Saturday, December 10, 2011

கமாண்டோ கான்



1724இல் இராமநாதபுரம் பனையூரில் மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக அழைக்கப்பட்டவன். இந்துவாகப் பிறந்து, கிறிஸ்துவர்களிடம் கல்விப் பயின்று இஸ்லாமியனாக இறந்தவன். 40 வயதே வாழ்ந்தாலும் நாடறிந்தவனாக மட்டுமல்ல இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக, இராணுவ நிபுணனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன் கமாந்தோ கான். இந்திய இராணுவ வரலாற்றில் ஹைதர் அலியும், முகமது யூசுப் கானும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹைதர் அலி வேகத்திற்கு புகழ்பெற்றவர் என்றால், முகமது யூசுப்கான் விவேகத்துடன் தாக்குதலில் சிறந்தவன். ஆற்காட்டு நவாபும், கிழக்கிந்திய கம்பெனியும் பாளையக்காரர்களை அடக்கிட யூசுப் கானை முழமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

பனையூரில் இருந்த இல்லத்துப் பிள்ளைமார்களின் பல குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவின, மருதநாயகத்தின் குடும்பமும் அதில் ஒன்று. கட்டுக் கடங்காமல் சுற்றித்திறிந்த யூசுப்கான் பாண்டிச்சேரிக்கு வந்து அன்றைய பிரெஞ்சு கவர்னர் மான்சர் காக்லா வீட்டில் வேலைக்காரனாகச் சேர்ந்தான். சில காலம் கழித்து வேலையிலிருந்து விலகி அல்லது நீக்கப்பட்டு தஞ்சைக்கு சென்று படைவீரனாகச் சேர்ந்தான். தஞ்சையில் தளபதி பிரட்டன், யூசுப் கானுக்கு கல்வி கற்றுக் கொடுத்தான். தனது ஆர்வத்தால் தமிழ், பிரெஞ்சு, போர்த்துகீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்றுத் தேர்ந்தான். அங்கிருந்து நெல்லூருக்கு மாற்றப்பட்டான் அங்கு தண்டல் காரனாக, ஹவில்தாராக, சுபேதார் என பதவி உயர்வை உழைப்பால் அடைந்தான். ஆற்காட்டில் சந்தா சாஹிப்புடன் வந்து தங்கி இருந்தபோது யூசுப்கானிடம் இருந்த வீரம், விவேகத்துடன் காதலும் சேர்ந்து கொண்டது. இந்தோ  ஐரோப்பிய கலப்பின வழித்தோன்றலான மார்சியா என்ற பெண்ணைக் காதலித்து மணம் முடித்தான்.

திறமைக்கு திறவுகோல்

1750 களில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இந்தியாவில் நாடுபிடியுத்தம் நடந்த காலம். அதேநேரத்தில் 1751இல் ஆற்காட்டு நவாபு பதவிக்கு முகமது அலி வாலாஜாவிற்கும் சந்தா சாஹிப்பிற்கும் போட்டியும் யுத்தமும் மூண்டது. முகமது அலி வாலாஜா திருச்சிக்கு தப்பித்து ஆங்கிலேயர்களிடம் சரண்அடைந்தார். சந்தா சாஹிப்பின் தாக்குதலை இராபர்ட்கிளைவ் தலைமையில் ஆங்கிலேயர்கள் முறியடித்தனர். ஆற்காட்டை மீட்பதற்காக சந்தாசாஹிப் தனது மகன் இராசாசாஹிப் தலைமையில் 10,000 படைகளை அனுப்பினான். இவர்களுக்கு உறுதுணையாக நெல்லூர் சுபேதாராக இருந்த யூசுப்கான் இருந்தான். யுத்தத்தில் பிரெஞ்சு ஆதரவளித்த சந்தாசாஹிப் படைதோல்விகண்டது. ஆங்கிலேயர்கள் முகமது அலி வாலாஜாவை நவாபாக நியமித்தனர். இதற்கு கைமாறாக மதுரை மற்றும் நெல்லையில் வரிவசூலிக்கும் உரிமையை கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தான் நவாபு.

