Friday, January 6, 2012

மதம் தேவையில்லை மனச்சாட்சியே போதும்...???


மனசாட்சி ஒரு மகத்தான சக்தியே. எனினும் மனசாட்சி என்றால் என்ன? எல்லோருடைய மனசாட்சியும் ஒன்று போன்றதுதானா? அதன் தீர்மானமும் எப்போதும் எல்லோரிடமும் ஒன்று போன்றது தானா? அது குற்றங் குறையற்றது என்று யாராவது கூற முடியுமா?

பிறந்த குடும்ப சூழலும் வளர்ந்த சமூக சூழலும் பின் தொடர்ந்து வரும் பாரம்பரிய சூழலும் மனசாட்சியை நிர்ணயிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது.

எல்லோருடைய சிந்தனையும் செயல்படும் ரீதியும் ஒன்று போல் இருப்பதில்லை.  மனிதர்கள் பலரும் பல குணாதிசயங்களைக் கொண்டவர்களாகவும், அதனுள் ஒன்றுக்கொண்று மாறுபட்டவர்களாகவும் உள்ளனர். அவர்களின் ஆசைகளும் பலவிதங்களாகும். கற்றறிந்த அறிவற்கும், பாமர அறிவிற்கும் பலத்த ஏற்ற தாழ்வுகள் உண்டு அந்நிலையில் ஒவ்வொருவரும் தம்முடைய ஸ்தானத்தில் நின்று கொண்டு தான் காரணகாரியங்களைப் பார்க்கின்றார்கள். எல்லோரும் ஒன்றுபோல் சிந்திப்பது சாத்தியமானதல்ல. அதனால் சிந்தனைகளும் அதன் அடிப்படையிலான செயல்பாடுகளும் மாறுபட்டதாகவே இருக்கும்.

அழகு விரும்பக்கூடியதாகும். சிலருக்கு சில பொருட்கள் மீது விருப்பமிருக்கும் அதுவே வேறு சிலருக்கு அதன் மீது வெறுப்பாயிருக்கும். அதுபோல நன்மை, தீமைகளும் அவ்விதம் ஆகலாமல்லவா? தனிமனிதனின் ரசனைக்கேற்ப அழகும் விருப்பமும் மாறுபாடும் போது நன்மை தீமையில் மட்டும் மாற்றம் ஏற்படாது என்று கூறவே முடியாது.

என் மனசாட்சிக்கு நன்மையாகத் தெரியும் காரியம் உங்களுடைய மனசாட்சிக்கு தீமையாக தெரியலாம். உங்களுக்கு நன்மையாகத் தெரியும் காரியம் எனக்கு தீமையாகத் தெரியலாம். உண்மையில் நன்மை நன்மை தான். தீமை தீமை தான். அது மனசாட்சியின் அடிப்படையில் மாறுபட்டாலோ மனித சமூகத்திற்கு கேடுதான். சமூக பொருளாதார கடமைகளை அனுசரித்து மாறிவரக்கூடியதல்ல நன்மை தீமைகள். அது கால, தேச. வர்க்க, நிற இன மத பேதங்களுக்கு பொதுவாக இருக்க வேண்டும்.

மனித மனசாட்சியோ, சமூக சூழ்நிலையோ பொருளாதார அடிப்படையோ தேசிய சூழலோ தான் நன்மை தீமையை நிச்சயிக்கிறது என்றால் அது அசாத்தியமாயிருக்கும். ஆகவே நன்மை, தீமைகளை நியாய அநியாயங்களை நிர்ணயிக்க மனித இச்சைகளுக்கோ, மனசாட்சிக்கோ அருகதையில்லை எனலாம்.

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போவேன்? வாழ்க்கை என்றால் என்ன? அது எதற்குரியது? அது எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது போன்ற ஐயங்களுக்கெல்லாம் இறைவெளிப்பாடுகள் மூலமேயல்லாது வேறு எதன் மூலமும் தெளிவான பதிலை புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாது.

சார்லஸ் டார்வினும். ஃ பிராய்டும், மெக்டுகல்ஸும். அட்லரும். மார்கஸ்ஸும் மனிதனைக் கண்டது மாறுபட்ட விதத்திலாகும். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றார் டார்வின். மனிதன் ஒரு மிருகமே அவனுக்கு வழிகாட்டுவது உணர்ச்சிகளே என்றார் மெக்டுகல்ஸ். மனிதன் ஒரு சிற்றின்ப ஜீவி. அவனிடம் அமிழ்ந்து கிடக்கும் நாம் வேட்கையை திருப்திபடுத்தவே அவன் நிர்பந்திக்கப்படுகிறான் என்றார் ஃபிராய்ட் மனிதன் ஒரு சிற்றின்ப ஜீவ அல்ல. அவனை இயக்குவது அவனடைய அகம்பாவம் தான் என்றார் அட்லர், மனிதர் மிருகங்களைப் போல் தனது பொருளாதார தேவைகளுக்கும் உடற்பசி தேவைகளுக்கும் அடிமை. அவன் ஒரு பொருளாதார மிருகம் என்றார் மார்க்ஸ்.

