Wednesday, November 2, 2011

மூன்றாவது பொருளாதாரத் திட்டம்.



இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.

அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இந்த முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். (முஃப்தி தகி உஸ்மானீ - உலக முஸ்லிம் காங்கிரஸ் ல் வாசித்தளித்த உரை)

19 ஆம் நூற்றாண்டானது அரசியல் அடக்குமுறை ஆண்டாக, இந்த நூற்றாண்டில் பலமிக்க மேற்குலக நாடுகள் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளையும், இன்னும் பல முஸ்லிம் நாடுகளையும் அடக்கி தங்களது அடிமை நாடுகளாக பிரகடனப்படுத்திக் கொண்ட நூற்றாண்டாக இருந்தது. கடந்த 20 ம் நூற்றாண்டு முடிந்து விட்டாலும், அந்த நூற்றாண்டில் பல நாடுகள் தொடர்ச்சியாக அவற்றின் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டன. இருப்பினும், இந்த நாடுகளுடன் முஸ்லிம் நாடுகளும் விடுதலை அடைந்தாலும் அந்த விடுதலையின் மூலம் அரசியல் சுநத்திரத்தைப் பெற்றுக் கொண்டாலும், இன்னும் நாம் கருத்துச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் போன்றவற்றில் நாம் சாதிக்க வேண்டியதிருக்கின்றது, சொல்லப் போனால் நாம் அவற்றை இன்னும் அடைந்து கொள்ளவில்லை. எனவே, பெற்று விட்ட அந்த அரசியல் சுதந்திரத்தை இன்றைக்கும் இந்த முஸ்லிம் சமுதாயம் அனுபவிக்க இயலாமல் இருந்து வருகின்றது.

இன்றைக்கு முஸ்லிம் உலகு புதிய நூற்றாண்டை புதிய பல எதிர்பார்ப்புக்களுடன் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. குர்ஆனையும், சுன்னாவையும் பின்பற்றி வாழத் துடித்துக் கொண்டிருக்கின்றது. அதன் மூலம் உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கான நேரத்தை அது எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நோக்கங்களை கனவுகளின் ஊடாக நாம் அடைந்து விட முடியாது. நமது நோக்கங்களை அடைய வேண்டுமானால், அதற்கான கடின உழைப்புத் தேவை, அந்த உழைப்பானது அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் கொடுத்த விலையை விட அதிகமாகக் கொடுக்க வேண்டியதிருக்கின்றது. நம்முடைய முழுத் திட்டங்களையும் நாம் மீள் பரிசோதனை செய்தாக வேண்டும், முழுமையான திட்டங்களுடன், கூட்டாக இணைந்து, அதனை புரட்சி மனப்பான்மையுடன் அணுகி, நமது நோக்கங்களை சாதிக்கப் புறப்பட வேண்டும்.


நமக்கு நாமே உதவி


நம்முடைய பிரச்னையின் வேர்கள் எங்கிருக்கின்றது என்றால், நாம் நம்முடைய பொருளாதாரத் திட்டங்களுக்குப் பிறரை நம்பி இருப்பதில் இருந்து கொண்டிருக்கின்றது. நம்மில் பலர் மேற்கத்திய நாடுகளிடம் அதிகமான அளவில் கடன்களைப் பெற்றிருக்கின்றோம். இன்னும் சில நாடுகள், தமது உள்கட்டமைப்பு வளர்ச்சி மட்டுமல்ல, அன்றாடச் செலவினங்களுக்குக் கூட மேற்கத்திய நாடுகளைச் சார்ந்து இருந்து கொண்டிருக்கின்ற நிலை தான் நம்மிடம் காணப்படுகின்றது. இங்கே மிகவும் வருத்தத் தக்க செய்தி என்னவென்றால், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு உண்டான வட்டி செலுத்தப்படாமல், அந்த வட்டியுடன் முதலும் வளர்ந்து கொண்டிருக்க, மேலும் மேலும் கடனை வாங்கிக் குவித்து, அதனை திருப்பிச் செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையைத் தான் காணுகிறோம்.

