்கள் நரகத்தில் நிரந்தரமாகத் தங்கப்போவதில்லை'' என்பது பரவலாகத் தெரிந்த குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் மூலம் நிரூபணமான ஒன்றாகும். முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் ஏன் இத்தனைப் பெரிய வேற்றுமை? முஸ்லிமாகிய நாம் எப்படி மனிதர்களாகவும், கை, கால்களுடனும் இருக்கின்றோமோ அதைப்போலத்தான் இறை நிராகரிப்பாளனும் இருக்கின்றான். பிறகு ஏன் உங்களுக்கு சுவர்க்கம்? அவர்களுக்கு மட்டும் நரகம் . . . . ???

''அர்த்தமுள்ள வினா''?...

இது சற்று சிந்திக்க வேண்டிய பிரச்சனைதான். பிராமணப் பூசாரி ஒருவன் ''பொருள் தெரியாமல் சமஸ்கிருத மந்திரத்தைச் சொல்வது போல்'', ஒருவன் பொருள் தெரியாமல் அரபிச் சொற்களை சொல்வதனால்தான் இந்த வேறுபாடா? அல்லது நீங்கள் அப்துல்லாஹ் என்றும் அப்துல் ரஹீம் என்றும் பெயரிட்டு அழைத்துக் கொள்கின்றீர்கள். முஸ்லிம்கள் அணிவதுபோல் ஆடை அணிகின்றீர்கள், கத்னா செய்து கொள்கின்றீர்கள், இறைச்சி சாப்பிடுகின்றீர்கள் இதனால்தான் இந்த வேறுபாடா? இத்தகைய அற்பக் காரணங்களுக்காக படைப்பினங்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி ஒருவனை சுவர்க்கத்திற்கும் மற்றொருவனை நரகத்திற்கும் அனுப்புகின்ற அநீதியை, நீதி மிக்க இறைவன் செய்வானா?

''முஸ்லிம்'' என்றால் இனத்தவரின் பெயரா?

சற்று சிந்தனை செய்யுங்கள்! நீங்கள் முஸ்லிம் என்று சொல்கின்ற வார்த்தையின் கருத்தென்ன? மனிதன் தாய் வயிற்றிலிருந்தே இஸ்லாத்தைத் தன்னோடு கொண்டு வருகின்றானா? முஸ்லிமுடைய மகன் அல்லது முஸ்லிமுடைய பேரன் என்னும் வாரிசு அடிப்படையில் மட்டுமே ஒரு மனிதன் முஸ்லிமாகின்றானா?

பிராமணனுக்குப் பிறந்தவன் பிராமணனாகின்றான். ஹரிஜனனுக்குப் பிறந்தவன் ஹரிஜனனாகின்றான். இப்படியே முஸ்லிமுக்குப் பிறந்தவனும் முஸ்லிமாகிவிடுகின்றானா?  பிறப்பினாலோ, பரம்பரையினாலோ ஏற்பட்ட உறவு முறைக்குத்தான் முஸ்லிம் என்று பெயரா?

''பொருத்தமுள்ள விடை''!

  இவற்றிற்கு நீங்கள் என்ன விடையளிப்பீர்கள்? இல்லை சகோதரரே இல்லை! ஒரு மனிதன் பிராமணனாயிருந்தாலும் ஹரிஜனனாக இருந்தாலும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றினால் அவனும் முஸ்லிம்களில் ஒருவனாக விளங்குவான். முஸ்லிம் வீட்டில் பிறந்த ஒருவன் இஸ்லாத்தைப் பின்பற்றுவதைத் துறந்துவிட்டால், அவன் இஸ்லாமிய சமூகத்திலிருந்து வெளியே போய்விடுவான்! அதாவது இஸ்லாத்தைப் பின்பற்றுவதனால்தான் ஒருவன் முஸ்லிமாகின்றான். இஸ்லாத்தை நிராகரிப்பதனால்தான் ஒருவன் காஃபிராகின்றான்,  என்றுதானே பதில் கூறுவீர்கள்?

''புலப்படும் உண்மை''!

அப்படியானால் உங்களின் பதிலில் இருந்து ஓர் உண்மை தெளிவாகிறது. அதாவது முஸ்லிம் என்பது வாரிசு சொத்து அல்ல,   நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது நம்முடனேயே வாழ்நாள் முழுதும் ஒட்டிக்கொண்டிருக்க, அந்தப் பேற்றினை அடைவதற்கு நாம்தான் முயற்சி செய்யவேண்டும். முயற்சி எடுத்தால் அது நமக்குக் கிடைக்கும். அலட்சியம் செய்தால் அது கை நழுவிப் போய்விடும். அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக. ஆக, நாம் முஸ்லிம் ஆக விளங்குவதற்கு மற்ற அனைத்தையும் விட முதன்மையானது ''இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கு நாம் எடுக்கும் முயற்சி''தான்.

முயற்சியினால்; பெற்ற ''அறிவும் அறிவார்ந்த செயலும்''!

முஸ்லிமுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் வேற்றுமை தோற்றுவிக்கக்கூடியவை இரண்டு,  முதலாவது அறிவு  (மழெறடநனபந)  இரண்டாவது செயல் (னநநன).

