Monday, January 30, 2012

சுய விமர்சனமே எனது தஃவாவின் அடிநாதம்!


மர்ஹூம் முஹம்மத் அல் கஸ்ஸாலி



கடந்த நூற்றாண்டில் இஸ்லாமிய சிந்தனையின் மொத்த வடிவத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தஃவாவை முன்னெடுத்த முன்னோடிகளுள் ஒருவரே மர்ஹூம் அல் கஸ்ஸாலி அவர்கள். மூன்று தசாப்தங்கள் இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஊறித்திழைத்து பெரும் அறிவு வளர்ச்சியும், அனுபவ முதிர்ச்சியும் கொண்டிருந்த அவரது மரணம் இஸ்லாமிய உம்மத்துக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு எனத் துணிந்து கூறலாம். தனது எண்பது வயதிலும் இஸ்லாமிய சிந்தனை குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களில் இருபத்தைந்து வயது வாலிபத்தின் இளமையை எம்மால் தரிசிக்க முடிகின்றது. இப்பெரும் அறிவுஜீவியின் அனுபவங்கள், புரட்சிகரமான கருத்துக்கள் ஏனைய எல்லோரையும் விட அவரை தனித்துவமானவராக அடையாளப்படுத்தி இருக்கின்றன.

குற்றுயிராய்க் கிடக்கும் இஸ்லாமிய உம்மத்தை தூக்கி நிறுத்தி இஸ்லாமிய ஜீவிதத்தை அதன் நரம்பு நாளங்களில் பாய்ச்சுவதற்கான முதன்மையான ஆயுதம் சுயவிமர்சனமே என்று அவர்கள் கருதி வந்தார்கள். இங்கு இஸ்லாமிய தஃவா குறித்து அவருடன் மேற்கொண்ட ஓர் உரையாடல், இன்றைக்கு தஃவா களத்தில் இருப்பவர்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் தருகின்றோம்.

(இவர் எழுதிய, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் என்ற நூல் தமிழில் வெளிவந்துள்ளது)

   

  •  உங்களது தஃவா பணியின் ஆரம்ப காலத்தில் நீங்கள் முதன்மை வழங்கிய அம்சம் எதுவாக இருந்தது?

இஸ்லாமிய முன்னணிகளை நெறிப்படுத்துவதே எனது முதன்நிலைப் போராட்டமாக இருந்தது. இத்தகு இயக்கங்கள் அநேகமான இளைஞர்களை தன்பால் ஈர்த்திருக்கின்றன. அவர்களது உணர்வுகளும் இஸ்லாத்துக்காக உழைக்க வேண்டும் என்ற மனோநிலையும் மெச்சத்தக்கன. எனினும், மிகப் பாரிய அறிவுக் குறைபாடு அவர்களை ஆட்கொண்டிருப்பதை என்னால் மறுக்க முடியாது. உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டில் களங்கத்தை ஏற்படுத்த பல்வேறு சக்திகள் முயல்கின்ற வேளையிலும் அவர்களுள் சிலர் வெறும் பர்தா விசயத்தில் சர்ச்சைப்படுவதை என்னால் சகிக்க முடியாது. அகன்ற இஸ்லாமிய சிந்தனையில் ஹிஜாப் விவகாரம் என்பது மிகக் குறைந்த முக்கியத்துவம் கொண்டதே. ஆனால் அவ்விசயத்தில் அளவு கடந்து மூழ்கி அது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று எனக் கருதுபவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள். மேலும், இத்தகையவர்கள் இஸ்லாம் பெண்மையின் விரோதி என்ற மேற்கின் குற்றச்சாட்டுக்குத் துணை போகிறார்கள்.

