Friday, November 25, 2011

ஹிஜ்ரத் வருடம் 1433 -நீங்களும் நாங்களும் சாதித்தது என்ன?




ஹிஜ்ரி 1432 ஆம் ஆண்டு நம்மிடையே விடை பெற்று புதிய வருடமாக 1433 பிறந்து விட்டது.அந்த ஞாபகமே நம்மில் பலருக்கு இல்லை. ஹிஜ்ரி வருடம் என்றால் என்ன என்று தெரியாத முஸ்லிம்கள் பலர் இருக்கின்றார்கள். ஹிஜ்ரி புது வருடக் கொண்டாட்டங்கள் என்ற ஒன்று இல்லை எனினும், அந்த வருடம் பிறக்க இருப்பதையாவது நம்மில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கின்றோம் என்றால், அத்தகைய நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சரி! தெரிந்து வைத்திருப்பவர்கள் தான் என்ன சாதித்து விட்டார்கள் என்றால், அந்த ஹிஜ்ரி வருடங்கள் ஓடி ஓடி இளைத்து, நூலாகி நிற்கின்றதே! எதற்காக இந்த ஹிஜ்ரி வருடம் உருவானது, யார் உருவாக்கியது, அதன் பின்னணி என்ன? என்பது பற்றியெல்லாம் இந்த சமுதாயம் என்றைக்கு சிந்தித்துப் பார்க்கப் போகின்றது என்பதை நினைத்துப் பார்த்தால் நெஞ்சில் கனமான சுமை வந்து அழுத்துகின்றது.

ஆனால் ஹிஜ்ரி பிறந்து 1432 ஆண்டுகள் முடிந்து விட்டதே! இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஏன் மக்காவைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அதன் முக்கியத்துவம் என்ன? அந்த முக்கியத்துவம் இன்றைக்கு உணரப்பட்டிருக்கின்றதா?

மதீனாவில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டியெழுப்பிய அந்த சமூக அமைப்பு இன்றைக்கு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றதா? இல்லையெனில், அந்த சமூக அமைப்பை கட்டியமைப்பது யார் பொறுப்பு?    அலட்டிக் கொள்ள வேண்டியதொரு பிரச்னை நம் முன் நிற்கின்றதே என்பது பற்றி இந்த சமூகம் எப்பொழுது தனக்குள் விவாதித்துக் கொள்ளப் போகின்றது..! அந்த விவாதம் தலையெடுக்கும் காலம் தான் இந்த சமூகத்தின் விடிவுக்கான காலமாக இருக்கும். ஆம்! எப்பொழுது இந்த முஸ்லிம் சமூகம் சமுதாய ரீதியாக ஒன்றுபட்டு, ஒரு இஸ்லாமிய ஆட்சிக்கான மறுமலர்ச்சியைக் காணுகின்றதோ அன்றைய தினம் தான் இந்த உலகத்திற்கும் கூடிய விடிவு நாளாகும்.

அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவை வெறுத்து மதீனாவிற்குச் சென்றதைத் தான், ஹிஜ்ரத் என்று வரலாறு கூறுகின்றது.

அப்படி நோக்கினால், அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவை வெறுத்தார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? இல்லை..! இல்லை..! அது முதல் கஃபா என்ற ஆலயத்தைச் சுமந்து கொண்டிருக்கின்ற பூமி! எனவே அதனை வெறுத்திருக்க நியாயமில்லை.

அந்த மக்கள் தந்த துன்பத்தைக் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். தன்னை குருதி சொட்டச் சொட்ட அடித்து விரட்டிய தாயிஃப் வாசிகளைக் கூட அண்ணலார் (ஸல்) அவர்கள் வெறுக்கவில்லையே! எனும் போது, மக்கா வாசிகளையும் கூட வெறுத்திருக்க மாட்டார்கள். அப்படியானால் எதை வெறுத்தார்கள்?

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் இஸ்லாத்தினைச் செயல்படுத்தும் ஒரு சூழல் மக்காவில் உருவாகவில்லை. அந்த உருவாக்கத்துக்குத் தொடர்ந்தும் குறைஷித் தலைவர்கள் தடையாகவே இருந்து வந்தார்கள். ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களின் சாத்வீகமான அணுகுமுறைகள் அத்தனையும் அந்தத் தலைவர்களிடம் தோற்றுப் போயின. அவர்களோடு போரிடுவதற்கான அனுமதியை அல்லாஹ் வழங்கியிருக்கவுமில்லை. எனவே அந்த மக்காவை விட்டு, தாஇபுக்குப் போனார்கள். அண்ணலார் (ஸல்) அவர்கள் மக்காவில் உருவாக்க முடியாமல் போன சூழலை தாயிஃப் மக்கள் உருவாக்கித் தரலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் இருந்தது. ஆனால் அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

