Tuesday, June 7, 2011

அறிவை இஸ்லாமிய மயமாக்கல்

   
“உலக நோக்கு” என்ற இச்சொற்றொடர் பிரபஞ்சம், அதில் மனிதனின் நிலை, மனித வாழ்வு ஆகிய மூன்றையும் பற்றிய கண்ணோட்டத்தையே குறிக்கின்றது. இக்கண்ணோட்டமே ஒரு குறிப்பிட்ட உலக நோக்கில் பிரதிபலிக்கின்றது. இந்த வகையில் மேற்கத்திய அரசியல், பொருளியல், கல்வி, கலாச்சாரம் சுருக்கமாகச் சொன்னால் வாழ்வியல் கோட்பாடுகள் அனைத்தும் மேற்கத்திய உலக நோக்கின் அடிப்படையிலேயே உருவாகின. இந்த உலக நோக்கு தோற்றம்பெற்ற ஐரோப்பிய வரலாற்றுச் சூழலை இங்கு நாம் விளங்குதல் அவசியமாகும்.
ஐரோப்பிய வரலாற்றில் 16,17ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட முக்கிய நிகழ்வு கிறிஸ்தவ கோயிலுக்கும், அறிவியலாளர்களுக்குமிடை
யில் நடைபெற்ற மோதலாகும். இக்காலப் பிரிவில் கொப்பர்னிகஸ், கலிலியோ போன்ற அறிவியலாளர்களுக்கு எதிராக கிறிஸ்தவ கோயில் மேற்கொண்ட கடுமையான போக்கும், அவர்களது சுதந்திர சிந்தனையை ஒடுக்கி, கோயிலின் கருத்துத் திணிப்பையும், தன்னாதிக்கத்தையும் நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகளும், அறிவியலாளர்களையும், சிந்தனையாளர்களையும், கிறிஸ்தவக் கோயிலுக்கு எதிராகக் கிளர்ந்து எழச் செய்தது. கிறிஸ்தவ கோயிலின் கொள்கைகளுக்கு எதிராக ஆரம்பமாகிய இப்போராட்டம் கிறிஸ்தவ மதத்திற்கெதிரான போராகவும், இறுதியில் மத நம்பிக்கைகள் அனைத்திற்குமே எதிரான ஓர் எழுச்சியாகவும் பரிணாமம் பெற்றது.
   மதத்திற்கு எதிரான இந்த சிந்தனைப் பாங்கின் விளைவாகவே சடவாதம் (Materialism), மதச்சார்பின்மை (Secularism) போன்ற கோட்பாடுகள் மேற்கில் தோன்றின. இதன் விளைவாக, மதம் மனித வாழ்வில் அதன் செல்வாக்கை இழந்தது. அறிவியல், முற்றிலும் சடவாத சிந்தனைப்பாங்கில் வளர்ச்சியடைய ஆரம்பித்தது.
   மனித வாழ்வின் அனைத்து விசயங்களையும் அறிவியலின் துணை கொண்டு விளங்கவும், விளக்கவும் முடியும் என்ற கருத்து வலுப்பெற்றது. மனித ஆளுமை, உணர்வுகள், செயல்பாடுகள், வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகள், மனித வரலாறு, சமூக மாற்றங்கள் அனைத்தும் சடரீதியாக அணுகப்பட்டு, பாகுபாடு செய்யப்பட்டு விளக்கப்பட்டது. புலன்களின் அனுபவத்திற்கு அப்பாற்பட்ட அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன
  இத்தகைய வரலாற்றுச்சூழலிலேயே இன்று Social Sciences என அழைக்கப்படும் சமூக விஞ்ஞானக் கலைகள் தோற்றம் பெற்றன.