ஒரு பிராமணன் அவனுடைய மதத்தைப் பற்றிய அறிவே இல்லாமல் பிராமணனாக வாழ முடியும்..., அவன் பிராமணனுக்குப் பிறந்ததால்; இவ்வுலகத்தைப் பொறுத்தவரை உயர்ந்தவனாக கருதப்படுகின்றான். ஆனால் ஒருவன் அறிவே இல்லாமல் முஸ்லிமாக வாழ முடியாது. ஒரு முஸ்லிம் உண்மையான முஸ்லிமாக விளங்குவதற்கு முக்கியமான ஒன்று  இஸ்லாத்தைப் பற்றிய அறிவு. இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கடமைகள் என்ன? திருக்குர்ஆனுடைய அறிவுரைகள் என்ன? அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏவியவைகள் என்ன? விலக்கியவைகள் என்ன? ஏகத்துவத்திற்கும் இணைவைத்தலுக்குமிடையில் உள்ள அடிப்படை வேற்றுமை என்ன? என்பன போன்ற அறிவை ஒவ்வொரு முஸ்லிமும் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய அறிவு இல்லாமல் ஒரு மனிதன் முஸ்லிமாக இருக்க முடியாது. ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால்,   இந்த அறிவை அடைவதுபற்றி நாம் சிந்தித்துப் பார்ப்பது கூட இல்லை!

''அறிவின் உயர்வும் அறியாமையின் இழிவும்''!

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சிலைகளை வடித்து, விற்கக்கூடிய மற்றும் வணங்கக்கூடியவனின் வீட்டில் பிறந்தார்கள். ஆனால் தன் அறிவினால் இறைவனைத் தெரிந்துக்கொண்டார்கள். அவனுடைய கட்டளைக்கு அடிபணிந்தார்கள். எனவே இறைவன் அவர்களை உலகம் முழுவதற்கும் தலைவராக ஆக்கினான். நபி நூஹ் (அலை) அவர்களின் மகன் இறைத்தூதரின் மகனாகப் பிறந்தான் என்றாலும் அவனுடைய அறியாமையின் காரணத்தால் இறைவனை அறிந்து கொள்ளவில்லை. இறைகட்டளைக்குப் பணியவில்லை. அதனால் இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் உலகமே படிப்பினை பெறும் வகையில் அவனை இறைவன் தண்டித்தான்.

''இறைவனின் கணிப்பும் மனிதனின் நினைப்பும்''!

ஆகவே நீங்கள் நன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். இறைவனிடத்தில் ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையிலுள்ள வேற்றுமை, அறிவையும் செயலையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.  அறியாமையால் தான் முஸ்லிமல்லாத நிலையிலுள்ள ஒருவன், ''இப்போதும்கூட நான் முஸ்லிமாகத்தானே இருக்கின்றேன்'' என்று அவன் தன்னைத்தானே நினைத்துக்கொள்வான். உண்மையில் அவன் ''முஸ்லிமாக'' இருக்க முடியாது.

''எளிய உவமையும் ஏற்றிவைத்த தீபமும்''!

இஸ்லாத்திற்கும்; குஃப்ருக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன? ஏகத்துவத்திற்கும் இணைவைத்தலுக்கும் இடையே உள்ள வேற்றுமை என்ன? என்று புரிந்து கொள்ளாத ஒருவனுக்கு நாம் இவ்வாறு உவமை கூறலாம்.

ஒரு மனிதன் கடும் இருள் சூழ்ந்த வேளையில் ஒற்றையடி பாதையில் நடந்து செல்கின்றான். அந்த நேரான பாதையில் சென்று கொண்டிருக்கின்ற அவனது கால்கள் அவனுக்கே தெரியாமல் தாமாகவே வேறு பக்கத்துக்குத் திரும்பிவிடவும் கூடும். இருள் சூழ்ந்திருக்கின்ற வேளையில் அவனால் அதனைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் தான் நேரான பாதையில் சென்று கொண்டிருப்பதாகத்தான் அவன் நினைத்துக்கொண்டிருப்பான். இது மட்டுமல்ல, வழியில் ஒரு தீயவன் நின்றுகொண்டு, ''நண்பரே! இருளின் காரணத்தால் உங்கள் வழி தவறிவிட்டது. என்னோடு வாருங்கள், நீங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு நான் அழைத்துச் செல்கிறேன்'' என்று சொன்னால், அறியாமையின் காரணத்தினால் அவனின்  சூழ்ச்சியினைப் புரிந்துகொள்ளாத இவன் தன்னுடைய கையை அந்தத் தீயவனின் கையில் கொடுத்துவிடுவான். அவன் இந்த மனிதனை வழிகெடுத்து எங்கெல்லாமோ அழைத்துச்செல்வான்.

இந்த மனிதனுக்கு ஏன் இப்படி ஆபத்து ஏற்படுகிறதென்றால்......? ''தன்னுடைய பாதையைக்காட்டுகிற அடையாளங்களைத் தானே தெரிந்துக்கொள்கிற ''அறிவு'' (மழெறடநனபந) என்னும் விளக்கு'' அவனிடம் இல்லை. ''அவ்விளக்கு'' இருந்திருந்தால் இவனை மற்றொருவனால் வழிகெடுக்க முடியாது.

'நமக்கென நாமே தொடுக்கும் வினாக்கள்''

