உலகில் பல பகுதிகளிலுள்ள மக்கள் அதீத காரமான அல்லது மிகவும் சூடான உணவை விரும்பிச் சாப்பிடும் அதே நேரத்தில் அத்தகைய காரமுள்ள உணவையும், சூட்டுடன் சாப்பிடுவதையும் கொடுமை என்று அடியோடு வெறுப்பவர்களும் உண்டு. அவ்வாறு வெறுப்படைவதால் ஒருவரின் தனிநபர் விருப்பத்தேர்வை மற்றொருவர் தவறு என்று கருத இயலாது. ஒவ்வொரு நாட்டிற்கும் பிரதேசத்திற்கும் சமுதாயத்திற்கும் உணவுகள் மாறுபடுவது போன்று உடைகளிலும் வித்தியாசம் உண்டு. இதில் சர்வாதிகாரத்தைக் காண்பது ஆச்சரியமான ஒன்றே.
யூதர்கள் அணியும் சிறு தொப்பியோ, சீக்கிய சமுதாய மக்கள் அணியும் தலைப்பாகையோ அல்லது இஸ்லாமிய ஆண்கள் அணியும் தொப்பியோ, ஆணடிமைத்தனத்தை ஏற்படுத்துவதாக குரல் எழுப்ப எண்ணாத இவர்கள், இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய முன்வருகையில் மட்டும் கொதித்தெழுந்து துடிப்பதன் பின்னணி என்ன?
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகள் முஸ்லிம் பெண்கள் அணியும் உடைக்கு சற்றும் குறைவில்லாமல் தலையையும் உடலையும் முழுவதுமாக மறைக்கும் அங்கியை அணிகின்றனர். இவர்களை எவரும் பரிதாபமாக பார்க்கவோ, பெண்ணுரிமை பறிபோனதாகவோ கூக்குரல் எழுப்புவதில்லை. அதையே இஸ்லாம் செய்யச் சொல்கிறது என்றால் மட்டும் துடித்தெழுந்து "இஸ்லாத்தில் பெண்மை இழிவு படுத்தப்படுகின்றது" என்று அரற்றுவதன் உள்ளர்த்தம் என்ன?
'ஸன்பாத் - சூரிய குளியல்" என்ற பெயரில் மேற்கத்திய நாடுகளின் கடற்கரை ஓரங்களில் பெண்கள் முழு நிர்வாணமாக பொது இடம் என்றும் பாராமல் மணல் வெளிகளில் புரள்வதைக் கண்டு கேள்விகளை எழுப்பாதவர்கள், இஸ்லாமிய பெண்கள் தன் விருப்பத் தேர்வாக அணியும் ஹிஜாப் என்ற கண்ணிய உடையைக் கண்டால் மட்டும் மனம் வெதும்புகின்றனர்; "மனம் பிறழ்ந்தவர்" என்று எள்ளி நகையாடுகின்றனர்.
பிரபல அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் சமீபத்தில் ஜெர்மன் தெருக்களில் பட்டப்பகலில் முழு நிர்வாணமாக சுற்றியலைந்தார். ஆச்சர்யம் மேலிட அவரை அணுகிக் கேட்டவர்களிடம் அவர் கூறிய காரணம், "போனால் போகிறது என்று அரைகுறையாக ஆடைகள் அணியும் ஜெர்மனில் இது ஏற்றுக்கொள்ளத்தக்கதே!" என்று கூறினார். இது பலருக்கு கூச்சத்தை ஏற்படுத்தியதாகவும், தவிர்க்கத்தக்க செயல் என்றும் அந்நாட்டு செய்திகளில் வெளியானதே ஒழிய "இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்" என்று சொல்லவோ "அநாகரீகமான செயல்" என கண்டிக்கவோ எவரும் முன் வரவில்லை.
இத்தகைய எள்ளிநகையாடல்களும், பரிகாசங்களும் இஸ்லாத்திற்கு இன்று புதிதான ஒன்றல்ல. இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணம் இஸ்லாத்தைப் பற்றி இவர்களின் மனதில் எழுந்துள்ள அதீத பயம் - இஸ்லாமோஃபோபியா தவிர வேறில்லை.