இஸ்லாமே பெண்ணுக்குரிய அனைத்து உரிமைகளையும் அந்தஸ்தையும் வழங்கிய மார்க்கமாகும். இவ்வகை உரிமைகள் அவளுக்கு ஜாஹிலிய அறியாமைக் காலத்தில் மறுக்கப்பட்டிருந்தது போலவே நவீன ஐரோப்பாவிலும் மறுக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணை ஐம்பது டாலர்களுக்கு விற்க முடியுமென்று ஐரோப்பா தீர்ப்பளித்த வேளை அதனது குருட்டுச் சிந்தனையை இஸ்லாம் உடைத்தெறிந்தது. ஐரோப்பா பெண்ணின் கைகளிலும் கால்களிலும் இறுகப் பூட்டியிருந்த விலங்குகளை இஸ்லாத்தின் புரட்சிகரமான போதனைகள் தகர்த்தெறிந்தன. போர்க்களத்திற்குக் கூட பெண் செல்லும் அளவுக்கு இஸ்லாம் உரிமைகளில் நெகிழ்ந்து கொடுத்தது. எனவே, பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் உண்மையான நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளாத அரைகுறைகள் மேற்குலகின் பெண்ணியம் சார்ந்த இஸ்லாத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்கு துணை போவதை நம்மால் ஜீரணிக்கவே முடியாது. இஸ்லாமிய இயக்கங்கள் தமது அங்கத்தவர்களுக்கு இஸ்லாத்தின் இந்த பரந்த அணுகுமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும். விரிந்த எல்லைகளில் சிந்திக்கக் கூடிய பிரச்சாரகர்கள் உருவாக வேண்டும்.



  •  இன்றைய தஃவாத் துறையிலும் தாயிகளிடத்திலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகத் தென்படுகிறது. இந்தக் குறைபாடுகளே இஸ்லாமியப் பிரச்சாரத்தின் வெற்றியைப் பின்னோக்கித் தள்ளுகின்றன என்று நீங்கள் அடிக்கடி குறைபட்டுக் கொள்கின்றீர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

உண்மையில் இஸ்லாமிய அறிவுத்துறை இன்று பெரும் சோதனைக்குட்பட்டிருக்கிறது. முழுமையான இஸ்லாமிய அறிவு இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. கலை, இலக்கியத்துறையிலும் கூட இஸ்லாமிய அறிவுப் பின்னணி மிகச் சரியாக விளங்கிக் கொள்ளப்படாத நிலையிலேயே உள்ளது. ஆரம்பக் காலக் கவிஞர்கள், இலக்கியவாதிகள் மொழியிலும் அணியிலக்கணத்திலும் நிலவி வந்த தவறுகளைத் திருத்தி வந்தார்கள். இன்று அப்படியொரு நிலையைக் கூடக் காண முடியாதுள்ளது. இன்று நான் அறிவு மோசடியைக் காண்கின்றேன். குர்ஆனை நன்கு ஓதத் தெரியாதவன், சுன்னாவை மிகச்சரியாக விளங்கிக் கொள்ளாதவன், அரபு மொழியைத் திறம்படக் கற்காதவன் இவர்களை எல்லாம் மிம்பர்களில் பிரச்சாரம் செய்ய அனுமதித்ததே நமது தோல்வியின் ஆரம்பமாகும்.

இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் அதிகூடுதலாக கருத்து முரண்பாடுபட்ட பகுதிகளில் தெளிவில்லாத ஆலிம்கள் குறித்த பிரச்சினையில் தமக்குத் தெரிந்ததை மட்டும் வைத்து தீர்ப்புச் சொல்லி சமூகத்தைக் குழப்பி விடுகிறார்கள். இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு சாராரும் ஒரே பிரச்சினையை வௌ;வேறு வகையில் அணுகுகிறார்கள் என்பதல்ல நான் கூற வருவது. மாறாக மக்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய நேரெதிரான பத்வாக்களை முன்வைப்பதே பிரச்சினைக்கான காரணமாகும்.

