Saturday, May 5, 2012

நாமும் அழைப்புப் பணியும்



பணிச்சுருக்கமும், பாவப்பெருக்கமும்

தற்போது இஸ்லாத்தை எடுத்துரைக்கும் தஃவாப்பணியில் ஈடுபடக்கூடியவர்கள் அறவே இல்லையென்று சொல்ல முடியாவிட்டாலும் அந்தப்பணியில் இருக்கக்கூடியவர்கள் மிகக்குறைவானவர்களே! உலகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு முன்னால் இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதே! இன்று இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகள் உலகத்தில் பரந்து கிடக்கின்றன! அப்பட்டமான முறையில் மக்கள் தவறுகளை செய்கின்றார்கள், மடமை அதிகமாகிவிட்டது.

நமக்குள் நாமே தொடுக்கும் வினாக்கள்?

உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக நம்மிடத்தில் நாமே சில கேள்விகளைக் கேட்டுக் கொள்வோம்.

1- உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதில் பிரச்சாரப் பணியில் ஈடுபடுபவர்கள் எத்தனை பேர்?

2- உலகத்தில் எத்தனை இஸ்லாமியப் பல்கலைக்கழகங்கள் உள்ளன? அதில் படித்து முடித்து பட்டம் பெற்றவர்கள் எத்தனை பேர்? உண்மையில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானது. அவர்கள் எல்லாம் இப்பூமியில்தான் வாழ்கின்றார்கள். ஆனால் அவர்களெல்லாம் தற்போது எங்கே? கம்பெனிகளிலும், அலுவலகங்களிலும் இன்னும் பல உலக வேலைகளில் மாத்திரம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தனக்கும் தன் குடும்பத்திற்கும் உழைப்பது தவறான ஒன்றல்ல. மாறாக அது நமது பொறுப்பாகும். ஆனால் அழைப்புப் பணிக்கென நேரம் ஒதுக்காது மனிதன் தன் நேரத்தையே பணம் சேகரிப்பதற்கு, உண்ணுவதற்கு மாத்திரம் செலவழிப்பது மிகப்பெரும் தவறாகும்.

நோயின் மிகையும்! மருத்துவர் தம் தொகையும் ?

உதாரணத்திற்கு இன்று நீங்கள் உலகத்தைப் பார்த்தால் உண்மையான முறையில் தஃவாவுக்கு அர்ப்பணித்து திறம்பட தஃவாப்பணி செய்பவர்கள் மிகவும் குறைவானவர்களாகவே இருக்கிறார்கள். நோயாளிகள் அதிகமாகவும் வைத்தியர்கள் குறைவாகவும் இருந்தால் என்ன நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! இறை நிராகரிப்பு, அநீதி, அழிச்சாட்டியங்கள், பித்அத்துக்கள், குழப்பங்கள், தவறான கொள்கைகள், இஸ்லாத்தை வேரோடு அழித்துவிட வேண்டுமென்ற நோக்கத்தில் அங்குமிங்கும் மாபெரும் போர்கள், இஸ்லாம் தடுத்தவைகளை அற்பமாகக் கருதுதல் இன்னும் இவைகள் போன்ற எத்தனையோ மாபாதகங்கள்!

நோய்க்கு மூல காரணம்!

இவை அனைத்திற்கும் காரணம் உண்மையின் பக்கம் அழைப்பவர்கள் குறைவாக இருப்பதும், அநியாயமும் அதன்பக்கம் அழைப்பவர்களும் அதிகமாக இருப்பதுதான்...!

இன்று முஸ்லிம்களிடத்தில் மார்க்கத்தைப் பற்றிய அக்கரையே கிடையாது என்று சொல்வதைவிட மனிதாபிமானம் மரணித்துவிட்டது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இதனால் முன் சென்ற சமூகத்தவர்களுக்கு நடந்த நிகழ்வுகளில் நமக்கு பெரும் படிப்பினையும் இன்றைய நமது சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் அவலமும் பெரும் கவலைக்குரியதாகும். இன்று முஸ்லிம்களின் பொருளாதாரம் அழிக்கப்படுகின்றது, உடமைகள் பறிக்கப்படுகின்றன, அவர்கள் அவர்களின் மார்க்கத்திலிருந்து தூரமாக்கப்படுகின்றார்கள். இப்படி உலகெங்கும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம்களின் எதிரிகளால் அநீதிகள் கட்டவிழ்த்து விடப் பட்டிருக்கின்றன.இந்தக் கொடூரமான செய்திகளை கேட்கும் போது உள்ளத்தில் பெரும் காயம் ஏற்பட்டது போல் இருக்கின்றது. ஆனால் உள்ளம் மரணித்தவர்களுக்கு இது ஒரு செய்தியே கிடையாது.

