Saturday, August 11, 2012

பாசிச சிந்தனையின் உருவாக்கம்

இத்தாலி பாசிச கட்சியின் கொடி
பாசிசம் ஐரோப்பாவில் வேர்விட்டு வளர்ந்த ஒரு கருத்தியல் அல்லது சித்தாந்தம் ஆகும்.19 ஆம் நூற்றாண்டில் சில ஐரோப்பிய சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த சித்தாந்தம் 20 ஆம் நூற்றாண்டில் இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் புழக்கத்துக்கு வந்தது.எனவே இந்த பாசிச சித்தனை பற்றி நாம் அறிவதற்கு ஐரோப்பாவின் வரலாற்றை அறிவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

ஐரோப்பிய வரலாற்றை பல கட்டங்களாக பிரிக்கலாம்.அதில் மிகவும் பொருத்தமான கட்டங்கள் பின்வருகின்றன.அவை
  1. கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலப்பகுதி.
  2. ஐரோப்பிய கலாச்சாரத்தில் கிறிஸ்தவம் தாக்கம் செலுத்த துவங்கிய காலப்பகுதி.
  3. சடவாத சிந்தனையின் தாக்கம் ஆரம்பித்த காலப்பகுதி.
 மேலுள்ள காலப்பகுதிகளில் பாசிசத்தின் தாக்கம் அதிகளவில் உணரப்பட்ட அல்லது ஆதிக்கம் செலுத்திய காலங்கள் முதலாவதும் மூன்றாவதுமாகும்.
பாசிசம் என்பது 19 ஆம் நூற்றாண்டில் சிந்தனாரீதியாக நிறுவப்பட்டு 20 நூற்றாண்டில் அதன் செயற்பாட்டை துவக்கினாலும் பாசிசத்தின் வேர்கள் ஐரோப்பாவில் ஏற்கனவே பரவிவிட்டதேன்பது குறிப்பிடத்தக்கது.



பண்டைய ஐரோப்பாவின் பாசிச கொள்கை.

கிறிஸ்தவத்துக்கு முன்னைய பண்டைய ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்த சமயக்கொள்கை பல கடவுட் கொள்கையாகும்.பண்டைய ஐரோப்பியர்கள் அவர்களின் அன்றாட ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் ஒவ்வொரு தெய்வங்களையும் தேவதைகளையும் நியமித்திருந்தார்கள்.அதுபோல் அவர்கள் யுத்தத்துக்கு பொறுப்பாகவும் ஒரு கடவுளை நியமித்திருந்தார்கள்.இந்த போர் கடவுள்களை சந்தோஷப்படுத்தவும் மரியாதையை செய்யவும் அவர்கள் வன்முறையை ஒரு புனிதமாக கருதினார்கள்.தனது நாட்டுக்காக இரத்தம் சிந்துவதும் கொலை செய்வதும் அவர்களின் புனிதமான கடமையாக கருதி வந்தார்கள்.

மாமன்னர் நிரோ 
இந்த வன்முறை மற்றும் மூர்க்கத்தனம் என்பவற்றை தடுக்க எந்தவிதமான நெறிமுறையும் அப்போது இருக்கவில்லை.அன்றைய பண்டைய ஐரோப்பாவின் நாகரீகத்தின் அச்சாணி என்று போற்றப்பட்ட ரோம் சாம்ராஜ்ஜியத்தில் கூட மனிதனை மனிதன் கொல்வதையும் மனிதனை மிருகம் நார் நாரை கிழிப்பதையும் மேடை போட்டு ரசித்த ஒரு சூழலே காணப்பட்டது.மாமன்னர் நீரோ ரோமின் ஆட்சியை கைப்பற்ற நடந்த கிளர்ச்சியில் இவனால் பல பேர் கொல்லப்பட்டனர் அப்படி கொல்லப்பட்ட நபர்களில் இவனின் தாய் மனைவி சகோதரன் என குடும்ப உறுப்பினர்களும் உள்ளனர்.இவனுக்கு கிறிஸ்துவர்கள் என்றால் அப்படியொரு கோபம்.பாரிய அரங்குகளில் கிறிஸ்தவர்களையும் காட்டு மிருகங்களையும் ஒன்றாக நிறுத்தி கட்டு மிருகங்கள் அவர்களை நார் நாராக கிழிப்பதை மிக சந்தோஷமாக பார்ப்பான்.கிருஸ்தவ அபொஸ்தலர்கலான  SAINT PAUL  மற்றும் APOSTLES PETER ஆகியோர்களை இவனே கொன்றான் என்றும் கூறப்படுகிறது.இந்த மாமன்னரே ரோம் நகரம் தீயால் எரிந்துகொண்டிருக்கும் போது யாழ் வாசித்தவன்.சில வரலாற்றாசிரியர்களின் கருத்துக்கு அமைய இவனே அந்த நெருப்பை  மூட்டி அதற்கான பழியை கிறிஸ்தவர்களின் மீது  போட்டான் எனவும் கூறப்படுகிறது.
    



வன்முறைக் கலாச்சாரத்துக்கு தங்களை அர்பணித்துக் கொண்ட ரோமர்கள் ஒரு புறம் இருக்க வடக்கில் Vandals - Goths - Visigoths போன்ற பழங்குடியினர் ரோமர்களையும் மிஞ்சியவர்கலாக இருந்தனர்.அவர்கள் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டு தங்களை அழித்துக் கொண்டிருந்தன.மேலும் ரோமையும் இவர்கள் கொள்ளையடித்தனர்.பேகன் உலகில் வன்முறை இடம்பெறும் இடங்களில் அவர்கள் கொடூரமாக நடந்து கொண்டனர்.அப்படி நடந்துகொள்ளவே அவர்களின் தலைமைகளும் அவர்களை ஊக்குவித்தனர்.அங்கு நெறிமுறைகள் நியாயங்கள் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது.


பேகன் உலகின் ஒரு பாசிச அமைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமே கிரேக்கத்தின் "ஸ்பார்டா நகரம்".


Lycurgus - Founder Of City State Of Sparta


ஸ்பார்ட்டா - பாசிசவாதிகளுக்கு ஒரு முன்மாதிரி

கி.மு.8 ஆம் நூற்றாண்டில் Lycurgus என்பவரால் நிறுவப்பட்ட ஸ்பார்ட்டா வன்முறைக்கும் போருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இராணுவ மாநிலமாகும்.ஸ்பார்டன்ஸ் மிகவும் கட்டுப்பாடில்லாத ஒரு கல்விமுறையை நடைமுறைப்படுத்தி வந்தனர்.அவர்களின் முறைப்படி மாநிலமே எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியம் வாய்ந்தது.ஸ்பார்டாவில் வாழ தகுதியுடையவர்கள் யாரெனில் மாநிலத்துக்கு பயனுள்ளவர்களே ஆகும்.பயனற்றவர்கள் அங்கு வாழத்தகுதியுடையவர்களல்ல.வலிமையான ஆரோக்கியமான குழந்தைகள் மாநிலத்துக்கு அர்பனிக்கப்பட்டன.வலிமையற்ற ஆரோக்கியமற்ற குழந்தைகள் மலைகளிலும் காடுகளிலும் விடப்பட்டு ஓநாய்களுக்கு இரையாக்கப்பட்டன.(பின்னைய நாட்களில் நாசிகளாலும் இந்த முறை பின்பற்றப்பட்டது.).ஸ்பார்ட்டாவில் ஆண் குழந்தைகளை பெற்றோருக்கு 7 வயது வரை மட்டுமே வளர்க்க அனுமதியுண்டு.அதன் பின் 12 வயது வரை அவர்களை 15 குழுக்களாக பிரித்து அவர்களுக்குள் போட்டிகளை வைத்து தலைவர்களை தெரிவு செய்வார்கள்.குழந்தைகள் தமது நேரத்தை உடலை வலுப்படுத்துவதிலும் போருக்கு தயாராவதிலுமே தமது நேரத்தை கழிப்பர்.


குழந்தைப் பருவத்திலிருந்தே ஸ்பார்டன்களின் ஒரே நோக்கம் ஒரே வெறி யுத்தம் அல்லது ரத்தம்.
கல்வி அறிவு மீது அவர்களுக்கு அவ்வளவு அக்கறை இருக்கவில்லை.ஆனால் இசை மற்றும் இலக்கியத்துறைகளில் அவர்களுக்கு கொஞ்சம் அக்கறை இருந்தது.அதுவும் இசைப்பதற்கு அனுமதிக்கப்பட்டது யுத்தம் சம்பத்தப்பட்ட பாடல்களும் கவிதைகளுமேயாகும்.(மொசொலினி மற்றும் ஹிட்லர் போன்றோரின் ஆட்சிக் காலங்களில் நான்கு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளின் கல்விமுறையிலும் இப்படிப்பட்ட ஒரு முறை இருந்தது.).