நமது கலாசாலைகளும் பல்கலைக்கழகங்களும் முழுமையான ஆலிம்களை உருவாக்க வேண்டும். அரைகுறை அறிஞர்கள், போலிப் புத்திஜீவிகள் இஸ்லாத்திற்கும் அதன் தூதுக்கும் பாரமாக இருப்பார்களே ஒழிய அதன் வெற்றிக்கு உழைப்பவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே முழுமையான இஸ்லாமியக் கல்வியை வழங்கும் வகையிலான பாடத்திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும். அப்போது மட்டுமே நமது பிரச்சாரப் பணியை வெற்றிகரமாக முன்னெடுக்கலாம். இந்தத் தவறை திருத்தாதவரை இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். அதற்குச் சார்பாக வாதாடுகின்ற நமது கையாலாகாத வக்கீல்களால் இஸ்லாத்திற்குக் கிடைக்க வேண்டிய நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்ட வண்ணமே இருக்கும்.

இதன் காரணமாகவே நான் எனது தஃவாவின் அடிநாதமாக சுயவிமர்சனத்தை ஆக்கியிருக்கின்றேன். இந்த மார்க்கத்துக்காக உழைப்பவர்களை எனது மரணம் வரை நான் விமர்ச்சித்துக் கொண்டே இருப்பேன். இஸ்லாமியப் பிரச்சாரம் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி அவரசமாக அடையப் பெற வேண்டும் என்பதே எனது விமர்சனத்தின் குறிக்கோளாகும்.



  •  தாம் சொல்வது சரியா? பிழையா? என்பதை ஆராயாமல் சிலர் பத்வாவைத் துணிந்து அவசரமாகச் சொல்லி விடுகிறார்கள். இவர்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

சில ஆலிம்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஓடுகிறார்கள். அவர்களது அராஜகங்களை நியாயப்படுத்தும் வகையில் இவர்களது பத்வா அமைந்து விடுகின்றன. மற்றும் சிலர் வௌ;வேறு பாத்திரங்களிலுள்ள தண்ணீரைப் போன்று பாத்திரங்களின் அமைப்புக்கேற்ப தண்ணீரும் அதன் உருவை மாற்றுவது போன்று சூழலுக்குச் சாதகமாக தமது கருத்துக்களை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள். இதுவே பிரச்னைக்கான காரணமாகும்.

இதற்கான தீர்வு இஸ்லாமிய சிந்தனையின் முழுமையான வடிவத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது மட்டுமே. காரணம் சிலர் சட்டப்புத்தகங்களின் ஒரு சில பக்கங்களை மட்டுமே வாசித்து விட்டு அவர் வாசித்த பக்கங்கள் மட்டுமே இஸ்லாம் என்று கருதுகிறார்கள். இது மிகப் பாரதூரமானதொரு தவறாகும். என்னால் இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மூல வசனங்களிலிருந்து சட்டத்தைக் கண்டுபிடிக்கத் திராணியில்லாதவர்கள் இஸ்லாம் பேசுவதை நான் மறுக்கிறேன். எனது அச்சம் இஸ்லாத்தின் எதிரிகள் மீதல்ல. மாறாக இஸ்லாத்தின் பெயரால் பேசுகின்றவர்கள் மீதே நான் அதிகம் அச்சப்படுகின்றேன். ஒன்றை முழுமையாக தெரியாமல் இருப்பது வேறு, அதனை அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது இன்னொன்று. இவ்வகை இரண்டாம் நிலை மிக அபாயகரமானதாகும்.

   

  •  நாம் தற்போது அனுபவித்து வரும் நெருக்கடிகளுக்கு தலையாய காரணம் இஸ்லாமிய ஷரீஆவை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதே என்று நாம் கருதுகிறோம். இது பற்றி உங்கள் கருத்தென்ன?

இஸ்லாமிய ஷரீஆவின் நடைமுறைச் சாத்தியப்பாட்டில் தர்க்கித்துக் கொண்டிருப்பவன் மார்க்கவாதியோ அல்லது அல்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கின்ற சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமற்றவை எனக் கருதுபவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறான். இதைக் கூறும் போது இன்னொன்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மது அருந்தியவனுக்கு கசையடி கொடுப்பதும், திருடியவனது கையைத் துண்டிப்பதும் மட்டுமல்ல ஷரீஆ என்பது. இஸ்லாம் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது. அவ்னைத்தையும் உள்ளடக்கியதே இஸ்லாமிய ஷரீஆவாகும். அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.







No comments:

Post a Comment