நம்முடைய பொருளாதாரத் தேவைகளுக்காக அந்நிய நாடுகளை எதிர்ப்பார்ப்பதே ஒரு வியாதியாகும், அது நம்முடைய பொருளாதாரத்தைச் சூறையாடுவது மட்டுமின்றி, அது நம்முடைய சுயாதிக்கத்தையும் இன்னும் நம்முடைய தேவைகளைக் கூட அவர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகும் நிலைக்கும் நாம் தள்ளப்படுகின்றோம், சில நேரங்களில் நம்முடைய சுயலாபங்களுக்காக அந்த விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கின்றது. இந்த கடனளிப்பவர்கள், கடனை நமக்குக் கொடுப்பதற்கு முன்பே நம் மீது அவர்களது சொந்த விதிமுறைகளை நம்மீது திணிப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. இந்த விதிமுறைகள் தொடர்ச்சியாக நம்மை அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்து விடுகின்றது, மேலும் நம்முடைய சுயதேவைகளைக் கூட விட்டுக் கொடுத்து, அவர்கள் இடும் கட்டளைகளுக்குப் பணிந்து போகும் நிலைதான் அங்கு உருவாகின்றது. கடனுக்காக அந்நிய நாடுகளைச் சார்ந்திருப்பதன் காரணமாக, எழக் கூடிய தீமைகளை நான் பெரிதாகப் பட்டியலிட வேண்டிய அவசியமில்லாத ஒன்று.

அதிகபட்ச தேவைகளின்றி, கடன் வாங்குவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை, கடனில்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு முஸ்லிம்களை அறிவுறுத்துகின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒருமுறை, கடன் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத ஒருவரது ஜனாஸாவுக்கு தொழுவிக்க மறுத்து விட்ட நிகழ்வு நமக்கு, சிறந்ததொரு பாடமாக இருந்து கொண்டிருக்கின்றது.

இன்னும், முஸ்லிம் ஆட்சியாளர் ஒருவர், முஸ்லிம் அல்லாத ஆட்சியாளரிடமிருந்து பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாமா? என்பது பற்றி அறிஞர் பெருமக்கள் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்கள். அதற்கான பதில் : அவ்வாறு பெறக் கூடிய பரிசுப் பொருட்களின் மூலம், முஸ்லிம் சமுதாயத்தின் மீது எந்த வித நிர்ப்பந்தத்தையும் திணக்கும் நோக்கம் இருக்கக் கூடாது.


அந்நியர்களிடம் கடன் பெற்றுக் கொள்வதை, இஸ்லாமிய சட்ட வழிமுறைகள் தடை செய்கின்றன, அவ்வாறு கடன் பெற்றுத் தான் வாழ முடியும் என்ற கஷ்டமான நிலை இருந்த போதிலும், அதனைத் தவிர்ந்து வாழவே முயற்சிக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு நாம் பட்டிருக்கக் கூடிய கடனானது, நம்மிடம் வளங்கள் இல்லை என்பதனால் விழைந்ததல்ல. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் என்றுமே வளங்கள் இல்லாமல் இருந்ததில்லை. அவர்களிடம் இயற்கையின் வளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இன்னும் இந்த பூமிப் பந்தின் மிகவும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியின் மீது நாம் வீற்றிருக்கின்றோம். இடையே இந்தியாவையும், இஸ்ரேலையும் தவிர்த்து, இந்தோனேஷியா முதல் மொராக்கோ வரை நம்முடைய தேசம் விரிந்திருக்கின்றது. உலகின் எண்ணெய்த் தேவையில் 50 சதவீதத்தை நாம் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றோம். உலகின் கச்சாப் பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒன்றை நாம் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றொம். இன்னும் சொல்லப் போனால், மேற்குலகில் முதலீடு செய்திருக்கின்ற தொகையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாம் பட்டிருக்கின்ற கடன்களை அடைத்து விடலாம்.