ஸ்பார்டா பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பித்தவர் புகழ்பெற்ற கிரேக்க சிந்தனையாளரான ப்லேடோ ஆவார்.ப்லேடோ ஜனநாயக முறையில் ஆட்சி செய்யப்படும் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்தாலும் ஸ்பார்டாவின் பாசிச கொள்கையில் ஈர்க்கப்பட்ட இவர் ஸ்பார்டாவை ஒரு மாதிரி மாநிலமாக சித்தரித்தார்.ப்லேடோவின் இந்த பாசிச போக்குகள் காரணமாக 20 நூற்றாண்டின் முன்னணி சிந்தனையாளர்களில் ஒருவரான Karl Popper என்பவர் தனது " The Open Society And Its Enemies " என்ற புத்தகத்தில் ப்லேடோவை திறந்த சமூகத்தின் எதிரி என்றும் அடக்குமுறையான ஆட்சிகளுக்கு உத்வேகம் அளித்தவர்களில் முதலாமவர் என்றும் கூறியுள்ளார்ஆரோக்கியமற்ற பலமற்ற குழந்தைகளை கொல்லும் ஸ்பார்டாவின் அந்த கொள்கையை ப்லேடோ நிதானமாக ஆதரித்தார்.மேலும் ப்லேடோ Eugenics முறையின் முதலாவது தத்துவார்த்த ஆதரவாலராவர்.தனது இந்த வாதத்துக்கு மேல் சொன்ன இருவிடயங்களை Popper ஆதரவாக முன்வைக்கிறார்.மனித இனப்பெருக்கம் வளர்ச்சி என்பன அரசால் கண்காணிக்கப்பட வேண்டும் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனும் கொள்கையில் உறுதியாக இருந்தவர் இந்த ப்லேடோ.

Plato - The Enemy OF Open Society

முதன்மை வர்க்கம் தாங்களே ஒரு முதன்மை இனம் என்று உணர வேண்டும்.ப்லேடோவின் கருத்துப்படி கார்டியன்ஸ் வர்க்கம் அதாவது போர்வீரர்களின் இனம் தூய்மையாக இருக்கவேண்டும்.எப்படி தூய்மையாக இருக்க வேண்டும் பலமற்ற ஆரோக்கியமற்ற குழந்தைகளை கொல்வதன் மூலம் இது தான் ப்லேடோவின் கருத்து.அதாவது அவர் சிசுக்கொலையை ஆதரிக்கிறார் என்பது தெளிவான விடயம். ஸ்பார்ட்டாவின் இந்த முறைகளை ஆதரித்த் ப்லேடோ அங்கு நடைமுறையில் இருந்த சமூக நிர்வாக அடக்குமுறையையும் ஆதரித்தார்.பிளேட்டோவின் பார்வையில் ஸ்பார்டன்களின் அந்த அடக்குமுறை தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என நினைத்தார்.ஏனெனில் மக்களுக்கு அரசின் ஆணைகளைத் தவிர வேறு எந்த விடயத்தையும் பற்றி நினைக்க சந்தர்ப்பம் இருக்கக் கூடாது.

இப்படிப்பட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகள் ஸ்பார்டன் மக்களால் பின்பற்றப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது.மேலும் இவை ப்லேட்டோவினால் பாசிசத்தின் அடிப்படை பண்புகளாக விவரிக்கப்பட்டது.




இன்ஷா அல்லாஹ் தொடரும் 





Wednesday, July 25, 2012

"2012" திரைப்படம் கூறவரும் தகவல் என்ன ?


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


2009 ஆண்டு உலகம் பூராகவும் சக்கை போடு போட்ட திரைப்படமே "2012" என்ற பேரழிவுத் திரைப்படம்(DISASTER MOVIE).ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மாயன்களால் கணிப்பிடப்பட்ட அவர்களின் நாட்காட்டியை அடிப்படையாக வைத்தே இந்த பேரழிவு பற்றி பேசப்படுகிறது.பாரிய பட்ஜெட், நவீன தொழில்நுட்ப உத்திகள், வசீகரிக்கும் ஆப்டர் எபெக்ட் தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட "2012" திரைப்படம்,திரைப்படம் என்ற ஒரு வரையறையைத் தாண்டி மறைமுகமான ஒரு தகவலை ஒரு செய்தியை நமக்கு சொல்கிறது.

 ஹாலிவூட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ரோலன் எம்ரிச் அவர்களால் இயக்கப்பட்ட இந்த திரைப்படம் 2009 ஆம் ஆண்டு உலகம் பூராகவும் திரையிடப்பட்டது.மாயன் இனத்தவர்களால் பயன்படுத்தப்பட்ட நாட்காட்டியின் அடிப்படையில் 2012 12 21 ஆம் திகதி இந்த பிரபஞ்சம் அழிந்துவிடும் இதுதான் இந்த திரைப்படத்தின் சாராம்சம்.இந்த சாரம்சத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் பீதி கலந்த ஒரு திரைப்படமே இந்த "2012" திரைப்படம். விவிலியம் - புராணம் - மற்றும் வரலாற்று குறிப்புகள் 2012 திரைப்படத்துக்கு ஒரு ஆழமான அடிப்படை அர்த்தத்தைக் கொடுக்கிறது.மேலும் இந்த திரைப்படத்தில் இந்த பேரழிவு கையாளப்படும் முறை குறித்து நாம் கூர்ந்து கவனிக்கின்ற போது ஒரு வலுவான உண்மையான ஒரு தகவல் நமக்கு கிடைக்கிறது.அந்த தகவலின் அடிப்படை இதுவே 

" இது போன்று ஒரு பேரழிவு வந்தால் பணக்கார மேட்டுக் குடிகள் மட்டுமே பிழைத்துக் கொள்வார்கள்.மற்ற பரதேசிகள் செத்து மடிவார்கள்."



 இந்த திரைப்படத்தில் காட்சிகளாகக் காட்டப்பட்ட சில முக்கியமான மறைந்த சில விடயங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.அதற்கு முன் இந்த பதிவு மூலம் சொல்ல வரும் விடயங்களை உள்ளடக்கிய "2012" திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி.(Trailer) 






                                தயார்படுத்தல்கள் - The Preparations


திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒன்று.இந்த காட்சி மூலம் சொல்ல வரும் தகவல் என்னவெனில் புதிய சகாப்தத்துக்கான ஆரம்பம் தொடங்கவுள்ளது என்பதாகும்.இதை வானியல் பாஷையில் கூறுவதாயின்  Age Of Aquarius என்பதாகும்.


உலகத்தில் ஒரு சில விஞ்ஞானிகள் சூரிய ஒளிக்கற்றைகள் காரணமாக பூமியின் அடிப்படை வெப்பநிலை பாரிய அளவில் உயர்ந்திருப்பதாக கண்டுபிடிக்கின்றனர்.அட்ரியன் ஹேம்ஸ்வி என்ற அமெரிக்க புவியியல் வல்லுநர் உலக அழிவு மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்துகொள்கிறார்.இந்த உயர் அவதானம் மிக்க அவசர நிலைமையை அமெரிக்க தலைமைகளிடம் கூறி எல்லா நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு மீட்பு நடவடிக்கையை மேட்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன் வாசிங்டன் வருகிறார் அமெரிக்க விஞ்ஞானி,ஆனால் அவருக்கோ அங்கு காத்திருந்தது ஒரு அதிர்ச்சிமிக்க செய்தி.நிகழப்போகும் இந்த பாரிய அனர்த்தத்தை ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் அறிந்து கொண்ட உலகின் பணக்கார மேட்டுக்குடியினர் அதற்கான முன்னேற்பாடுகளில் ஏற்கனவே இறங்கிவிட்டனர் என்பதை அறிந்துகொள்கிறார்.மேலும் விலைமதிப்பற்ற ஏனைய மனித உயிர்களை ஒரு துளியேனும் மதிக்காமல் அந்த பேரழிவின் பின் மேட்டுக் குடியினரை மட்டும் உள்ளடக்கிய புதிய உலகத்துக்கு இவ்வுலகின் மிக முக்கியமான கலைப் படைப்புக்களை சேகரிக்கின்றனர் மேட்டுக் குடியினர்.



இந்த காட்சியில் நகல் மோனாலிசா ஓவியம் ஒன்றை அந்த இடத்தில் வைத்துவிட்டு அசல் மோனாலிசா ஓவியத்தை தமது புதிய மேட்டுக்குடி - உலகத்துக்கு கொண்டுசெல்ல தயார்படுத்துகின்றனர்.


2012 இல் நிகழப்போகும் இந்த பேரழிவிலிருந்து தப்பித்துக்கொள்ளும் மீட்பு நடவடிக்கை அல்லது அந்த கப்பல் பற்றி அறிந்தவர்கள் உலகின் பணக்கார மேட்டுக் குடியினர் மட்டுமே.அந்த கப்பலுக்கான அனுமதிச்சீட்டுகளும் மிகவும் ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது.ஒரு அனுமதிச்சீட்டின் விலை ஒரு பில்லியன் யூரோ.வேறு வார்த்தையில் கூறுவதாயின் சாதாரண எந்த குடிமகனும் நிகழப்போகும் பேரழிவிலிருந்து தப்பமுடியாது.இது தான் சாராம்சம்.

இதற்கிடையில் வழக்கம் போல பொது மக்கள் ஒரு முட்டாள் கூட்டமாகவும் பீதி வன்முறை என்பவற்றுக்கு இலக்காகும் ஒரு கூட்டமாகவும் சித்தரிக்கப்படுகிறது.

