Monday, January 30, 2012

சுய விமர்சனமே எனது தஃவாவின் அடிநாதம்!


மர்ஹூம் முஹம்மத் அல் கஸ்ஸாலி



கடந்த நூற்றாண்டில் இஸ்லாமிய சிந்தனையின் மொத்த வடிவத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தஃவாவை முன்னெடுத்த முன்னோடிகளுள் ஒருவரே மர்ஹூம் அல் கஸ்ஸாலி அவர்கள். மூன்று தசாப்தங்கள் இஸ்லாமிய பிரச்சாரப் பணியில் ஊறித்திழைத்து பெரும் அறிவு வளர்ச்சியும், அனுபவ முதிர்ச்சியும் கொண்டிருந்த அவரது மரணம் இஸ்லாமிய உம்மத்துக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு எனத் துணிந்து கூறலாம். தனது எண்பது வயதிலும் இஸ்லாமிய சிந்தனை குறித்து அவர் வெளியிட்ட கருத்துக்களில் இருபத்தைந்து வயது வாலிபத்தின் இளமையை எம்மால் தரிசிக்க முடிகின்றது. இப்பெரும் அறிவுஜீவியின் அனுபவங்கள், புரட்சிகரமான கருத்துக்கள் ஏனைய எல்லோரையும் விட அவரை தனித்துவமானவராக அடையாளப்படுத்தி இருக்கின்றன.

குற்றுயிராய்க் கிடக்கும் இஸ்லாமிய உம்மத்தை தூக்கி நிறுத்தி இஸ்லாமிய ஜீவிதத்தை அதன் நரம்பு நாளங்களில் பாய்ச்சுவதற்கான முதன்மையான ஆயுதம் சுயவிமர்சனமே என்று அவர்கள் கருதி வந்தார்கள். இங்கு இஸ்லாமிய தஃவா குறித்து அவருடன் மேற்கொண்ட ஓர் உரையாடல், இன்றைக்கு தஃவா களத்தில் இருப்பவர்களுக்கு பயன்படும் என்ற நோக்கில் தருகின்றோம்.

(இவர் எழுதிய, இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் என்ற நூல் தமிழில் வெளிவந்துள்ளது)

   

  •  உங்களது தஃவா பணியின் ஆரம்ப காலத்தில் நீங்கள் முதன்மை வழங்கிய அம்சம் எதுவாக இருந்தது?

இஸ்லாமிய முன்னணிகளை நெறிப்படுத்துவதே எனது முதன்நிலைப் போராட்டமாக இருந்தது. இத்தகு இயக்கங்கள் அநேகமான இளைஞர்களை தன்பால் ஈர்த்திருக்கின்றன. அவர்களது உணர்வுகளும் இஸ்லாத்துக்காக உழைக்க வேண்டும் என்ற மனோநிலையும் மெச்சத்தக்கன. எனினும், மிகப் பாரிய அறிவுக் குறைபாடு அவர்களை ஆட்கொண்டிருப்பதை என்னால் மறுக்க முடியாது. உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டில் களங்கத்தை ஏற்படுத்த பல்வேறு சக்திகள் முயல்கின்ற வேளையிலும் அவர்களுள் சிலர் வெறும் பர்தா விசயத்தில் சர்ச்சைப்படுவதை என்னால் சகிக்க முடியாது. அகன்ற இஸ்லாமிய சிந்தனையில் ஹிஜாப் விவகாரம் என்பது மிகக் குறைந்த முக்கியத்துவம் கொண்டதே. ஆனால் அவ்விசயத்தில் அளவு கடந்து மூழ்கி அது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று எனக் கருதுபவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள். மேலும், இத்தகையவர்கள் இஸ்லாம் பெண்மையின் விரோதி என்ற மேற்கின் குற்றச்சாட்டுக்குத் துணை போகிறார்கள்.

இஸ்லாமே பெண்ணுக்குரிய அனைத்து உரிமைகளையும் அந்தஸ்தையும் வழங்கிய மார்க்கமாகும். இவ்வகை உரிமைகள் அவளுக்கு ஜாஹிலிய அறியாமைக் காலத்தில் மறுக்கப்பட்டிருந்தது போலவே நவீன ஐரோப்பாவிலும் மறுக்கப்பட்டிருக்கின்றன. பெண்ணை ஐம்பது டாலர்களுக்கு விற்க முடியுமென்று ஐரோப்பா தீர்ப்பளித்த வேளை அதனது குருட்டுச் சிந்தனையை இஸ்லாம் உடைத்தெறிந்தது. ஐரோப்பா பெண்ணின் கைகளிலும் கால்களிலும் இறுகப் பூட்டியிருந்த விலங்குகளை இஸ்லாத்தின் புரட்சிகரமான போதனைகள் தகர்த்தெறிந்தன. போர்க்களத்திற்குக் கூட பெண் செல்லும் அளவுக்கு இஸ்லாம் உரிமைகளில் நெகிழ்ந்து கொடுத்தது. எனவே, பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் உண்மையான நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ளாத அரைகுறைகள் மேற்குலகின் பெண்ணியம் சார்ந்த இஸ்லாத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்கு துணை போவதை நம்மால் ஜீரணிக்கவே முடியாது. இஸ்லாமிய இயக்கங்கள் தமது அங்கத்தவர்களுக்கு இஸ்லாத்தின் இந்த பரந்த அணுகுமுறைகளை அறிமுகம் செய்ய வேண்டும். விரிந்த எல்லைகளில் சிந்திக்கக் கூடிய பிரச்சாரகர்கள் உருவாக வேண்டும்.



  •  இன்றைய தஃவாத் துறையிலும் தாயிகளிடத்திலும் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகத் தென்படுகிறது. இந்தக் குறைபாடுகளே இஸ்லாமியப் பிரச்சாரத்தின் வெற்றியைப் பின்னோக்கித் தள்ளுகின்றன என்று நீங்கள் அடிக்கடி குறைபட்டுக் கொள்கின்றீர்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

உண்மையில் இஸ்லாமிய அறிவுத்துறை இன்று பெரும் சோதனைக்குட்பட்டிருக்கிறது. முழுமையான இஸ்லாமிய அறிவு இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. கலை, இலக்கியத்துறையிலும் கூட இஸ்லாமிய அறிவுப் பின்னணி மிகச் சரியாக விளங்கிக் கொள்ளப்படாத நிலையிலேயே உள்ளது. ஆரம்பக் காலக் கவிஞர்கள், இலக்கியவாதிகள் மொழியிலும் அணியிலக்கணத்திலும் நிலவி வந்த தவறுகளைத் திருத்தி வந்தார்கள். இன்று அப்படியொரு நிலையைக் கூடக் காண முடியாதுள்ளது. இன்று நான் அறிவு மோசடியைக் காண்கின்றேன். குர்ஆனை நன்கு ஓதத் தெரியாதவன், சுன்னாவை மிகச்சரியாக விளங்கிக் கொள்ளாதவன், அரபு மொழியைத் திறம்படக் கற்காதவன் இவர்களை எல்லாம் மிம்பர்களில் பிரச்சாரம் செய்ய அனுமதித்ததே நமது தோல்வியின் ஆரம்பமாகும்.

இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் அதிகூடுதலாக கருத்து முரண்பாடுபட்ட பகுதிகளில் தெளிவில்லாத ஆலிம்கள் குறித்த பிரச்சினையில் தமக்குத் தெரிந்ததை மட்டும் வைத்து தீர்ப்புச் சொல்லி சமூகத்தைக் குழப்பி விடுகிறார்கள். இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்யும் ஒவ்வொரு சாராரும் ஒரே பிரச்சினையை வௌ;வேறு வகையில் அணுகுகிறார்கள் என்பதல்ல நான் கூற வருவது. மாறாக மக்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய நேரெதிரான பத்வாக்களை முன்வைப்பதே பிரச்சினைக்கான காரணமாகும்.

நமது கலாசாலைகளும் பல்கலைக்கழகங்களும் முழுமையான ஆலிம்களை உருவாக்க வேண்டும். அரைகுறை அறிஞர்கள், போலிப் புத்திஜீவிகள் இஸ்லாத்திற்கும் அதன் தூதுக்கும் பாரமாக இருப்பார்களே ஒழிய அதன் வெற்றிக்கு உழைப்பவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே முழுமையான இஸ்லாமியக் கல்வியை வழங்கும் வகையிலான பாடத்திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும். அப்போது மட்டுமே நமது பிரச்சாரப் பணியை வெற்றிகரமாக முன்னெடுக்கலாம். இந்தத் தவறை திருத்தாதவரை இஸ்லாம் குற்றவாளிக் கூண்டில் தொடர்ந்தும் நிறுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். அதற்குச் சார்பாக வாதாடுகின்ற நமது கையாலாகாத வக்கீல்களால் இஸ்லாத்திற்குக் கிடைக்க வேண்டிய நீதி தொடர்ந்தும் மறுக்கப்பட்ட வண்ணமே இருக்கும்.

இதன் காரணமாகவே நான் எனது தஃவாவின் அடிநாதமாக சுயவிமர்சனத்தை ஆக்கியிருக்கின்றேன். இந்த மார்க்கத்துக்காக உழைப்பவர்களை எனது மரணம் வரை நான் விமர்ச்சித்துக் கொண்டே இருப்பேன். இஸ்லாமியப் பிரச்சாரம் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி அவரசமாக அடையப் பெற வேண்டும் என்பதே எனது விமர்சனத்தின் குறிக்கோளாகும்.



  •  தாம் சொல்வது சரியா? பிழையா? என்பதை ஆராயாமல் சிலர் பத்வாவைத் துணிந்து அவசரமாகச் சொல்லி விடுகிறார்கள். இவர்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

சில ஆலிம்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஓடுகிறார்கள். அவர்களது அராஜகங்களை நியாயப்படுத்தும் வகையில் இவர்களது பத்வா அமைந்து விடுகின்றன. மற்றும் சிலர் வௌ;வேறு பாத்திரங்களிலுள்ள தண்ணீரைப் போன்று பாத்திரங்களின் அமைப்புக்கேற்ப தண்ணீரும் அதன் உருவை மாற்றுவது போன்று சூழலுக்குச் சாதகமாக தமது கருத்துக்களை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள். இதுவே பிரச்னைக்கான காரணமாகும்.

இதற்கான தீர்வு இஸ்லாமிய சிந்தனையின் முழுமையான வடிவத்தைப் புரிந்து கொள்ள முயற்சிப்பது மட்டுமே. காரணம் சிலர் சட்டப்புத்தகங்களின் ஒரு சில பக்கங்களை மட்டுமே வாசித்து விட்டு அவர் வாசித்த பக்கங்கள் மட்டுமே இஸ்லாம் என்று கருதுகிறார்கள். இது மிகப் பாரதூரமானதொரு தவறாகும். என்னால் இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மூல வசனங்களிலிருந்து சட்டத்தைக் கண்டுபிடிக்கத் திராணியில்லாதவர்கள் இஸ்லாம் பேசுவதை நான் மறுக்கிறேன். எனது அச்சம் இஸ்லாத்தின் எதிரிகள் மீதல்ல. மாறாக இஸ்லாத்தின் பெயரால் பேசுகின்றவர்கள் மீதே நான் அதிகம் அச்சப்படுகின்றேன். ஒன்றை முழுமையாக தெரியாமல் இருப்பது வேறு, அதனை அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது இன்னொன்று. இவ்வகை இரண்டாம் நிலை மிக அபாயகரமானதாகும்.

   

  •  நாம் தற்போது அனுபவித்து வரும் நெருக்கடிகளுக்கு தலையாய காரணம் இஸ்லாமிய ஷரீஆவை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதே என்று நாம் கருதுகிறோம். இது பற்றி உங்கள் கருத்தென்ன?

இஸ்லாமிய ஷரீஆவின் நடைமுறைச் சாத்தியப்பாட்டில் தர்க்கித்துக் கொண்டிருப்பவன் மார்க்கவாதியோ அல்லது அல்குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கின்ற சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமற்றவை எனக் கருதுபவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறுகிறான். இதைக் கூறும் போது இன்னொன்றையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மது அருந்தியவனுக்கு கசையடி கொடுப்பதும், திருடியவனது கையைத் துண்டிப்பதும் மட்டுமல்ல ஷரீஆ என்பது. இஸ்லாம் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது. அவ்னைத்தையும் உள்ளடக்கியதே இஸ்லாமிய ஷரீஆவாகும். அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த உழைப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.







Thursday, January 26, 2012

இமாம் ஹஸனுல் பன்னாவின் கடிதம்.


இமாம் ஹசனுல்  பன்னா 

1935 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கு நாடொன்றுக்கு கல்வி தேடி தனது மனைவியுடன் சென்ற ஓர் இஸ்லாமிய மாணவனுக்கு இமாம் ஹஸனல் பன்னா (ரஹ்) அவர்கள் பயனுள்ள உபதேசங்களைக் கொண்ட ஒரு கடிதமொன்றை பின்வருமாறு எழுதினார்கள் :
(இந்தக் கடிதம் இன்றைக்கும் நம் போன்றவர்களுக்குப் பொருந்துமே என்ற நிதர்சன உண்மையின் கீழ் இக்கடிதத்தைப் படித்துப் பயன் பெறுவோம்!)

நல்ல எண்ணத்துடனும், உயர்ந்த நோக்கத்துடனும் பிரயாணத்தை மேற்கொள்கின்ற உங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!

கண்ணியத்திற்குரிய மாணவனே! இன்னும் சற்று நேரத்தில் நீங்கள், உங்களுக்கு அறிமுகமில்லாத ஒரு சமூகத்திற்கு மத்தியிலும், உங்களுக்குப் பழக்கமில்லாத மனிதர்களுக்கு மத்தியிலும் இருப்பீர்கள். அவர்கள் உங்களிடத்தில் ஒரு முஸ்லிமுக்குரிய உதாரணத்தைப் பார்ப்பார்கள். எனவே நீங்கள் மிகச் சிறந்ததொரு உதாரணமாக திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடத்தில் பெறுமதிமிக்க அடைக்கலப் பொருளொன்று இருக்கிறது. அது தான் உங்களது மனைவி. அவளை நல்லமுறையில் கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்குப் பாதுகாப்பான தோழனாக இருங்கள். அப்போது அவள் உங்களுக்கு மன அமைதியையும், சந்தோஷத்தையும் பெற்றுத் தருவாள்.