நம்முன் இருக்கின்ற இந்த சவால்களைச் சந்தித்து, நமது பின்னடைவுகளைச் சரி செய்வதற்கு இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தினை அதிகபட்ச செலவினங்கள் மூலம் கொண்டாடுவதன் மூலம் சீர் செய்ய முடியாது. இந்த சவால்களை நாம் மிகவும் தீவிரமானதொன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பொருளாதார மற்றும் அரசியல் தலைமைகள், அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்பில் இருந்து நம்மை விடுவித்து, சுயசார்புள்ளவர்களாக எவ்வாறு மாற்றம் பெறுவது என்பது பற்றியும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். இதற்கு அடிப்படையான வளங்கள் நம்மிடைய இருக்கின்றன. இப்பொழுது நம்முடைய தேவை என்னவென்றால், இந்த உம்மத்தின் வளங்களை ஒருங்கிணைத்து, அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான புதிய யுக்திகள் தேவைப்படுகின்றன, இன்னும் நமக்கிடைய சகோதரத்துவமும் வளம் பெற வேண்டியதிருக்கின்றது, இன்னும் பரஸ்பர புரிந்துணர்வுகள் மற்றும் ஒத்துழைப்புகளும் தேவைப்படுகின்றது.


நமது பொருளாதார திட்டங்களை மறுகட்டமைப்புச் செய்வது
 

20 ஆம் நூற்றாண்டில் கம்யூனிஸம் கோலோச்சியது, கம்யூனிஸத்தின் எழுச்சியின் காரணமாக, கம்யூனிஸத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையே போர் மூண்டது, இதில் கம்யூனிஸம் வீழ்ச்சியடைந்தது. கம்யூனிஸத்தின் வீழ்ச்சியை அவர்களது பரிசோதனையில் வெற்றி பெற்றதனைப் போல அதனைக் கொண்டாடினார்கள், அது மட்டுமல்ல அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் வெற்றி பெற்றதாக முதலாளித்துவ வாதிகள் அதனைக் கொண்டாடினார்கள்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீது அதிருப்தி கொண்டவர்கள், அதன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக உருவாக்கியது தான் கம்யூனிஸம், குறிப்பாக, வளங்களைப் பங்கிடுவதில் காட்டப்பட்ட பாகுபாட்டின் காரணமாக, இந்தப் பாகுபாடு நூற்றாண்டு நெடுகிலும் இந்த முதலாளித்துவத்தில் ஊறி வந்திருப்பதும், கம்யூனிஸத் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.

கம்யூனிஸம் இப்பொழுது வீழ்ந்து விட்டதன் காரணமாக, முதலாளித்துவத்தினிடம் உள்ள கேடுகள் யாவும் நியாயமானவைகளாக ஏற்றுக் கொள்ள இயலாது. அதனைவிட, முதலாளித்துவத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்ட இன்னுமொரு கொள்கையான கம்யூனிஸத்திடம் உள்ள குறைபாடுகளே காரணமாகும் என்றே கருத வேண்டும். இன்றைக்கு முதலாளித்துவம் வளங்களைப் பங்கிடுவதில் காட்டுகின்ற பாகுபாடுகள், அதனுடைய பொருளாதாரத்தில் பாதிப்பை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமிடையே மிகப் பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது, வறுமை என்பது முதலாளித்துவ பொருளாதாரத்தில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வருகின்றது. இந்த வறுமை என்பது முதலாளித்துவம் தோற்றுவித்த பிரச்னைகளில் தலையாயது, இதனை அவர்கள் தீர்க்கவில்லையென்றால், கம்யூனிஸத்தை விட இன்னொரு வேகமான கொள்கை ஒன்று, இதனை எதிர்த்து பிறப்பெடுக்கலாம்.


இன்றைய உலகம், கம்யூனிஸமும் வேண்டாம், முதலாளித்துவமும் வேண்டாம், இவை அல்லாத மூன்றாவது பொருளாதாரத் திட்டம் ஒன்று தேவை என்பதில் குறியாக இருக்கின்றது.