மனித சமுதாயத்தில் புரையோடிக்கிடக்கும் வேறுபாடுகளை வேரோடு களையும் விதமாக இஸ்லாம், மனிதன் சக மனிதனுக்குக் கொடுக்க வேண்டிய உரிமைகள், செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய அனைத்திலும் தலையிட்டு சமநீதியை நிலைநாட்டியதன் காரணத்தால் இவ்வுலகில் இஸ்லாம் வேரூன்றி பரவிய நாள் முதல், நாகரீகம் தெரியாதவர்களாலும், மனிதத்தை மதிக்கத்தெரியாத மனிதநேயமற்றவர்களாலும், மற்றவர்களை அடக்கியாளத் துடிக்கும் அநியாயக்காரர்களாலும் தொடர்ந்து கல்லடிபட்டுக் கொண்டு தடைகளை உடைத்தெறிந்து வேகமாகவே மக்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது.
மனிதர்களின் இன, சமூக, பொருளாதார ரீதியிலான பிண்ணனியை அறிந்து அதற்கேற்றார் போல் பாகுபாடு காட்டிடாமல், சமத்துவத்தை பேணுவதாலேயே இத்தகைய விமர்சனங்களுக்கு இஸ்லாம் உள்ளாகிறது என்பதில் இரு வேறு கருத்திற்கு இடமில்லை.
அனைத்து சவால்களையும் வென்று உலகெங்கிலும் மிக வேகமாகப் பரவி வரும் 'இஸ்லாத்தை', நேரடியாக அதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி விமர்சித்து ஜெயிப்பது இயலாத காரியம் என்று பல நூற்றாண்டுகளாகவே புரிந்து வைத்திருக்கும் இத்தகைய அறிவுஜீவிகள், இஸ்லாத்திற்கு எதிராக முடக்கி விட்டிருக்கும் பிரச்சாரங்களில் முக்கியமாக கையில் எடுத்திருப்பது இந்த ஹிஜாப் பற்றிய விமர்சனங்களை தான்.
"உலகெங்கும் மனித சமுதாயத்தில் அமைதியும் ஒத்திசைவும், பூர்த்தி பெற்ற சமநிலைச் சமுதாயத்தைத் தோற்றுவிக்கும்படியாக இஸ்லாம் தனது அடிப்படைக்கோட்பாடுகளில் மிக உறுதியான கட்டமைப்பைக் கொண்டிருப்பதாலேயே இஸ்லாமிய எதிரிகள், அதன் அடிப்படையைக் குறித்து பேச அஞ்சுகின்றனர்" என்று யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவியுள்ள முஹம்மத் ஆசாத் தாம் எழுதியுள்ள Islam at the cross Roads எனும் புத்தகத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டுப் பேசுகிறார்.
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக முஸ்லிம் நாடுகள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் எவ்வித பிரயோசனமும் தராது என்று முடிவெடுத்திருக்கும் ஏகாதிபத்திய நாடுகள் கூட, இஸ்லாத்தின் வளர்ச்சிக்கான சமீபத்திய புள்ளி விபரத் தொகுப்பைக் கண்டு "இஸ்லாம் வாளால் பரவியது" எனும் தங்களது பொய்ப் பிரச்சாரங்கள் இனியும் பயனளிக்காது என்பதை புரிந்து கொண்டு, ஹிஜாபின் பக்கம் தம் முழு கவனத்தையும் முயற்சியையும் திருப்பி விட்டுள்ளன.