எல்லா DISASTER MOVIES களையும் போல 2012 திரைப்படமும் பொதுமக்களை குழப்பத்தின் கூட்டமாகவும் நாகரீகம் தெரியாதவர்கள் என்று காட்டுகின்றனர்.2012 - 12 - 21 நடக்க இருக்கும் பேரழிவிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மேற்தட்டு மக்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் போது பொதுமக்களோ G8 மாநாட்டுக்கு எதிராக போராடுகின்றனர்.இப்படிப்பட்ட காட்சிகள் மூலம் இவர்கள் தெரிவிக்க வரும் விடயம் என்னவெனில் " இப்படிப்பட்ட அவசர நிலைமைகளின் போது பொதுமக்களுக்கு நடந்து கொள்ளும் முறை தெரியாது எனவேதான் மேற்தட்டினர் பொது மக்களுக்கு தகவல்களை மறைப்பதில் தவறில்லை " என்ற கருத்தை சித்தரிக்கின்றனர்.


மேற்தட்டு மக்கள் பிரிவினரால் சாதாரண பொதுமக்கள் மீது தீட்டப்பட்டுள்ள சதித்திட்டம் ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல.இவற்றை கண்டுபிடித்து பொதுமக்களை எச்சரித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கும் பல முக்கிய பிரமுகர்கள் மிக விரைவில் அமைதியாக்கப்படுகின்றனர்.கொல்லப்படுகின்றனர்.


உலகின் மிகப் பிரசித்தி பெற்ற மியுசியமான Musée du Louvre இன் தலைவர் மேற்தட்டு மக்களின் மீட்புத்திட்டத்தை அறிந்து கொள்கிறார்.ஒரு ஊடக மாநாடு ஒன்றை வைத்து அதை முழு உலகுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.ஆனால் அவர் அந்த மாநாட்டை நடத்த முன்னரே ஒரு கார் விபத்தில் கொல்லப்படுகிறார்.




பிரான்ஸ் மியுசியத்தின் தலைவர் கொலை அல்லது விபத்து தொடர்பாக வரும் காட்சியில் மிகவும் சுவாரஸ்யமான உண்மைகள் புதைந்துள்ளன.ஏனெனில் திரைப்படத்தில் அந்த காட்சியில் மியுசியத்தின் தலைவர் Pont d’Alma சுரங்கப்பாதையில் கொல்லப்படுகிறார்.இதே சுரங்கப்பாதையில் தான் பிரித்தானிய இளவரசி டயானாவும் கொல்லப்படுகிறார்.(டயானா கொலை பற்றி எனது தளத்தில் வெளியான ஆக்கம்.வாசிக்க இங்கே கிளிக்குங்கள்.)



பிரெஞ்சு மியுசியத்தின் தலைவர் மட்டுமல்ல இது பற்றி முழு உலகக்கும் தெரியப்படுத்த வேண்டும் என நினைக்கும் பல சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்டிருப்பதையும் 2012 நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் பொது மக்களின் ஆர்பாட்டங்களை அடுத்து ரத்துச் செய்யப்படுவதையும் காட்டும் திரைப்படக் காட்சிகள்.

இந்த நிகழ்வெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது 2012 12 21 திகதி நடக்கவுள்ள பேரழிவிலிருந்து உலகின் மேல்தட்டு மக்களை மட்டும் காப்பாற்ற தாயாரிக்கும் கப்பல்களை தயாரிக்கும் வேளையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது சீனா.




                    அட்லாண்டிசுக்கு பிரியாவிடை 
Farewell Atlantis 


திரைப்படத்தின் ஹீரோ ஜெக்சன் எல்லா ஹாலிவூட் திரைப்படங்களைப் போலவும் ஒரு விவாகரத்துப் பெற்ற ஒரு தந்தை.
திரைப்படத்தைப் பொறுத்தவரை ஹீரோ ஒரு சுமாரான எழுத்தாளர்.அவர் எழுதிய புத்தகத்தின் பெயர்தான் Farewel Atlantis.அட்லாண்டிஸ் என்பது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பாரிய வெள்ளத்தில் மூழ்கிய ஒரு கண்டமாகும்.சிலர் இப்படியொரு கண்டம் இருக்கவில்லை என வாதாடுகிறார்கள்.ஆனால் சிலர் இப்படியொரு கண்டம் இருந்ததாகவும் அன்றைய காலகட்டத்தில் அந்த கண்டத்து  மக்களே நாகரீகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறந்து விளங்கினார்கள் என வாதாடுகிறார்கள்.இப்படி வாதடுபவர்களின் கருத்துப் படி இந்த பாரிய வெள்ளத்தில் தப்பிய சிலர் எகிப்து அமெரிக்கா மற்றும் ஆசிய பகுதிகளில் குடியேறியதாகவும் அவர்களே அந்த பகுதிகளின் நாகரீக வளர்ச்சிக்கு வித்திட்டதாகவும் கூறுகின்றனர்.

இன்று இரகசிய சமுதாயங்களின் நம்பிக்கைக்கு அமைய இன்றைய காலத்தின் "அட்லாண்டிஸ்" தான் ஐக்கிய அமெரிக்க குடியரசு.

சேர் பிரான்சிஸ் பேகன் அவர்களால் 1605 இல் எழுதப்பட்ட " New Atlantis " என்ற புத்தகம்.இந்த புத்தகம் அமெரிக்க எப்படி ஸ்தாப்பிக்கப்பட்டது என்பது பற்றி பேசுகிறது.


சேர் பிரான்சிஸ் பேகன் அவர்களின் புத்தகம் " நியூ அட்லாண்டிஸ் - New Atlantis " அமெரிக்காவின் ஆரம்பத்தைப் பற்றி பேசுகிறது." 2012 " திரைப்படத்தின் ஹீரோ ஜாக்சன் கர்டிசின் புத்தகம் " பாயார்வெல் அட்லாண்டிஸ் - Farewell Atlantis " அமெரிக்காவின் அழிவைப்பற்றி எதிர்வு கூறுகிறது.ஆதி காலத்தில் நடந்ததாக கூறப்படும் நிகழ்வு போலவே திரைப்படத்தின் இறுதிப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.அட்லாண்டிஸ் - அமெரிக்கா- மேட்டுக் குடியினரின் தாயகம் பாரிய வெள்ளத்தில் அழிக்கப்படுகிறது - வசதி படைத்த பணக்காரர்கள் மேட்டுக் குடியினர்கள் பாரிய கப்பல்களை உருவாக்கி அதன் மூலம் உயிர் பிழைக்கின்றனர்.அப்படி தப்பிய மேட்டுக் குடியினர்கள் ஒரு புதிய உலகத்துக்கு வித்திடுகின்றனர்.இப்படி போகிறது படத்தின் காட்சிகள்.

இந்த உலகை எல்லாத் துறைகளிலும் ஆளும் மேட்டுக் குடியினர்கள் அவர்களின் நம்பிக்கைகள் கொள்கைகள் மற்றும் புராணக் கதைகளை திரைப்படங்கள் மூலம் நமது மூளைக்கு ஊற்றுகின்றனர்.



பேரழிவு - The Disaster

திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் நெருங்கும் போது உலக அழிவு ஆரம்பவதைக் காட்டுவார்கள்.பூமி வெப்பமடைந்து நிலப் பிளவுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் தோன்றுவதைக் காட்டுவார்கள்.பாரிய அழிவொன்று வர இருப்பதை தெளிவாக அறிந்திருந்தும் மேட்டுக் குடியினரின் ஆதிக்கத்தில் இருக்கும் வெகுஜன ஊடகங்கள் மக்களிடமிருந்து அதை மறைத்து மக்களை உண்மையான தகவளை பெற்றுக்கொள்வதிளிருந்து தடுக்கிறது.

எல்லா உண்மைகளையும் அறிந்த இந்த கதாபாத்திரம் எல்லா ஹாலிவூட் திரைப்படங்களைப் போலவும் ஒரு பைத்தியக்காரனைப் போல சித்தரிக்கப்படுகிறது.
 
உலகம் அழியப் போகிறது - கப்பலில் ஏற நேரம் வந்துவிட்டது

உலகமே பாரிய அழிவில் அழிய இருக்கும் போது உலகளாவிய மேட்டுக் குடியின் அங்கத்தவர்களுக்கு அந்த அழிவின் ஆரம்பத்தையும் அதற்கு ஏற்கனவே திட்டமிட்ட விடயத்துக்கு தயார் ஆகும்படியும் மிகவும் ரகசியமான முறையில் குறுங் செய்திகள் அனுப்பப்படுகின்றன.


உலக அழிவு துவங்கும் போது திரைப்படத்தில் உலகின் மிக முக்கியமான நினைவுச் சின்னங்கள் அழிவதைக் காட்டுவார்கள்.இந்த காட்சிகளைப் பார்க்கும்போது அவை மிகவும் உயர் தொழில்நுட்பத்தில் கண்கவர் கிராபிக் நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன என்பது புரிகிறது.ஆனால் அந்த காட்சிகளில் மறைந்திருக்கும் கருத்து என்னவோ நமக்கு புரியவில்லை.அந்த காட்சிகளூடாக அவர்கள் - மேட்டுக் குடியினர் சொல்ல வரும் விடயம்தான் புதிய தசாப்தத்தின் ஆரம்பம் அதாவது அவர்களின் நம்பிக்கைப் படி கூறுவதாயின் Age Of Aquarius இன் ஆரம்பம்.திரைப்படத்தில் ஒரு காட்சியில் பிரேசிலில் உள்ள " Chirst The Redeemer " என்றழைக்கப்படும் உலகப் பிரசித்து பெற்ற சிலை பூகம்பத்தினால் அழிவது போன்று காட்டுகிறார்கள்.