நான் உங்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகவும், உங்களுக்கு சந்தோஷமானதொரு வாழ்க்கை அமைய வேண்டுமென எதிர்பார்க்கும் ஒரு தூய்மையான நண்பன் என்ற வகையிலும் இன்னும் சில உபதேசங்களை எழுதுகிறேன். அவற்றையும் வாசியுங்கள்.

உங்களது எல்லா விவகாரங்களையும், செயற்பாடுகளையும் அல்லாஹ் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற நல்லுணர்வோடு செயற்படுங்கள். அல்லாஹ் உங்களது எல்லா செயற்பாடுகளையும் அறிந்தவனாகவும், கண்களுக்குப் புலப்படாத, உள்ளங்கள் மறைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும் தெரிந்தவனாகவுமிருக்கிறான். எனவே அவன் உங்;களை எந்தவொரு நிலையிலும் பொருந்திக் கொள்ளக் கூடிய வகையில் காண்பதற்கு முயற்சி செய்யுங்கள். அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வால் நிரம்பிய உள்ளத்தை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான். எனவே இவ்விடயத்தில் பொடுபோக்காக இருக்க வேண்டாம்.

உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடமைகளை நேரத்துக்கு நிறைவேற்றி விடுங்கள். அவற்றை பிறகு செய்யலாம் என்றோ, அல்லது காரணங்களை முன் வைத்தோ அதிக வேலைகளினாலோ பிற்போடாதீர்கள். விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அது இச்சையின் உணர்வுகள். அல்லாஹ் கூறுகிறான் :

மனோ இச்சையைப் பின்பற்ற வேண்டாம். அவ்வாறாயின் அது உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிதவறச் செய்து விடும் (ஸாத் : 26)

அல்லாஹ்வை நெருங்கிச் செல்வதற்குரிய மிகச் சிறந்த சாதனமாக அவன் விதியாக்கிய கடமைகளே காணப்படுகின்றன. அதில் குறைவு செய்திட வேண்டாம். நீங்கள் மேற்கத்திய நாட்டில் இருந்து கொண்டு கஷ்டத்துடன் ஒரு நன்மையைச் செய்வது பன்மடங்கு கூலியைப் பெற்றுத் தரும். நான் இதனை விட அதிகமாக கடமையான விசயங்களை பற்றி கூற விரும்பவில்லை. ஏனென்றால் அது தான் மூலதனமாகும். மூலதனத்தினை வீணடித்தவனின் கைசேதமான நிலை, நாளை எப்படி இருக்கும் என்பதனை நீங்கள் நன்கு நன்கறிவீர்கள்.

உங்களுக்கு முடியுமான அளவு நேரத்தை சுன்னத்தான கரியங்கைள நிறைவேற்றுவதில் கழியுங்கள். பர்ழான தொழுகைகளுக்குரிய சுன்னத்தான தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். இஸ்திஃபார் செய்வதை அதிகப்படுத்தி, மகத்தான உங்களது இறைவனையும் துதி செய்யுங்கள். ஒருவன் பிரயாணத்தில் இருக்கும் போது கேட்கும் துஆ பதிலளிக்கப்படக் கூடியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதனை நீட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால்

நபி (ஸல்) அவர்கள், உமது நாவு அல்லாஹ்வின் ஞாபகத்தால் நனைந்து கொண்டே இருக்கட்டும், என அலி (ரலி) அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

அல் குர்ஆனை விளங்கி, ஆராய்ச்சி சிந்தனையுடன் அதிகமாக ஓதி வாருங்கள். அது தான் உள்ளங்களுக்கான நோய் நிவாரணியாகும். உங்களுடைய ஒவ்வொரு நாளையும் அல்குர்ஆனைக் கொண்டே முடியுங்கள். ஏனென்றால் அது சிறந்த ஆரம்பமாகவும் நல்ல முடிவாகவும் உள்ளது.

நீங்கள் அங்கே பலவீனமான உள்ளங்களை மிகைத்து, கண்களை மயக்கி, சிந்தனையை மழுங்கடித்து, உள்ளத்தை திசை திருப்பக் கூடிய உலகத்தின் கவர்ச்சிகளையும் மாயைகளையும் காண்பீர்கள். இவைகளெல்லாம் உங்களையும் மயக்கி மறுமையை மறக்கடிக்காமல் இருக்கட்டும். அல்லாஹ் கூறுகிறான் :

(நபியே!) அவர்களிலிருந்தும் சில பிரிவாருக்கு, உலக வாழ்க்கையின் அலங்காரமாக எதைக் கொண்டு நாம் சுகமனுபவிக்கச் செய்திருக்கிறோமோ அதன் பக்கம் உம்முடைய இரு கண்களையும் நீர் திண்ணமாக செலுத்த வேண்டாம். (ஏனெனில், மறுமையில் வழங்கப் பெறும்) உம் ரப்புடைய உணவு (இவ்வுலக வாழவில் அவர்கள் வழங்கப் பெறுவதை) விட மிகச் சிறந்ததும், நிலையானதுமாகும். (தாஹா :131)

எனது மதிப்பிற்குரியவரே! அங்கு இருக்கிறவர்கள் அல்லாஹ் எங்களுக்கு ஹராமாக்கியுள்ளதை ஹலாலாகக் கருதுவார்கள். அந்த ஹராம்களை செய்வதில் சற்றேனும் தயக்கம் காட்ட மாட்டார்கள். எனவே, நீங்கள் இச்சைகளுக்கு உடன்பட்டுச் செல்ல வேண்டாம். அவர்கள் செய்யும் பாவங்களில் பங்கு கொள்ளவும் வேண்டாம். நிச்சயமாக அவை உங்களை அல்லாஹ்வின் பிடியிலிருந்து பாதுகாக்க மாட்டாது. மறுமையில் உங்களுக்கு ஆதாரமாகவம் இருக்க மாட்டாது.

அடுத்து நீங்கள் அங்கு இருக்கும் இளமைப் பெண்களுடன் தோழமை கொள்ள வேண்டாம். உங்களுக்கும் அவர்களுக்குமிடையில் தனிப்பட்ட நட்பையோ, அல்லது உளரீதியான உறவையோ ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இது ஏனையவர்களுக்கு, ஒரு குற்றமாக காணப்பட்டால் உங்கள் மீது இரண்டு குற்றங்களாகும். ஏனென்றால் அதற்கான விளக்கத்தை அறிந்து வைத்துள்ளீர்கள்.

