Monday, July 25, 2011

வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்ட பொழுது.......

" போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்."

" இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்."

" அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. "" [ 22:39-41 ]


 அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகவும் இன்னும் சுயநலன்கள், தேசியவாதம், பிரதேசவாதம், இனவாதம் ஆகிய அனைத்து சுயநலத் தாக்கத்தின் கீழ் எழுந்துள்ள பிரிவினைவாத இன உணர்வுகள் அனைத்தையும் விட்டு நீங்கி, அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தனது அற்பணங்களை தனித்துவமான முறையில் வழங்கக் கூடிய இறைநம்பிக்கையாளர்களைக் கொண்ட சமுதாயத்திற்கு, இறைவன் நிச்சயமாக தனது வெற்றியை அருளுகின்றான் என்று தனது திருமறையிலேயே வாக்குறுதியை வழங்கியிருக்கின்றான்.

மேலும் வெற்றி என்பது உடனே அருளப்படுவதன்று. அது பல சோதனைகளுக்கு இடையே இறுதியாக மிக மெதுவாக வரக் கூடியதொன்று. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன,

அந்த வெற்றியை அனுபவிப்பதற்குண்டான பக்குவத்தை இந்த சமுதாயம் பெற்றிருக்கவில்லை அல்லது

தனது முழு வளங்களையும் பயன்படுத்தி அந்த வெற்றியை அடைந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கவில்லை அல்லது

இறைவனது திருப்பொருத்தம் அன்றி வேறு சில காரணங்களுக்காக இறைநம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் கலந்திருக்கும் சில சுயநல சக்திகள் செயல்பட்டு, அந்த வெற்றிக்கு எதிராக தங்களது முயற்சியைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் வெற்றி தாமதிப்பதற்கான காரணங்களாகும்.

இங்கு நாம் குறிப்பிட்டிருக்கின்ற காரணங்கள் யாவும் முஸ்லிம் சமுதாயத்துடன் தொடர்புள்ள காரணங்களாகவே இருந்து கொண்டிருக்கின்றன. இதுவன்றி இன்னும் பல காரணங்கள் இருக்கலாம் என்பதை நாம் சில காரணங்களின் மூலம் கோடிட்டுக் காட்ட விரும்புகின்றோம்.

 ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், வெற்றி தாமதமாவதன் காரணம் என்னவெனில், எந்த ஷைத்தானிய சக்திகளுக்கு எதிராக இறைநம்பிக்கையாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்களோ, அந்த ஷைத்தானியத்தின் எச்சங்கள் இன்னும் இறைநம்பிக்கையாளர்களுடன் கலந்திருக்கின்றன என்பதனாலாகும். அந்த ஷைத்தானிய எச்சங்கள் இனங் காணப்பட்டு, அவற்றை முற்றிலும் கலைந்து, அவர்களிடையே முற்றிலும் அதன் எச்சங்கள் கூட இல்லாத நிலையில் தான், இறுதியாக வெற்றி அருளப்படும்.

இன்னும் சொல்லப்போனால், எந்த தீய சக்திகளுக்கு எதிராக இறைநம்பிக்கையாளர்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்களோ, அந்த தீய சக்திகள் இன்னும் மறைவாகவே இருந்து கொண்டு தங்களது வேலைகளை நடத்திக் கொண்டிருக்கும் போது, அத்தகைய தீய சக்திகளை மக்கள் மத்தியில் முழுவதும் இனங்காட்டப்பட வேண்டிய அவசியமேற்படும் பொழுதும், வெற்றி கிடைப்பது என்பது தாமதமாகும். அந்த தீய சக்திகள் இறைநம்பிக்கையாளர்களுடன் கலந்திருக்கும் பொழுது வெற்றி கிடைத்து விடுமானால், அந்த தீய சக்திகள் உள்ளிருந்து கொண்டே தங்களது தீய செயல்களுக்கான ஆதரவுத் தளங்களைத் தேடிக் கொண்டு, அவ்வாறான ஆதரவுத் தளங்கள் கிடைத்து விட்டால் அதனை வளர்ப்பதற்குண்டான வேலைகளிலும் அவை இறங்கி விடுமாதலால், அந்த தீய சக்திகள் முழுவதும் இறைநம்பிக்கையளர்களுக்கு இனங்காட்டப்பட்டு, அவை வெற்றி கொள்ளப்படும் போது அந்த தீய சக்திகளுக்கு ஏற்படும் பாதிப்பை இட்டு இறைநம்பிக்கையாளர்கள் வருத்தப்படாமலிருப்பதற்காகவும், முற்றிலும் அவை அழித்தொழிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்படும் வரை வெற்றி தாமதிக்கப்படுகின்றது.