ஆனாலும் இஸ்லாமிய எதிரிகளின் சூழ்ச்சிகள் நடைபெறும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதனால் அவர்களுக்குப் பாதகமான விளைவுகளே அவர்களின் செயல்களால் விளைகின்றன என்பதை தற்போதுதான் தாமதமாக உணர்ந்து வருகின்றனர்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்திற்கும் மேல் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. "அதிக அளவில் இஸ்லாம் விமர்சிக்கப்படுவது ஏன்" என்ற ஐயம் எழுந்தததன் காரணத்தால் அதனைத் தெரிந்து கொள்ள முயன்று இஸ்லாமிய புத்தகங்களை தேடிப்பிடித்து படித்த பொழுது தான் இஸ்லாத்தைப் பற்றிய முழு அறிவு தமக்கு கிடைத்தது என்பதே செப்டம்பர் 11 2001 க்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் கூறிய கருத்துக்கள் ஆகும். இதே காலகட்டத்தில் அமெரிக்க புத்தககடைகளிலும் லைப்ரரியிலும் அதிகம் விற்றுத்தீர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்ட ஒரே புத்தகம் திருக்குர்ஆன் என்ற செய்தி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதே விகிதத்தில் இஸ்லாம் உலகில் பரவும் என்றாலே 2020ஆம் வருடத்தில் இஸ்லாம் உலகின் மிகப் பெரிய சமயமாகும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாத்தின் எதிரிகளுக்கு இப்புள்ளிவிவரங்கள் வயிற்றில் புளியை கரைப்பதால் தங்களிடமிருக்கும் ஊடகங்களின் மூலம் இட்டுக்கட்டப்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான செய்திகளை பரப்புவதிலும், கண்ணியத்தை தரும் ஹிஜாபை அடிமைத்துவத்தின் சின்னம் போன்று சித்தரிப்பதிலும் தற்போது முனைப்புடன் செயல்படுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் வரலாற்றில் இஸ்லாத்திற்கு எதிரான பல்வேறு சூழ்ச்சிகள் முழு அளவில் ஊடகங்கள் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. செய்திகள், பிரச்சாரங்கள், விவாத அரங்கங்கள், கருத்துக் கணிப்புகள் ஆகியவை முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்டன. அமெரிக்காவின் ஆசிகளை பெற்றுக்கொண்டு பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் இந்த எழுத்து வன்முறைகள் நடந்தேறின.
சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றி பேசுவதானால், குறிப்பாக செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, ஊடக வன்முறையுடன் சேர்ந்து வீடுகளிலும், தெருக்களிலும், பொதுவிடங்களிலும், இஸ்லாமிய மையங்கள் மற்றும் பள்ளிவாசல்களிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். வழமை போன்று ஊடகங்கள் இச்செய்திகளை கண்ணுக்குப் புலப்படா எழுத்துருவில் வார்த்து ஒரு மூலையில் பிரசுரித்து இருட்டடிப்பு செய்தன. ஒரு பக்கம் இஸ்லாத்தை வம்புக்கிழுத்து இஸ்லாமியர்களின் உணர்வுகளோடு விளையாடும் அதே நேரத்தில் மறுபக்கம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம்களை அவமானப்படுத்தவும், கொடுமைப்படுத்தவும் செய்வதற்கும் இவை தயங்கியதில்லை. இதன் ஒருபகுதியாகவே பிரான்சில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டதை காணமுடிகிறது. இதற்கு இஸ்லாத்தின் மீதான இஸ்லாமோஃபோபியா எனும் அதீத பய நோயன்றி வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
இந்த இஸ்லாமோஃபோபியா எனும் மேற்குலகின் இஸ்லாத்தைக் குறித்த பயமனநோய் கீழைதேசமான இந்தியாவை கூட விட்டுவைக்கவில்லை. குறிப்பாக தமிழகத்தை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்டு எடுத்துக் கூறத்தக்க விதத்தில் இஸ்லாமோஃபோபியாவிற்கு பல்வேறு நவ அறிவுஜீவிகள் எனக் கூறிக்கொள்பவர்கள் பலியாகியுள்ளனர்.
இஸ்லாமோஃபோபியா என்றால் என்ன ? இங்கே கிளிக் பண்ணவும்
தொடரும்.......
ARTICLE BY ABU SAALIHA [ SATHYAMARGAM ]
No comments:
Post a Comment