நாம் முயற்சி செய்தது நடக்கவில்லை என்றால்..... ''அல்லாஹ் நாடியது நடந்து விட்டது என்று கூறாமல் அப்படி செய்தால் நடந்திருக்குமே, இப்படி செய்தால் முடிந்திருக்குமே'' என்று பேசி ஈமானின் கடமை ஒன்றுக்குக் குந்தகம் விளைவிக்கின்றோமா இல்லையா? ''மரணித்தவரிடத்தில் (அவுலியா போன்றவர்களிடத்தில்)  உதவிதேடுவது, சிபாரிசுதேடுவது, மரணித்தவரை அழைப்பது ஆகியவை ''இணைவைத்தல்'' என்னும்  மன்னிக்கமுடியாத, நிரந்தர நரகத்தை தேடிதரும் குற்றம்'' என்றும், ''பொய் பேசுவது இறைவனுடைய சினத்தைத் தேடித்தரும்'' என்றும், ''லஞ்சம் கொடுப்பவனையும் வாங்குபவனையும் நரகத்தில் தள்ளுவதாகவும்'' இறைவன் குறிப்பிட்டிருக்கின்றான். ''வட்டி கொடுப்பவனையும் வாங்கு பவனையும் மிக மட்டமான குற்றவாளிகள்'' என்றும் அவன் தீர்ப்பு வழங்கியிருக்கின்றான். ''புறம் பேசுவது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிடுவதற்கு நிகரானது'' என்று தெளிவாக அறிவுறுத்தியும் இருக்கின்றான். ''கெட்ட பேச்சு, வெட்கங் கெட்ட செயல் தரக்குறைவான நடத்தை ஆகியவற்றிற்குக் கொடிய தண்டனை உண்டு'' என்றும் அவன் குறிப்பிட்டிருக்கின்றான்.  ''தொழுகையை விட்டவர்களை நரகத்தில் வேதனை செய்வதாகவும்'' கூறுகின்றான். இவையெல்லாம் முஸ்லிம்களாகிய நம்மிடம் இருக்கின்றதா இல்லையா? இதற்குக் காரணம் மேலே கூறப்பட்ட விஷயங்களைப்பற்றிய ''அ...றி...வு'' நம்மிடம் இல்லாமையா? அல்லது ''அ...றி...வு'' இருந்தும் அதைச்செயல்படுத்தாமையா...? சிந்தியுங்கள்...?

''உனக்கேது உரிமை''?

''நிராகரிப்பாளன் (ஹலால்) அனுமதிக்கப்பட்;டதற்கும் (ஹராம்) தடுக்கப்பட்டதற்குமிடையில்'' வேற்றுமை பார்ப்பதில்லை. ''எந்தச் செயலில் தனக்கு நன்மையும் இன்பமும் இருக்கின்றனதோ'' அதனை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். (அது இறைவனிடத்தில் அனுமதிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, அனுமதிக்கப்படாமல் இருந்தாலும் சரியே!)  இதே நடத்தை ஒரு முஸ்லிமிடம் காணப்பட்டால் அவனுக்கும் இறை நிராகரிப்பாளனுக்கும் என்ன வித்தியாசம்?  மொத்தத்தில்  நிராகரிப்பாளனைப் போல் ஒரு முஸ்லிமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவு பெறாதிருந்தால்..., நிராகரிப்பாளன் செய்வது போன்ற செயல்களை அவனும் செய்தால்... அவனுக்கு எப்படி ''சுவனம்'' எனும் சிறப்பு கிடைக்க முடியும்???

''சிந்தனைக்குச் சில துளிகள்''!

  கண்ணியமிக்க சகோதரர்களே!  ''இறைவன் அருளிய திருமறையைத்'' தங்;கள்வசம் கொண்டுள்ள முஸ்லிம்களில் பலர்; ''நடந்து கொள்ளும் முறைகளும் செய்கின்ற கூத்துக்களும்'' பரிதாபத்துக்குரியனவாகவே இருக்கின்றன. ''இதே செயல்களை வேறொரு மனிதன்  செய்யக் கண்டால் அவனைப் பார்த்து எள்ளி நகையாடுவோம். பைத்தியக்காரன்'' என்று பட்டம் கொடுப்போம்,  அதையே நாம் செய்தால்......?

மருந்துண்ணல் நிவாரணமா? மாட்டித்தொங்கவிடும் தோரணமா?

ஒரு மனிதன் ஒரு மருத்துவரிடமிருந்து மருந்து ஒன்றைக் குறித்துக்கொண்டு வருகின்றான். ''அதனைப்படித்தால் மட்டும் நோய் நீங்கிவிடும்'' என்பது அவனது நினைப்பு அல்லது ''அதனைத் துணியில் மடித்து கழுத்தில் மாட்டிக் கொள்கின்றான் அல்லது அதனைக் கரைத்துக் குடிக்கின்றான்'' என்றால் அவனைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அவனுடைய செயலைப்பார்த்து சிரிக்க மாட்டீர்களா? அவனை முட்டாள் என்று நினைக்க மாட்டீர்களா?

''எல்லோரையும் விட சிறந்த மருத்துவனான இறைவன் உங்கள் நோய்க்கு நிகரற்ற மருந்தை அல்குர்ஆனிலிருந்தும், நபிமொழிகளிலிருந்தும் குறித்துக்கொடுத்திருக்கின்றான். ஆனால் அந்தக் குறிப்புகளுக்கு மாற்றமாக நம் கண்களுக்கு முன்னாலேயே இரவும் பகலும் இத்தகைய கூத்துக்கள்தான் நடந்து கொண்டிருக்கிறது, அப்படி இருந்தும் அதை நாம் அதிசயமாக பாhப்;பதுமில்லை, கவலைப்படுவதுமில்லை.

''தான் உடைத்தால் தங்கக்குடம் மாற்றான் உடைத்தால் மண்குடமா''?

''திருக்குர்ஆனை ஓதுவதால் மட்டுமே அல்லது கழுத்தில் தொங்கவிடுவதால் மட்டுமே அல்லது கரைத்து குடிப்பதால் மட்டுமே நோய்களும் பிரச்சினைகளும் போகும்'' என்றும் ''அதனுடைய அறிவுரைக்கு தக்கபடி நடக்க வேண்டியதில்லை அது தீங்கு என்று சுட்டிக்காட்டினால் தவிர்க்க வேண்டியதுமில்லை'' என்று நினைக்கின்றோம். இப்படியிருக்கும் போது தன்னுடைய நோய் நீங்குவதற்கு மருத்துவ நூலைப் படிப்பது ஒன்றே போதுமானது என்று நினைக்கிற நோயாளிக்கு நாம்; எந்தத் தீர்ப்பை வழங்குகின்றோமோ, அதே தீர்ப்பை நமக்கு நாமே ஏன்; வழங்கிக் கொள்வதில்லை?