அண்ணலார் (ஸல்) அவர்கள் எதிர்பார்த்த சூழல் இது தான். அல்லாஹ்வுடைய தீனை இந்தப் பூமியில் நிலைநாட்டுவதற்கு உதவியாகவும், பக்கபலமாகவும், நிழல் போல் தன்னைத் தொடரும் ஒரு (குழுவல்ல) சமூகம் தேவை. அவர்கள் தனக்கு முற்று முழுதாகக் கட்டுப்பட வேண்டும். தனது கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும். இஸ்லாத்துக்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாராக இருக்க வேண்டும். தீனுல் இஸ்லாத்தின் தேவைகளை அவர்கள் தமது மனைவி பிள்ளைகளின் தேவைகளைப் போல, அல்லது அவற்றை விட மேலாகக் கருத வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் சூழல் மக்காவில் உருவாகவில்லை. தாஇபிலும் கிடைக்கவில்லை. ஆனால், இந்த சூழல் மதீனாவில் மெல்ல மெல்ல உதயமாகியது. நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு பயணமாகியது என்பது அவர்கள் எதிர்பார்;த்த அந்த சூழல் உருவாகிய பின்பு தான். மதீனாவில் இந்த சூழல் உருவாக ஏறத்தாழ மூன்று வருடங்கள் எடுத்தன.

அங்கு இந்த சூழல் உருவாகி விட்ட ஒரே காரணத்தால் நபிகளார் மதீனாவுக்குப் போய்விடவுமில்லை. ஏற்கனவே கூறப்பட்ட நபிகளாரின் எதிர்பார்ப்புகளை தவறாது நிறைவேற்றுவோம் என்று மதீனாவாசிகள் அண்ணலாருக்கு உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்த பின்னர் தான் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குப் போகச் சம்மதித்தார்கள். அந்த உறுதிப்பிரமாணம் தான் வரலாற்றில் (பைஅதுல் அகபா) அகபா உடன்படிக்கை எனப்படுகிறது. நபிகளாரின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்று முதன் முதலில் பைஅத் செய்த சமூகம் மதீனா சமூகமே! அதனால் அன்சார்கள் என்ற அழியாப் பெயரை அவர்கள் வரலாற்றில் தம்வசமாக்கிக் கொண்டார்கள்.

இங்கு ஒரு கேள்வி எழுவதற்கு இடமிருக்கிறது. மக்காவாசிகள் அதாவது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்ற உத்தமர்கள் நபிகளாரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தயாராக இருக்கவில்லையா?

உண்மையில் மதீனாவாசிகளை விட இவர்கள் எந்தவகையிலும் குறைந்தவர்கள் அல்லர். அவர்களை விட இவர்கள் உயர்ந்தவர்கள் என்று கூறினால் அதனையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில், இஸ்லாத்தின் முதிர்ச்சி அவர்களை விட இவர்களுக்கே இருந்திருக்கிறது.

என்றாலும், மக்கா முஸ்லிம்கள் ரஸுலுல்லாஹ் எதிர்பார்த்த ஒரு சமூகமாக இருக்கவில்லை. அவர்கள் ஆங்காங்கே சிதறி வாழும் தனிமனிதர்களைக் கொண்ட ஒரு குழுவாகவே இருந்திருக்கிறார்கள். அன்றைய சமூக அமைப்பில் இத்தகைய குழுக்களுக்கு அதிகாரமில்லை. சமூகம் சமூகமாக வாழ்ந்த கோத்திரங்களுக்கே அதிகாரம் இருந்தது. எனவே அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்பதை, ரஸுலுல்லாஹ் அதிகாரம் இல்லாதவர்களிடம் கேட்கவில்லை. மக்காவில் அதிகாரம் இருந்த குறைஷிக் கோத்திரம் இறுதி வரை ரஸுலுல்லாஹ்வுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இங்கு தாஇகள் ரஸுலுல்லாஹ்விடமிருந்து ஒரு முன்மாதிரியைப் பெற்றுக் கொள்ள வேண்டியதிருக்கிறது. சிதறிய தனிமனிதர்களை ஒருங்கிணைந்து ஒரு குழுவை அமைப்பதனால் இஸ்லாத்தின் முற்றுமுழுதான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட முடியாது. சமூகத்தை உருவாக்குவதனால் மட்டுமே கூடுதலான இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். எனவே குழு உருவாக்கத்தை நோக்கமாகக் கொண்டு தாஇகள் செயல்படலாகாது. சமூக உருவாக்கமே தாஇகளின் செயல்பாட்டுக்கு அடிப்படையாக இருக்க வேண்டும்.