  அறிவியல் வியத்தகு வளர்ச்சியைக் கண்ட காலப்பிரிவில், பௌதீகக் கலைகள் மிகச்சிறப்பான வளர்ச்சியைக் கண்டன. அறிவியலாளர்கள் அறிவியல் முறைமையைப் (Scientific Method) பயன்படுத்தி, பௌதிக விதிகளைக் கண்டுபிடித்து அவற்றின் அடிப்படையில் பௌதிக உலகையும், அதன் இயக்கம், மாற்றங்கள் பற்றியும் விளக்கினர். இந்த அறிவியல் முறைமையினால் தூண்டப்பட்ட சில சிந்தனையாளர்கள் மனித ஆளுமை, உணர்வுகள், செயல்பாடுகள், சமூக மாற்றம், வரலாற்று நிகழ்வுகள், அனைத்தையும் பௌதிக விதிகளைப் பின்பற்றி விளக்க முனைந்தனர். இவ்வாறு அறிவியல் முறைமையைப் பயன்படுத்தி, சமூக வாழ்வு, சமூக வளர்ச்சி, சமூக மாற்றம், ஆகியவற்றை விளக்கும் முயற்சியின் ஊடாகவே சமூகக்கலைகள் தோற்றம் பெற்றன.
  சமூகவியல் கலைகள் என இன்று கொள்ளப்படும் கலைகள் அனைத்தும் 150 ஆண்டுகால வரலாற்றையே கொண்டுள்ளன. நவீன சமூகவியலின் தந்தையாக ஆகஸ்ட் காம்ட், (1798-1857) கருதப்படுகின்றார். சமூகவாழ்வு, மாற்றங்கள் ஆகியன பற்றிய ஆய்வானது பௌதீக கலைகளின் முறைமைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்படல் வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்தார்.
  
பத்தொன்பதாம்  நூற்றாண்டளவில் இஸ்லாமிய உலகம் மேற்கின் அரசியல் ஆதிக்கத்தின் அறைகூவலை எதிர் நோக்கியது. முஸ்லிம் நாடுகள் படிப்படியாக மேற்கின் அரசியல் ஆதிக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டன. மேற்கத்தியவாதிகள் முஸ்லிம் உலகில் மூன்று முக்கிய திட்டங்களின் அடிப்படையில் செயல்பட்டனர்.
1. அரசியல் ரீதியாக முஸ்லிம் நாடுகளை அடிமைப்படுத்தல்.
2. பொருளாதார ரீதியாக முஸ்லிம் நாடுகளின் வளங்களைச் சுரண்டல்.
3. முஸ்லிம் உலகில் மேற்கத்திய மொழிகள் மற்றும் கல்வி முறையை அறிமுகப்படுத்தி, முஸ்லிம்களை கலாச்சார ரீதியாக அடிமைப்படுத்தி, இஸ்லாமிய பாரம்பரியத்திலிருந்து அவர்களை அந்நியப்படுத்தல். (Alienation).

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியில் புதிய மேற்கத்திய கல்விமுறையை அறிமுகப்படுத்திய மெக்காலே அதன் நோக்கத்தை மிக வெளிப்படையாகவே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
We must do our best to form a class who may be interpreters between us and the millions we govern – a class of persons, English in taste, in openion, in morals and in intellect
“நாங்கள் எங்களது கல்விமுறையின் மூலம் ஒரு வர்க்கத்தை உருவாக்குதல் வேண்டும். அவர்கள் எங்களுக்கும், நாங்கள் ஆட்சி புரிகின்ற இலட்சக்கணக்கான மக்களுக்குமிடையில், எங்கள் கருத்துக்கள், சிந்தனைகளை விளக்குபவர்களாக இருப்பார்கள். விருப்புக்கள், கருத்துக்கள், ஒழுக்கம், அறிவு அனைத்தைப் பொறுத்தளவிலும் அவர்கள் ஆங்கிலேயர்களாகவே இருப்பார்கள்”.