''மறைமீது இல்லாத அக்கறை மடல்மீது மட்டுமேன்''?

நமக்கு தெரியாத மொழியிலே ஒரு கடிதம் நமக்கு வந்தால், அந்த மொழி தெரிந்தவரிடம் ஓடோடிச் செல்கின்றோம்;. அதிலுள்ள பொருளை நாம் தெரிந்துகொள்ளும் வரை நமக்கு அமைதி ஏற்படுவதில்லை. ஏதோ நாலுகாசு வரக்கூடிய சாதாரணக் கடிதங்களைப் பொறுத்தமட்டில் நாம் நடந்துகொள்ளும் முறையே இப்படி இருக்கும்போது, ஆனால் இம்மை மற்றும் மறுமையினுடைய செல்வங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு எல்லாம் தெரிந்த இறைவனிடமிருந்து ''நமக்கு அருட்கொடையாக'' வந்திருக்கின்ற ''கடிதத்தை'' அப்படியே போட்டுவைத்து விட்டோமே! ''அதிலுள்ள பொருளைப் புரிந்துகொள்ள வேண்டும்'' என்ற துடிப்பும் ''அதன் கட்டளைக்கேற்ப செயல்பட வேண்டும்'' என்ற எண்ணமும்;  நமக்கு ஏன் ஏற்படுவதில்லை?. இது சிந்தனையில் தெளிக்கத்தக்க விந்தைக்குறிய  விஷயமல்லவா...?

''சாலப்பொருத்தமுறும் மூலக்கருத்தென்ன''?

''உங்களில் ஒவ்வொருவரும் மௌலவி ஆகி (அறிஞராகி) பெரிய பெரிய நூல்களை படிக்க வேண்டும்'' என்றோ, ''கல்விக்காக பல ஆண்டுகள் செலவிட வேண்டும்'' என்றோ சொல்லவில்லை. ''ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரத்தையோ அல்லது அதில் பாதியையோ'' மார்க்க அறிவு பெறுவதற்காகச் செலவிடுங்கள்;. ''திருக்குர்ஆன் எந்த நோக்கத்திற்காக, என்ன அறிவுரையை கொண்டு வந்திருக்கிறது'' என்பதைத் தெளிவாகத் தெரிந்துக்;கொள்ளுங்கள்! ''பெருமானார் (ஸல்) அவர்கள் எதனை இவ்வுலகத்தில் நிலைப்படுத்துவதற்காக வந்தார்கள்'' என்பதனை நன்கு உணர்ந்து, ''முஸ்லிம்களுக்காக இறைவன் வகுத்துக்கொடுத்த தனிப்பட்ட வாழ்க்கை நெறி'' எதுவென்பதை அறிந்து  அதன்படி செயல்படுங்கள்.

அல்லாஹுத்தஆலா தன் திருமறையில் கூறுகின்றான்:

''உண்மையில், அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்'' (அல்குர்ஆன் 49:13)

மார்க்க அறிவினைப் பெற்று அதன்படி செயல்பட்டு ஈருலக வெற்றியினையும் அடைந்தவர்களாக நம் அனைவரையும்  அல்லாஹ் ஆக்குவானாக.