தமது புதிய உலகத்தில் கிறிஸ்தவத்துக்கு இடமில்லை - கிறிஸ்தவத்தின் வீழ்ச்சி - இதில் எதைக் குறிக்கிறது இந்த காட்சி.

திரைப்படத்தில் இன்னொரு காட்சியில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித ஆலயமான St.Peters Basilica Church இடிந்து விழுவதையும் அதன்போது வணக்கத்தில் ஈடிபட்டுக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டு போவதையும் காட்டுவார்கள்.


திரைப்படத்தில் வரும் இன்னொரு காட்சி - மைக்கலாஞ்சலோ வின் புகழ்பெற்ற ஓவியமான ஆதமும் கடவுளும் இருக்கும் ஓவியத்தில் இருவரினதும் விரல்கள் தொட்டுக் கொள்ளும் இடத்தில் ஒரு பிளவு - பிரிவு காட்டப்படுகிறது.இதன் மூலம் அவர்கள் சொல்லவரும் விடயம்தான் என்ன ? மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான தொடர்பு இன்றுடன் முடிவுக்கு வருகிறது என்றா ?



பிற மதங்களினதும் வணக்கஸ்தளங்களும் அழிக்கப்படும் காட்சிகளும் காட்டப்படுகின்றன.முஸ்லிம்களின் புனிதஸ்தலமான மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலையும் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் அழிக்க திட்டமிட்டிருந்தார் இயக்குனர்.என்றாலும் இஸ்லாமிய உலகின் எதிர்ப்பை அடுத்து அந்த காட்சியை நீக்கினார் இயக்குனர்.
வெள்ளை மாளிகை - அமெரிக்க சக்தியின் அடையாளம் - பாரிய வெள்ளத்தால் அழிக்கப்படும் காட்சி.

நோவாவின் கப்பல் - Ark Of Noah


நோவாவின் கப்பல்



உலக மக்கள் தொகையில் பாரிய தொகையினர் வெள்ளத்தால் கொள்ளப்பட இருக்கையில் " தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் " மட்டும் சீனாவிலுள்ள பிரம்பாண்டமான கப்பல்களில் ஏற தயாராக இருக்கின்றனர்.


பைபிள் மற்றும் திருக்குரானில் கூறப்பட்டுள்ள மஹா பிரளயம் சம்பவத்தை நினைவு படுத்தும் ஒரு காட்சி.




உலகமே அழியும் தருவாயில் அல்லோகல்லப்பட்டு இருக்கும் போது பிரித்தானிய மகாராணியின் ஆடையின் அலங்காரத்தைப் பாருங்கள்.இந்தக் காட்சிகள் மூலம் அவர்கள் சொல்ல வரும் விடயம்தான் இந்த நிகழ்வு பற்றி உலக மேட்டுக் குடியின் அங்கத்தவர்களில் ஒருவரான நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றே.




பேரழிவுக்குப் பின் உலகம் புதிய ஒரு சகாப்தத்துக்குள் நுழைகிறது,புதிய ஒரு நாட்காட்டி துவங்குகிறது.ஏற்கனவே பாவித்து வந்த ஜீசசின் பிறப்பை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டி முடிவடைகிறது.






திரைப்படத்தின் இறுதியில் முழு உலகமே நீரில் மூழ்கியிருக்க ஆப்ரிக்காவின் ஒரு பகுதி மட்டும் மூழ்காமல் இருக்கிறது.அதற்கு இவர்கள் வைக்கும் பெயர் "Cape Hope".






முடிவுரை 

இந்த திரைப்படம் பற்றியும் அது சொல்லவரும் தகவல் பற்றியும் எனது நிலைப்பாடு அது வெறும் கற்பனையே என்பதைத் தவிர வேறெதுவுமல்ல.ஹாலிவூட் திரைப்படங்கள் மூலம் அந்த துறையில் இருப்பவர்களிடம் காணப்படும் நம்பிக்கைகள் கொள்கைகள் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை எங்களைப் போல சாதாரண மக்களிடம் கொண்டுவர அல்லது நமக்கு இந்த விடயங்களில் நம்பிக்கையை ஏற்படுத்த அவர்கள் பாவிக்கும் கருவிகளே இப்படிப்பட்ட திரைப்படங்கள்.பல்லாயிரக்கணக்கான திரைப்படங்களில் இது வெறும் ஒரு உதாரணம் மட்டுமே .


இந்த திரைப்படத்தின் இயக்குனரைப் பொறுத்தவரை அவர் இயக்கிய தயாரித்த பல திரைப்படங்கள் பேரழிவுகளையும் வெறும் கற்பனை வரலாருகளையுமே தாங்கி வந்துள்ளன.
  • GODZILLA
  • HELL
  • DAY AFTER TOMORROW
  • 2012
  • 10000 BC
  • INDEPENDENCE DAY
  • STARGATE 
  • MOON 44
  • MAKING CONTACT
போன்ற சில திரைப்படங்களைக் குறிப்பிடலாம்.இனி வரப்போகும் WHITE HOUSE DOWN திரைப்படம் வெள்ளை மாளிகையை ஆக்கிரமிக்கும் ஒரு ஆயுத குழு பற்றியே ஆகும் அதில் என்ன மறைவான விடயங்களை 
கக்கப்போராரோ ?
எனவே இப்படிப்பட்ட திரைப்படங்களை ரசிப்பவர்கள் இவற்றை இயக்கியவர்களின் உண்மையான நோக்கத்தை அறிந்திருப்பது மிகவும் நல்லது.
தவறுகள் பிழைகள் இருக்குமாயின் அதை குறிப்பிடவும் இன்ஷா அல்லாஹ்  திருத்திக் கொள்கிறேன்.

JUST CHECK THESE VIDEOS 
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தின் மறைந்த இரகசியங்கள்.




























































Sunday, July 8, 2012

வாஸ்கொடகாமாவின் ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

வாஸ்கொடகாமாவின்
  ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல். 

வஸ்கொடகாமா

 வாஸ்கோ ட காமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 திசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய இந்தியாவின் ஆளுனர் ஆனார்.

வஸ்கொடகாமா 1498 மே 20 ஆம் திகதி இந்தியாவின் கோழிக்கோடு அருகே கரையோதிங்கினார்.அப்போது கோழிக்கோடு சாமூத்திரிகளால் ஆளப்பட்டு வந்தது.வஸ்கொடகாமாவுக்கு கோழிக்கோடில் சம்பிரதாயபூர்வமாக வழங்கப்படும் எல்லாவிதமான வரவேற்புக்களும் வழங்கப்பட்டன.என்றாலும் அவருக்கும் சாமூத்ரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை அவ்வளவு உறுதியாக இருக்கவில்லை.1498 ஆகஸ்ட் 29 ஆம் திகதி கோழிக்கோடை விட்டு சொந்த நாடு போகும் நோக்கில் அங்கிருந்து வெளியேறினார்.

 ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல்


 வஸ்கொடகாமா என்ற பெயர் வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு திறமையான கப்பலோட்டியாக சாமர்த்தியம்மிக்க தலைவராக ஒரு ராஜதந்திரியாக அறியப்பட்டுள்ளார்.ஆனால் உண்மையில் அவர் அப்படிப்பட்டவரா ? அவர் சம்பந்தப்பட்ட வன்முறை மிலேச்சத்தனம் கொண்ட நிகழ்வுகள் வரலாற்றில் இடம்பெற்றே இல்லையா ? நீங்கள் வரலாற்றுப் புத்தகங்களை கொஞ்சம் அலசினால் போதும் மேலே கூறிய வன்முறை மிலேச்சத்தனம் என்ற பண்புகளை அவர் பல இடங்களில் அரங்கேற்றியுள்ளார்.அப்படி அவர் அரங்கேற்றிய ஒரு நிகழ்வு பற்றியே இப்போது பார்க்க உள்ளோம்.

பத்கள்(BATHKAL) மற்றும் ஹோன்னாவூர் (HONNAVAR) போன்ற இடங்களில் தமது ஆதிக்கத்தைப் பரப்பிய போர்த்துக்கேயர்கள் அந்த இரு நகரங்களையும் அவர்களுக்கு கப்பம் கட்டும் இரு அடிமைகளாக ஆக்கிக்கொண்டனர்.பத்கள்(BATHKAL) நகரிலிருந்து வெளியேற வஸ்கொடகாமா அவ்வூர் நிர்வாகத்துக்கு விதித்த நிபந்தனைகள் இரண்டு முதலாவது வருடத்துக்கு 1000 மூட்டை சாதாரண அரிசியும் 500 மூட்டை பாஸ்மதி அரிசியும் வழங்கப்படவேண்டும்.இரண்டாவது அரபு நாட்டு முஸ்லிம் வியாபாரிகள் அனைவரும் வெளியேற்றப்படவேண்டும் என்பவையாகும்.

1502 ஆகஸ்ட் இறுதிப் பகுதியில் பத்கள்(BATHKAL) நகரில் மிகவும் இலாபகரமான வியாபாரத்தை (கொள்ளையை) முடித்துக்கொண்டு எலிமலை என்ற மலையை அண்டிய பகுதியில் நங்கூரமிட்டிருந்தது வாஸ்கோடகாமாவின் கப்பல்.இந்த பகுதி ஜித்தாவுக்கும் கோழிக்கோடுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து செய்யும் பகுதியில் அமைத்திருந்தது.1502 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் திகதி கில் மடாசோ என்று அழைக்கப்படும்  கப்பலின் கப்டன் மக்காவிலிருந்து ஹஜ் பிரயாணிகளை அழைத்துக் கொண்டு வரும் ஒரு பாரிய கப்பல் ஒன்றை அவதானித்தான்.