யுத்தக்களத்தில் முகமது யூசுப்கானின் திறமை கண்டு வியந்தான் இராபர்ட்கிளைவ் தனது படையுடன் அவனை இணைத்தான். மேஜர் ஸ்டிங்கர்லா, யூசுப்கானுக்கு ஐரோப்பிய இராணுவ முறைகளில் பயிற்சி அளித்தான். 1755ஆம் ஆண்டுகளில் மதுரை, நெல்லை பாளையக்காரர்களை அடக்குவதற்காக தளபதி அலெக்சாண்டர் கெரானுடன் யூசுப்கான் அனுப்பிவைக்கப்பட்டான்.

எட்டயபுரம், பாஞ்சாலங்குறிஞ்சி படைகளின் தளபதியாக இருந்த “வீரன்’’ அழகு முத்துக்கோனை, பெருநாழிகாட்டில் முகமது யூசுப்கான் சாகடித்தான். மறவர் பாளையங்களை தாக்கி வெற்றி கொண்டான். பூலித்தேவனை தோற்கடித்தான். மதுரையில் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதில் வெற்றிபெற்றான். தனது வெற்றிப் பயணத்தை தடைகளைத் தகர்த்து தொடர்ந்தான். இக்காலத்தில் சென்னையை பிரெஞ்சுப்படை, முற்றுகையிட்டதால் யூசுப்கான் சென்னைக்கு அழைக்கப்பட்டான். பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர்லாலி தலைமையில் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை 1758இல் யூசுப்கான் யாரும் எதிர்பாராத நேரத்தில் கொரில்லாத் தாக்குதல் நடத்தி அதிசயிக்கத் தக்கவகையில் தோற்கடித்தான். இந்த தாக்குதல்பற்றி லாலி கூறுகையில், யூசுப்கான் தலைமையிலான படைகள் ஈக்களைப் போல் பறந்தார்கள் ஒரு பக்கத்தில் தடுத்து தாக்கிட முயலும்போது, அடுத்த நிமிடம் மறுபக்கத்திலிருந்து தாக்கினார்கள் என்று கூறினார். இவ்வெற்றி முகமது யூசுப்கானுக்கு பெரும் புகழ்தேடித்தந்தது. கிழக்கிந்திய கம்பெனி முகமது யூசுப்கானுக்கு “கமாண்டன்ட்’’ பதவி உயர்வை அளித்தது.

மதுரையின் மகுடத்தில்

கமாண்டோ கான் என்ற பதவி உயர்வுடன் முகமது யூசுப்கானை மதுரைக்கு மீண்டும் அனுப்பிவைத்தது கிழக்கிந்திய கம்பெனி. மதுரை மற்றும் திருநெல்வேலியில் வரிவசூல் செய்து வருடத்திற்கு 5 லட்சம் கொடுக்க வேண்டுமென கூறினர். யூசுப்கான் தெற்குசீமையின் தளநாயகனாக ஆட்சிபுரிய ஆரம்பித்தான். யூசுப்கான் சென்னையில் இருந்த போது மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களை எல்லாம் சூறையாடி இருந்தனர். யூசுப்கான் சூறையாடிய கயவர்களை தோற்கடித்து நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைத்தான். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை நிலைநாட்டுவதற்கு அன்றைய தினம் கள்ளர்கள் சவாலாக இருந்தனர். அவர்களது கலவரங்களை அடக்கி சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தினான். நத்தம் பகுதியில் கலவரங்களை அடக்கியபோது 2000 க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர்.

