Friday, July 1, 2011

இரத்தக் கோப்பை



 இந்த உலகில் ஒரு பயங்கரமான அரக்கன் இருந்தான்
என்று அந்த நீதிக் கதை ஆரம்பித்தது.
நீதிக் கதைகள் எப்போதும் தொடர்கதை என்பதால்
அந்த அரக்கன் இன்னும் இருக்கிறான்
என்று அதை நிகழ் கதை ஆக்கலாம்.


 அவனிடம் ஏராளமான செல்வம் உண்டு.
அதைவிட ஏராளமாக ஆயுதங்கள் உண்டு.
பூவுலகம் முழுக்க அவனுக்குக் கப்பம் கட்ட
குறுநில மன்னர்கள் மண்டியிட்டார்கள்.



எல்லாவற்றையும்விட  எதை  எப்படி  எவ்விதம்
கச்சிதமாகச் செய்து முடிக்க வேண்டும் என்று வழி நடத்த
சதியாலோசனைக் கூட்டமொன்று அவனிடம் இருந்தது.



அவர்கள் அந்த அரக்கனுக்குப் பல முகமூடிகளை
முதலில் செய்து கொடுத்தார்கள்.

ஒரு முகமூடியின் பெயர் சுதந்திரம்.

இன்னொன்றின் பெயர் தீவிரவாதத்துக்கு எதிரான போர்.

மற்றொன்றின் பெயர் போர்க் குற்றம்.

ஜனநாயகம்  மனித உரிமை சர்வாதிகாரத்திலிருந்து விடுதலை
என்கிற பெயர்களில் அமைந்திருந்த அந்தப் பல்வேறு
முகமூடிகளை அந்த அரக்கன் அடிக்கடி அணிந்து கொண்டான்.
ஆனால் கையில் கொலை வெறி ஆயுதங்களை
வைத்துக் கொள்ள மட்டும் எப்போதும் மறக்க மாட்டான்.

அவனுடைய காலை உணவுக்கு இனப் படுகொலை
நடுவில் இளைப்பாறக் கொஞ்சம் அணு உலைகள்
மதியத்துக்கு அரபியில் பெருகும் எண்ணெய்
மாலையில் புத்துணர்வு பெற விஷ வாயுக்கள்
இரவு உணவுக்கு குண்டு வீச்சில் இறந்த அப்பாவி மக்களின் உயிர்கள்.

'வெள்ளையாக இருந்தாலும் கறுப்பாக இருந்தாலும்
உன் பணி இது மட்டுமல்ல. நீ உலகம் முழுவதும் மேலும்
பல குட்டி அரக்கர்களை உருவாக்க வேண்டும்' என்றார்கள்
மதியாலோசனையோடு சதியாலோசனை செய்யும் மந்திரிமார்கள்.



'ஏன்? என்றான்  தீவிரவாதத்தை வென்ற விடிவெள்ளி' என்கிற
புதிய முகமூடியை அணிந்திருந்த அந்தக் கறுப்பு அரக்கன்.
'அப்போதுதான் உனக்கு தினசரி உணவுகள் தடையின்றி
கிடைக்கும். உலகின் பாதுகாவலன் என்கிற இன்னொரு
புதிய முகமூடியையும் உலகம் வழங்கும்' என்று பதில் வந்தது.

'அப்படியென்றால் அடுத்த குட்டி அரக்கன் யார்?' என்றான்
உலக அரக்கன் இறுமாப்புடன். மந்திரிமார்கள் தங்களுக்குள்
விவாதித்துக் கொண்டு விடை அளித்தார்கள்.

'அவன் ஈரானில் இருக்கலாம் சீனாவில் இருக்கலாம்
கியூபாவில் இருக்கலாம் வெனிசுவேலாவில் இருக்கலாம்
அல்லது வட கொரியாவிலோ ஆபிரிக்காவிலோ இருக்கலாம்....'

' சரி இப்போதைக்கு லிபியாவில் எனக்குக் கப்பம் கட்டிய
அந்தச் சிறிய அரக்கனைக் குடும்பத்தோடு வேட்டையாடலாம்...
அந்தக் கொலை சாசனத்தில் இப்போது
கையொப்பம் இடுகிறேன்... அதற்கு அடுத்த வேட்டைக்கு விரைவில்
ஏற்பாடு செய்யுங்கள்' என்றான் உலக மகா அரக்கன்
ஈராக்கிலிருந்து வரவழைக்கப்பட்ட இரத்தக் கோப்பையை உறிஞ்சியபடி!



-அகிலன் சித்தார்த்
 நன்றி: ஆனந்த விகடன் (மே-18)

No comments:

Post a Comment