இன்றைக்கு கிறிஸ்தவத்தின் பக்கம் அழைப்பவர்கள் இலட்சக்கணக்கானவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள்? என்ன! இந்த சமுதாயம் இப்படித்தான் நாம் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றதா? அல்லது மடமைதான் இதற்கு காரணமா? காரணம் எதுவாக இருந்தாலும் இந்த நிலை தொடர்ந்தால் இந்த சமுதாயத்தை நோக்கி பெரும் ஆபத்தும் அழிவும் வருவது நிச்சயம்.

என் உயிர் எந்த இறைவனின் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக நிச்சயமாக நன்மையைக் கொண்டு ஏவுங்கள், தீமையை விட்டும் தடுத்து நிறுத்துங்கள். இல்லையென்றால் அல்லாஹ் உங்கள் மீது அவனுடைய வேதனையை அனுப்புவான். பின்பு நீங்கள் அவனிடம் பிரார்த்திப்பீர்கள் அவன் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ள மாட்டான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

அழைப்புப்பணி ஆர்வலர்க்கு அரிய சில கருத்துக்கள்

அல்லாஹுவுக்காக கோபித்து தன் மார்க்கத்தை பற்றி கவலைப்படக்கூடிய முஸ்லிம்களுக்கு ஒரு சில குறிப்புகளைத் தருகின்றேன்.இன்று உலக மக்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரம் மில்லியனைத் தாண்டும் அளவிற்கு அதிகரித்திருக்கின்றது. இதில் ஐந்தில் நான்கு பகுதியினர் இறை நிராகரிப்பாளர்கள். இவர்கள் அல்லாஹ் அல்லாத மற்ற எல்லாவற்றையும் வணங்குகின்றார்கள். இவர்களுக்கு இஸ்லாமியப் பிரச்சாரம் போய்ச் சேரவில்லை. காரணம், இஸ்லாத்தின் பக்கம் அழைப்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவே! ஆனால் கிறிஸ்தவம், மேற்கத்திய கொள்கைகள், நாஸ்திகம், ஹிந்து மதம், புத்த மதம் என்று ஓரிறைக்கு எதிரான கொள்கைகளின் பக்கம் அழைப்பவர்களின் எண்ணிக்கை பல இலட்சம்! இப்போது கூறுங்கள்... இஸ்லாத்தின் பக்கம் அழைப்பவர்கள் அதிகமானவர்களா? இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளின் பக்கம் அழைப்பவர்கள் அதிகமானவர்களா? இந்த நிலை நீடித்தால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு என்ன நேரிடும்? சிந்தியுங்கள்!

இன்று பல இஸ்லாமிய நாடுகளிலேயே நல்ல செயலும் கெட்ட செயலும் ஒன்றரக் கலந்துவிட்டது. மிக மோசமான செயல்கள் நல்லொழுக்கத்தை விட சிறந்ததாக சித்தரிக்கப்படுகின்றன. அசத்தியம் சத்தியத் தோடு மோதுகின்றது. பகலோடு இரவு ஒன்று சேருமா? இருளோடு ஒளி ஒன்று சேருமா? இஸ்லாமிய சமுதாயத்திற்கு இப்படிப்பட்ட சொல்லமுடியாத அவலங்கள் ஏற்பட்டிருக்கின்றது.

நெஞ்சு திறக்கும் நேசமிகு அழைப்பாளர்களே!

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். (நிச்சயமாக அவர்களுடைய வெளிப்பார்வைகள் குருடாகவில்லை எனினும் நெஞ்சங்களிலுள்ள அவர்களுடைய இருதயங்கள் குருடாகிவிட்டன) 22:46

இன்று இப்படிப்பட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டி தடுக்கும் அழைப்பாளர்கள் இல்லாத காரணத்தினால் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களின் வெளிப்பார்வை திறந்திருந்தாலும் அவர்களின் அகப்பார்வைகள் மூடிக்கிடக்கின்றன. இப்படிப்பட்ட உள்ளங்களை திறப்பவர்கள் அழைப்பாளர்கள்தான். அழைப்பாளர்களே! முன்வருவீர்களா?

சிந்தனைக்கு சில வரிகள்

சிந்திப்பதற்காக சில உதாரணங்களைத் தருகிறேன் சிந்தியுங்கள்.

1-பள்ளிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் சினிமா தியேட்டர்கள், விபச்சார விடுதிகள், மது அருந்தும் இடங்கள் அதைவிட அதிகமாக இருக்கின்றன.