ARTICLE FROM A ONE REALISM







Tuesday, June 7, 2011

அறிவை இஸ்லாமிய மயமாக்கல்

   
“உலக நோக்கு” என்ற இச்சொற்றொடர் பிரபஞ்சம், அதில் மனிதனின் நிலை, மனித வாழ்வு ஆகிய மூன்றையும் பற்றிய கண்ணோட்டத்தையே குறிக்கின்றது. இக்கண்ணோட்டமே ஒரு குறிப்பிட்ட உலக நோக்கில் பிரதிபலிக்கின்றது. இந்த வகையில் மேற்கத்திய அரசியல், பொருளியல், கல்வி, கலாச்சாரம் சுருக்கமாகச் சொன்னால் வாழ்வியல் கோட்பாடுகள் அனைத்தும் மேற்கத்திய உலக நோக்கின் அடிப்படையிலேயே உருவாகின. இந்த உலக நோக்கு தோற்றம்பெற்ற ஐரோப்பிய வரலாற்றுச் சூழலை இங்கு நாம் விளங்குதல் அவசியமாகும்.
ஐரோப்பிய வரலாற்றில் 16,17ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வு கிறிஸ்தவ கோயிலுக்கும், அறிவியலாளர்களுக்குமிடை
யில் நடைபெற்ற மோதலாகும். இக்காலப் பிரிவில் கொப்பர்னிகஸ், கலிலியோ போன்ற அறிவியலாளர்களுக்கு எதிராக கிறிஸ்தவ கோயில் மேற்கொண்ட கடுமையான போக்கும், அவர்களது சுதந்திர சிந்தனையை ஒடுக்கி, கோயிலின் கருத்துத் திணிப்பையும், தன்னாதிக்கத்தையும் நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகளும், அறிவியலாளர்களையும், சிந்தனையாளர்களையும், கிறிஸ்தவக் கோயிலுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்தது. கிறிஸ்தவ கோயிலின் கொள்கைகளுக்கு எதிராக ஆரம்பமாகிய இப்போராட்டம் கிறிஸ்தவ மதத்திற்கெதிரான போராகவும், இறுதியில் மத நம்பிக்கைகள் அனைத்திற்குமே எதிரான ஓர் எழுச்சியாகவும் பரிணாமம் பெற்றது.
   மதத்திற்கு எதிரான இந்த சிந்தனைப் பாங்கின் விளைவாகவே சடவாதம் (Materialism), மதச்சார்பின்மை (Secularism) போன்ற கோட்பாடுகள் மேற்கில் தோன்றின. இதன் விளைவாக, மதம் மனித வாழ்வில் அதன் செல்வாக்கை இழந்தது. அறிவியல், முற்றிலும் சடவாத சிந்தனைப்பாங்கில் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
   மனித வாழ்வின் அனைத்து விசயங்களையும் அறிவியலின் துணை கொண்டு விளங்கவும், விளக்கவும் முடியும் என்ற கருத்து வலுப்பெற்றது. மனித ஆளுமை, உணர்வுகள், செயல்பாடுகள், வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள், மனித வரலாறு, சமூக மாற்றங்கள் அனைத்தும் சடரீதியாக அணுகப்பட்டு, பாகுபாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டது. புலன்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன
  இத்தகைய வரலாற்றுச்சூழலிலேயே இன்று Social Sciences என அழைக்கப்படும் சமூக விஞ்ஞானக் கலைகள் தோற்றம் பெற்றன.
  அறிவியல் வியத்தகு வளர்ச்சியைக் கண்ட காலப்பிரிவில், பௌதீகக் கலைகள் மிகச்சிறப்பான வளர்ச்சியைக் கண்டன. அறிவியலாளர்கள் அறிவியல் முறைமையைப் (Scientific Method) பயன்படுத்தி, பௌதிக விதிகளைக் கண்டுபிடித்து அவற்றின் அடிப்படையில் பௌதிக உலகையும், அதன் இயக்கம், மாற்றங்கள் பற்றியும் விளக்கினர். இந்த அறிவியல் முறைமையினால் தூண்டப்பட்ட சில சிந்தனையாளர்கள் மனித ஆளுமை, உணர்வுகள், செயல்பாடுகள், சமூக மாற்றம், வரலாற்று நிகழ்வுகள், அனைத்தையும் பௌதிக விதிகளைப் பின்பற்றி விளக்க முனைந்தனர். இவ்வாறு அறிவியல் முறைமையைப் பயன்படுத்தி, சமூக வாழ்வு, சமூக வளர்ச்சி, சமூக மாற்றம், ஆகியவற்றை விளக்கும் முயற்சியின் ஊடாகவே சமூகக்கலைகள் தோற்றம் பெற்றன.
  சமூகவியல் கலைகள் என இன்று கொள்ளப்படும் கலைகள் அனைத்தும் 150 ஆண்டுகால வரலாற்றையே கொண்டுள்ளன. நவீன சமூகவியலின் தந்தையாக ஆகஸ்ட் காம்ட், (1798-1857) கருதப்படுகின்றார். சமூகவாழ்வு, மாற்றங்கள் ஆகியன பற்றிய ஆய்வானது பௌதீக கலைகளின் முறைமைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
  
பத்தொன்பதாம்  நூற்றாண்டளவில் இஸ்லாமிய உலகம் மேற்கின் அரசியல் ஆதிக்கத்தின் அறைகூவலை எதிர் நோக்கியது. முஸ்லிம் நாடுகள் படிப்படியாக மேற்கின் அரசியல் ஆதிக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டன. மேற்கத்தியவாதிகள் முஸ்லிம் உலகில் மூன்று முக்கிய திட்டங்களின் அடிப்படையில் செயல்பட்டனர்.
1. அரசியல் ரீதியாக முஸ்லிம் நாடுகளை அடிமைப்படுத்தல்.
2. பொருளாதார ரீதியாக முஸ்லிம் நாடுகளின் வளங்களைச் சுரண்டல்.
3. முஸ்லிம் உலகில் மேற்கத்திய மொழிகள் மற்றும் கல்வி முறையை அறிமுகப்படுத்தி, முஸ்லிம்களை கலாச்சார ரீதியாக அடிமைப்படுத்தி, இஸ்லாமிய பாரம்பரியத்திலிருந்து அவர்களை அந்நியப்படுத்தல். (Alienation).