அந்த மூன்றாவது திட்டத்தை வழங்குவதற்கு இந்த முஸ்லிம் உம்மத் தயாராக வேண்டும். இன்றைய உலகு சந்தித்துக் கொண்டிருக்கின்ற மிகப் பெரும் பொருளாதாரப் பிரச்னைகளைக் களைவதற்கு, திருமறைக் குர்ஆனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களால் கற்றுக் கொடுக்கப்பட்ட திட்டங்களினால் முடியும். அதில் தனிப்பட்டவர்களின் ஆதிக்கம் (MONOPOLY), சந்தைப் பொருளாதாரம், இன்னும் வளங்களைப் பங்கிடுவதில் நீதமாக நடந்து கொள்வதற்கான சட்ட திட்டங்கள், இவை அனைத்திலும் பாரபட்சப் போக்கைக் களைந்து, அனைவரும் சமூக நலன் கருதி லாப நோக்கோடு தொழில் முனைப்புக் காட்டும் திட்டத்தை கொண்டு வர முடியும்.

கம்யூனிஸத்தின் எழுச்சி எவ்வாறு உருவானதெனில், முதலாளித்துவத்தில் காணப்பட்ட பாரபட்சப் போக்கின் உத்வேகத்தினால் எழுந்தது, அதன் காரணமாகவே தனியார் ஆதிக்கம் (MONOPOLY), சந்தைப் பொருளாதார சக்திகள் ஆகியவை மறுக்கப்பட்டு, கம்யூனிஸப் பொருளாதாரம் என்ற அனைத்தும் அரசுக்கே சொந்தம் என்ற இயற்கைக்கு முரணான பொருளாதாரத் திட்டம் உருவானது, இந்தத் திட்டம் செயற்கையாகவே செயல்பட்டது, அடக்குமுறையாகவும் இருந்தது. தனிப்பட்டவர்களின் சுதந்திரம் பறிபோன போது, உற்பத்திக் குறைவை ஏற்படுத்தியது, அரசின் மிதமிஞ்சிய அதிகாரமானது அதிகாரமிக்கவர்களின் கையில் ஆடும் பொம்மைகளைப் போல மக்களின் நிலையை உருவாக்கி விட்டது.

முதலாளித்துவத்தின் பாரபட்சப் போக்கிற்கான அடிப்படைத் தவறுகளாக தனியார் ஆதிக்கம் (MONOPOLY) மற்றும் சந்தைப் பொருளாதாரம் ஆகியவை மட்டும் காரணமல்ல. அங்கே காணப்படுகின்ற பாரபட்சத்திற்குக் காரணம் என்னவெனில், நீதமான அல்லது அநீதமான சம்பாத்தியம் ஆகியவற்றுக்கு இடையேயான வரைவிலக்கணம் என்ன என்பதும், அதுவே அந்த பாரபட்சப் போக்கிற்கு அடிப்படையுமாகவும் இருந்து கொண்டிருக்கின்றது என்பதினாலாகும்.

இதில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்படுகின்ற வட்டி, சூது, நிச்சமற்ற கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பயனீட்டாளர்களின் அநீதமான ஆசையை உருவாக்குவதன் மூலம் அதிக லாபம் ஈட்டுதல் ஆகியவை அனுமதிக்கப்படுதல், இவை யாவும் சுய ஆதிக்கத்திற்கு வழிவகை செய்கின்றன, இன்னும் தேவையின் பொழுதும் இன்னும் உற்பத்தியை வழங்கும் பொழுதும் அவற்றின் இயக்கங்களை செயலிழக்கச் செய்து விடுகின்றது. அவற்றின் இயற்கையான நடவடிக்கைகளில் தலையிட்டு, அவற்றின் இயக்கங்களை தடுத்து நிறுத்துவதோடு, சுயஆதிக்கம் (ஆழnழிழடல) காரணமாக, லாபம் ஒன்றே பிரதானம் என்ற போதையை உருவாக்கி விடுகின்றது.