2-நேர்வழி பெற்றவர்கள் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள்.ஆனால் வழிகெட்டவர்கள் இவர்களை விட அதிகமானவர்கள் இருக்கின்றார்கள் அல்லவா?

3-பர்தா அணியும் பெண்கள் அதிகம் பேர் இருக்கின்றார்கள். ஆனால் தன் அழகை மற்ற ஆடவர்களுக்கு காட்டிச் செல்லும் பெண்கள் இவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகம்...!

4-திருக்குர்ஆன், ஹதீஸ், மற்றும் இஸ்லாமியப் புத்தகங்கள் ஏராளம்.ஆனால் கெட்ட பழக்கங்களையும், கொள்கைகளையும் பரப்பும் புத்தகங்கள் இதைவிட பன் மடங்கு தாராளம்.

5-அறிவைப் புகட்டும் எத்தனையோ கல்விக்கூடங்கள், அதே நேரத்தில் கலாச்சாரத்தையே ஒழிப்பதற்கென்று எத்தனையோ கலைக்கூடங்கள்.

6- பல இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் மார்க்க சட்டக் கலையை பயில்வதற்கென்று ஒரு தனிப்பிரிவு, மனித சட்ட திட்டத்தை படித்துக் கொடுப்பதற்கென்று ஒரு தனிப்பிரிவு.

7- இஸ்லாத்தை பரப்புவதற்கென்று வானொலியில் தனிப்பிரிவு, அதே வானொலியில் இஸ்லாத்தோடு போராடுவதற்கென்று மற்றொரு பிரிவு.

8- ஒரு புறம் இஸ்லாமிய சொற்பொழிவுகள் நிறைந்த எத்தனையோ ஆடியோ, வீடியோ கேசட்களும் அதை விற்பனை செய்யும் சில இடங்களும், மறுபுறம் ஆபாச ஆடல் பாடல்கள் நிறைந்த சமுதாயத்தையே அழித்துவிடக்கூடிய அரை நிர்வாணம் நிறைந்த பல ஆடியோ, வீடியோ கேஸட்டுகளும், சீடிகளும், அதை விற்பனை செய்யும் பல இடங்களும்.

9- இஸ்லாமியக் கருத்துக்களையும் அல்லாஹ்வின் அற்புதங்களையும் எடுத்துக் காட்டக்கூடிய எத்தனையோ வு.ஏஇ சேனல்கள், ஆனால் மானத்தை அழித்துவிடக்கூடிய அற்புதமான அலைவரிசைகள்.

10- முஸ்லிம்களில் அறவே பள்ளிக்கு தொழச் செல்லாதவர்கள் எத்தனையோ பேர்? இன்னும் சிலர் வெள்ளிக்கிழமை மாத்திரம் தொழுவார்கள், இன்னும் சிலரோ பெருநாள் தொழுகை மாத்திரம் தொழுவார்கள், இன்னும் சிலர் யாரும் மரணித்தால் அவர்களுக்கு மய்யித்து தொழுகை நடத்துவதற்காக செல்வார்கள்.

இன்னும் சிலர் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர், பலர் வரதட்சனை கேட்கின்றார்கள், மோசடி செய்கின்றார்கள். இப்படி இன்னும் எத்தனையோ வகையான முறையில் மற்றவர்களின் பணத்தை அநியாயமாக உண்ணுகின்றார்கள் இவைகளையெல்லாம் முஸ்லிம் என்று சொல்லக்கூடிய நமது சகோதரர்கள்தான் சர்வ சாதாரணமாக நாள்தோறும் செய்கின்றார்கள்.

இன்னும் இதுபோன்ற எத்தனையோ ஆபத்தான நோய்கள் நம் சமுதாயத்தில் பரவியிருக்கின்றன. நோயாளிகள் அதிகமாகிவிட்டார்கள். இந்த நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவர்கள் (அழைப்பாளர்கள்) மிக மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றார்கள். மருந்து குறைவாகக் கிடைக்கின்றது, நோயின் வகைகள் அதிகமாகிவிட்;டன. பாவங்கள் அதிகரித்து விட்டன, இறைவனுக்கு அடிபணிதல் மிக மிகக் குறைந்துவிட்டது. இன்னும் பித்அத் சுன்னத்தாகவும், சுன்னத் பித்அத்தாகவும், கெட்டவைகள் நல்லவைகளாகவும், நல்லவைகள் கெட்டவைகளாகவும், ஹராமானவை ஹலாலாவும் மாறிவிட்டது. இவ்வாறு நமக்கு நாமே அநீதம் இழைத்து அல்லாஹ்வின் தண்டனைக்கு தகுதியானவர்களாகிக் கொண்டிருக்கின்றோம்.