"மிரி" என்றழைக்கப்படும் இந்தக் கப்பல் கோழிக்கோட்டின் பெரிய செல்வந்தர் ஒருவருக்கு சொந்தமானது.ஹஜ் பிரயாணிகளை உள்ளடக்கிய அந்தக் கப்பலை மடக்கிப் பிடிக்க கில் மடாசோ வேகமாக தனது கப்பலை செலுத்தினான் என்றாலும் அவன் நினைத்ததை விட மிக விரைவில் பிரயாணிகள் கப்பல் அவர்கள் வசம் வந்தது.கப்பல் தலைவன் வஸ்கொவின் கொலைகார கொள்ளைக்கார கும்பலுக்கு அவர்களுக்கு வேண்டிய அளவில் பணமும் பொன்னும் தருவதாக பேரம் பேசினார்.என்றாலும் வாஸ்கோ அதற்கு உடன்படவில்லை.கப்பலில் இருந்த அனைத்து சரக்குகளும் வாஸ்கொவின் கப்பலுக்கு மாற்றப்பட்டது.பெண்கள் அணிந்திருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.வாஸ்கொவின் கும்பலின் இந்த செயல் பிரயாணிகள் கப்பலில் இருந்தவர்களை பதற்றத்துக்குள்ளாக்கியது.கப்பலுக்குள் இருந்த ஆயுதமேந்திய போர்த்துக்கேய கொள்ளைக்காரர்களுடன் வெறும் கைகளால் போராடினார்கள்.என்றாலும் அவர்களின் அந்த செயல் ஒருவிதத்திலும் அவர்களுக்கு பயனளிக்கவில்லை.
 
1502 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 03 திகதி நடந்த இந்த கோர நிகழ்வின் நேரடி சாட்சிகளில் மிகப் பிரபல்யமானவர் தோமே லோபஸ் என்பவர்.இவர் கப்பல் கப்டனின் உதவியாளாராக காமாவுடன் பயணமானவர்.மேலும் இந்தியாவுக்கான காமாவின் இரண்டாவது பயணம் சம்பந்தமான விடயங்களை நேரடியாக பார்த்தவர்.இவர் வஸ்கொவின்  இந்த இரக்கமற்ற நிகழ்வு பற்றி கூறும் போது "என் வாழ்நாள் பூராகவும் மறக்க முடியாத நிகழ்வுதான் அது" என்கிறார் அவர் எழுதிய புத்தகத்தில்.வஸ்கொடகாமாவின் கட்டளையின் பேரில் யாத்ரீகக் கப்பல் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டது.கப்பலில் இருந்த யாத்ரீகர்கள் கப்பலின் அடித்தளத்தில் நுளைவிக்கப்பட்டனர்.பின்பு யாத்ரீகக் கப்பல் மீது தீவைக்கப்பட்டது.பின்பு பிரங்கிகள் மூலம் தாக்கப்பட்டு கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.கப்பல் மூழ்க சில நாட்கள் எடுத்தது.கப்பல் மூழ்கும் வரை கொலைகார போர்துக்கேசிய கும்பல் ஈட்டிகளை தாங்கிய வண்ணம் ரோந்து பார்த்தனர்.அவர்களின் குறிக்கோள் யாரும் தப்பிவிடக்கூடாது என்பதாகும்.

வஸ்கொடகாமாவினால் "மிரி" என்றழைக்கப்படும் யாத்ரீகக் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட  சம்பவம் இந்தியாவில் போர்துக்கேயர்களுக்கேதிரான ஒரு நிலைப்பாட்டை அதிகப்படுத்தியது.என்றாலும் வஸ்கொடகாமா தனது இந்த செயலை பழிக்குப்பழி தீர்க்கும் ஒரு செயலே என நியாயப்படுத்தினான்.1500 டிசெம்பர் 17 ஆம் திகதி கோழிக்கோடில் நடந்த கலவரத்தில் 50 அல்லது 70 போர்த்துக்கேயர்கள் கொல்லப்பட்டனர்.இதற்கு பழிவாங்கும் செயலே என தனது செயலை நியாயப்படுத்தினான் வஸ்கொடகாமா.

வஸ்கொடகாமாவினால் மேட்கோள்ளப்பட்ட இந்த படுகொலையில் கிட்டத்தட்ட 300 பேர் கொல்லப்பட்டனர்.இதன்போது உயிர் பிச்சை வழங்கப்பட்ட 20 முஸ்லிம் சிறார்கள் ஜெரோநிமஸ் மாடலயத்தில் கிருஸ்தவ துறவிகளாக மதம் மாற்றப்பட்டனர்.போர்த்துகேய படைவீரர் ஒருவர் இஸ்லாத்தை தளுவியதட்கு பழிக்குப் பலி வாங்கவே அவர் இந்த மத மாற்றத்தையும் செய்து வைத்தார்.



இணையத்தில் எனக்கு கிடைத்த சில ஆக்கங்களைக் கொண்டு இந்த சிறு ஆக்கத்தை எழுதினேன்.மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது நான் மேலே எழுதிய தகவல்களில் ஏதாவது தவறு இருப்பின் தெரிவிக்கவும்.இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.













 

Thursday, June 21, 2012

நானே இமாம் மஹ்தி (அலை) - ???


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.



இமாம் மஹ்தி பற்றி ஒரு சிறு அறிமுகம்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்றார்கள். அவர்கள் நபி ஈஸா அலை அவர்கள் இவ்வுலகில் இறங்கு முன்பு இவ்வுலகிற்கு வருகை தருவார்கள் என ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் என்பதையும், இமாம் மஹ்தி (அலை) அவர்களின் இறுதி நாளின் சமீபமாக அவரின் வருகையினால் மனித சமூகம் தனது யதார்த்தமான வாழ்வை அடைந்து கொள்ளும் என்பதையும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், அரபிகளை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடியாது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்.
(இப்னு மஸ்ஊத் (ரலி) திர்மிதி, அபூதாவூத்)

என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைப்பார். அவர் பெயர் என் பெயரை ஒத்திருக்கும். (இப்னு மஸ்ஊத் (ரலி) திர்மிதி)

இவ்வுலகில், ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான்.
(அபூ குறைறா (ரலி) திர்மிதி - இப்னுமாஜா)

நபி ஈஸா (அலை) அவர்கள் உலகில் தரிசனம் பெற்ற பின்னரே இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இறையடி சேர்வார்கள்.

மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக உள்ள இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வருகை நபி ஈஸா (அலை) அவர்களின் வருகைக்கு முன் இடம்பெறும்.இது பற்றி ஹதீஸ்களில் பல இடங்களில் முன்னறிவுப்பு செய்யப்பட்டுள்ளது பற்றி நாம் மேலே உள்ள அவரைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பில் பார்த்தோம். எட்டாம் நூற்றாண்டு முதல் இருபத்தியோராம் நூற்றாண்டு வரை அதாவது இன்று கழிந்து கொண்டிருக்கும் நூற்றாண்டு வரை பலர் நான் தான் அந்த வாக்களிக்கப்பட்ட மஹ்தி என உரிமை கொண்டாடியுள்ளனர்.சிலர் அவர்களைப் பின்பற்றியவர்களால் அவரே இமாம் மஹ்தி என உரிமை கொண்டாடுகின்றனர்.அப்படி உரிமை கொண்டாடியவர்களைப் பற்றிய தகவல்களைத் தரும் பதிவே இது.

தாங்களை வாக்களிக்கப்பட்ட மஹ்தி கூறிக்கொண்ட சிலர் கடைசியில் இஸ்லாத்தில் இருந்து பிரிந்து சென்று புதிய மதங்களை பிரிவுகளை உருவாக்கிக் கொண்டனர்.உதாரணமாக பாபிஸ்ம்,அஹ்மதிய இயக்கம் போன்றவையைக் கூறலாம்.1979 இல் நடந்த மக்கா முற்றுகை கூட தன் மைத்துனன் இமாம் மஹ்தி என்றும் அவரை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று கோரி முன்னேடுக்கப்பட்டவையே.


8 ஆம் நூற்றாண்டு
 
  • ஸாலிஹ் இன்பு தரீப் 
இந்த ஸாலிஹ் இன்பு தரீப் என்பவன் பர்காவதா ஒன்றியத்தின் (Barghawata) இரண்டாம் மன்னன் ஆவான்.இந்த ஒன்றியம் காரிஜியாக்களின் ஒரு பிரிவான சுப்ரி இயக்கத்துடன் இணைந்து உமையாக்களுக்கு எதிராக பேபர் (Beber) இனத்தவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நாடாகும்.இது இன்றைய மொரோக்கோவில் அட்லாண்டிக் கடற்கரை ஓரமாக அமைந்திருந்தது.

