(வாசிக்கத் தொடங்கும் முன் முதல் பகுதியைப் படித்துவிட்டுத் தொடருங்கள்).
இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாத்தின் மீதான அச்சம் இன்று உலகம் முழுக்க பரந்து விரிந்து காணப்படுகின்றது. இதற்குரிய நீண்ட பட்டியலில், 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிளாஸ்கோ விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக இந்திய மருத்துவர் ஹனீஃப் அவர்களைக் கைது செய்த ஆஸ்திரேலிய அரசின் அநீதியான நடவடிக்கையைக் கூறலாம்.
இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாத்தின் மீதான அச்சம் இன்று உலகம் முழுக்க பரந்து விரிந்து காணப்படுகின்றது. இதற்குரிய நீண்ட பட்டியலில், 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிளாஸ்கோ விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக இந்திய மருத்துவர் ஹனீஃப் அவர்களைக் கைது செய்த ஆஸ்திரேலிய அரசின் அநீதியான நடவடிக்கையைக் கூறலாம்.
மருத்துவர் ஹனீஃப் அவர்களின் கைதுக்கான பின்னணி நிச்சயம் இஸ்லாமோஃபோபியா தவிர வேறில்லை. இந்தியாவிற்குப் பயணிக்கக் காத்திருக்கும் பொழுது அவரைக் கைது செய்த ஆஸ்திரேலிய அரசு, அதற்குரிய காரணமாக கிளாஸ்கோ குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு மருத்துவர் ஹனீஃப் உதவியதாக முதலில் கூறியிருந்தது.
இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் சிலரின் வன்செயல்களுக்கு இஸ்லாத்தின் மீதே புழுதிவாரித் தூற்றுவதில் தேர்ச்சி பெற்ற இஸ்லாத்தின் மீது வெறுப்பு கற்பிக்கும் துவேஷகுழுக்கள், ஒரு நாட்டின் அரசே ஒரு முஸ்லிம் மீது குற்றம் சாட்டும்போது வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கும்? வெறும் வாய்க்கு அவலாக, இச்சம்பவத்தை வைத்து இந்த ஆதிக்க சக்திகள் குதூகலத்துடன் பெருமளவு இலாபம் சம்பாதித்தன. குற்றம் சுமத்தப்படுபவர் ஒரு முஸ்லிமாக இருந்தாலே போதும்; அவனை அந்நிமிடமே தீவிரவாதியாக்கி அழகு பார்க்கும் அடிப்படையில், இணையத்தில் இலக்கியத்தைக் கூறு போடும் சங் பரிவார எழுத்தாளர்களில் ஒருவரான மலர்மன்னன், மருத்துவர் ஹனீஃபை தீவிரவாதியாகவே ஆக்கினார். ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் அமைந்த மலர்மன்னனின் வெறுப்பு தோய்ந்த எழுத்துக்களைப் பிரசுரித்து, 'திண்ணை'யும் இந்திய அரசுக்கு எதிராக தன் முஸ்லிம் விரோத அடிமன வக்கிரத்தைக் கொட்டித் தீர்த்தது. மேற்கில் விதைக்கப்படும் இஸ்லாமோஃபோபியா கிழக்கின் மூலை வரை எவ்வளவு அமோகமாக அறுவடை செய்யப்படுகின்றது என்பதற்கு இது மற்றுமோர் தெளிவாகும் (தமிழக ஃபோபியாக்களைக் குறித்து இத்தொடரின் பிற்பகுதியில் இன்ஷா அல்லாஹ் விரிவாகக் காணலாம்.)
ஒரு விதத்தில் ஆஸ்திரேலியாவின் விருந்தினர் என்ற அந்தஸ்தில் உள்ள மருத்துவர் ஹனீஃபின் மீது ஆஸ்திரேலிய அரசு சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என ஆஸ்திரேலிய காவல்துறையே பிறக ஒப்புக்கொண்டது . இங்கிலாந்தோ, ஆஸ்திரேலியாவோ மருத்துவர் ஹனீஃபின் விவகாரத்தில் உலகம் முழுவதிலிருந்தும் இத்தனை நெருக்குதல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை ஏனைய பிற குற்றச்சாட்டுக்களைப் போன்று மருத்துவர் ஹனீஃபின் விவகாரத்திலும் இவர்கள் கூறுவதை வைத்து "உண்மையாகத் தான் இருக்கும்" என, இதனை பெரிய விஷயமாக எடுக்காமல் உலகம் விட்டிருந்தால் முஸ்லிம் என்ற காரணத்திற்காக மருத்துவர் ஹனீஃபும் அதிபயங்கர தீவிரவாதியாக இன்று ஆகி இருப்பார். தீர விசாரிக்க வேண்டும் என்று உரிய தருணத்தில் உலகமெங்கும் எழுப்பப்பட்ட நியாயவான்களின் எதிர்ப்புக் குரல், இன்று ஒரு நிரபராதியை அடையாளம் காட்ட உதவியிருக்கின்றது. அந்த கால கட்டத்தில் உலகின் அத்தனை ஊடகங்களிலும் பாஸ்போர்ட் விபரங்கள் முதல், அவரின் இந்திய வீட்டிற்கு முன் முகாமிட்டு காட்சிகளைப் பதிவு செய்யும் மீடியாக்களின் மூலம் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் மருத்துவர் ஹனீஃபின் குடும்பத்திற்கோ அல்லது அவருக்காக குரல் கொடுத்த இந்திய அரசு முதல் மற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கோ ஹனீஃபின் விடுதலை மகத்தான வெற்றியாக தோன்றலாம். தேவையெனில் ஆஸ்திரேலிய அரசின் நடுநிலை(!) நிலைபாட்டிற்கு நன்றி நவின்றதோடு இவ்விஷயத்தை இத்தோடு விட்டும் விடலாம்.