அல்லாஹ் கூறுகிறான்:

மனிதர்களின் கைகள் சம்பாதித்த (தீய)வற்றின் காரணமாகக் கரையிலும் கடலிலும் (அழிவு) குழப்பம் வெளிப்பட்டுவிட்டன. அவர்கள் செய்த (தீய)வற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும்படிச் செய்வதற்காக (இவ்வாறு சோதிக்கிறான், அதன் மூலம்) அவர்கள் (தவ்பாச் செய்து அவன்பால்) திரும்பிவிடலாம். (30:41)

தப்பிட என்ன வழி ?

நாம் அல்லாஹ்வின் வேதனைக்கு உட்பட்டுவிட்டோம் என்பதைத் தெரிந்து கொண்டோம். அவ்வேதனையிலிருந்து தப்புவதற்கு என்ன வழி?

அல்லாஹ்வின் பக்கம் மீண்டு அவனிடம் தவ்பாச் செய்யுங்கள், அல்லாஹ்வுக்கும் அவனின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கட்டுப்படுங்கள். அதில் உறுதியாக இருங்கள், இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுங்கள், அதன் பக்கம் மக்களை அழையுங்கள், இதுவே அல்லாஹ்வின் தன்டனையிலிருந்து நம்மை காத்துக் கொள்ள வழி. நிச்சயமாக அல்லாஹ் நமக்கு உதவி செய்வான். அல்லாஹ் கூறுகின்றான்:

'அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன், யாவரையும் மிகைத்தவன். அவர்கள் எத்தகையோ-ரென்றால் நாம் அவர்களுக்கு பூமியில் (காரியங்களை நிர்வகிக்கும்) ஆற்றலை ஏற்ப்படுத்திக் கொடுத்தால், அவர்கள் தொழுகையை முறையாக நிறை-வேற்றுவார்கள் ஜகாத்தையும் கொடுத்து வருவார்கள். நன்மையை ஏவி தீமையை விட்டும் விலக்குவார்கள். மேலும் சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (22:40,41,42)

நாம் ஒன்றை நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும். கண்ணியம் அல்லாஹ்வுக்கும் அவனின் தூதருக்கும் மற்றும் முஃமீன்களுக்கு மாத்திரமேயாகும். அல்லாஹ் தன் மார்க்கத்திற்கு நிச்சயமாக உதவி செய்வான்.

எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கு மத்தியிலும் தன் மார்க்கத்தை மேலோங்கச் செய்வான், அவன் எத்தகையவனென்றால் தன்னுடைய தூதரை நேர்வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்துக் கொண்டிருப்போர் (அதனை) வெறுத்தபோதிலும், (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்யவே (அவ்வாறு செய்தான்) (9:33)

முன் மாதிரி நபிவழியில் முன் வாருங்களேன்!

இரவு பகல் உலகத்தின் எந்தக் கோணங்களுக்கெல்லாம் செல்கின்றதோ அங்கெல்லாம் இந்த மார்க்கம் செல்லும்.

நிச்சயமாக அல்லாஹுத்தாஆலா எனக்கு பூமியை ஒன்று சேர்த்துக் காட்டினான். அதன் கிழக்குத் திசையையும் மேற்குத் திசையையும் நான் பார்த்தேன். என் உம்மத்தவர்களின் ஆட்சி எனக்கு காட்டப்பட்ட இடம் வரைக்கும் சேரும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்)

ஆகவே, நீங்களும் இந்த மார்க்கத்தை எத்தி வைக்க முன்வாருங்கள். உங்களுக்குத் தெரிந்ததை முடிந்தவரை மற்றவர்களுக்கு கூறுங்கள். நீங்களும் இந்த மார்க்கத்தை எத்தி வைத்த அழைப்பாளர்களின் பட்டியலில் பதியப்படுவீர்கள்.

வாய்ப்பளிக்க பிரார்த்திப்போம்!

இறைவா! எங்களுக்கு நாங்களே அநியாயம் செய்து கொண்டோம். எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு அருள்புரிவாயாக!. உன்மீதே நாங்கள் தவக்கல் வைத்திருக்கின்றோம். உன்பக்கமே மீண்டுவிட்டோம். எங்களை மன்னித்து எங்களின் தஃபாவை ஏற்று எங்களை அழைப்பு பணியில் ஈடுபடவும், உன் மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைக்கவும் எங்களுக்கு வாய்ப்பளிpப்பாயாக!.





ஜசாகல்லாஹு ஹைர்





No comments:

Post a Comment