உலகப் பொருளாதார வீழ்ச்சியின் அடிவேரை அலசி, வீழ்ச்சியிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளை இக்கட்டுரையில் விவரிக்கிறார் பொருளியலாளர் சகோ. ஸலாஹுத்தீன்.
கழுத்தறுப்புப் போட்டிகள்!
"ஒய்யாரக் கொண்டையாம்! ஒன்பது முழம் பூவாம்! உள்ளே நெளியுதாம் ஈறும் பேனும்!" என்று தமிழில் ஒரு சொல்வடை உண்டு. அதைப் போன்றதுதான் "முதலாளித்துவம் என்பது தனிமனித உரிமைகளை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரு சமுதாய அமைப்பு" என முதலாளித்துவ ஆதரவாளர்கள் பெருமையாகப் பேசுவதும்.
வெளிப்பார்வைக்கு ஆடம்பரமும் பகட்டுமாக தெரிந்தாலும் முதலாளித்துவத்தின் உண்மை முகம் கோரமானது. இலாபம் பெறுவது மட்டுமே குறிக்கோள் என உச்ச பட்ச சுயநலத்தையே முதலாளித்துவம் ஊக்குவிக்கிறது.
இந்த முரண்பாட்டை விளக்குவதற்காக பொதுவுடைமைக்காரர்கள் ஒரு கதை சொல்வார்கள். இங்கிலாந்து குளிர் பிரதேசம் என்பதால் உணவுத் தேவைக்குச் சமமாக வீட்டில் கணப்பு மூட்டிக் குளிர் காய்வதும் அங்கு ஒரு அத்தியாவசியத் தேவை. ஒரு ஏழைத் தொழிலாளியின் வீட்டில் ஒருநாள் கணப்பு மூட்டப்படவில்லை.
"அம்மா, ஏன் கணப்பு மூட்டவில்லை?"
"நிலக்கரி வாங்க காசு இல்லை"
"ஏன் காசில்லை?"
"அப்பாவை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்கள். அதனால் காசு இல்லை"
"அப்பாவை ஏன் வேலையிலிருந்து நிறுத்தி விட்டார்கள்?"
"அப்பா வேலை செய்த நிலக்கரிச் சுரங்கத்தில் ஏராளமான நிலக்கரியைத் தோண்டி எடுத்து விட்டார்களாம்; விற்கவில்லை; அதனால் வேலையில்லை என்று நிறுத்தி விட்டார்களாம்"
முரண்பாடு புரிகிறதா? நிலக்கரி அதிகமாக உற்பத்திச் செய்யப்பட்டதால் ஒரு தொழிலாளியின் வீட்டில் நிலக்கரி இல்லாமல் போய் விட்டது.
இது வெறும் கதைதானே என்று நாம் நினைக்கலாம். ஆனால் இன்றைய முதலாளித்துவத்தில் இதைப்போன்ற உண்மை நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அமெரிக்காவின் ஆரஞ்சுப் பழ உற்பத்தியாளர்கள், விளைச்சல் அதிகமாகி, ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளும் குறைவாக இருந்தால் மீதமான பழங்களை தீயிலிட்டு எரித்து விடுவார்களாம். ஏனெனில் அதிக அளவிலான பழங்கள் சந்தைக்குச் சென்றால் அதன் விலை சரிந்து விடுமாம்.
உலகப் பொருளாதார மந்தநிலை, உணவுப் பொருள்களின் விலை உயர்வு போன்ற பல காரணங்களினால் உலக அளவில் அன்றாட உணவிற்கு வழியில்லாமல் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தொட்டிருக்கிறது என ஐ.நா. அமைப்பின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அதே உலகில்தான் "தனது லாபம் குறைந்து விடக்கூடாது" என்பதற்காக உணவுப் பொருள்களைத் தீயிட்டு எரிக்கும் அராஜகங்களும் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. இந்தப் "பெருமை"யெல்லாம் முதலாளித்துவத்தையே சாரும்.
தனது லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்ன தகிடுதத்தம் வேண்டுமானாலும் செய்ய முதலாளித்துவவாதிகள் தயார். சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் விமான நிறுவனம் மீது அப்போதுதான் புதிதாக துவங்கி நடத்தப் பட்டுக் கொண்டிருந்த வெர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனம் ஒரு வழக்குத் தொடர்ந்தது.
இங்கிலாந்தின் ஒரே விமான நிறுவனம் என்று சொல்லத்தக்க அளவில் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த நேரம் அது. முழு ஐரோப்பாவிலும், ஏன் உலக அளவிலேயே மிகப் பிரபலமான விமான நிறுவனமாக அது இருந்தது. அந்தச் சூழலில்தான் ரிச்சர்ட் பிரான்ஸன் என்பவர் வெர்ஜின் அட்லாண்டிக் எனும் விமான நிறுவனத்தைத் துவக்கினார். பிரிட்டிஷ் ஏர்வேய்ஸைவிட மலிவுக் கட்டணத்தில், தரமான மற்றும் சில புதுமையான சேவைகளை அவர் அறிமுகப் படுத்தினார். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. விமானப் பயணம் என்றாலே விமான நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம் என்று இருந்த சூழலை மாற்றி பயணிகள் எதிர்பார்ப்பது என்ன என்பதை அறிந்து அதற்கேற்ற சேவைகளை வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் வழங்கத் தொடங்கியது.