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் புதிய மேற்கத்திய கல்விமுறையை அறிமுகப்படுத்திய மெக்காலே அதன் நோக்கத்தை மிக வெளிப்படையாகவே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
We must do our best to form a class who may be interpreters between us and the millions we govern – a class of persons, English in taste, in openion, in morals and in intellect
“நாங்கள் எங்களது கல்விமுறையின் மூலம் ஒரு வர்க்கத்தை உருவாக்குதல் வேண்டும். அவர்கள் எங்களுக்கும், நாங்கள் ஆட்சி புரிகின்ற இலட்சக்கணக்கான மக்களுக்குமிடையில், எங்கள் கருத்துக்கள், சிந்தனைகளை விளக்குபவர்களாக இருப்பார்கள். விருப்புக்கள், கருத்துக்கள், ஒழுக்கம், அறிவு அனைத்தைப் பொறுத்தளவிலும் அவர்கள் ஆங்கிலேயர்களாகவே இருப்பார்கள்”.
  மெக்காலேயின் இக்கருத்து கீழைத்தேய நாடுகளில் மேற்கத்திய கல்வியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட, அவர்களது கலாச்சாரப் பாரம்பரியத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சிந்திக்கும் வர்க்கத்தை உருவாக்குவதே மேற்கத்திய கல்வியின் நோக்கமாக அமைந்தது என்பதை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
        இஸ்லாமிய உலகில் மேற்கத்திய கல்வியை அறிமுகம் செய்ததன் நோக்கத்தை திரு. சட்டலியர் (Chatalier) LeMonde Musalman என்ற பிரெஞ்சு மாத இதழில் எழுதிய கட்டுரையில் காணப்படும் பின்வரும் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. “எங்களது கிறிஸ்துவ மிஷனரிகள், மறைமுகமான வழிகளில் முஸ்லிம்களின் விசுவாசத்தை பலவீன மடையச் செய்து சீர்குலைப்பதில் தோல்வியடைந்துவிட்டனர். இதனை மேற்கத்திய மொழிகளினூடாக கருத்துக்களைப் பிரசாரம் செய்வதன் மூலமே சாதிக்க முடியும். இந்த மொழிகளை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் இஸ்லாமிய உலகத்தை மேற்கத்திய கருத்துக்களோடு பரிச்சயமடையச் செய்ய முடியும். இந்த வழியின் மூலமாகவே முஸ்லிம்களின் தனித்துவத்தை இதுவரை பாதுகாக்கத் துணைபுரிகின்ற இஸ்லாமிய சன்மார்க்கக் கோட்பாடுகளை சீர்குலைத்தல், என்ற கிறிஸ்தவ பிரசார நிறுவனங்களின் குறிக்கோளை அடைதல் முடியும்.
  இஸ்லாமிய உலகம் அரசியல் ரீதியாக துண்டாடப்படும் போது ஐரோப்பிய கலாச்சாரம் அங்கு காலூன்றுவதற்கான வழிகள் திறக்கப்படும். இதனடியாக முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக பலவீன மடையும் நிலையானது, இயற்கையாகவே உருவாகும். மிகக் குறுகியகாலப் பிரிவிலேயே இஸ்லாமிய உலகமானது ஐரோப்பிய முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டுவிடும். ஐரோப்பிய கலாச்சார செல்வாக்கு காரணமாக முஸ்லிம்களின் சன்மார்க்க நம்பிக்கை பலவீனமடையும் போது, அவர்களிடத்தில் நலிவும் பலவீனமும் தோன்றும். இத்தகைய பலவீனம் முஸ்லிம் உலகம் முழுவதும் பரவிவிட்டால், முஸ்லிம்கள் முழுமையாக அவர்களது பாரம்பரியத்திலிருந்து வேர் பிடுங்கப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களால் மீண்டும் தலைதூக்கவே முடியாது.
   முஸ்லிம் உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய கல்வி முறையானது மிகப்பாரதூரமான கலாச்சார, பண்பாட்டு முறைகளை உருவாக்கியது. முஸ்லிம் உலகில் நிலவிய பாரம்பரிய இஸ்லாமிய கல்விமுறையை படிப்படியாக நலிவடையச் செய்து, அதனை காலத்திற்குப் பொருத்தமற்றதாக ஆக்கியது. அடுத்து அது இஸ்லாத்தை விட மேற்கத்திய மதச்சார்பற்ற கல்வியையும், மேற்கத்திய கலாச்சாரப் பெறுமானங்களை மதிக்கின்ற, மேற்கத்திய சடவாத ரீதியில் சிந்திக்கின்ற, சில நேரங்களில் இஸ்லாமிய பெறுமானங்களையே விமர்சிக்கின்ற ஒரு படித்த வர்க்கத்தை உருவாக்கியது.
  மேற்கத்திய கல்வியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட இப்பிரிவினர் முஸ்லிம்களின் பிற்போக்கான நிலைக்கு இஸ்லாத்தைக் காரணமாகக் கருதினர். இப்பாதிப்புக்களை நிவர்த்திக்கும் முயற்சியில் சில சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள் ஈடுபட்டனர். ஸர் ஸெய்யித் அஹ்மத்கான், முஹம்மத் அப்துஹு ஆகியோர் இவர்களுள் முக்கியமானவர்களாவர்.
   முஸ்லிம் உலகில் நிலவும் கல்வி முறையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரே வழி, பாரம்பரிய இஸ்லாமிய பாடத்திட்டத்தில், மேற்கத்திய அறிவியல் கலைகளை இடம்பெறச் செய்வதேயாகும் என்ற கருத்தை இவர்கள் கொண்டிருந்தனர். மேற்கத்திய கலைகள், அவற்றின் பெறுமானங்களைப் (Values) பொறுத்தளவில் நடுநிலையானவை என்ற அனுமானத்திலேயே இவர்கள் செயல்பட்டனர். மேற்கத்திய கலைகள் முற்றிலும் மேற்கத்திய ஒழுக்கப்பெறுமானங்கள், மதிப்பீடுகள் என்பவற்றின் அடிப்படையிலே கட்டி எழுப்பப்பட்டுள்ளனஎன்ற உணர்வை அவர்கள் பெற்றிருக்கவில்லை.
    இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகில் தோன்றிய இஸ்லாமிய எழுச்சியின் காரணமாக, முஸ்லிம் உலகம் மேற்கின் அரசியல் ஆதிக்கத்திலிருந்து மட்டுமன்றி, கலாச்சார, பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறல் வேண்டும் என்ற உணர்வு தோன்ற ஆரம்பித்தது. குர்ஆன், சுன்னாவினதும், முஸ்லிம்களின் கலாச்சாரப் பாரம்பரியங்களினதும் அடிப்படையிலே முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிறுவனங்கள் இஸ்லாமிய மயமாக்கப்பட்டு புணர் நிர்மாணம் செய்யப்படல் வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. முஸ்லிம்களைப் பொறுத்தளவில் அது ஒரு புது முயற்சியன்று.
   முஸ்லிம்கள் அவர்களது வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் கிரேக்க கதைகளை அரபுமொழியில் பெயர்க்கும் முயற்சியை மேற்கொண்டபோது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படுகின்ற கிரேக்க இதிகாசங்கள், நாடகங்களை மொழி பெயர்க்காது, முஸ்லிம்களுக்கு பயனளிக்கின்ற வானவியல், கணிதம், மருத்துவம் போன்ற துறை சார்ந்த நூல்களை மட்டுமே மொழி பெயர்த்ததில் இஸ்லாமிய மயமாக்கலின் ஆரம்ப வித்துக்களை நாம் காணமுடிகின்றது. இவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட கிரேக்க கலைகளில் காணப்பட்ட அரிஸ்டாட்டலின் தர்க்கமுறை, தீவிர பகுத்தறிவுக் கண்ணோட்டம் ஆகியவற்றில் காணப்பட்ட இஸ்லாத்துக்கு முரணான அம்சங்கள் தீவிர விசாரணைகளுக்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்தி, அவற்றை இஸ்லாமிய மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட அறிஞர்களில் இமாம் அல் – கஸ்ஸாலி, இமாம் இப்னு தைமியா போன்றோர் குறிப்பிடத்தக் கவராவர்.
  முஸ்லிம்கள் பேணி வளர்த்த அறிவியல் கலைகள் ஸ்பெயினூடாக ஐரோப்பாவிற்குப் பரவியதன் காரணமாக, ஐரோப்பாவில் தோன்றிய அறிவியல் கலைகள் முஸ்லிம்களின் உரிமை எனவும், அவற்றை இஸ்லாமிய மயமாக்கும் பணியில் முஸ்லிம்கள் ஈடுபடுதல் வேண்டும் எனவும் அல்லாமா இக்பால் 1930ல் “முஸாபிர்” என்ற தலைப்பிலான தனது கவிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அரபிகள் ஐரோப்பாவில் தங்களது இறக்கைகளை விரித்தபோது 