ஆனால், இதன் மூலம் அதிர்ந்து போன முஸ்லிம் சமூகம் இதை இலகுவாக விட்டுவிடவில்லை . ஏனெனில் எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி, குற்றம் சாட்டும்படியாக ஒரு துரும்பளவு தெளிவு கூட இல்லாத நிலையில், சமூகத்தில் உயர்நிலையில் உள்ள ஒரு மருத்துவரையே முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக சந்தேகக்கண் கொண்டு இறுதிவரை விடாப்பிடியாக அவரை தீவிரவாதியாக்கி விடவேண்டும் என ஒரு அரசே முனைப்புடன் செயல்பட்டிருக்கின்றது எனில், அதற்கான காரணத்தையும், இஸ்லாத்தின் மீதான இத்தகைய அதீத பயத்தின் பின்னணியையும் குறித்து ஆராய வேண்டியது மிக அவசியமாகும்.
இன்று உலகில் எந்த மூலையில் ஏதேனுமோர் அசம்பாவிதம் நடந்தாலும் அது உடனடியாக திட்டமிட்டு இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தப் படுகிறது. உலக மக்களை ஒருங்கிணைக்கும் "நம்பகத்தன்மை" வாய்ந்த ஊடகங்கள் இதனைச் செவ்வனே நிறைவேற்றுகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசின் கீழ் உள்ள ஊடகங்கள் உலகின் எந்த மூலையில் ஒரு அசம்பாவிதம் நடந்தாலும், அதனை உடனடியாக பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற சொற்களுடன் இஸ்லாத்தை சேர்த்துக் கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுகின்றன.
இது இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அதிபயங்கர ஆயுதமாக கருதப்படும் ஊடகங்கள், மேற்கத்தியர்களின் கைகளில் தஞ்சமடைந்ததன் விளைவு என்று இலகுவாக எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், கடந்த நூற்றாண்டின் இறுதிகாலம் வரை உலகில் தீவிரவாதம்/பயங்கரவாதம் என்ற சொற்களோடு இஸ்லாம் பின்னப்பட்டுப் பார்க்கப்பட்டதில்லை. உலகில் இஸ்லாமியர்களுக்கு மிக கடுமையான நெருக்கடி காலமாக கருதப்பட்ட, முஸ்லிம்களை கருவறுப்பதற்காகவே நடத்தப்பட்ட சிலுவை யுத்த காலமான மத்திய காலகட்டத்தில் கூட தீவிரவாதி/பயங்கரவாதிகளாக சிலுவை யுத்த படைகளே கருதப்பட்டன. மிகக் குறுகிய கால அளவில் இஸ்லாத்துடன் இன்று உலகில் பிரபலமாக்கப்பட்டுள்ள இவ்வார்த்தையின் பின்னணி நிச்சயம் இஸ்லாத்தின் மீதான அதீத அச்சமாக இருக்கவே சாத்தியம் உள்ளது.
காலனியாதிக்கங்களுக்கு எதிராக உருவான புரட்சிகளின் மறு வெளிப்பாடான இரண்டு உலகப் போர்களுக்கு முன்னும் பின்னும் இவர்கள் பொய்யாக உருவகப்படுத்தும் இந்த இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் தோன்றியதில்லை. இரு உலகப்போர்களுக்குப் பின் பனிப்போர் மூலம் உலகில் யார் பெரியவன் என்ற போட்டியில் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஈடுபட்டிருந்த காலத்திலும் இவ்வார்த்தை பிரபலம் ஆகவில்லை. இன்னும் கூறவேண்டுமெனில், இன்று ஜார்ஜ் புஷ்ஷிற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி தீவிரவாதம்/பயங்கரவாதங்களை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்த காரணமாகக் காட்டப்படும் உசாமா பின் லேடன், அன்றைய பனிப்போர் காலத்தில் அமெரிக்காவிற்கு சுதந்திரத்திற்காக போராடும் ஒரு வீரப்போராளியாகவும், கதாநாயகனாகவும் திகழ்ந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.