  மெக்காலேயின் இக்கருத்து கீழைத்தேய நாடுகளில் மேற்கத்திய கல்வியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட, அவர்களது கலாச்சாரப் பாரம்பரியத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சிந்திக்கும் வர்க்கத்தை உருவாக்குவதே மேற்கத்திய கல்வியின் நோக்கமாக அமைந்தது என்பதை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
        இஸ்லாமிய உலகில் மேற்கத்திய கல்வியை அறிமுகம் செய்ததன் நோக்கத்தை திரு. சட்டலியர் (Chatalier) LeMonde Musalman என்ற பிரெஞ்சு மாத இதழில் எழுதிய கட்டுரையில் காணப்படும் பின்வரும் கருத்துக்கள் புலப்படுத்துகின்றன. “எங்களது கிறிஸ்துவ மிஷனரிகள், மறைமுகமான வழிகளில் முஸ்லிம்களின் விசுவாசத்தை பலவீன மடையச் செய்து சீர்குலைப்பதில் தோல்வியடைந்துவிட்டனர். இதனை மேற்கத்திய மொழிகளினூடாக கருத்துக்களைப் பிரசாரம் செய்வதன் மூலமே சாதிக்க முடியும். இந்த மொழிகளை முஸ்லிம்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் இஸ்லாமிய உலகத்தை மேற்கத்திய கருத்துக்களோடு பரிச்சயமடையச் செய்ய முடியும். இந்த வழியின் மூலமாகவே முஸ்லிம்களின் தனித்துவத்தை இதுவரை பாதுகாக்கத் துணைபுரிகின்ற இஸ்லாமிய சன்மார்க்கக் கோட்பாடுகளை சீர்குலைத்தல், என்ற கிறிஸ்தவ பிரசார நிறுவனங்களின் குறிக்கோளை அடைதல் முடியும்.
  இஸ்லாமிய உலகம் அரசியல் ரீதியாக துண்டாடப்படும் போது ஐரோப்பிய கலாச்சாரம் அங்கு காலூன்றுவதற்கான வழிகள் திறக்கப்படும். இதனடியாக முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக பலவீன மடையும் நிலையானது, இயற்கையாகவே உருவாகும். மிகக் குறுகியகாலப் பிரிவிலேயே இஸ்லாமிய உலகமானது ஐரோப்பிய முட்கம்பி வேலிகளால் சூழப்பட்டுவிடும். ஐரோப்பிய கலாச்சார செல்வாக்கு காரணமாக முஸ்லிம்களின் சன்மார்க்க நம்பிக்கை பலவீனமடையும் போது, அவர்களிடத்தில் நலிவும் பலவீனமும் தோன்றும். இத்தகைய பலவீனம் முஸ்லிம் உலகம் முழுவதும் பரவிவிட்டால், முஸ்லிம்கள் முழுமையாக அவர்களது பாரம்பரியத்திலிருந்து வேர் பிடுங்கப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களால் மீண்டும் தலைதூக்கவே முடியாது.
   முஸ்லிம் உலகில் அறிமுகப்படுத்தப்பட்ட மேற்கத்திய கல்வி முறையானது மிகப்பாரதூரமான கலாச்சார, பண்பாட்டு முறைகளை உருவாக்கியது. முஸ்லிம் உலகில் நிலவிய பாரம்பரிய இஸ்லாமிய கல்விமுறையை படிப்படியாக நலிவடையச் செய்து, அதனை காலத்திற்குப் பொருத்தமற்றதாக ஆக்கியது. அடுத்து அது இஸ்லாத்தை விட மேற்கத்திய மதச்சார்பற்ற கல்வியையும், மேற்கத்திய கலாச்சாரப் பெறுமானங்களை மதிக்கின்ற, மேற்கத்திய சடவாத ரீதியில் சிந்திக்கின்ற, சில நேரங்களில் இஸ்லாமிய பெறுமானங்களையே விமர்சிக்கின்ற ஒரு படித்த வர்க்கத்தை உருவாக்கியது.
  மேற்கத்திய கல்வியினால் மூளைச் சலவை செய்யப்பட்ட இப்பிரிவினர் முஸ்லிம்களின் பிற்போக்கான நிலைக்கு இஸ்லாத்தைக் காரணமாகக் கருதினர். இப்பாதிப்புக்களை நிவர்த்திக்கும் முயற்சியில் சில சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள் ஈடுபட்டனர். ஸர் ஸெய்யித் அஹ்மத்கான், முஹம்மத் அப்துஹு ஆகியோர் இவர்களுள் முக்கியமானவர்களாவர்.