மதுரையின் குளங்களையும், ஏரிகளையும் பழுதுபார்த்து பாசன வசதிகளை மேம்படுத்தினான். இடிந்துகிடந்த கோட்டைகளை பழுதுபார்த்தான். நிதித்துறை மற்றும் வணிகர்கள் பாதுபாப்பை மேம்படுத்தினான். யூசுப்கான் காலத்தில் நிர்வாக செயல்பாடு மேம்பட்டது. இதனால் மதுரை மக்கள் இவனை “கமாந்தோகான்’’ என்று அன்பாக அழைத்தனர். அவர்களின் உள்ளங்களிலேயே குடியேறினான். இதனால் நவாபுக்கும், கம்பெனிக்கும் வருவாய் பெருகினாலும் யூசுப்கான் வலுவாவதை பெரும் ஆபத்தாகக் கருதினர்.

நவாப்பின் நயவஞ்சகம்

முகமது யூசுப்கானின் செல்வாக்கை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் முயற்சித்தான் திடீரென புதிய உத்தரவைப் பிறப்பித்தான். வணிகர்களும், மற்றவர்களும் என் மூலமாகத்தான் வரிகளை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டான். யூசுப்கான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை கிழக்கிந்திய கம்பெனியும் தந்திரமாகக் காயை நகர்த்தினர். நவாப்பின் பணியாளர்தான் யூசுப்கான் என்று அறிவித்தனர். இதனால் நவாபுக்கும், யூசுப்கானுக்கும் மோதல் அதிகமானது. டெல்லியின் ஷாவும், ஹைதராபாத் நிஜாம் கிமாம் அலியும் யூசுப்கான்தான் மதுரையின் சட்டப்படியான கவர்னர் என்று அறிவித்தாலும், நவாப்பும், கம்பெனியும் இதை ஏற்கவில்லை. 1761ஆம் ஆண்டு 7லட்சம் வரிவசூல் செய்து செலுத்திட முன்வந்தான்.

நவாபும், கம்பெனியும் எற்கவில்லை. காரணம் தங்களைவிட வலுவான மக்கள் செல்வாக்கு உள்ளவனை வளர்க்க விரும்பவில்லை. தெற்கு சீமையில் இருந்த பல கம்பெனி வணிகர்கள், யூசுப்கான் மக்களிடம் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்வை உருவாக்கியுள்ளான் என்று புகார் தெரிவித்திருந்தனர். எனவே, கம்பெனியும், நவாபும் யூசுப்கானை கைது செய்துவர கேப்டன் மேன்சனிடம் உத்திரவிட்டனர். இதனிடையே யூசுப்கான் “தன்னை சுதந்திர ஆட்சியாளன்’’ என்று முதன்முதலாக அறிவித்துக்கொண்டு, படைதிரட்டினான் மதுரையில் 27,000 படைவீரர்களைக் கொண்டு பலமாக இருந்தான். அவனுக்கு ஆதரவாக பிரெஞ்சுத் தூதர்கள் வந்து சேர்ந்தனர்.

துரோகத்தின் வெற்றி

துரோகம் பல நேரத்தில் வீரம் செறிந்த போரின் முடிவை விரைவுபடுத்திவிடும், வீரர்கள் யுத்தக்களத்திலே வீழ்வதை தடுத்திடும். இங்கே யூசுப்கானுக்கும் அதுதான் நேர்ந்தது. 1763 செப்டம்பர் மாதம் காலோனல் மேன்சன் தலைமையில் மதுரையைத் தாக்கினர் தஞ்சை, திருவிதாங்கூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, பாளையங்கள் கும்பினியருடன் கைகோர்த்தனர். மழையின் காரணமாக தாக்குதல் நிறுத்தப்பட்டது. மீண்டும் கம்பெனி படையும், நவாபுவின் படையும் இணைந்து 22 நாட்கள் தாக்குதலை தொடுத்தனர். 120 ஐரோப்பியர்களும் 9 அதிகாரிகளும் மாண்டனர். கும்பினியர் படை நிலைகுலைந்து பின்வாங்கியது.
மீண்டும் சென்னை, பம்பாய் பகுதிகளிலிருந்து அதிக படைகள் நவீன ஆயுதங்கள் தருவித்து மதுரை மேஜர் பிரஸ்டன் தலைமையில் தாக்குதல் தொடங்கினர்.