அறிவுக்கும், அறிவியலுக்கும்
ஒரு புது அஸ்திவாரமிடப்பட்டது.
பாலைவனவாசிகள்
நாட்டிய விதையின் மரத்தை 
ஐரோப்பியர்கள் பிடுங்கிவிட்டனர்.
அதனை இஸ்லாமிய மயமாக்குபவர்
எத்துனை பேறு பெற்றவர்கள்? 
இந்த தேவதை
எமது மூதாதையின் குவளையிலிருந்து வெளியேறியதாகும். 
அதனை மீண்டும் கைப்பற்றுங்கள். 
ஏனெனில்,
அது எங்களது வலையிலிருந்து புறப்பட்டது.” 
நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு இருபதாம் நூற்றாண்டில் முஸ்லிம் உலகில் தோன்றிய இஸ்லாமிய எழுச்சியின் பல்வேறுபட்ட விளைவுகளின் ஓர் அங்கமே இஸ்லாமிய மயமாக்கப்படல் பற்றிய கோட்பாடாகும். 
இஸ்லாமிய ஷரிஆ முஸ்லிம்களின் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக, பொருளாதார நிறுவனங்களைப் பொறுத்தளவிலும் பூரணமாக செயல்படுத்தப்படல் வேண்டும் என்ற சிந்தனையின் விளைவே இக்கோட்பாடாகும். 
இஸ்லாமிய மயமாக்கல் என்ற பரந்த கோட்பாட்டில், அறிவை இஸ்லாமிய மயமாக்குதல் என்ற அம்சம் மிக முன்னுரிமை பெறுகின்றது. சமூக நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள் என்பன இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு அடிப்படையாக இது விளங்குகின்றது. அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாட்டை பின்வருமாறு நாம் வரைவிலக்கணப்படுத்தலாம்.
“இஸ்லாமிய மயமாக்கல் என்பது மேற்கத்திய, சமூக அரசியல் கலைகளை, இஸ்லாமிய உலக நோக்கின் அடிப்படையில் எழுப்பப்பட்ட இஸ்லாமிய கல்விக்கோட்பாட்டின் வெளிச்சத்தில் புணர் நிர்மாணம் செய்தல்” என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.
  அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாட்டின் முன்னோடிகளாக பேராசிரியர் ஸெய்யித் நகீப் அல் – அத்தாஸ், முனைவர் இஸ்மாயில் ராஜி அல் – பாரூகி, தாஹா ஜாபிர் அலவானி ஆகியோர் பொதுவாகக் கொள்ளப்படுகின்றனர். குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில், இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தின் வழிநின்று நவீன காலத்தின் அறைகூவல்களை எதிர்கொள்ளும் ஒரு கல்விமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்கா முகர்ரமாவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தினால், சவூதி அரேபிய அரசாங்கத்தின் அனுசரனையுடன் 1977 – 82க்கும் இடைப்பட்ட ஐந்து வருடகாலப் பிரிவில் நான்கு சர்வதேச மாநாடுகள் இத்தொனிப்பொருளில் நடைபெற்றன. முதலாவது மாநாடு 1977ம் ஆண்டு மக்காவில் மன்னர் அஸீஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. 1980ல் இரண்டாவது மகாநாடு இஸ்லாமாபாத்தில் காயிதே ஆஸாம் பல்கலைகழகத்தில் நடைபெற்றது 1981ல் மூன்றாவது மகாநாடு பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் நடைபெற்றது.
இம்மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பரிந்துரைகள் Recommendation of four World Conferences on Islamic Education  என்ற தலைப்பில் இஸ்லாமிய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இத்தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமிய நாடுகளின் அமைப்பினால் (OIC) இஸ்லாமிய கல்விக்கான உலக மத்திய நிலையம் World Centre of Islamic Education என்ற அமைப்பு ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. 1977ல் மக்காவில் நடைபெற்ற முதலாவது கல்வி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டன.
1. Aims and Objectives of Islamic Education
இஸ்லாமிய கல்வியின் நோக்கங்களும், இலட்சியங்களும் 1979
2. Crisis in Muslim Education
முஸ்லிம் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகள் 1979
3. Curriculum and Teacher Education-
பாடவிதானமும், ஆசிரியர் கல்வியும் 1980
4. Social and Natural Sciences in Islamic Perspective – 
சமூக, அறிவியல் கலைகள் இஸ்லாமிய நோக்கு
5. Philosophy. Literature and Fine Arts -
தத்துவமும், இலக்கியமும் நுண்கலைகளும் 1981
6. Muslim Education in the Modern World -
நவீன உலகில் முஸ்லிம் கல்வி 1981
  மேலும் அறிவை இஸ்லாமிய மயமாக்கல், முஸ்லிம் சிந்தனையை புனர் நிர்மானம் செய்தல் போன்ற நோக்கங்களை அடையும் குறிக்கோளோடு 1981ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் “இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் (International Institute of Islamic Thought) நிறுவப்பட்டது. சிறந்த ஆளுமை கொண்ட முஸ்லிம் புத்திஜீவிகள் இதில் அங்கம் வகிக்கின்றனர். அறிவை இஸ்லாமிய மயமாக்கும் பணியில் பல ஆய்வுகளையும் நடத்தி, அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனோடு பல்வேறு துறைகள் சார்ந்த கல்விமான்களை ஆய்வுத் துறையில் ஈடுபடுத்தி, அக்கலைகள் தொடர்பான நூல்களையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
  இத்துறையில் அக்பர் S. அஹ்மத் அவர்கள் இஸ்லாமிய மானிடவியல் தொடர்பாக எழுதிய Towards Islamic Anthropology என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இல்யாஸ்பாயூனூஸ் இஸ்லாமிய சமூகவியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்நிறுவனம் உளவியலை இஸ்லாமிய மயமாக்குதல் தொடர்பாக ஒரு கருத்தரங்கை கெய்ரோவில் 1979 இல் நடத்தியது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் “அப்ஹாஸ் நத்வதி இல்மின் நப்ஸ்” என்ற தலைப்பில் அரபு மொழியில் வெளியிடப்பட்டது. அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் இஸ்லாமிய மயமாக்கல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் “Islamization of Attitudes and Practices in Science and Technology” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன.
  இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம், அறிவை இஸ்லாமிய மயமாக்கல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கல்விமான்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் Journal of Islamic Social Sciences இஸ்லாமிய சமூகக் கலைகளுக்கான சஞ்சிகை என்ற ஆய்வுச் சஞ்சிகையை வெளியிடுகிறது. கேம்பிரிஜில் உள்ள The Islamic Academy என்ற நிறுவனம் இத்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை Muslim Education என்ற அதன் காலாண்டிதழில் வெளியிட்டு வருகின்றது.
 உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியின் பயனாகத் தோன்றிய அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாடு இன்று மிகப்பிரபல்யமும், செல்வாக்கும் பெற்றுள்ளது. முஸ்லிம் உம்மத்தின் மீட்சியானது, மேற்கின் சிந்தனா ரீதியுள்ள கலாச்சார பண்பாட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதிலேயே தங்கியுள்ளது என்ற அடிப்படை உண்மை எல்லா மட்டத்திலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாடு எமது காலப்பிரிவில் முஸ்லிம் உலகில் தோன்றியுள்ள சிந்தனைப் புரட்சியின் ஆரோக்கியமான அறிகுறியாகும்.