உமையாக்களின் கலீபாவான ஹிஷாம் இன்பு அப்துல் மாலிக் அவர்களின் காலத்தில் தோன்றிய இந்த ஸாலிஹ் இப்னு தரீப் தான் புதிதாகத் தோன்றிய  மதத்தின் தீர்க்கதரிசி என அறிவித்துக் கொண்டான்.தனக்கு இறைவனிடமிருந்து புதிய வெளிப்பாடு அதாவது ஒரு புனித நூல் ஒன்று அருளப்பட்டதாகவும் அது 80 அத்தியாயங்களைக் கொண்டதாகவும் உள்ளதாக அறிவித்தான்.அரேபிய வரலாற்றாசிரியர் இப்னு கல்தூனின் தகவல்களுக்கு அமைய ஸாலிஹ் இன்பு தரீப் தன்னை ஒரு புதிய மதத்தின் நபியாக அறிவித்துக் கொண்டு இறைவனிடமிருந்து தனக்கு 80 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு புதிய புனித நூல் அருளப்பட்டதாக அறிவித்தான்.ஐந்து நேர தொழுகைக்குப் பதிலாக அவன் பத்து வேளை தொழுகையை நிறைவேற்றுமாறு மக்களை பணித்தான். அவன் தன்னைப் பின்பற்றும் மக்களை நிர்வாகம் செய்ய அவனே புதிய சட்டங்களை உருவாக்கினான்.இவைப் பின்பற்றிய மக்கள் சாலிஹை "ஸாலிஹ் அல் மூமினின்" என அழைத்தனர்.மேலும் அவன் அவனே வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் நபி ஈஸா (அலை) தனக்கு முன்னாள் இருந்து தொழுகை நிறைவேற்றுவதாகவும் அறிவித்தான்.

ரமலான் மாதத்தில் நோன்பு பிடிப்பதற்கு பதிலாக ரஜப் மாதத்தில் நோன்பு பிடிக்குமாறு மக்களை அறிவித்தான்.தொழுகையை பத்து வேலையாக மாற்றிய இவன் வுழு செய்யும் முறையையும் மாற்றினான்.இஸ்லாத்தின் பல சட்ட திட்டங்களை மாற்றிய இந்த ஸாலிஹ் இப்னு தரீபின் புதிய மதம் பதினோராம் நூற்றாண்டில் அல்மோராவிட்ஸ்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

  • அப்துல்லாஹ் இப்னு முஆவியா
கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்களில் ஒருவரான அபுதாலிப் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் மகனும் அலி (ரலி) அவர்களின் மூத்த சகோதரரான ஜபார் இப்னு அபூதாலிப் அவர்களின் பரம்பரையில் வந்தவர்தான் இந்த அப்துல்லாஹ் இப்னு முஆவியா.127 வது ஹிஜ்ரி ஆண்டின் இறுதிப் பகுதியில் கூபாவிலுள்ள ஷியாக்கள் இவரை தாங்களின் இமாமாக நியமித்துக் கொண்டனர்.உமையாக்களின் கலீபாவான மூன்றாம் யசீதுக்கு எதிராக புரட்சி செய்து இன்றைய ஈரானின் மேற்குப் பகுதியை இரண்டு வருடங்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

கி.பி.747 இல் உமையாக்களினால் தோற்கடிக்கப்பட்ட அப்துல்லாஹ் இப்னு முஆவியா குராசானில் ஒரு சிறையில் காலமானார்.ஆனால் அவரை இமாமாக ஏற்று பின்பற்றியவர்கள் இப்னு முஆவியா மரணிக்கவில்லை என்றும் அவர் மறுமை நெருங்கும் போது இமாம் மஹ்தியாக வெளிவருவார் என்றும் நம்புகின்றனர்.


9 ஆம் நூற்றாண்டு


  • முஹம்மத் இப்னு ஹசன் இப்னு அலி

முஹம்மத் அல் மஹ்தி என்ற பெயரில் பிரசித்தி பெற்ற முஹம்மத் இப்னு ஹசன் இப்னு அலி ஷியாக்களின் பதினோராவது இமாமான ஹசன் அல் அஸ்கரி அவர்களின் மகனாவார்.ஹிஜ்ரி 255 இல் பிறந்த இவர் ஷியாக்களின் நம்பிக்கைப் படி இன்றுவரை மறைந்தே வாழ்ந்துவருகிறார்.ஷியாக்களின் இமாமியாஹ் பிரிவின் நம்பிக்கைப்படி இவர் மறுமை நெருங்கும் போது மறுமையின் அடையாளங்களில் ஒருவராக வெளிவருவார் என கூறப்படுகிறது.இவருக்கு 5 வயது இருக்கும் போது 12 ஆவது இமாமாக தெரிவு செய்யப்பட்டார். ஷியாக்களின் இமாமியாஹ் பிரிவின் நம்பிக்கைப் படி ஹிஜ்ரி 329 முதல் இவர் மறைந்தே வாழ்வதாக கூறப்படுகிறது.

ஆனால் சுன்னிகளான நமது இமாம் மஹ்தி (அலை) தொடர்பான நம்பிக்கைப் ஷியாக்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


10 ஆம் நூற்றாண்டு

  • அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ்
அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் பாதிமிய்யாஹ் கிலாபாத்தின் முதல் கலீபா ஆவர்.பாதிமிய்யாஹ் கிலாபாத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான இவர் தன்னை இமாமாக அறிவித்துக்கொண்டார்.இவர் ஷியாக்களின் இஸ்மாயிலியா பிரிவைச் சேர்ந்தவர்.தன்னைத்தானே இமாமாக அறிவித்துக்கொண்ட அப்துல்லாஹ் அல் மஹ்தி பில்லாஹ் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளான பாத்திமா (ரலி) அவர்களின் மகனான ஹுசைன் (ரலி) அவர்களின் பரம்பரையில் வந்தவர் என வாதிட்டார்.அபூ அப்துல்லாஹ் அல் ஷி என்ற இஸ்மாயிலிய ஷியா மத பெரியார் ஒருவரே இவரை மக்தியாக அறிவித்தார்.இவர்களின் இந்த பாதிமிய்யாஹ் கிலாபா மாவீரன் சலாஹுத்தீன் அய்யூபி அவர்களால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


12 ஆம் நூற்றாண்டு

  • இப்னு தூமார்ட்
அல் மோராவிட்ஸ் கிலாபாத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்து அல் முகாத் என்ற கிலாபாத்தை நிறுவிய அபூ அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் இப்னு தூமர்ட் தன்னை வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் தான் எல்லா பாவங்களிலிருந்தும் மீட்சி பெற்றவர் என்றும் அறிவித்தார்.
இப்னு தூமார்டின் தர்கா - மொரோக்கோ



15 ஆம் நூற்றாண்டு

  • முஹம்மத் ஜான்பூரி
1443 செப்டெம்பர் 09 ஆம் திகதி இந்தியாவின் ஜான்பூரில் பிறந்த முஹம்மத் ஜான்பூரி தான் ஷியாக்களின் இமாமியாஹ் பிரிவின் ஏழாவது இமாமான மூஸா அல் கதீம் அவர்களின் பரம்பரையில் வந்தவர் எனவும் தானே மறுமை நெருங்கும் போது வெளிவரும் வாக்களிக்கப்பட்ட மஹ்தி எனவும் வாதிட்டார்.இவர் இந்த வாதத்தை மூன்று இடங்களில் கூறினார்,மக்காவில் ஒரு முறையும் இந்தியாவில் இரு முறையும் தானே மஹ்தி என்றார்.

 65 ஆவது வயதில் காலமான முஹம்மத் ஜான்பூரியை இமாம் மஹ்தியாக ஏற்றுக்கொண்டு பின்பற்றும் மக்களை "மஹ்தாவி" என அழைக்கின்றனர்.இவர்கள் பெரும்பாலும் இந்திய பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகமாக வசிக்கின்றனர்.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் "சிக்ரி" (zikri) பிரிவினரும் இவரையே இமாம் மஹ்தி என ஏற்றுக்கொள்கின்றனர்.



17 ஆம் நூற்றாண்டு

  • அஹ்மத் இப்னு அபி மஹல்லி
மொரோக்கோவின் தெற்கு பிராந்தியத்தில் பிறந்த அஹ்மத் இப்னு அபி மஹல்லி ஒரு காதி நீதிபதியாவார்.சாதி பரம்பரையின் (SAADI DYNASTY) ஆட்சிக்கெதிராக போர்க்கொடி தூக்கிய கிளர்ச்சிக் குழுவுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் ஒருவர்.    


19 ஆம் நூற்றாண்டு

இந்த நூற்றாண்டில் முன்னைய நூற்றாண்டுகளை விட பலர் நான் தான் இமாம் மஹ்தி என உரிமை கொண்டாடினர்.


  • டிபோநேகோரோ எனப்படும் முஸ்தகார்

முஸ்தகார் இந்தோனேசியாவின் ஜாவா பிராந்தியத்தில் இருந்த யோகிகர்தா (YOGYKARTA SULTHAN ) இன் இளவரசர்களில் ஒருவர்.இவரது தந்தை இறந்ததற்குப் பின் இவரது சகோதர் ஒல்லாந்தர்கள் சார்பாக நடந்துகொண்டமை இவரது எழுச்சிக்கு காரணமாக இருந்தது.உள்ளூர் மக்களின் பாரிய ஆதரவுடன் ஒல்லாந்தர்களுக்கு எதிராக போராடினர்.கிருஸ்தவர்களுக்கு எதிராக போராட தான் ஒரு தெய்வீகத்தன்மை வாய்ந்த ஓர் சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அவர் நினைத்தார்.மேலும் தானே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்றும் ஜாவா பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாய்வழிக் கதைகளில் குறிப்பிடப்படும் "ரது ஆதில்" (RATU ADIL) லும் அவரே என நினைத்தார்.