மதுபானத்தை நெருங்கவும் வேண்டாம். அவ்வாறு நெருங்குவதற்கு சூழலை காரணம் காட்டவும் வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் அனைத்து சூழல் காரணிகளையும் அறிந்தே அதனை ஹராமாக்கினான். இவ்வாறே ஹராமான எந்த உணவையும் சுவைக்க வேண்டாம். ஹராத்தினால் வளரும் உடம்பு நரகத்துக்கே மிகவும் பொருத்தமாகும். அல்லாஹ் ஹராமாக்கிய ஒன்றில் கெடுதியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

இன்னும் தூய்மையானவற்றை அவர்களுக்கு அவர் (நபியவர்கள்) ஹலாலாக்கி, கெட்டவற்றை அவர்களின் மீது ஹராமாக்கி வைப்பார். (அஃராப் : 157)

இவ்வாறு இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன. தொடர்ந்து உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்க வேண்டுமென விரும்புகிறேன். என்றாலும் அதிகமான பேச்சு சிலவற்றை மறக்கடித்து விடும் எனப் பயப்படுகின்றேன். எனவே உங்களுக்கு அல்லாஹ் நல்லதை நாட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு!




A ONE REALISM.

Friday, January 20, 2012

உயிரினம் உருவானது எப்படி ?





உயிரினம் உருவானது பற்றி டார்வின் (1809 - 1882 ) மற்றும் கிளவுட் பெர்னாட் ( 1813 - 1878 ) ஆகிய அறிஞ்சர்கள் தெரிவித்துள்ள கருத்தைத்தான் நாம் அனைவரும்  அறிந்து வைத்துள்ளோம்.மனித இனம் தண்ணீரிலிருந்து ஆரம்பமானது என்று கூறும் இந்த அறிஞ்சர்கள்,உயிரினங்களின் உதயமும்,நீரில் ஒரே செல்லாக இருந்து பின்னர் பல்லாயிரம் ஆண்டுகளில் படிப்படியாக வளர்ந்து பலவகை உயிரினங்களாக பரிணமித்தது என்று கருதுகிறார்கள்.இதை விளக்கும் முகமாக அனேக பல அனுமானக்கருத்துக்களை அல்லிவீசுகின்றனர்.இருப்பினும் இவர்களின் கூற்றை உறுதி செய்யக் கூடிய அறிவியல் சான்றுகள்,ஆராச்சி பூர்வமான ஆதாரங்கள் ஒன்றும் கிடையாது.

உயிரினம் உருவானது எப்படி என்பது பற்றி அறிஞ்சர்கள் கடும் கருத்து வேறுபாடு கொண்டு, ஒவ்வொருவரும் தம்மையே அதற்கு விளக்கம் என்று நினைத்துகொல்கிறார்கள்.ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சான்றுகள் எதையும் அவர்கள் காட்டவில்லை.இவர்கள் குழப்பத்தில் மூழ்கி இருக்கும் வரை உண்மை அவர்களின் கைக்கு எட்டப்போவதில்லை.ஆனால் நாம் முஸ்லிம்கள் எந்த விடயத்திலும்  வலி தவறி செல்லவேண்டியதில்லை.திருக்குருஆனின் வழிகாட்டுதல் நமக்கு ஒரு பேரருளாக கிடைத்திருக்கும் பொது நாம் வழுக்கி விழ வேண்டியதில்லை.

உயிரினம் உருவானது பற்றி மனித மூலைகளில் ஒருவான கருத்துக்கள் எதற்கும் எந்தவிதமான வலுவான ஆதாரமும் இல்லை.இந்த விடயத்தில் தெளிவான விளக்கத்தை எந்த அறிஞ்சரும் அளிக்கவில்லை.அனுமானம்,யூகம்,கற்பனை என்ற அளவிலேயே அவர்களின் அபிப்ராயங்கள் அலைமோதுகின்றன.இதற்கு காரணம்,உயிரினம் உறவான போது  அதை யாரும் அறிகிளிருந்து பார்க்கவில்லை.அதை பற்றி அறிவிக்கும் அறிவியல் சாட்ச்சியும் இல்லை.தான்,இந்த உலகை படைக்கும் போது  எவரையும் உடன் வைத்துக்கொள்ளவில்லை.என்பதை "குகை" என்ற அத்தியாயத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

வானங்களையும், பூமியையும் படைப்பதற்கோ, இன்னும் அவர்களையே படைப்பதற்கோ (அவர்களை நான் உதவிக்கு) அருகே வைத்துக் கொள்ளவில்லை! வழி கெடுக்கும் இவர்களை (எதிலும்) நான் உதவியாளர்களாக ஏற்படுத்திக் கொள்ளவுமில்லை.
(18:51)
இதிலிருந்து படைப்புக்களின் தோற்றம் பற்றி ஒன்றும் தெரியாது என்று தெளிவாக அறியமுடிகிறது.திருக்குருஆன் வந்து சொல்லிக் கொடுத்ததை தவிர,இது தொடர்பாக நமக்கு ஒன்றும் மேலதிகமாக தெரியாது என்பதே உறுதி.படைப்புக்களின் தோற்றம் பற்றி திருமறை பின்வருமாறு கூறுகிறது.

மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
(11:07)


நபிமொழி


இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அமுதவாக்கு ஒன்றை குறிப்பிடலாம்.இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸில் நபியவர்கள் கூறுகிறார்கள்.

எந்தவொரு பொருளும் இல்லாத நேரத்திலிருந்தே அல்லாஹ் இருக்கிறான்.அவனது ''அர்ஷ்'' நீரின் மீது இருந்தது.பின்னர் வானங்கள் மற்றும் பூமி என்பவற்றை அவன் படைத்தான்.அனைத்தையும் எட்டில் பதித்தான்.(புஹாரி)

அப்துல்லா பின் அம்ர் (ரலி) அறிவிக்கும் இன்னொரு ஹதீஸில் நபிகள் நாயகம் அறிவிக்கிறார்கள்.

வானங்கள் மற்றும் பூமியை படைப்பதற்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே படைப்புகளின் விதியை அல்லாஹ் எழுதிவிட்டான்.அவனது ''அர்ஷ்'' நீரின் மீது இருந்தது.(முஸ்லிம்)

இந்த வசனம் மற்றும் நபிமொளிகளிளிருந்து படைப்புக்களின் தொடக்கத்திலிருந்து நீர் இருந்தது என்றும் எல்லா படைப்புகளுக்கும் முன்னால் இறைவன் நீரை படைத்து  இருந்தான் என்றும் தெரிகிறது.இந்த நீர் எதைக் குறிக்கிறது ? அது சாதரணமான தண்ணீர் தான ? அல்லது திடப்பொருட்கள் இதற்கு முன் பெற்றிருந்த திரவ நிலையைக் குறிக்க " நீர் " எனும் சொல் ஆளப்பட்டுள்ளதா என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது.திருக்குர்ஆன்  இங்கு  அடிப்படை விடயத்தை மட்டும் சொல்லியிருக்கிறது.பொதுவாக அறிவியல் சம்பத்தப்பட்ட விடயத்தை மட்டும் கூறிவிட்டு,அதன் விளக்கங்களை மனிதனின் ஆய்வுக்கு விட்டு விடுவதே திருமறையின் மரபாகும்.