தம்முள், தம்முன் எந்தவொரு பிரச்சனை பெரிய ரூபம் எடுத்து நிற்கிறதோ அதையே முழு மனித சமூகத்தின் பிரச்சனை எனக்  கருதினார்கள். மனிதரில் மார்க்ஸ் பார்த்தது உடற்பசி, ஃபிராய்ட் பார்த்தது காமப்பசி, உணர்ச்சிக்கு அடிமையானவன் என்றார் மெக்டுகல்ஸ் அட்லரோ அவன் அகங்கரி என்றார். அந்தன் ஆனையைப் பார்த்த கதை போல இவர்கள் பார்வைகளும் அமைந்ததே தவிர மனிதனை முழுமையாக அறிந்திருக்கவில்லை.

அறிவு ஜீவிகளும், அறிவியல் ஆய்வாளர்களும் மனிதனைக் குறித்து சிந்திப்பதானது தங்கள் முன் நடந்த அனுபவப்பட்ட காரண காரியங்களை கொண்டேயாகும். அறிவியல் தாகம் கொண்டவர்கள் மனிதனைக் குறித்து புதிது புதிதாக பல விஷயங்களை கண்டறியும் போது இன்னும் அறியாதது எவ்வளவோ இருக்க தங்களுடைய அறிவில்லாமையின் ஆழத்தை விளங்கிக் கொள்கின்றார்கள்.

மனிதனைக் குறித்து மனிதன் முழுமையாக அறியாத போது அவன் எப்படி ஜீவிக்க வேண்டும் என்று அவன் மனம் அறிந்திருப்பது சாத்தியமில்லை.

தெய்வீக வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு மரணத்திற்குப்பின் என்ன என்பது பற்றியே சந்தேகம். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையானது ஜனனத்தோடு தொடங்கி மரணத்தோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இவ்வெண்ணம் வாழ்க்கையின் லட்சியத்தையும், வாழ்க்கைப் பாதையையும் பாதிக்கின்றது. தெய்வீக வெளிப்பாடுகள் அல்லாது மனிதன் தன்னைக் குறித்துக் தன்னைப் படைத்த இறைவனைக் குறித்துக் அறிவதற்குரிய மார்க்கங்களே இல்லை.

தன்னைப் பற்றியும் தம் சுற்றுச்சூழலைப் பற்றியும் உள்ளே விடும் எண்ணங்கள் தானே மனசாட்சியாக உங்கள் முன் உருவெடுத்து நிற்கின்றது. ஆக அறைகுறை அறிவினைக் கொண்டது தானே மனசாட்சி இத்தகைய மனத்தின் சாட்சி, இத்தகைய மனத்தின் சாட்சி எப்படியொரு தெளிவான வழிகாட்டுதலாக இருக்கமுடியும். சமூகத்திற்கு தேவையான சட்டதிட்டங்களை நிர்ணயிப்பது அநேகமாக ஆணாகவே இருக்கின்றனர். அதனால் அச்சட்டத்திட்டங்களில் ஆண்களின் எண்ணங்களாகவே இருக்கும். கருப்பன் உருவாக்கும் சட்டம் அவனுக்கு அனுகூலமாகியும் வெள்ளையன் உருவாக்கும் சட்டம் அவனுக்கு அனுகூலமாகவுமே இருக்கும். ஆசைகளுக்கும், மோகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தே அவரவர்கள் சட்டங்கள் இயற்றவார்கள். தொழிலாளியும், அவ்வாறே முதலாளியும் அவ்வாறே. ஒவ்வொரு நாடும். சமூகம். தங்களுடைய நாட்டிற்கும், சமூகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

நிக்கோலோ மேக்ஸ்வல்லி கூறினார் : நன்மையென்பது ஒரு பெயர் மட்டுமே. உண்மையில் தீமையேயுள்ளது. அதனால் தன் நாட்டை  வல்லரசாக்க விரும்பும் எந்த அரசும் தீமை செய்வது எப்படி என்று தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதுதானே தேசிய வாதத்தின் அடிப்படை.

எந்தவொரு விஷயத்திலாவது தன் சுயநலத்தைப் பேண வேண்டும் என்னும் எண்ணமில்லாதவர்கள் ஒருவரையும் காணமுடியாது. அத்தகையவர்களால் உருவாக்கப்படும் சட்டதிடடங்களிலும் அந்நிலை பிரதிபலிக்கவே செய்யும்.

மனித சமூகம் முழுவதையும் சமமாக காண படைத்த இறைவனால் மட்டுமே முடியும். எல்லா நாட்டவர்களையும் சமமாக நடத்தி நீதியை நிலைநாட்ட அவனால் மட்டுமே முடியும். அத்தகைய தெய்வீக வெளிப்பாடுகள் மூலம் அருளிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமல் கேவலம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வதால் அது எப்படி சமாதான வாழ்வாக இருக்க முடியும்.

இறைவன் தன் தெய்வீக வெளிப்பாடுகளான இறைவேதம், இறைதூதர் மூலம் மனித சமூகத்திற்கு அருளிய வாழ்ககைத் திட்டமானது தனி மனிதனடையவும். குடும்பத்துடையவும். சமூகத்துடையவும். நாட்டினுடையவும், உலகத்தினுடையவும் சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் அதற்குக் கட்டுப்பாடு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் மார்க்கம் உரத்து கூறுகிறது. அதுவே நிடித்த நிரந்தர சமாதானத்திற்கு வழிகாட்டவும். லட்சியத்தை சென்றடையும் மார்க்கமாகவும் இருக்கும்.



ஆக்கம் 
அபூ ஆஸியா
-





No comments:

Post a Comment