   முஸ்லிம் உலகில் நிலவும் கல்வி முறையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரே வழி, பாரம்பரிய இஸ்லாமிய பாடத்திட்டத்தில், மேற்கத்திய அறிவியல் கலைகளை இடம்பெறச் செய்வதேயாகும் என்ற கருத்தை இவர்கள் கொண்டிருந்தனர். மேற்கத்திய கலைகள், அவற்றின் பெறுமானங்களைப் (Values) பொறுத்தளவில் நடுநிலையானவை என்ற அனுமானத்திலேயே இவர்கள் செயல்பட்டனர். மேற்கத்திய கலைகள் முற்றிலும் மேற்கத்திய ஒழுக்கப்பெறுமானங்கள், மதிப்பீடுகள் என்பவற்றின் அடிப்படையிலே கட்டி எழுப்பப்பட்டுள்ளனஎன்ற உணர்வை அவர்கள் பெற்றிருக்கவில்லை.
    இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகில் தோன்றிய இஸ்லாமிய எழுச்சியின் காரணமாக, முஸ்லிம் உலகம் மேற்கின் அரசியல் ஆதிக்கத்திலிருந்து மட்டுமன்றி, கலாச்சார, பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறல் வேண்டும் என்ற உணர்வு தோன்ற ஆரம்பித்தது. குர்ஆன், சுன்னாவினதும், முஸ்லிம்களின் கலாச்சாரப் பாரம்பரியங்களினதும் அடிப்படையிலே முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார நிறுவனங்கள் இஸ்லாமிய மயமாக்கப்பட்டு புணர் நிர்மாணம் செய்யப்படல் வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. முஸ்லிம்களைப் பொறுத்தளவில் அது ஒரு புது முயற்சியன்று.
   முஸ்லிம்கள் அவர்களது வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் கிரேக்க கதைகளை அரபுமொழியில் பெயர்க்கும் முயற்சியை மேற்கொண்டபோது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரண்படுகின்ற கிரேக்க இதிகாசங்கள், நாடகங்களை மொழி பெயர்க்காது, முஸ்லிம்களுக்கு பயனளிக்கின்ற வானவியல், கணிதம், மருத்துவம் போன்ற துறை சார்ந்த நூல்களை மட்டுமே மொழி பெயர்த்ததில் இஸ்லாமிய மயமாக்கலின் ஆரம்ப வித்துக்களை நாம் காணமுடிகின்றது. இவ்வாறு மொழி பெயர்க்கப்பட்ட கிரேக்க கலைகளில் காணப்பட்ட அரிஸ்டாட்டலின் தர்க்கமுறை, தீவிர பகுத்தறிவுக் கண்ணோட்டம் ஆகியவற்றில் காணப்பட்ட இஸ்லாத்துக்கு முரணான அம்சங்கள் தீவிர விசாரணைகளுக்கும், விமர்சனத்திற்கும் உட்படுத்தி, அவற்றை இஸ்லாமிய மயமாக்கும் முயற்சிகளை மேற்கொண்ட அறிஞர்களில் இமாம் அல் – கஸ்ஸாலி, இமாம் இப்னு தைமியா போன்றோர் குறிப்பிடத்தக் கவராவர்.
  முஸ்லிம்கள் பேணி வளர்த்த அறிவியல் கலைகள் ஸ்பெயினூடாக ஐரோப்பாவிற்குப் பரவியதன் காரணமாக, ஐரோப்பாவில் தோன்றிய அறிவியல் கலைகள் முஸ்லிம்களின் உரிமை எனவும், அவற்றை இஸ்லாமிய மயமாக்கும் பணியில் முஸ்லிம்கள் ஈடுபடுதல் வேண்டும் எனவும் அல்லாமா இக்பால் 1930ல் “முஸாபிர்” என்ற தலைப்பிலான தனது கவிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அரபிகள் ஐரோப்பாவில் தங்களது இறக்கைகளை விரித்தபோது 
அறிவுக்கும், அறிவியலுக்கும்
ஒரு புது அஸ்திவாரமிடப்பட்டது.