இதன்படி அல்லாஹ்வின் "அர்ஷ்"நீரின் மீது இருந்தது:நீரே அல்லாஹ்வின் முதல் படைப்பு என மேற்கண்ட வசனம் தெரிவிக்கின்றது.வேறு சில வசனங்களை ஆராயும் போது,நீரஈருந்து உயிரினம் உருவானது என்று தெரிகிறதே ஒழிய ஆரம்பத்தில் உயிரினங்கள் நீரில் ஒரே செல்லாக இருந்தது என்று தெரியவில்லை.

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
(24:45)


என்று திருமறை பறைசாற்றுகிறது.அனைத்து உயிரினங்களையும் நீரிலிருந்து படைத்ததாக சந்தேகத்துக்கு இடமின்றி இந்த வசனம் மூலமிறைவன் விவரிக்கின்றான்.உயிரினக்களில் ஒரு குறிப்பிட்ட இனமான மனிதனைப் படைத்தது பற்றி அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.

இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.
 (25:54)


மனிதன் தன்னைப்பற்றி தீவிரமாக ஆராய்வான் என்பதற்காகவே மனிதப்படைப்பு குறித்து அவன் தனியாகவே குறிப்பிடுகிறான்.






இந்த கட்டுரையை எழுதியவர்  
அறிவியல் தமிழ் அறிஞ்சர்
மணவை முஸ்தபா 
அவர்கள்.


ஜசாகல்லாஹு ஹைரைன்.









Friday, January 13, 2012

இஸ்லாமும் நாகரிகமும்.

Sharjah Museum Of Islamic Civilization.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் கூடாரங்களில் வாழந்தார்களே அந்தக் காலத்திற்க்குப் பின்நோக்கிப் போக நீங்கள் விரும்புகின்றீர்களா? இஸ்லாம் அந்த முரட்டுத்தனமான அரேபிய நாடோடிகளுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாம். ஏனெனில் அவர்களைக் கவர்ந்திடும் அளவிற்க்கு அது எளிமையானது. ஆனால் விண்ணைப் பிளந்த விரைந்து செல்லும் விமானங்களையும், நைட்ரஜன் குண்டுகளையும், நுட்பம் நிறைந்த சினிமாக் கருவிகளையும் கொண்ட இன்றைய உலகிற்கு இறைவன் உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் ஏற்புடையதாகுமா? முன்னேறிவிட்ட இன்றைய உலகில் இந்தக் கொள்கையால் எந்தப் பலனும் விiளாது. ஏனெனில் அது மாற்றங்களுக்கு உட்படாதது, நிலையானது. ஆகவே நாம் உண்மையிலேயே நாகரிகமடைந்த உலகின் ஏனையப்பகுதிகளைப்போல் முன்னேற வேண்டுமானால் இஸ்லாத்தை உதறிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.'

இரண்டாண்டுகளாக எகிப்து நாட்டில் இருந்து வருகின்ற ஒரு 'படித்த' ஆங்கிலேயரால் மேலே குறிப்பிட்டவை எனக்கு நினைவூட்டப்பட்டன. இந்த ஆங்கிலேயர் ஐக்கிய நாடுகள் சபையால் (UNO) எகிப்துக்கு அனுப்பப்பட்டவர்கள். ஏகிப்த்தில் வாழ்ந்தவரும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்க்குத் தேவையான திட்டங்களை வகுத்துத் தரும்படி அனுப்பப்பட்ட ஐக்கிய நாட்டுசபை குழுவின் ஒரு உறுப்பினர் இந்த ஆங்கிலேயர், அந்த விவசாயிகளின் நலனில் அக்கறைக் கொண்டவர்களைப்போல் காட்டிக்கொள்ளும் இந்தக் குழுவினர் அம்மக்களின் மொழியைத் தெரிந்துகொள்ள முயன்றதுமில்லை. ஐக்கிய நாட்டு சபையின் தூதுக்குழுவுக்கும் எகிப்து நாட்டு விவசாயிகளுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளராக நான் அனுப்பப்பட்டேன். அப்போது தான் நான் இந்த ஆங்கில அதிசய மனிதனை சந்தித்தேன்.

கீழை நாடுகள் மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புகளை ஆங்கிலேயர்கள் கைவிடாதவரை எகிப்தியர்களாகிய நாங்கள் அவர்களை ஏறக் மாட்டோம்! வெறுக்கின்றோம்!! எப்போதும் வெறுத்துக்கொண்டே இருப்போம் இதை ஆரம்பத்திலேயே நான் அவரிடம் கூறினேன். ஏகிப்து, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் மீது ஆங்கிலேயர்களும், அவர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ள அமெரிக்கா போன்ற நாடுகளும் நிகழ்த்திவரும் அநியாயங்களின் அடிப்படையில் நாங்கள் ஆங்கிலேயர்களையும் அவர்களோடு கூட்டுச்சேர்ந்துள்ளவர்களையும் வெறுக்கின்றோம் இதையும் நான் ஆரம்பத்திலேயே இந்த ஆங்கிலேயரிடம் சொல்லி விட்டேன்.

ஏனது பேச்சை கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ந்து போன அவர் என்னை ஒருமுறை முறைத்துப்பார்த்துவிட்டு 'நீ ஒரு கம்யூனிச வாதியா ? ' எனக் கேட்டார்.

நூன் ஒரு கம்யூனிசவாதியல்ல. நான் ஒரு முஸ்லிம். நீங்கள் பின்பற்றும் முதலாளித்துவத்தைவிட சிறந்ததும் நீங்கள் வெறுக்கும் கம்யூனிசத்தை விட உயர்ந்ததுமான இஸ்லாத்தை நம்புகிறவன் நான். இன்றுவரை மனிதனூல் கண்டுப்பிடிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைத் திட்டங்களைவிட இஸ்லாம் உயர்ந்;தது. ஏனெனில் அது வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் பல்வேறு துறைகளுக்கிடையேயும் ஒரு சமநிலையைப் பாதுகாப்பதும் இஸ்லாம்தான் எனப்பதில் தந்தேன்.

இப்படி நாங்கள் சுமார் மூன்றுமணி நேரம் விவாதித்தோம். முடிவில் அவர் நீங்கள் இஸ்லாத்தைப் பற்றிச் சொல்லுபவை ஒருவேலை உண்மையாக இருக்கலாம். ஆனால் நான் என்னை பொறுத்தவரை தற்கால நாகரிகம் கண்டு பிடித்துள்ள நன்மைகளைப் புறக்கனிக்கத் தயாராக இல்லை. உயர்ந்து பறந்திடுதிடும் விமானத்தில் பறந்து செல்வதை நான் விரும்புகின்றேன். வானொலியில் ஒலிபரப்படும் இசையையும் அது தரும் சுகத்தையும் துறக்க நான் தயாராக இல்லை. என்று கூறினார்.

அவர் தந்த பதிலால் வியந்துப்போன நான் உங்களை இவற்றிலிருந்து தடுப்பவர்யார்? என்று கேட்டேன்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதென்பது காட்டுமிராண்டி தனத்திற்கும்-பழஙகால வாழ்க்கைக்கும் திரும்பிச்செல்வதாகாதா? ஏன்று திரும்பக் கேட்டார்.