1830 இல் ஒல்லந்தர்களால் சமாதான பேச்சுக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட முஸ்தகார் ஒல்லந்தர்களால் நாடு கடத்தப்பட்டார்.


  • பாப் (BAB) எனப்படும் அலி முஹம்மத் ஷிராசி

பஹாய் மதத்தின் ஆரம்ப கர்த்தாவான அலி முஹம்மத் ஷிராசி பாரசீகத்தின் ஷிராசி என்ற ஊரில் பிறந்தார்.1844 இல் தானே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்று அறிவித்தார்.பின்பு அவர் தனது பெயரை "பாப்"(BAB) என்று மாற்றிக்கொண்டார்.இவரே பஹாய் மதத்தின் ஆரம்ப கர்த்தா.இவரைப் பின்பற்றியே பஹாவுல்லாஹ் பஹாய் மதத்தை ஆரம்பித்தார்.

பஹாய் மதத்தில் உள்ளவர்கள் அலி முஹம்மத் ஷிராசி நபி இல்யாஸ் (அலை) மற்றும் நபி ஸகரிய (அலை) அவர்களின் ஆன்மீகத் திரும்பல் என்று நம்புகின்றனர்.அப்போதைய இரானின் பிரதம மந்திரி அமீர் கபீர் அவர்களால் மரணதண்டனை வழங்கப்பட்டு தப்ரிஸ் நகரில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.இன்று இவரின் நினைவாக இஸ்ரேலில் பாரிய நினைவுச்சின்னம் ஒன்று இருக்கிறது.


  • முஹம்மத் அஹ்மத்


1844 ஆகஸ்ட் 12 ஆம் திகதி பிறந்த முஹம்மத் அஹ்மத் ஒரு ஸூபி அறிஞ்சர் ஆவார்.1881 ஜூன் மாதம் அவரை அவர் இமாம் மஹ்தி என பிரகடனப்படுத்திக்கொண்டார்.பின் துருக்கி - மிஸ்ர் இணைந்த ஆட்சிகெதிராக வெற்றிகரமான ஒரு கிளர்ச்சியை முன்னெடுத்து 1885 இல் இன்றைய சூடானிய தலைநகரமான கார்த்தூம் நகரை கைப்பற்றினார்.இதன் பொது அவர் கைப்பற்றிய இடங்களை உள்ளடக்கிய பிரதேசத்துக்கு "மஹ்தியா" என பெயரிட்டார்.இவர் கார்தூமை நகரை கைப்பற்றிய வருடமே வபாத்தானார்.


  • மிர்ஸா குலாம் அஹ்மத் 


1835 பெப்ரவரி 13 திகதி இந்தியாவின் காதியான் என்ற நகரில் பிறந்த இந்த மிர்ஸா குலாம் தானே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்றும் நபி ஈஸா (அலை) என்றும் அறிவித்தார்.1889 அஹ்மதியா இஸ்லாம் என்ற புதிய மதத்தை உருவாக்கினார்.



20 ஆம் நூற்றாண்டு

  • முஹம்மத் பின் அப்துல்லாஹ் அல் கஹ்தானி


1979 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி முழு முஸ்லிம் உம்மாவையும் கலங்கச் செய்த புனித மக்கா முற்றுகையை முன்னெடுத்த ஜுஹைமான் என்பவனாலே இவர் இமாம் மஹ்தி என பிரகடனப்படுத்தப்பட்டார்.இந்த சம்பவம் பற்றி முழுமையான விடயங்கள் கடைசியாக இட்ட பதிவில் .................

புனித மக்கா முற்றுகை 1979



  • ரியாஸ் அஹ்மத் கோஹார் ஷாஹி
1941 நவம்பர் 25 ஆம் திகதி பிறந்த ரியாஸ் அஹ்மத் கோஹார் M.F.I.என சுருக்கமாக அழைக்கப்படும் மஹ்தி பவுண்டேசனின்  நிறுவனர் ஆவார்.மேலும் Anjuman Serfaroshan-e-Islam என்ற இயத்தினதும் ஸ்தாபகர் இவரே.  இவர் நேரடியாக தன்னைத் தானே இமாம் மஹ்தி என அறிவிக்கவில்லை.ஆனால் இவரை பின்பற்றி நடக்கும் மஹ்தி ப்வுண்டசனின் பக்தர்கள் இவரை நபி ஈஸா (அலை) என்றும் கல்கி அவதார் என்றும் வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தி என்றும் நம்புகின்றனர்.மேலும் இவரது பக்தர்கள் சாஹியின் முகம் நிலவிலும் சூரியனிலும் நெபுலா எனப்படும் நட்ச்சத்திரத்திலும் மக்காவிலுள்ள ஹஜருல் அஸ்வத் கல்லிலும் தென்பட்டதாக கூறுகின்றனர்.1997 ஆம் ஆண்டு தான் நபி ஈஸா (அலை) அவர்களை அமெரிக்காவில் சந்தித்ததாகவும் ஷாஹி கூறியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு முதல் இவர் காணாமல் போய்விட்டார்.சிலர் இவர் 2003 ஆண்டு இறந்து விட்டதாக கூறுகின்றனர்.ஆனால் சிலர் இவர் பாகிஸ்தானில் ஆயுள் தண்டனை கைதியாக தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பதாக நம்புகின்றனர். Anjuman Serfaroshan-e-Islam இயக்கத்தினர் ஷாஹி இறந்துவிட்டதாகவும் மஹ்தி பவுண்டேசன் பிரிவினரோ ஷாஹி இறக்கவில்லை என்று நம்புகின்றனர்.



  • ஆரிபீன் முஹம்மத்


"ஆயாஹ் பின்" என்று மலேசியாவில் பிரசித்திபெற்றிருந்த ஆரிபீன் முஹம்மத் 1943 இல் மலேசியாவில் பிறந்தார்."கேரஜான் லஞ்சித்" அதாவது ஆங்கிலத்தில் "SKY KINGDOM" தமிழில் வானுலக இராஜ்ஜியம் என்ற இயக்கத்தின் ஸ்தாபகரும் தலைவருமான இவர் தனக்கும் சுவர்க்கத்துக்கும் இடையே நேரடியான தொடர்பு இருப்பதாக நம்பினார்.இவரது பக்தர்களோ இவர் ஜீசஸ்(நபி ஈஸா(அலை)) புத்தர்,சிவபெருமான் மற்றும் முஹம்மத் நபி (ஸல்) போன்றோரின் மறுபிறவி என நம்புகின்றனர்.மேலும் இவர் உலக அழிவு நெருங்கும் போது இமாம் மஹ்தியாக வெளிவருவார் என்றும் நம்புகின்றனர்.இவரின் பக்தர்களைப் பொறுத்தவரையில் இவரே வானத்தின் அரசன் மேலும் எல்லா சமயங்களினதும் பக்தியின் உச்ச இலக்கு.ஆரிபீன் முஹம்மத்தின் வானுலக இராஜ்ஜியம் 2005 ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.




21 ஆம் நூற்றாண்டு

  • தியா அப்துல் சஹ்ரா கதீம்


1970 ஆம் ஆண்டு ஈராக்கில் பிறந்த தியா அப்துல் சஹ்ரா கதீம் "ஜுண்டல் ஸமா" எனப்படும் SOLDIERS OF HEAVEN இயக்கத்தின் தலைவராவார்.இவர் தான் அலி (ரலி) அவர்களின் மறுபிறப்பு என்றும் மறைக்கப்பட்ட இமாம் மஹதியும் நானே என அறிவித்தான்.இவன் ஷியா பிரிவைச் சேர்ந்தவன் என்றாலும் 2007 ஆண்டு இராக்கில் நஜாப் பகுதியில் ஆஷுர தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை திட்டமிட்டு மேற்கொண்டவன் இவனே.இந்த தாக்குதலின் போது அமெரிக்க மற்றும் இராக்கிய படைகளுடன் இடம்பெற்ற போராட்டத்தில் கொல்லப்பட்டான்.


சில பிரிவினர்களால் இமாம் மஹ்தி (அலை) என  உரிமை கொண்டாடப்படுபவர்கள்.


  • மாஸ்டர் பார்த் முஹம்மத் - நேசன் ஒப் இஸ்லாம் 
  • முஹம்மத் அல் நப்ஸ் அல் சகியா - ஷியாக்களில் ஒரு பிரிவினர்  
  • முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் அல் ஆப்த இப்னு ஜாபார் அல் சாதிக் - பாதியத் ஷியா 
  • ஜாபார் அல் சாதிக் - தாவுஸ்ஸியா ஷியா 
  • மூசா அல் கதீம் - வக்பியாத் ஷியா
  • முஹம்மத் இப்னு காசீம் - அலவிகள்
  • யஹ்யா இப்னு உமர் 
  • முஹம்மத் இப்னு அலி அல் ஹாதி - முகம்மதியா ஷியா 
  • அல் ஹாகிம் பி அம்ரல்லாஹ் 
  • ரியாஸ் அஹ்மத் கோஹார் ஷாஹி - மஹ்தி பவுண்டேசன் 
  • முஹம்மத் பயாசித் கான் பன்னி 
 
 
நான் மேலே குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக ஏதாவது தவறு இருப்பின் தெரிவிக்கவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்கிறேன்
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
 
 
 
          

Thursday, June 14, 2012

புனித மக்கா முற்றுகை 1979


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.