பாலைவனவாசிகள்
நாட்டிய விதையின் மரத்தை 
ஐரோப்பியர்கள் பிடுங்கிவிட்டனர்.
அதனை இஸ்லாமிய மயமாக்குபவர்
எத்துனை பேறு பெற்றவர்கள்? 
இந்த தேவதை
எமது மூதாதையின் குவளையிலிருந்து வெளியேறியதாகும். 
அதனை மீண்டும் கைப்பற்றுங்கள். 
ஏனெனில்,
அது எங்களது வலையிலிருந்து புறப்பட்டது.” 
நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு இருபதாம் நூற்றாண்டில் முஸ்லிம் உலகில் தோன்றிய இஸ்லாமிய எழுச்சியின் பல்வேறுபட்ட விளைவுகளின் ஓர் அங்கமே இஸ்லாமிய மயமாக்கப்படல் பற்றிய கோட்பாடாகும். 
இஸ்லாமிய ஷரிஆ முஸ்லிம்களின் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக, பொருளாதார நிறுவனங்களைப் பொறுத்தளவிலும் பூரணமாக செயல்படுத்தப்படல் வேண்டும் என்ற சிந்தனையின் விளைவே இக்கோட்பாடாகும். 
இஸ்லாமிய மயமாக்கல் என்ற பரந்த கோட்பாட்டில், அறிவை இஸ்லாமிய மயமாக்குதல் என்ற அம்சம் மிக முன்னுரிமை பெறுகின்றது. சமூக நிறுவனங்கள், பொருளாதார நிறுவனங்கள் என்பன இஸ்லாமிய மயமாக்கப்படுவதற்கு அடிப்படையாக இது விளங்குகின்றது. அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாட்டை பின்வருமாறு நாம் வரைவிலக்கணப்படுத்தலாம்.
“இஸ்லாமிய மயமாக்கல் என்பது மேற்கத்திய, சமூக அரசியல் கலைகளை, இஸ்லாமிய உலக நோக்கின் அடிப்படையில் எழுப்பப்பட்ட இஸ்லாமிய கல்விக்கோட்பாட்டின் வெளிச்சத்தில் புணர் நிர்மாணம் செய்தல்” என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.
  அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாட்டின் முன்னோடிகளாக பேராசிரியர் ஸெய்யித் நகீப் அல் – அத்தாஸ், முனைவர் இஸ்மாயில் ராஜி அல் – பாரூகி, தாஹா ஜாபிர் அலவானி ஆகியோர் பொதுவாகக் கொள்ளப்படுகின்றனர். குர்ஆன் ஸுன்னாவின் அடிப்படையில், இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தின் வழிநின்று நவீன காலத்தின் அறைகூவல்களை எதிர்கொள்ளும் ஒரு கல்விமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மக்கா முகர்ரமாவிலுள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தினால், சவூதி அரேபிய அரசாங்கத்தின் அனுசரனையுடன் 1977 – 82க்கும் இடைப்பட்ட ஐந்து வருடகாலப் பிரிவில் நான்கு சர்வதேச மாநாடுகள் இத்தொனிப்பொருளில் நடைபெற்றன. முதலாவது மாநாடு 1977ம் ஆண்டு மக்காவில் மன்னர் அஸீஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. 1980ல் இரண்டாவது மகாநாடு இஸ்லாமாபாத்தில் காயிதே ஆஸாம் பல்கலைகழகத்தில் நடைபெற்றது 1981ல் மூன்றாவது மகாநாடு பங்களாதேஷின் தலைநகரான டாக்காவில் நடைபெற்றது.
இம்மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பரிந்துரைகள் Recommendation of four World Conferences on Islamic Education  என்ற தலைப்பில் இஸ்லாமிய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இத்தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமிய நாடுகளின் அமைப்பினால் (OIC) இஸ்லாமிய கல்விக்கான உலக மத்திய நிலையம் World Centre of Islamic Education என்ற அமைப்பு ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது. 1977ல் மக்காவில் நடைபெற்ற முதலாவது கல்வி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டன.