 இன்னும், வெற்றி கிடைப்பது தாமதமாவதற்கான காரணம் என்னவெனில், வெற்றியைப் பெற்றுக் கொண்ட சமுதாயத்தின் சூழலில் எழப் போகின்ற உண்மை, நீதி, நேர்மை ஆகியவற்றைக் கொண்ட சட்டங்களை வரவேற்பதற்குண்டான பொதுவான சூழ்நிலைகளுக்கு அவர்கள் தயாராகவில்லை என்பதும் காரணமாகும். இத்தகைய சூழ்நிலையில் வெற்றி அருளப்பட்டு விடுமானால், இத்தகைய நீதி, நேர்மை, உண்மை ஆகியவற்றைக் கொண்ட சட்டங்களை எதிர்க்கக் கூடிய சூழ்நிலைத் தாக்கங்கள் அவர்கள் மத்தியில் எழ ஆரம்பித்து விடும். எனவே, முழுச் சமுதாயமும் சத்தியத்தை ஏற்றுப் பின்பற்றி, அந்த சத்தியம் வழங்கவிருக்கின்ற சட்ட திட்டங்களையும் ஒப்புக் கொண்டு வாழத் தலைப்பட்டு விடுமானால் வெற்றிக்கான அறிவிப்பு அங்கு முழங்கத் துவங்கி விடும்.

மேலே நாம் சொன்ன அனைத்துக் காரணங்களாலும், இன்னும் இறைவனிடம் இருக்கின்ற மறைவான ஞானத்தினாலும் வெற்றி வருவது என்பது தாமதமாகலாம். இதன் அர்த்தம் என்னவெனில், இறைநம்பிக்கையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் இன்னும் அதிகமான தியாகங்களுக்கும், அதிகமான சோதனைகளுக்கும் உட்பட வேண்டியதிருக்கின்றது. சந்தேமில்லாமல், இத்தகைய தியாகங்களையும், சோதனைகளையும் தாங்கக் கூடிய சமுதாயத்தை இறுதிவரைக்கும் அல்லாஹ் பாதுகாத்து, இறுதியில் வெற்றியையும் அவர்களுக்கு வழங்குவான்.

எப்பொழுது வெற்றி வழங்கப்பட்டு விடுகின்றதோ, அப்பொழுதிலிருந்து இந்த சமுதாயத்தின் மீது புதிய பொறுப்புகளும், கடமைகளும் விதியாக்கப்பட்டு விடுகின்றன. அதைத் தான் மேலே உள்ள இறைவசனத்தில் இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான்

 அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள். தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது. (22:40-41)

இறைவன் தனது வாக்குறுதியில் மாறு செய்யாதவன். தனக்கு யார் உதவி செய்கின்றானோ அவனுக்கு உதவி செய்வதென்பது இறைவன் மீது கடமையாகி விடுகின்றது. இறைவனுக்கு உதவி செய்வதன் மூலம் இறைவனது உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதியைப் பெற்றுக் கொண்டு, அதன் மூலம் அதாவது நிச்சயிக்கப்பட்ட வெற்றியை அடைந்து கொள்ளக் கூடிய அந்த மக்கள் யார்? என்ற கேள்வி இப்பொழுது நமக்கு எழுகின்றது. அந்த மக்களை அறிந்து கொள்ளக் கூடிய அடையாளங்களைப் பற்றியும் அல்லாஹ் இந்தத் திருவசனத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள். தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.

இன்னும் அவர்கள் அவனை மட்டுமே வணங்குவார்கள், மனமுவந்து தம்மை அவனுக்காகவே மட்டும் அற்பணிப்பார்கள் இன்னும் அல்லாஹ்வுடனான தங்களது தொடர்புகளை வலுப்படுத்தியும் கொள்வார்கள் என்றும், அத்தகையோர்களின் தன்மைகள் பற்றியும் சில வசனங்களில் குறிப்பிட்டுக் கூறுவதை நாம் பார்க்க முடிகின்றது.

  அவர்களது சொத்துக்கள் மீது விதிக்கப்படுகின்ற, ஸகாத் என்ற ஏழை வரியையும் அவர்கள் செலுத்தி வருவார்கள். இதன் மூலம், அவர்கள் இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்களை இன்னும் சுய அக்கறையுடன் பின்பற்றுவதோடு, ஏழைகளுக்கும் இன்னும் தேவையுள்ளவர்களுக்கும் அவர்களது இயலாத நிலையை எண்ணி, அவர்களுக்கு உதவி வாழக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இத்தகையவர்கள் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எத்தகைய சமுதாயத்தை உருவாக்கிக் காட்டி இருந்தார்களோ, அத்தகைய சமுதாயம் பெற்றிருந்த குணாதிசயங்களையும் பெற்ற நடைமுறை உதாரணங்களாவார்கள்.

தங்களுக்கிடையே நிலவுகின்ற அன்பு, இரக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் ஓருடலைப் போன்றவர்கள். அந்த உடலில் இருக்கின்ற ஏதாவதொரு பாகத்தில் ஏற்படக் கூடிய நோவினையானது, முழு உடலையும் வருத்தத்தில் ஆழ்த்தி விடுகின்றது. அதன் மூலம் தூக்கமின்மை,வலி, காய்ச்சல் போன்ற நோவினைகளை அது உணர ஆரம்பிக்கின்றது.