முதலில் நத்தம் கள்ளநாட்டில் பாதைக் காவல்கள் அனைத்தையும் கைப்பற்றினர். 1764 ஜூன் மாதம் கோட்டையை முற்றுகையிட்டனர். கோட்டையைத் தகர்க்க முடியவில்லை. கும்பினியர் படையில் 160 பேர்கள் பலியாகினர். தாக்குதல் மூலம் தோற்கடிக்கும் பாத்தியங்கள் குறைவு எனக் கருதினர். எனவே, கோட்டைக்குச் செல்லும் உணவை நிறுத்தினர். குதிரையும், குரங்கும் உணவாக வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு குடிநீரை நிறுத்தினர். இதனால் கோட்டைக்குள் இருந்த படைகள் மற்றும் மக்களிடம் சோர்வும், குழப்பமும் ஏற்பட்டது. யூசுப்கான் தப்பிக்கும் முயற்சி வெற்றிபெறவில்லை. சரணடைய பிரெஞ்சு தளபதி மார்சன்ட் முடிவெடுத்தான். இந்த சர்ச்சையால் யூசுப்கான் தளபதியை அறைந்தான். இந்த அவமானத்தை பழிதீர்க்க எண்ணினான் மார்சன்ட், யூசுப்கான் சரண் அடையாமல் சண்டையிட்டு வீரமரணம் எய்திட விரும்பினான். இதனிடையே ஆற்காடு நவாபு, சிவகங்கை தளபதி தாண்டவராய பிள்ளை மூலமாக மதுரை கோட்டையில் இருந்த திவான் சீனிவாசராவ், யூசுப்கான், பாக்டா பாபா சாஹிப், தளபதிமார்சன் பேசி வஞ்சக வலையில் வீழ்த்த திட்டமினர். சரணடைவோருக்கும், சண்டையிட்டு மடிய விரும்பியவர்களுக்கும் இடையே துரோகத்தை அரங்கேற்றினர்.
1764 அக் 13இல் முகமது யூசுப்கான் தொழுகையில் ஈடுபட்டபோது சீனிவாசராவ், பாபாசாஹிப், மார்சன், இன்னும் சிலர் யூசுப்கானை அவனது டர்பன் கொண்டு கட்டிப்போட்டுவிட்டனர். விவரம் அறிந்து யூசுப்கானின் மனைவி சிறுபடையுடன் வந்தாலும், துரோகிகளிடம் வெற்றிபெற முடியவில்லை. எனவே, யூசுப்கான் கும்பினிப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டான். அக் 15ஆம் நாள் மதுரை சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டான். இருமுறை கயிறு அறுந்து கீழே வீழ்ந்தான். மூன்றாவது முறை தூக்குக்கயிறு அவனது உயிரைப் பறித்தது. அவனைக் கண்டு அஞ்சு நடுங்கிய கும்பினியர்களும், நவாபும் அவனது தலையை திருச்சிக்கும், கைகளை பாளையங்கோட்டைக்கும், கால்களை தஞ்சைக்கும், திருவிதாங்கூருக்கும் அனுப்பிவைத்தனர்.

உடலை, தூக்கிலிட்ட சம்மட்டிபுரத்தில் புதைத்தனர். 1808இல் அந்த இடத்தில் மசூதி கட்டடப்பட்டு கான்சாஹிப் பள்ளி வாசல் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் ஏழாவது தலை முறையாக அதை பராமரித்து வருகின்றனர். கும்பினியர்களை எதிர்த்ததால் முதன்முதலாக தூக்கிலிப்பட்ட வீரன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வீரத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றான். தன்னை “சுதந்திர ஆட்சியாளன்’’ என்று பறைசாற்றி கும்பினியர்களுடன் போரிட்டான் வீரமரணம் எய்தினான் 40 வயதே நிரம்பிய “கமாந்தோ கான்’’



ஆக்கம் 
ஏ.பாக்கியம்

நன்றி 
கீற்று.கொம்

  

No comments:

Post a Comment