1979 நவம்பர் 20 என்ற நாளை இஸ்லாமிய உலகம் ஒரு போதும் மறக்காது.ஏனெனில் அதற்கு இரு வலிமையான காரணங்கள் இருக்கின்றன.முதலாவது காரணம் எங்கள் கண்மணி நாயகம் ரசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்று 1399 ஆண்டுகள் கழிந்து 1400 ஆவது வருடம் ஆரம்பித்த முஹர்ரம் முதலாவது நாள்.அடுத்து காரணம் 1979 நவம்பர் 20 ஆம் திகதி இடம்பெற்ற மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகை.இந்த மக்கா முற்றுகை பற்றியே இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

இஸ்லாமிய உலகை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கிய இந்த முற்றுகையை முன்னின்று நடத்தியவன் பெயர்  ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி.இவன் சவுதி அரேபியாவின் நஜ்த் பிரதேசத்தை சேர்ந்த  செல்வாக்கு நிறைந்த ஒரு குடும்பத்தில் பிறந்தவன்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நஜ்த் பிரதேசம் பற்றி இவ்வாறு முன்னறிவுப்பு செய்தார்கள்.


ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றனர்,

ஒரு முறை அண்ணல் நபியவர்கள், இறைவா! எங்களின் ஷாமுக்கும், யமனுக்கும் அபிவிருதியை அருள்வாயாக எனப் பிரார்த்திக்க…. அங்கிருந்த நஜ்து வாசிகளில் ஒருவர், இறைத்தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, நபிகளார் மீண்டும் இறைவா! எங்களின் ஷாமுக்கும் யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக என்று கேட்டிட…. அதற்கு மீண்டுமவர், இறைத் தூதரே! எங்களின் நஜ்துக்கும் என்று வினவ, (அறிவிப்பாளர் சொல்கிறார் மூன்றுமுறை ஷாமுக்கும் எமனுக்கும் அபிவிருத்தியை இறைவனிடம் வேண்டிய நபிகளார், இறுதியில் தம் தோழர்களை நோக்கி……
'நஜ்து தேசம் அதிர்ச்சி தரும் சம்பவங்களும், (பித்னா) குழப்பங்களும் உற்பத்தியாகும் ஸ்தலமாகும். அங்கிருந்து ஷைத்தானின் கொம்பு உதயமாகும் என தமது விரலை நஜ்து தேசத்தின் பக்கமாக நீட்டிச் சொன்னார்கள்.

(ஆதாரம்: புகாரி- பாகம்-2, பக்கம் 1051)

இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் முன்னறிவிப்பு செய்யப்பட ஒரு பிரதேசத்திளிருந்தான் இந்த ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி வெளிவந்தான்.இவன் தன் மைத்துனனான் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தாணியை  வாக்களிக்கப்பட்ட மஹ்தி என்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அவருக்கு கட்டுப்பட வேண்டும் என்று அறிவித்தான்.
ஜுஹைமான் இப்னு முஹம்மத் இப்னு ஸைப் அல் தைபி

நஜ்த் பிரதேசத்தில் மிகவும் பலம்வாய்ந்த குடும்பத்தில் பிறந்த ஜுஹைமான் இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த உலமாக்களில் ஒருவனாக இருந்தான்.மேலும் இவன் சவுதி பாதுகாப்புப் படையின் முன்னால் காப்ரல் ஆவான்.மேலும் முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்களின் முன்னாள் மாணவர்களில் ஒருவன்தான் இந்த ஜுஹைமான்.பின்னாட்களில் முப்தி அவர்களுக்கு அதிராக போர்க்கொடி தூக்கியன் இவன்தான்.

சவுதி அரேபியாவை ஆளும் மன்னர் பரம்பரை சவுதி மண்ணை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கி மேலைத்தேய கலாச்சாரத்தை பரப்ப முயற்சி செய்கிறது இது தான் ஜுஹைமானின் அடிப்படை குற்றச்சாட்டு.மேலும் தனது மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானியே இமாம் மஹ்தி என்றும் அது பற்றி அல்லாஹ் தனக்கு கனவு மூலம் அறிவித்ததாகவும் அவன் கூறினான்.உண்மையில் இந்த இரு பொய்யர்களையும் நம்பியவர்கள் இஸ்லாமிய அறிவற்ற பாமர முஸ்லிம்களல்ல இவர்களை நம்பியவர்களில் பெரும்பாலானோர் மதீனாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படித்த உலமாக்கள்.சவுதி அரேபிய தவிர்ந்த எகிப்து,யேமன்,குவைத் மற்றும் ஆபிரிக்காவின் கறுப்பின முஸ்லிம்களும் இந்த குழுவில் அடங்குவர்.

1979 நவம்பர் 20 அதாவது 1400 ஆவது ஹிஜ்ரி  ஆண்டின் முதல் நாள் கிட்டத்தட்ட 50000 தொழுகையாளிகளுக்கு தொழுகை நடத்த மஸ்ஜிதுல் ஹரத்தின் இமாம் முஹம்மத் அல் சுபைல் முன்வந்தார்.அப்போது தொளுகையாளிகளோடு கலந்திருந்த 500 க்கும் மேற்பட்ட கலகக்காரர்கள் அவர்களின் அங்கிகளுக்கிடையே ஒழித்து வைத்திருந்த ஆயுதங்களுடன் முன்வந்து மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுழையும் நுழைவாயில்கள் அனைத்தையும் சங்கிலிகள் கொண்டு பூட்டினார்கள்.இந்த நேரத்தில் அவர்களுடன் போராடிய இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த 500 பேரில் சில பெண்களும் குழந்தைகளும் அடங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஸ்ஜிதுல் ஹரத்தை கைப்பற்றிய கலகக்காரர்கள் ஹரத்துக்கும் கட்டுப்பட்டு அறைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் தொலைபேசி அழைப்பை துண்டித்தனர்.பணையக் கைதிகளாக பிடிக்கப்பட்ட பல தொழுகையாளிகள் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் எல்லோரும் விடுவிக்கப்படவில்லை சிலர் தொடர்ந்தும் பணயக் கைதிகளாக ஹரத்துக்குள்ளே தடுத்து வைக்கப்பட்டனர்.ஆனால் இவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது,மேலும் அவர்கள் மஸ்ஜிதின் மேல்மட்டங்களை தற்காப்பு நிலைகளாகவும் மினராக்களை ஸ்னைப்பர் நிலைகளாகவும் பயன்படுத்தினர்.

புனித மஸ்ஜிதுல் ஹரம் கலகக்காரர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து ஒரு சில மணித்தியாலத்திலே மஸ்ஜிதை மீட்க களத்தில் குதித்தது சவுதி அரேபியாவின் பாதுகாப்புப் படை அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த இளவரசர் சுல்தான் அவர்களே களத்தில் படைகளை வழிநடத்தினார்.அன்றைய நாள் மாலை நேரத்துக்குள் முழு மக்கா நகரிலும் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.என்றாலும் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் யுத்தம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ளதால் சவுதியின் பாதுகாப்புப் படை உலமாக்களின் பாத்வாவுக்கு காத்திருந்தனர்.நிலைமையை உணர்ந்த முப்தி அப்துல் அஸீஸ் அல் பாஸ் அவர்கள் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுளைய பத்வா வழங்கினார்.

உலமாக்களின் பத்வாவை பெற்றுக்கொண்ட சவுதி பாதுகாப்புப் படை பிரதான மூன்று வாயில்கள் ஊடாக முன்னணி தாக்குதலை தொடுத்தனர்.சவுதி பாதுகாப்புப் படை போன்றே கிளர்ச்சியாளர்களின் தாக்குதலும் மிகவும் கடுமையாக இருந்தது.மேலும் மினராக்களில் பதுங்கியிருந்த ஸ்நைபேர் துப்பாக்கிகளின் தாக்குதல் சவுதி பாதுகாப்புப் படைக்கு பெரும் சவாலாக இருந்தது.இறுதியில் நவம்பர் 27 ஆம் திகதியாகும் போது மஸ்ஜிதுல் ஹரத்தின் பெரும்பாலான பகுதிகதி சவுதி பாதுகாப்புப் படை வசம் வந்தது.கிளர்ச்சியாளர்களின் வசம் அப்போது பாவனையில் இருந்த நிலக்கீழ பாதை மட்டுமே இருந்தது.இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த முற்றுகை 255 பேருக்கு மரணத்தை தேடிக்கொடுத்து முடிவுக்கு வந்தது.இதன்போது 560 பேர் காயம் அடைந்ததனர்.மேலும் இறந்தவர்களில் 127 சவுதி பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் 117 பேர் கிளர்ச்சியாளர்கள்.


ஜுஹைமான் இமாம் மஹ்தி என அறிவித்த அவன் மைத்துனன் முஹம்மத் அப்துல்லாஹ் அல் கஹ்தானி.




















கிளர்ச்சிக் குழுவின் தலைவன் ஜுஹைமான் உட்பட 67 கிளர்ச்சியாளர்கள் கைதி செய்யப்பட்டனர்.இவர்கள் அனைவரும் சவுதியின் மிக முக்கியமான நான்கு நகரங்களில் மக்கள் மத்தியில் சிறைச்சேதம் செய்யப்பட்டனர்.



 

இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்களோ அல்லது நான் மேலே பதிந்த விடயங்களில் ஏதாவது தவறு இருப்பின் தயவு செய்து உங்கள் கருத்துகளை குறிப்பிடவும்.திருத்தி கொள்கிறேன்.

எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.