இந்த வகையில் தாஇகள் சமூகத்தை உடைக்கும் முயற்சிகளில் இறங்கலாகாது. அது இஸ்லாத்தின் எதிர்பார்ப்புகளை சிதைக்கும் ஒரு முயற்சியாகும். ஊரை இரண்டாக்காதீர்கள் என்று நாம் கூறும் போது அதனைப் பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள் இது. ஊரோடு ஒத்தோடுவதற்கான அழைப்பு என்று தவறாக அதற்கு விளக்கம் கற்பிக்க முனைகிறார்கள். இந்த தவறான விளக்கம் ரஸுலுல்லாஹ்வின் ஒரு சுன்னாவைப் பரிகாசமாக்கி விடுகிறது.

ஹிஜ்ரத், நபி (ஸல்) அவர்களின் எதிர்பார்ப்புகளை முற்று முழுதாக நிறைவேற்றும் ஒரு சமூக சூழலை அன்னாருக்கு பெற்றுக் கொடுத்தது. மதீனா நபிகளாருக்கு ஏற்படுத்திக் கொடுத்த அந்த சமூக சூழலை மக்காவில் முயன்றும் பெற முடியாமல் போனதே மக்காவை நபிகளார் துறக்கக் காரணம். இந்த வகையில் மக்காவை அவர்கள் வெறுக்கவில்லை. மக்காவின் மனிதர்களையும் அவர்கள் வெறுக்கவில்லை. ஆனால் மக்காவின் சூழலை வெறுத்தார்கள் என்று கூறலாம். அதுவே ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் இங்கு மற்றுமொரு சுன்னாவை எமக்குக் கற்றுத் தருகிறது. இஸ்லாத்தை செயல்படுத்த முடியாத ஒரு சூழல் என்பதன் பொருள், சமூகம் ஒன்று சேர்ந்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத சூழல் என்பதாகும். நபிகளாரின் வாழ்வில் மக்கா இதற்கு உதாரணமாகத் திகழ்கிறது.

இத்தகையதொரு நிலை இன்றைய தாஇகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விடைதேடி அவர்கள் எங்கும் அலைய வேண்டியதில்லை. நபிகளாரின் சுன்னா வழிகாட்டுகிறது. அதனைப் பின்பற்றலாம்.

உதாரணத்திற்கு ஒரு கிராமம் இஸ்லாத்தின் எழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாஇகள் என்ன செய்ய வேண்டும்? மக்காவில் நபிகளார் என்ன செய்தார்களோ அதனைச் செய்யலாம்.

நபிகளார் மக்காவில் இஸ்லாத்தின் அடிப்படைகளைப் போதித்தார்கள். எதிர்ப்பு வந்தது. அழகிய பொறுமையைக் கைக் கொண்டார்கள். (அழகிய பொறுமைக்கும் ஆற்றாத பொறுமைக்கும் இடையில் வித்தியாசமிருக்கிறது). தளர்ந்து விடவில்லை. தலைவர்கள் சந்தித்தார்கள். பாமரர்களை சந்தித்தார்கள். தம்மை ஏற்று விசுவாசம் கொண்டவர்களுக்கு பயிற்சிகைள வழங்கினார்கள். துன்பம் செய்வோருக்கு நல்லன செய்தார்கள். அவர்களைத் தூற்றவில்லை. துன்பம் செய்யவுமில்லை. சாபமிடவில்லை. சாடவுமில்லை. அடித்து உடைத்து நொறுக்கவுமில்லை. சிலைகள் மூடியிருந்த கஃபாவை அவர்கள் பகிஷ்கரிக்கவுமில்லை. ஈமான் கொண்டவர்களை அவர்களது வீடுகளிலிருந்து பிரித்து விடவுமில்லை. அல் மவ்த்து பில்குர்பா எனக் குர்ஆன் கூறும் உறவினர்களின் அன்பை அவர்கள் வெட்டிவிடவுமில்லை. தன்னை ஏற்று விசுவாசம் கொள்ளாத தனது சிறிய தந்தை அபூதாலிபின் பாதுகாப்பை அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஷிஅபு அபீதாலிப் எனும் பள்ளாத்தாக்கில் மூன்று வருடங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட போது அதனை எதிர்த்தும் போரடவில்லை. ஓரிரவிலும், ஒரு பகலிலும் மாற்றத்தைக் கொண்டு வர அவர்கள் எத்தணிக்கவுமில்லை.