இன்னும் வட்டியானது, பணக்கார தொழில் அதிபர்களுக்கும் மிகவும் வசதியானதொன்றாக இருக்கின்றது. இவர்கள் பொதுமக்கள் வங்கிகளில் இட்டு வைக்கும் சேமிப்பில் இருந்து கிடைக்கக் கூடிய வருமானங்களை தங்களது வசதிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். வங்கிகளில் இட்டு வைக்கும் தொகைகளின் மூலமாக மிகப் பெரும் லாபம் சம்பாதிக்கும் அதேவேளையில், அந்த லாபத்திலிருந்து ஒரு சிறு தொகையை ஏற்கனவே நிர்ணயித்திருக்கும் அளவில் வட்டியாக, முதலீட்டாளர்களுக்கு லாபமாக வழங்குகின்றார்கள். இன்னும் அந்த வட்டியின் மூலம் கிடைத்த அந்த சிறு வருவாயையும், உற்பத்திச் செலவினமாக அவர்களிடமிருந்தே மீண்டும் பெற்றுக் கொண்டு விடுகின்றார்கள். இதனை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், பொது மக்கள் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் தொகைகளை, இந்தப் பணக்காரர்கள் தங்களது சொந்த உபயோகத்திற்கு எடுத்துப் பயன்படுத்தி, அதன் மூலம் கொழுத்த லாபம் அடைந்து கொள்கின்ற அதேவேளையில், பணத்தை வங்கிகளில் வைத்திருப்பவர்களுக்கு எதனையும் லாபமாகக் கொடுக்காமல் விட்டு விடுகின்றார்கள். அவர்கள் வட்டியாக முதலீட்டாளர்களுக்கு கொடுக்கின்ற லாபமானது, உற்பத்திச் செலவினமாக மீண்டும் அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படுவதனால், முதலீட்டாளர் வெறுங்கையுடன் விடப்படும் அதேவேளை, முதலாளி கொழுத்த லாபத்திற்கு சொந்தக்காரராக மாறி விடுகின்றார். இதுவும் ஒரு சூதாட்டம் போன்றதே, பல நபர்களின் வளங்கள், சில நபர்களின் கைகளுக்கு மாறி விடுகின்றது, உழைக்காமல் வருகின்ற லாபத்திற்காக மனிதனிடம் அழிவிற்கான சிந்தைனை ஓட்டத்தைத் தூண்டுவதற்குக் காரணமாகின்றது. நிச்சயமற்ற வரவு செலவுகள், இயற்கையான சந்தைப் பொருளாதார இயக்கத்தில் தடங்களை ஏற்படுத்துகின்றன மற்றும் வளங்களைப் பங்கிடுவதில் பாரபட்சப் போக்கை உருவாக்குகின்றன.

இஸ்லாம் சந்தைப் பொருளாதாரத்தை வளர மட்டும் விட்டிருக்காது, இன்னும் அவற்றின் இயற்கைத் தன்மையோடு அதனை வளர விட்டிக்கும், ஏகாதிபத்திய (MONOPOLIES) போக்கை அது சாகடித்திருக்கும். இரண்டு விதமான பொருளாதார நடவடிக்கைகளை அது வளர அனுமதித்திருக்கும்.

  1. வருமானங்கள் இறைவனின் கட்டளைகளின்படி பெறப்படக் கூடிய வழிமுறைகளை அது காட்டியிருக்கும். அது ஹலால் (அனுமதிக்கப்பட்டவை) மற்றும் ஹராம் (தடைசெய்யப்பட்டவை) என்ற இரண்டு வரையறைக்குள் கொண்டு வரப் பட்டிருக்கும். இந்த இரண்டு அடிப்படைகளும், ஏகபோக உரிமையையும்,  பாரபட்சப் போக்கையும், அநீதத்தையும், முறையற்ற வருமானத்தையும் மற்றும் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் சமுதாயத்தின் ஒட்டு மொத்த நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டிருக்கும். 
  2. இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளுள் ஒன்றான ஸக்காத் (ஏழைவரி) மற்றும் ஸதகாத் (விருப்பத்தின் அடிப்படையில் தர்மம்) ஆகியவற்றைக் கொண்டு பெறப்பட்ட ஹலாலான நிதிகளை, சந்தைப் பொருளாதாரத்தில் பங்கு பெற்ற இயலாதவர்களுக்கும், சம்பாதிக்க வழியற்றவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வழி ஏற்படுத்துகின்றது.
மேற்கண்ட இரண்டு முறைகளின் மூலமாக, பொருளாதாரமானது எல்லோருக்குமிடையிலும் சுற்றி வரச் செய்யப்படுகின்றது. ஒருவரிடம் மட்டும் குவிந்து கொண்டிருக்கின்ற நிலை மாற்றப்படுவதோ, அதற்கான சந்தர்பத்தின் வாசல்களும் கூட அடைக்கப்பட்டு விடுகின்றன.