மார்க்கெட்டிங் துறையில் சந்தையின் போக்கை "விற்பவர் சந்தை" "வாங்குபவர் சந்தை" என இருவகையாக குறிப்பிடுவார்கள். உதாரணமாக, மக்களுக்கு அவசியத்தேவையான ஒரு பொருளை ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே தயாரிக்கிறது என்றால் அதற்கு அந்நிறுவனம் என்ன விலை வைத்தாலும் மக்கள் வாங்கித்தான் ஆக வேண்டும். இது விற்பவருக்குச் சாதகமான "விற்பவர் சந்தை" (Sellers" Market). மாறாக, அதே பொருளை 10 நிறுவனங்கள் தயாரித்தால், வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக போட்டி போட்டுக்கொண்டு விலையைக் குறைப்பார்கள். தரத்தை அதிகரிப்பார்கள். இது வாங்குபவருக்குச் சாதகமான "வாங்குபவர் சந்தை" (Buyers" Market). அன்று வரை "விற்பவர் சந்தை"யாக இருந்த விமானப் பயணச் சேவைகளை "வாங்குபவர் சந்தை"யாக மாற்றியது வெர்ஜின் அட்லாண்டிக்.
இதுதான் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸுக்குப் பிடிக்கவில்லை. அதுவும், இங்கிலாந்திலேயே தனக்குப் போட்டியாக இந்த நிறுவனம் தோன்றி வளர்ந்து வருவது அவர்களுக்குப் பெரும் எரிச்சலைத் தந்தது. போட்டி என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்? அதை முளையிலேயே கிள்ளியெறிய அவர்கள் விரும்பினார்கள். முன்பொருமுறை ஃப்ரெடி லேகர் என்பவர் தொடங்கி நடத்திய மலிவுக் கட்டண விமானச்சேவை நிறுவனம் இப்படித்தான் பெரிய விமான நிறுவனங்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மூடப்பட்டது. ஆனால் வெர்ஜின் அட்லாண்டிக்கை ஒழித்துக் கட்ட பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மேற்கொண்ட சில மறைமுக நடவடிக்கைகள், "போட்டியென்றால் இப்படியெல்லாமா செய்வார்கள்?" என்று உலகையே அதிசயப் படுத்தியது. லாபத்தைத் தக்க வைத்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனத் தூண்டும் முதலாளித்துவத்தின் அசிங்கமான முகமும் கொஞ்சம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெர்ஜின் அட்லாண்டிக் பயணங்களில் பாதுகாப்பு உத்தரவாதமில்லை என்ற வதந்தி முதலில் பரப்பப் பட்டது. அதில் பயணம் செய்ய பதிவு செய்திருந்தவர்களைச் சில மர்ம நபர்கள் தொலைபேசியில் அழைத்து "உங்கள் ஃபிளைட் கேன்சலாகி விட்டது. வேண்டுமானால் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸுக்கு மாறிக் கொள்ளுங்கள்" என்றார்கள். அதையும் மீறி விமான நிலையத்திற்கு வந்தவர்களைச் சிலர் திசை திருப்பி விட்டார்கள். இவை ஒரு புறம் இருக்க, வெர்ஜின் அட்லாண்டிக் கேட்ட பல பயண வழித்தடங்கள் அவர்களுக்குக் கிடைப்பதிலும் யாரோ முட்டுக்கட்டை போட்டிருந்தார்கள். கடன் கொடுத்துக் கொண்டிருந்த வங்கிகள் முரண்டு பிடிக்க ஆரம்பித்தன.
இவற்றையெல்லாம் செய்வது பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ்தான் என ரிச்சர்ட் பிரான்ஸன் நம்பினார். ஆனால் அவரிடம் அதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இந்த ஒவ்வொரு சம்பவத்தையும் ஊடகங்களில் பெரிதாக புகார் வாசித்து பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அதில் அவரது நிறுவனத்திற்கு இலவச விளம்பரம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் அவரின் புகார்களை அலட்சியப்படுத்திவந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், "ரிச்சர்ட் பிரான்ஸன் ஒரு விளம்பரப் பிரியர், அவர் ஒரு பொய்யர்" என்றெல்லாம் பதிலளிக்க ஆரம்பித்தது. ரிச்சர்ட் பிரான்ஸன் இதற்காகவே காத்திருந்தது போல, தன்னை பொய்யர் என்று சொன்னதற்காக பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்தார்.
ரிச்சர்ட் பிரான்ஸன் ஒரு பொய்யர் என்று சொன்னதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஷ் ஏர்வேய்ஸுக்கு ஏற்பட்டது. வழக்கு, விசாரணை என்று தொடர்ந்தால் அது தனக்குப் பாதகமாகவே முடியும் என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், சண்டைக்காரர் காலிலேயே விழுந்துவிட தீர்மானித்தார்கள். இரு தரப்பு வக்கீல்களும் கலந்து பேசி, கோர்ட்டுக்கு வெளியிலேயே இதைத் தீர்த்துக் கொள்வது என்று முடிவு செய்யப் பட்டது. ரிச்சர்ட் பிரான்ஸனுக்கு 500,000 பவுண்டுகளும் அவரது வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திற்கு 110,000 பவுண்டுகளும் நஷ்ட ஈடாக கொடுக்க பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் ஒப்புக் கொண்டது.
முதலாளித்துவவாதிகள் தங்களது லாபத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் போட்டியாளர்களை நசுக்குவதற்காகவும் என்ன விதமான தில்லுமுல்லுகளுக்கும் தயார் என்பதற்கு இது ஒரு சிறு சாம்பிள் மட்டுமே. உலகின் ஆகப்பெரிய பணக்காரரும், "வெற்றிகரமான முதலாளித்துவவாதி" (The Most Successful Capitalist) என்று புகழப்படுபவருமான பில் கேட்ஸின் மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் போட்டியாளர்களை நசுக்குவதில் உலகப் பிரசித்திப் பெற்றது. இதன் தொடர்பில் பல நூற்றுக் கணக்கான வழக்குகளையும் அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.
SOURCE - SATHYAMARGAM
No comments:
Post a Comment