ஆதாரங்கள் ஏதும் இல்லாதபோதும் இஸ்லாத்தைக் குறித்து இதுபோன்ற சந்தேகங்கள் எழுவதும் ஆச்சரியமாகவே இருக்கின்றது. இதுபோன்ற சந்தோகங்களுக்கு இஸ்லாத்தில் சற்றும் இடமில்லை என்பதை அதன வரலாற்றைத் தெறிந்தவர்கள் புரிந்துக்கொள்வார்கள். ஓரு கணமேனும் இஸ்லாம் நாகரிகத்திற்கும் முன்னேற்றத்திற்க்கும் முட்டுக்கட்டையாக இருந்ததில்லை.

முரட்டு குணம் நிறைந்த நாடோடிகளை அதிகமாகக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்திற்குத் தான் இஸ்லாம் முதலில் வெளிப்படுத்தப்பட்டது.

அந்நாடோடிகள் சுயநலக்காரர்கள். இறையச்சமற்றவர்கள் இப்படித் திருக்குர்ஆனே வர்ணிக்கின்ற வகையில் அவர்கள் இருந்தார்கள்.

வன்நெஞ்சர்களாகவும், கடினசித்தமுடைய காட்டுமிராண்டிகளாகவும் வாழ்ந்த அம்மக்களைப் பண்படுத்தி மனிதப்புனிதர்களாக மாற்றியது இஸ்லாத்தின் மகத்தான வெற்றியாகும். ஆவர்களைப் பக்குவப்படுத்தியது மட்டுமின்றி இந்த மனித இனத்தையே நேர்வழியின்பால் வழி நடத்திச் செல்கின்ற வழி காட்டிகளாகவும் மாற்றியது இஸ்லாம். முனிதர்களைப் பண்படுத்துவதில்-ஆத்மாக்களை அழகுபடுத்துவதில்-இஸ்லாத்திற்கு இருக்கும் மகத்தான திறமையின் ஒப்பற்ற சான்றே இந்தச் சாதனை.

ஆத்மாவைப்புனிதப்படுத்தி மனிதனை மாண்பாளனாக ஆக்கிட முனைவது மனிதகுலம் மேற்கொள்ள வேண்டிய பெரிய நோக்கங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆத்மாவின் புனிதம் அழுகு என்பது நாகரிகத்தின் இறுதி இலக்குகளின் ஒன்றாகும். ஆனால் இஸ்லாம் ஆத்மாவைப் புனிதப்படுத்துவதோடு மட்டும் திருப்தி அடைந்துவிடுவதில்லை. தற்க்காலத்தில் மக்களால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்ட-பலரால் வாழ்வில் இலக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாகரிகத்தின் அனைத்து நல்ல அமசங்களையும் இஸ்லாம் ஏற்றுக் கொண்டது.

இஸ்லாத்தின் ஆரம்பநாட்களில் அது நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களைத் தன்பால் சேர்த்துக் கொண்டிருந்தது. அப்படிப் புதிதாகச் சேர்ந்த மக்கள் பல்வேறுபட்ட நாகரிகங்களையும் கலாச்சாரங்களையும் கொண்டவர்களாக இருந்தார்கள் அம்மக்களின் நாகரிங்களை இஸ்லாம் எதிர்க்கவில்லை. அம்மக்களின் கலாச்சாரங்களுக்கும் பண்பாடுகளுக்கும் பாதுகாப்பளித்தது. ஆதரவு தந்தது, ஆனால் அந்தப் பண்பாடுகளும், கலாச்சாரங்களும். ஏக இறை கொள்கைக்கு எதிரானவையாகவோ மக்கள் நல்லதைச் செய்வதிலிருந்து தடம் பிறழச் செய்வனாகவோ இருந்திடக்கூடாது.

விஞ்ஞானத்தில் வளர்ந்து நின்ற கிரேக்கக் கலாச்சாரத்தை இஸ்லாம் ஊக்கம் தந்து வளர்த்தது. அதன் மருத்துவவியல், வானவியல், கணிதவியல், பௌதீகவியல், தத்துவவியல், இரசாயனவியல் இத்தனையையும் இஸ்லாம் வளர்த்தது. அத்தோடு இஸ்லாம் தன்னளவில் பலவிஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடித்து விஞ்ஞானம் வளர வழிகண்டது. இது முஸ்லிம்கள் விஞ்ஞானத்துறையில் எப்போதும் ஆhவமுடையவர்களே என்பதற்கு தக்க சான்றாகும்.

அந்தலூசியாவில் இஸ்லாம் சாதித்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டே தற்கால ஐரோப்பாவின் மறுமலர்ச்சியும் அதன் நவின விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் உருவாகின.

முனித குலத்திற்கு நன்மைகளை விளைவிக்கும் ஏதேனும் நாகரிகத்தை இஸ்லாம் என்றேனும் எதிர்த்தது என்று யாராவது கூற முடியுமா? முடியாது.

இன்றைய மேலைநாட்டு நாகரிகத்தைப் பொறுத்தவரை இஸ்லாத்தின் அணுகுமுறை என்ன என்பதைப் பார்ப்போம் !

இதுவரை உலகவழக்கில் இருந்த நாகரிங்களை இஸ்லாம் எந்த அடிப்படையில் அனுகியதோ அதே அடிப்படையில் தான் இஸ்லாம் இன்றைய மேலைநாட்டுக் கலாச்சாரத்தையும் அணுகுகின்றது. இந்தக் கலாச்சாரம் என்னென்ன நல்லப் பண்புகளைத் தன்னிடம் கொண்டுள்ளதோ அவற்றை இஸ்லாம் ஏற்றுக் கொள்கின்றது. அதே நேரத்தில் அதில் காணப்படும் தீமைகளை வெறுத் தொதுக்கின்றது. தனியொருவனின் விருப்பத்தைத் திருப்திச் செய்வதற்காகவோ ஒரு இனத்தை இன்னொரு இனத்தைவிட உயர்த்திடுவதற்காகவோ இஸ்லாம் பிற நாகரிகங்களோடு மோதியதில்லை. ஏனெனில் இஸ்லாம் மனித இனத்தின் ஒற்றுமையில் உறுதியான நம்பிக்கைக்கொண்டது. மனிதர்கள் மாச்சரியமன்றி பழகிடும்போது கூடிக்குலாவிவாழ்ந்திடும் நற்குணம் கொண்டவர்கள் என்று இஸ்லாம் நம்புகின்றது.

இஸ்லாம் தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்புகளை எதிர்க்கின்ற மார்க்கமல்ல என்பதை நாம் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும் தற்காலத்தில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள கருவிகளை உபயோகப்படுத்திட 'அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருநாமத்தால்' என்று அக்கருவிகளில் பொறிக்கப்பட வேண்டும் என்று இஸ்லாம் நிபந்தனை விதிப்பதில்லை. அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்திடும்போது இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஆரம்பித்தால் போதுமானது. இன்னும் அவற்றை இறைவனுக்காக உபயோகப் படுத்திடவேண்டும். அவ்வளவுதான். விஞ்ஞானத்தின் கருவிகளுக்கு மதம் என்றொன்றில்லை. ஆனால் அவை எந்த விதத்தில் பயன்படுத்தப்படுகின்றதோ அது அடுத்தவர்களைப் பாதிக்கின்றது.