மேற்கண்ட அனைத்து இஸ்லாமிய திட்டங்களும் எழுத்துருவில் தான் நம்மிடையே இருந்து கொண்டிருக்கின்றதே ஒழிய, நடைமுறை வாழ்வில் அவை நடைமுறைப்படுத்தப்படவே இல்லை, அதற்கான மாதிரி வாழ்க்கையை இந்த உலகத்திற்கு முஸ்லிம்கள் எடுத்துக் காட்டவே இல்லை. ஏன் முஸ்லிம் நாடுகள் கூட தங்களது பொருளாதார வளங்களை, இஸ்லாமிய அடிப்படையில் கட்டமைப்பதற்கு முயற்சிகளை எடுக்கவில்லை. நம்மில் பலர் இன்னும் இந்த முதலாளித்துவம் ஏற்படுத்தித் தந்த சட்ட திட்டங்களின் அடிப்படையைத் தான் பேணிக் கொண்டிருக்கின்றோம், இந்த அரைவேக்காட்டுத் தனமான திட்டத்தைப் பின்பற்றியதன் காரணமாக, முதலாளித்துவ நாடுகளில் விளைந்த பொருளாதார வீழ்ச்சியைக் காட்டிலும் அதிகமான தாக்கத்தை நம்மில் ஏற்படுத்தியது தான் மிச்சமாகும். துரதிருஷ்டவசமாக, இஸ்லாமிய சட்ட திட்டங்களை நாம் பேணிக் கொள்ளாததன் காரணமாக, பாரபட்சப் போக்குகள் மற்ற மேற்கத்திய நாடுகளை விட நம்மிடம் தான் அதிகமாகக் காணப்படுகின்றன.

இத்தகைய இழிநிலையைத் தொடர அனுமதிக்கக் கூடாது. நம்முடைய வழிமுறைகளை நாம் தேடி அவற்றைப் அமுல்படுத்தாதிருந்தால், இயற்கையாகவே புரட்சிக்கான திட்டங்கள் உருவாகி, அது தனது பாதையைத் தானே தேடிக் கொண்டு விடும். அந்த புரட்சியின் காரணமாக எழக் கூடிய விளைவுகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய பொருளாதார அடிப்படைகள் மீளாய்வு செய்யப் பட வேண்டும், அவற்றை திருமறைக் குர்ஆனின் அடிப்படையையும், சுன்னாவின் அடிப்படையைக் கொண்டும் கட்டமைக்க வேண்டும். நம்முடைய வெற்றியானது எதில் இருக்கின்றது என்றால், இஸ்லாமிய சட்ட திட்டங்களுடன், அவற்றின் வழிகாட்டுதலுடன் கூடிய முன்மாதிரிமிக்க பொருளாதாரத் திட்டத்தை இந்த நூற்றாண்டில் வழங்குவதன் மூலம், மனித சமுதாயத்திற்கு இந்த நூற்றாண்டில் இஸ்லாம் வழங்கிய மிகப் பெரிய பரிசாகவும் அளிப்பதில் தான் இருக்கின்றது. இஸ்லாமிய சட்ட திட்டங்களுடன் கூடிய பொருளாதாரத்தை நாம் மிகச் சரியானபடி வழங்கினோம் என்றால், கடந்த காலத்தில் நம்முடன் உலகு ஏற்படுத்திக் கொண்ட உறவை விட, மிகவும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையை நாம் காண்போம்.









நன்றி 

முஃப்தி தகி உஸ்மானீ அவர்கள் உலக முஸ்லிம் காங்கிரஸ் ல் வாசித்தளித்த உரை
ஐயமும் தெளிவும் - முஹம்மது குதுப்
சமரசம்
A ONE REALISM


No comments:

Post a Comment