ARTICLE BY - M.A.M.SHUKRI [ JAMIYA NALEEMIYA SRI LANKA ]
{ FROM SMOOGANEETHI }
 

Tuesday, May 24, 2011

பயனுள்ள கல்வி

                                            பயனுள்ள கல்வி


1) சொத்துக்களை விற்று கல்வியை பெற்ற காலம் மலையேறி விட்டது.இன்று கல்வியை விற்று சொத்துக்களை வாங்கிக் குவிக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

2) இளைஞர்கள் அரபு நாட்டிற்கு செல்வதுதான் தங்கள் வாழ்வின் இலட்சியம் என்ற நிலையை விட்டு மாறவேண்டும். அரசு வேலைகளை முஸ்லிம் இளைஞர்கள் பெறுவதற்கு நம் சமுதாயத்தின் பங்கு என்ன? என்பதை சமூக ஆர்வலர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

3) நம் மூளையை செழிப்புள்ளதாக மாற்ற வேண்டியதில்லை, மாறாக நம் மூளையை தெளிவுள்ள மூளையாக மாற்றவேண்டும். ஒரு சமுதாயத்தை அழிக்கவேண்டு மென்றால் கல்வியில் மாற்றம் கொண்டுவந்தால் போதும். மேலை நாட்டின் காலச்சார சீரழிவின் பின்னனி என்ன? என்பதை ஆராய்ந்தால் இவ்விஷயம் தெளிவாக விளங்கும்.

4) மார்க்கக் கல்வியோடு கூடிய உலக்கல்வியே நமக்கு பயனளிக்கும். பயனுள்ள கல்வி என்பது ஒரு செழிப்பான நிலத்தில் பெய்யும் மழைபோன்றது. இறைவனை அஞ்சுபவனே உண்மையான அறிஞன், இறையச்சம் இல்லாதோர் வேதம் சுமக்கும் கழுதைகள்.

5) தீய அறிஞர்களிடமிருந்துதான் ஒரு சமுதாயத்திற்கு சாபக்கேடு உருவாகிறது. நல்ல ஆரோக்கியமான சமுதாயத்தை, சிறந்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு பள்ளி ஆசிரியர்கள் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அமானிதம் பற்றி மறுமையில் விசாரணை உண்டு.

 

Dr.KVS ஹபீப் முஹம்மது