அவர்களிடம் காணப்படுகின்ற அடுத்த அம்சம் என்னவென்றால், நன்மையானவற்றை தானும் செய்து கொண்டு, அதனைப் பிறருக்கும் ஏவுவார்கள். அதன் மூலம் அனைத்து நல்ல அம்சங்களையும் மக்கள் ஏற்றுப் பின்பற்றி வாழும்படிச் செய்து, அத்தகைய நல்ல அம்சங்களின்பால் மக்களை உற்சாகப்படுத்துவார்கள்.

இதன் மறுபகுதியாக தீமையானவற்றை தங்களுக்கும் தடுத்துக்கொண்டு, அதனைத் தவிர்ந்து வாழும்படி பிறருக்கும் ஏவுவார்கள். அதன் மூலம் தீமையையும், குழப்பங்களையும் தவிர்ப்பார்கள்.

இத்தகைய வழி முறைகள் தான், ஒரு மிகச் சிறந்த முஸ்லிம் சமுதாயத்திடம் இருக்க வேண்டிய முக்கியப் பண்புகளாகும். இத்தகைய சமுதாயம் எத்தகைய தீமையையும் எதிர்க்கும் வல்லமையும், இன்னும் நன்மையானவற்றை அதற்கு எத்தகைய விலை கொடுத்தாவது தனது சக்திக்கு உட்பட்ட வழிகளில் அவற்றை நிறைவேற்றுகின்ற மன உறுதியும், தயக்கமும் இல்லாததொரு சமுதாயமாகவும் அது இருக்கும்.

மேலும் இத்தகைய சமுதாயம் தான், இறைவன் எத்தகைய வாழ்க்கை நெறியை இந்த முழு மனித சமுதாயமும் பின்பற்றி வாழ வேண்டும் எனப் பணித்துள்ளானோ அத்தகைய வழிமுறையைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு, அவனது மார்க்கத்தை மேலோங்கச் செய்வதன் மூலம், இறைவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கக் கூடிய சமுதாயமாகும். அத்தகையவர்கள் இறைவனை மட்டுமே சார்ந்திருப்பார்கள், இன்னும் ஏனைய சக்திகளை அவர்கள் புறக்கணித்தே வாழ்வார்கள். இத்தகைய மக்களுக்குத் தான் இறைவன் வெற்றியை வாக்களிக்கின்றான். இறைவனது வாக்குறுதி உண்மையானது. அது என்றுமே தோல்வியடையாதது.

இறைவன் கூறுகின்ற சில வரையறைகளைப் பூரணப்படுத்தும் போதும், இன்னும் அதற்காக கடமைப்பாடுகளை நிறைவேற்றும் போதும் தான் இறைவன் அந்த சமுதாயத்திற்கு வெற்றியை அளிக்கின்றான். அனைத்து விசயங்களுக்கான தீர்வுகளும் அவனிடமே இருக்கின்றன, அவனே அனைத்தையும் தீர்மானிக்கின்றான், அதன் மூலம் எது எது எந்த நேரத்தில் நடக்க வேண்டுமென்பதையும் அவனே தீர்மானிக்கின்றான்.

 அடிப்படை உறுதியாக இல்லாத போதும் அல்லது வெற்றியை அடைந்து கொள்வதற்கான கடமைப்பாடுகளை நிறைவேற்றாமல் புறக்கணித்து விடும் பொழுதும், அதன் மூலம் தோல்வியை வெற்றியாக மாற்றுகின்றான், வெற்றியைத் தோல்வியாக மாற்றுகின்றான். அவனே அனைத்து விசயங்களையும் தீர்மானங்களையும், இறுதி முடிவையும் எடுக்கக் கூடியவனாக இருக்கின்றான்.

எந்த சமுதாயம் அவன் தீட்டி வைத்திருக்கின்ற வரையறைகளைப் பேணி நடக்கின்றதோ அந்த சமுதாயத்திற்கு இறைவன் வெற்றியை அளிக்கின்றான். அவனது சட்ட திட்டங்கள் சத்தியத்தை நிலைநிறுத்துகின்றது, நீதியையும் இன்னும் சுதந்திரத்தையும் பூரணப்படுத்தி அதன் மூலம், மனித சமுதாய வாழ்வில் நன்மைகளைக் கொண்டு நிரப்புகின்றது.

எந்த மனிதனுடைய சுய ஆதிக்கத்தையும் அந்த சமுதாயத்தில் நிலைநிறுத்த முடியாது, எந்த தனி மனிதனது சுய விருப்பு வெறுபகளுக்கு அந்த சமுதாயத்தில் இடமளிக்க முடியாது. கிடைக்கக் கூடிய அந்த வெற்றியானது, சரியான வரையறைகளைக் கொண்டதாகவும், கடமைகளையும், அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சரியான விலையையும் கொண்டதாகும். யாருடைய சுயநலன்களுக்காகவும் இந்த வெற்றி அருளப்பட மாட்டாது. அந்த வெற்றியை அடைந்து கொண்ட பின்பு, அதற்கான கடமைகளையும், நோக்கங்களையும் பூரணப்படுத்தாத அல்லது நிறைவேற்றாத பொழுது, அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் முடியாது.
மேலே உள்ள கட்டுரை செய்யித் குதுப் அவர்களால் எழுதப்பட்டது.
SOURCE FROM ONE REALISM

No comments:

Post a Comment