உதாரனமாக ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொள்வோம். அந்த துப்பாக்கிக்கென்று மதம் எதுவுமில்லை. அது தற்கால விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பாகும். ஆனால் அந்த துப்பாக்கியை அடுத்தவர்களை ஆக்கிரமிப்பதற்க்காகப் பயன்படுத்துகின்ற ஒருவன் முஸ்லிமாகமாட்டான் - ஆக்கிரமிப்பவர்களை அகற்றுவதற்காகவே துப்பாக்கிப் பயன்படுத்தப்பட வேண்டும். அல்லது இறைவனின் போதனைகளை இந்த உலகில் பரப்பிடுவதற்க்காகப் பயன்படுத்திட வேண்டும்.

இன்றைய சினிமாக்கருவி நவீன விஞ்ஞானத்தின் கண்டு பிடிப்பாகும். இந்த நவீன கண்டுபிடிப்பை நல்லனவற்றைப் பரப்பிடுவதற்காகப் பயன் படுத்தினால் ஒருவர் உண்மையான நல்ல முஸ்லிமாக இருக்கலாம். அதே நேரத்தில் இதே சினிமா கருவியை, காமத்தை இடறும் காட்சிகளைப் படம்பிடிப்பதற்காகவும், மக்களிடையே ஒழுக்கக் கேடுகள் வளர்வதற்கு வகை செய்யும் காட்சிகளைக் காட்டுவதற்காகவும் பயன்படுத்தினால் அவர் முஸ்லிமாகமாட்டார். சினிமாப்படங்கள் மனிதனிடம் கீழ்த்தரமான உணர்ச்சிகளைச் சீண்டி விடுவதோடு வாழ்க்கையின் நோக்கத்தைப் பாழடித்து விடுவதால் அவை அற்பமானவை. அப்புறப்படுத்த வேண்டியவை ஆகவே அவை மனிதனுக்குத் தேவையான ஆத்மீக உணவாக அமையமாட்டா.

மனிதன் கண்டெடுத்துவைத்துள்ள விஞ்ஞான உண்மைகளை இஸ்லாம் ஒருபோதும் எதிர்த்ததில்லை. நன்மை தரும் எல்லா விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் முஸ்லிம்கள் பயன்படுத்தவேண்டும் 'விஞ்ஞானத்தை-அறிவியலை ஆய்ந்து படித்திட வேண்டியது ஒரு இஸ்லாமியக் கட்டளையாகும்' என இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.

முடிவாக நாகரிகம் மனிதனுக்கு நல்லதைச் செய்திடும் வரையில் இஸ்லாம் அதனை எதிர்ப்பதில்லை-ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் அதே நாகரிகம், போதைப் பொருளாகவும் சூதாட்ட சூனியங்களாகவும், விபச்சார விடுதிகளாகவும், அடுத்தவர்களை அடிமைப்படுத்திடும் ஆதிக்க வெறியாகவும் நர்த்தனமாடினால் இஸ்லாம் அதை ஏற்றுக்கொள்ளாது. எதிர்த்துப்போராடும். நூகரிகம் என்ற பெயரைப் போர்த்திக் கொண்டு மனிதனை ஆட்டிப்படைத்து அலைக்கழிக்கவரும் இந்த நாகரிகத்தின் பிடியிலிருந்து மனிதனைப் பாதுகாக்க இஸ்லாம் தன்னால் இயன்ற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதில் இறுதிவரை உறுதியுடன் போராடும்.




இந்தக் கட்டுரை எகிப்தின் பிரபல எழுத்தாளர் ஒருவரின் ஆக்கமாகும்.அவரின் பெயர் தெரியவில்லை.மன்னிக்கவும்.




Friday, January 6, 2012

மதம் தேவையில்லை மனச்சாட்சியே போதும்...???


மனசாட்சி ஒரு மகத்தான சக்தியே. எனினும் மனசாட்சி என்றால் என்ன? எல்லோருடைய மனசாட்சியும் ஒன்று போன்றதுதானா? அதன் தீர்மானமும் எப்போதும் எல்லோரிடமும் ஒன்று போன்றது தானா? அது குற்றங் குறையற்றது என்று யாராவது கூற முடியுமா?

பிறந்த குடும்ப சூழலும் வளர்ந்த சமூக சூழலும் பின் தொடர்ந்து வரும் பாரம்பரிய சூழலும் மனசாட்சியை நிர்ணயிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றது.

எல்லோருடைய சிந்தனையும் செயல்படும் ரீதியும் ஒன்று போல் இருப்பதில்லை.  மனிதர்கள் பலரும் பல குணாதிசயங்களைக் கொண்டவர்களாகவும், அதனுள் ஒன்றுக்கொண்று மாறுபட்டவர்களாகவும் உள்ளனர். அவர்களின் ஆசைகளும் பலவிதங்களாகும். கற்றறிந்த அறிவற்கும், பாமர அறிவிற்கும் பலத்த ஏற்ற தாழ்வுகள் உண்டு அந்நிலையில் ஒவ்வொருவரும் தம்முடைய ஸ்தானத்தில் நின்று கொண்டு தான் காரணகாரியங்களைப் பார்க்கின்றார்கள். எல்லோரும் ஒன்றுபோல் சிந்திப்பது சாத்தியமானதல்ல. அதனால் சிந்தனைகளும் அதன் அடிப்படையிலான செயல்பாடுகளும் மாறுபட்டதாகவே இருக்கும்.

அழகு விரும்பக்கூடியதாகும். சிலருக்கு சில பொருட்கள் மீது விருப்பமிருக்கும் அதுவே வேறு சிலருக்கு அதன் மீது வெறுப்பாயிருக்கும். அதுபோல நன்மை, தீமைகளும் அவ்விதம் ஆகலாமல்லவா? தனிமனிதனின் ரசனைக்கேற்ப அழகும் விருப்பமும் மாறுபாடும் போது நன்மை தீமையில் மட்டும் மாற்றம் ஏற்படாது என்று கூறவே முடியாது.

என் மனசாட்சிக்கு நன்மையாகத் தெரியும் காரியம் உங்களுடைய மனசாட்சிக்கு தீமையாக தெரியலாம். உங்களுக்கு நன்மையாகத் தெரியும் காரியம் எனக்கு தீமையாகத் தெரியலாம். உண்மையில் நன்மை நன்மை தான். தீமை தீமை தான். அது மனசாட்சியின் அடிப்படையில் மாறுபட்டாலோ மனித சமூகத்திற்கு கேடுதான். சமூக பொருளாதார கடமைகளை அனுசரித்து மாறிவரக்கூடியதல்ல நன்மை தீமைகள். அது கால, தேச. வர்க்க, நிற இன மத பேதங்களுக்கு பொதுவாக இருக்க வேண்டும்.

மனித மனசாட்சியோ, சமூக சூழ்நிலையோ பொருளாதார அடிப்படையோ தேசிய சூழலோ தான் நன்மை தீமையை நிச்சயிக்கிறது என்றால் அது அசாத்தியமாயிருக்கும். ஆகவே நன்மை, தீமைகளை நியாய அநியாயங்களை நிர்ணயிக்க மனித இச்சைகளுக்கோ, மனசாட்சிக்கோ அருகதையில்லை எனலாம்.

நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கே போவேன்? வாழ்க்கை என்றால் என்ன? அது எதற்குரியது? அது எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது போன்ற ஐயங்களுக்கெல்லாம் இறைவெளிப்பாடுகள் மூலமேயல்லாது வேறு எதன் மூலமும் தெளிவான பதிலை புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாது.

சார்லஸ் டார்வினும். ஃ பிராய்டும், மெக்டுகல்ஸும். அட்லரும். மார்கஸ்ஸும் மனிதனைக் கண்டது மாறுபட்ட விதத்திலாகும். குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றார் டார்வின். மனிதன் ஒரு மிருகமே அவனுக்கு வழிகாட்டுவது உணர்ச்சிகளே என்றார் மெக்டுகல்ஸ். மனிதன் ஒரு சிற்றின்ப ஜீவி. அவனிடம் அமிழ்ந்து கிடக்கும் நாம் வேட்கையை திருப்திபடுத்தவே அவன் நிர்பந்திக்கப்படுகிறான் என்றார் ஃபிராய்ட் மனிதன் ஒரு சிற்றின்ப ஜீவ அல்ல. அவனை இயக்குவது அவனடைய அகம்பாவம் தான் என்றார் அட்லர், மனிதர் மிருகங்களைப் போல் தனது பொருளாதார தேவைகளுக்கும் உடற்பசி தேவைகளுக்கும் அடிமை. அவன் ஒரு பொருளாதார மிருகம் என்றார் மார்க்ஸ்.

தம்முள், தம்முன் எந்தவொரு பிரச்சனை பெரிய ரூபம் எடுத்து நிற்கிறதோ அதையே முழு மனித சமூகத்தின் பிரச்சனை எனக்  கருதினார்கள். மனிதரில் மார்க்ஸ் பார்த்தது உடற்பசி, ஃபிராய்ட் பார்த்தது காமப்பசி, உணர்ச்சிக்கு அடிமையானவன் என்றார் மெக்டுகல்ஸ் அட்லரோ அவன் அகங்கரி என்றார். அந்தன் ஆனையைப் பார்த்த கதை போல இவர்கள் பார்வைகளும் அமைந்ததே தவிர மனிதனை முழுமையாக அறிந்திருக்கவில்லை.

அறிவு ஜீவிகளும், அறிவியல் ஆய்வாளர்களும் மனிதனைக் குறித்து சிந்திப்பதானது தங்கள் முன் நடந்த அனுபவப்பட்ட காரண காரியங்களை கொண்டேயாகும். அறிவியல் தாகம் கொண்டவர்கள் மனிதனைக் குறித்து புதிது புதிதாக பல விஷயங்களை கண்டறியும் போது இன்னும் அறியாதது எவ்வளவோ இருக்க தங்களுடைய அறிவில்லாமையின் ஆழத்தை விளங்கிக் கொள்கின்றார்கள்.

மனிதனைக் குறித்து மனிதன் முழுமையாக அறியாத போது அவன் எப்படி ஜீவிக்க வேண்டும் என்று அவன் மனம் அறிந்திருப்பது சாத்தியமில்லை.

தெய்வீக வெளிப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு மரணத்திற்குப்பின் என்ன என்பது பற்றியே சந்தேகம். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையானது ஜனனத்தோடு தொடங்கி மரணத்தோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. இவ்வெண்ணம் வாழ்க்கையின் லட்சியத்தையும், வாழ்க்கைப் பாதையையும் பாதிக்கின்றது. தெய்வீக வெளிப்பாடுகள் அல்லாது மனிதன் தன்னைக் குறித்துக் தன்னைப் படைத்த இறைவனைக் குறித்துக் அறிவதற்குரிய மார்க்கங்களே இல்லை.

தன்னைப் பற்றியும் தம் சுற்றுச்சூழலைப் பற்றியும் உள்ளே விடும் எண்ணங்கள் தானே மனசாட்சியாக உங்கள் முன் உருவெடுத்து நிற்கின்றது. ஆக அறைகுறை அறிவினைக் கொண்டது தானே மனசாட்சி இத்தகைய மனத்தின் சாட்சி, இத்தகைய மனத்தின் சாட்சி எப்படியொரு தெளிவான வழிகாட்டுதலாக இருக்கமுடியும். சமூகத்திற்கு தேவையான சட்டதிட்டங்களை நிர்ணயிப்பது அநேகமாக ஆணாகவே இருக்கின்றனர். அதனால் அச்சட்டத்திட்டங்களில் ஆண்களின் எண்ணங்களாகவே இருக்கும். கருப்பன் உருவாக்கும் சட்டம் அவனுக்கு அனுகூலமாகியும் வெள்ளையன் உருவாக்கும் சட்டம் அவனுக்கு அனுகூலமாகவுமே இருக்கும். ஆசைகளுக்கும், மோகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தே அவரவர்கள் சட்டங்கள் இயற்றவார்கள். தொழிலாளியும், அவ்வாறே முதலாளியும் அவ்வாறே. ஒவ்வொரு நாடும். சமூகம். தங்களுடைய நாட்டிற்கும், சமூகத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

நிக்கோலோ மேக்ஸ்வல்லி கூறினார் : நன்மையென்பது ஒரு பெயர் மட்டுமே. உண்மையில் தீமையேயுள்ளது. அதனால் தன் நாட்டை  வல்லரசாக்க விரும்பும் எந்த அரசும் தீமை செய்வது எப்படி என்று தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இதுதானே தேசிய வாதத்தின் அடிப்படை.

எந்தவொரு விஷயத்திலாவது தன் சுயநலத்தைப் பேண வேண்டும் என்னும் எண்ணமில்லாதவர்கள் ஒருவரையும் காணமுடியாது. அத்தகையவர்களால் உருவாக்கப்படும் சட்டதிடடங்களிலும் அந்நிலை பிரதிபலிக்கவே செய்யும்.

மனித சமூகம் முழுவதையும் சமமாக காண படைத்த இறைவனால் மட்டுமே முடியும். எல்லா நாட்டவர்களையும் சமமாக நடத்தி நீதியை நிலைநாட்ட அவனால் மட்டுமே முடியும். அத்தகைய தெய்வீக வெளிப்பாடுகள் மூலம் அருளிய சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமல் கேவலம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்வதால் அது எப்படி சமாதான வாழ்வாக இருக்க முடியும்.

இறைவன் தன் தெய்வீக வெளிப்பாடுகளான இறைவேதம், இறைதூதர் மூலம் மனித சமூகத்திற்கு அருளிய வாழ்ககைத் திட்டமானது தனி மனிதனடையவும். குடும்பத்துடையவும். சமூகத்துடையவும். நாட்டினுடையவும், உலகத்தினுடையவும் சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டது. அதனால் அதற்குக் கட்டுப்பாடு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் மார்க்கம் உரத்து கூறுகிறது. அதுவே நிடித்த நிரந்தர சமாதானத்திற்கு வழிகாட்டவும். லட்சியத்தை சென்றடையும் மார்க்கமாகவும் இருக்கும்.



ஆக்கம் 
அபூ ஆஸியா
-