அண்ணலாரின் இந்தப் போக்கின் ஒவ்வொரு ஏட்டிலும் ஒரு தாஇக்குப் படிப்பினை இருக்கிறது. அதுவும் அண்ணலார் காபிர்களுக்கு மத்தியில் இந்தப் போக்கைக் கடைபிடித்தார்கள். இன்றைய தாஇகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்தப் போக்கை கடைபிடிக்க முடியாதா?

அண்ணலாரின் இந்தப் போக்கு மக்கா இரத்தக் கறை படியாமல் பாதுகாத்தது. மக்காவில் ஒன்றுக் கொன்று எதிராக இரண்டு குழுக்கள் மோதும் நிலை இதனால் தவிர்க்கப்பட்டது. இஸ்லாத்தை எதிர்த்து நின்றவர்களின் உள்ளங்களில் தீராத ஒரு பகைமை வளர்ந்து விடாமல் நபிகளாரின் இந்தப் போக்கு அணை போட்டது. ஒருநாள் அவர்களோடு ஒன்றிணையலாம் என்ற நம்பிக்கை இந்தப் போக்கை உரம் ஊட்டியது.

நபிகளாரின் இந்த சுன்னாவை இன்றைய தாஇகள் ஏன் விளங்கிக் கொள்ளாதிருக்கிறார்கள்? என்பது புரியவில்லை. விளங்கிக் கொள்ளாதிருந்தாலும் பாரவாயில்லை. ஊரோடு ஒத்தோடுதல் என்று இதற்குத் தவறான விளக்கம் தராதிருந்தால்!

நபி (ஸல்) அவர்கள் இந்தப் போக்கை பதின்மூன்று வருடங்களாக மக்காவில் பரீட்சித்தார்கள். மாற்றம் ஏற்படவில்லை. அதற்காக அவர்கள் தனது போக்கை மாற்றவுமில்லை. செய்த மாற்றம் என்னவென்றால் மாற்றம் ஏற்பட்டிருந்த ஒரு இடத்தை (மதீனாவை) நோக்கித் தன்னை மாற்றிக் கொண்டார்கள். அது தான் ஹிஜ்ரத்!

ஹிஜ்ரத் மற்றுமொரு குழுவின் தலையிடியை நபிகளாருக்குத் தந்தது. அவர்கள் தாம் யூதர்கள். மக்காவில் குறைஷிகளோடு நபிகளார் எந்த அணுகுமுறையைக் கையாண்டார்களோ அதே அணுகுமுறையை யூதர்களுடனும் கையாண்டார்கள். சற்று வித்தியாசமாக! அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தி உடன்படிக்கை எழுதி, நாங்களும் நீங்களும் சமாதானமாக வாழ்வோம் என்றார்கள். ஆனால் யூதர்கள் எப்போதாவது சமாதானத்தை விரும்பினார்களா? அவர்கள் நயவஞ்சகமாக சமாதானத்தை முறித்துக் கொண்டார்கள். எனவே மீண்டும் அவர்களோடு சற்று வித்தியாசமாக நடக்க வேண்டிய ஏற்பட்டது. நடவடிக்கை எடுத்தார்கள்.

மக்காவில் உடன்படிக்கையில்லை. எனவே நடவடிக்கையுமில்லை. இங்கே உடன்படிக்கை இருந்ததனால் நடவடிக்கையும் இருந்தது. இந்த அணுகுமுறை உலகத்தில் அன்றிலிருந்து இன்று வரை அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த அணுகுமுறை மதீனாவில் ஒரு பிளவை ஏற்படுத்தவில்லை.

மக்காவில் சாத்வீகத்தால் செய்த அதே வேலையை அண்ணலார் மதீனாவில் சட்டத்தால் செய்தார்கள். இந்த அணுகுமுறை இஸ்லாத்தை நிர்மாணிக்கும் முயற்சியின் அத்திவாரமாகும். மட்டுமல்ல, ரஸுலுல்லாஹ் ஈட்டிய வெற்றிகளின் இரகசியமும் இதுவாகத்தானிருக்கிறது.

தாஇகளே! அழைப்பாளர்களே! நபிகளாரின் சுன்னாவை பின்பற்ற வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கிறோமே, மக்காவையும் மதீனாவையும் முன்மாதிரியாக வைத்து நபிகளாரின் சுன்னாவை கிராமங்கள் தோறும் பின்பற்ற எங்களால் முடியாதா?




நன்றி 
A ONE REALISM

No comments:

Post a Comment