"சுமார் 1428 வருடங்களாக தலையெடுக்காத இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் கடந்த 20 ஆண்டுகளில் திடீரென எங்கிருந்து தலையெடுத்தது? சாதாரணமாக சிந்திக்கும் மக்களுக்கு கூட இதில் அடங்கியுள்ள சூட்சுமம் எளிதில் விளங்கும்..." |
பனிப்போர் மூலம் ஒருங்கிணைந்த ரஷ்யாவை என்றைக்கு அமெரிக்கா வீழ்த்தியதோ அன்றிலிருந்து தான் இவ்வார்த்தைகள் உலகில் பிரபலமடைய ஆரம்பித்தன. அதாவது உலகின் சர்வாதிகார சக்தியாக தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளும் அமெரிக்காவை எதிர்க்க சரிக்கு சமமான வேறு நாடோ, தனிநபரோ இல்லை என்ற நிலை வந்த பின்னரே உலகில் இந்த உருவகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் என்ற சொற்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. சுமார் 1428 வருடங்களாக தலையெடுக்காத இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் கடந்த 20 ஆண்டுகளில் திடீரென எங்கிருந்து தலையெடுத்தது? சாதாரணமாக சிந்திக்கும் மக்களுக்கு கூட இதில் அடங்கியுள்ள சூட்சுமம் எளிதில் விளங்கும்.
இங்கே இஸ்லாமிய பாரம்பரியத்தையும், கொள்கை சார்ந்த வரலாற்றையும் சற்று சிறிது திரும்பிப் பார்த்தல் அவசியமானதாகும். முஹம்மது(ஸல்) அவர்களால் புனர்நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம், சுமார் 1428 வருடங்களுக்கு முந்தைய அந்த அறியாமைக் கால கட்டத்திலேயே மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியையும், எவருக்கும் அஞ்சாத துணிவையும், சுயமரியாதையையும் கொடுத்தது. ஒருவர் இஸ்லாத்தை மனதார ஏற்றுக் கொண்ட கணம் முதல் இவ்வுலகில் எவருக்கும் தலை குனியாத, எதற்கும் அஞ்சாத தன்னம்பிக்கையைப் பெறுகின்றார். அதன் மூலம் அவரை எத்தகைய ஓர் கொடுமையான அடக்குமுறையாளனும் எளிதில் அடக்கி அடிபணிய வைத்து விடமுடியாது என்பதே இதன் பொருள்.
ஒருவர் உண்மையிலேயே இஸ்லாத்தை மனமுவந்து பின்பற்றுகின்றார் எனில், அவர் கண்முன் எவ்வித அநியாயத்தையும் நடக்க விடமாட்டார். அநியாயம், அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார். இதனால் தான் முஹம்மது(ஸல்) அவர்களால் ஒரு மிகச்சிறிய சாதாரண குழுவாகத் தொடங்கிய இஸ்லாமிய மார்க்கம், மிகப்பெரிய பரந்து விரிந்த அரபுப் பகுதி, பாரசீகம் முதல், ரோம் வரை பரவியது. அது மட்டுமின்றி அக்காலகட்டத்திலேயே இஸ்லாம் சென்று சேர்ந்த இடங்களில் உள்ள மக்களையெல்லாம் வெகு எளிதில் கவர்ந்து, அரசாங்கங்கள் மாறும் நிலைகள் உருவாகின.
ஒரு கட்டத்தில் ஜெரூசலேமை வெற்றி கொண்ட இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்களை, அன்றைய பைத்துல் முகத்தஸின் நிர்வாகிகளாக இருந்த கிறிஸ்தவர்கள் இன்முகத்துடன் வரவேற்று அதன் சாவியை கேட்காமலே அவரிடம் வழங்கிய சம்பவம் வரை நடந்தது. இதன் தொடர்ச்சியாக உலகில் எப்பொழுதெல்லாம் தமது பகுதிகளில் அடக்குமுறையாளர்கள் கோலோச்சினார்களோ, அப்பொழுதெல்லாம் அதுவரை அமைதியாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களே அநியாயத்திற்கெதிராகப் பொங்கியெழுந்து அக்கிரமக்காரர்களை விரட்டி அடித்துள்ளனர் என்பது வரலாறு.
இதில் குறிப்பிடத்தக்கவராக ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒரு சிறு சிற்றரசராக இருந்த அவர், பைத்துல் முகத்தஸின் சுற்றுப்புறங்களை கபளீகரம் செய்து புனித ஹரத்தை கையப்படுத்தி ஐரோப்பாவின் ஆசியோடு கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சிலுவைப் போர்வீரர்களை விரட்டியடித்து பைத்துல் முகத்தஸை மீட்ட நிகழ்வு வரலாறு மறக்க முடியாததாகும்.
இத்தகைய வீரமும், எந்த அடக்குமுறையாளனுக்கும் தலை வணங்காமையும் இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவன் அதனை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட தருணமே வழங்கி விடுகின்றது. இதனாலேயே ஒரு இடத்தில் ஒருமுறை இஸ்லாம் விதைக்கப்பட்டு விடுமானால், பின்னர் அது எவ்வளவு தான் வேரோடு பிடுங்கப்பட்டாலும் மீண்டும் புத்துணர்வுடன் எழுந்து விடுகின்றது. இதற்கு இக்காலகட்டத்திய உதாரணமாக ஸ்பெயினின் இஸ்லாமிய வரலாற்றை குறிப்பிடலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
ARTICLE BY ABU SALIHA [ SATHYAMARGAM ]
No comments:
Post a Comment