1. Aims and Objectives of Islamic Education
இஸ்லாமிய கல்வியின் நோக்கங்களும், இலட்சியங்களும் 1979
2. Crisis in Muslim Education
முஸ்லிம் கல்வி எதிர்நோக்கும் பிரச்சினைகள் 1979
3. Curriculum and Teacher Education-
பாடவிதானமும், ஆசிரியர் கல்வியும் 1980
4. Social and Natural Sciences in Islamic Perspective – 
சமூக, அறிவியல் கலைகள் இஸ்லாமிய நோக்கு
5. Philosophy. Literature and Fine Arts -
தத்துவமும், இலக்கியமும் நுண்கலைகளும் 1981
6. Muslim Education in the Modern World -
நவீன உலகில் முஸ்லிம் கல்வி 1981
  மேலும் அறிவை இஸ்லாமிய மயமாக்கல், முஸ்லிம் சிந்தனையை புனர் நிர்மானம் செய்தல் போன்ற நோக்கங்களை அடையும் குறிக்கோளோடு 1981ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் “இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம் (International Institute of Islamic Thought) நிறுவப்பட்டது. சிறந்த ஆளுமை கொண்ட முஸ்லிம் புத்திஜீவிகள் இதில் அங்கம் வகிக்கின்றனர். அறிவை இஸ்லாமிய மயமாக்கும் பணியில் பல ஆய்வுகளையும் நடத்தி, அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனோடு பல்வேறு துறைகள் சார்ந்த கல்விமான்களை ஆய்வுத் துறையில் ஈடுபடுத்தி, அக்கலைகள் தொடர்பான நூல்களையும் இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.
  இத்துறையில் அக்பர் S. அஹ்மத் அவர்கள் இஸ்லாமிய மானிடவியல் தொடர்பாக எழுதிய Towards Islamic Anthropology என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. இல்யாஸ்பாயூனூஸ் இஸ்லாமிய சமூகவியல் தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்நிறுவனம் உளவியலை இஸ்லாமிய மயமாக்குதல் தொடர்பாக ஒரு கருத்தரங்கை கெய்ரோவில் 1979 இல் நடத்தியது. இதில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் “அப்ஹாஸ் நத்வதி இல்மின் நப்ஸ்” என்ற தலைப்பில் அரபு மொழியில் வெளியிடப்பட்டது. அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் இஸ்லாமிய மயமாக்கல் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் “Islamization of Attitudes and Practices in Science and Technology” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன.
  இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனம், அறிவை இஸ்லாமிய மயமாக்கல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கல்விமான்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் Journal of Islamic Social Sciences இஸ்லாமிய சமூகக் கலைகளுக்கான சஞ்சிகை என்ற ஆய்வுச் சஞ்சிகையை வெளியிடுகிறது. கேம்பிரிஜில் உள்ள The Islamic Academy என்ற நிறுவனம் இத்துறை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை Muslim Education என்ற அதன் காலாண்டிதழில் வெளியிட்டு வருகின்றது.
 உலகளாவிய இஸ்லாமிய எழுச்சியின் பயனாகத் தோன்றிய அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாடு இன்று மிகப்பிரபல்யமும், செல்வாக்கும் பெற்றுள்ளது. முஸ்லிம் உம்மத்தின் மீட்சியானது, மேற்கின் சிந்தனா ரீதியுள்ள கலாச்சார பண்பாட்டு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதிலேயே தங்கியுள்ளது என்ற அடிப்படை உண்மை எல்லா மட்டத்திலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அறிவை இஸ்லாமிய மயமாக்கல் என்ற கோட்பாடு எமது காலப்பிரிவில் முஸ்லிம் உலகில் தோன்றியுள்ள சிந்தனைப் புரட்சியின் ஆரோக்கியமான அறிகுறியாகும்.

ARTICLE BY - M.A.M.SHUKRI [ JAMIYA NALEEMIYA SRI LANKA ]
{ FROM SMOOGANEETHI }
 

No comments:

Post a Comment