Thursday, August 11, 2011

ஒரே இலட்சியக் குழுவாகத் திகழுங்கள்.


இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணித்து விடாதீர்கள். நீங்களெல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள். (ஆலு இம்ரான் : 102).

முஸ்லிம் உம்மத்தின் இரு பெரும் அடிப்படைகளை இந்த வசனம் மிகத் தெளிவாக எடுத்தியம்புகிறது. அவையாவன : தனி மனிதர்கள் தக்வா சார்ந்த வாழ்க்கை வாழ்வதும், முஸ்லிம் சமூகம் தமக்கிடையே பரஸ்பரம் ஐக்கியம், சகோதரத்துவம் பேணுதலுமாகும். இவ்விரண்டு அடிப்படைகளின் மீதே முஸ்லிம் உம்மத்தின் முதல் வகுப்பினரை அல்குர்ஆன் தோற்றுவித்தது. இது பல நூற்றாண்டுகள் வரை நீண்டு நீடித்து தனக்கும் முழு மனித சமுதாயத்திற்கும் பயன்தரக் கூடியதாக இருந்தது.

வசனத்தின் முதல் பகுதி, அல்லாஹுத்தஆலாவை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள் என்கிறது. ஒரு முஸ்லிம் இந்த பூமியில் கொள்கைவாதியாக, ஓர் இலட்சியவாதியாக வாழ வேண்டியவன். அவனது கொள்கைக்கும், இலட்சியத்துக்கும் அரணமைத்து, தூண்டுதல் வழங்கி, பின்னூட்டல் கொடுத்து, சுயவிசாரணை நடத்தி, முன்னேற்றமடையச் செய்வது தக்வாவே ஆகும்.

தக்வா என்பது குறிப்பிட்ட சில வெறும் செயற்பாடுகளின் அல்லது மனக்கட்டுப்பாடுகளின் வெளிப்பாடல்ல. மாறாக, ஒரு மனிதனின் இரகசிய - பரகசியத்தில், இன்ப துன்பத்தில், ஆரொக்கிய நோயில், அன்றாட வாழ்வில், அரசியலில் என எல்லா விவகாரங்களிலும் வியாபித்து நிற்கும் ஓர் உணர்ச்சிபூர்வமான உணர்வேயாகும். அல்லாஹ்வின் தண்டனை குறித்து அஞ்சுவதும், அவனது அருட்பேற்றை இழந்து விடுவேனோ என்ற அச்சமும் ஒன்றறக் கலந்த நிலையிலேயே தக்வா ஆகும்.

நீ எவ்விடத்தில் (எப்படி) இருந்த போதும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறையச்சம் அதிகரிக்க அதிகரிக்க உள்ளங்கள் விழித்துக் கொள்ளும். அதற்கு எவ்வித வரையறையும் இருக்காது. உள்ளம் ஆனந்தம் அடையும் போது அதன் உச்ச நிலையை நோக்கி அது உயர்ந்து கொண்டே இருக்கும். இந்த நிலையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு வர்ணித்தார்கள்.

அல்லாஹ் ஒருவனிடத்தில் மாறுசெய்யப்படாது, வழிபாட்டுக்குரியவனாக இருப்பான். அல்லாஹ் மறக்கடிக்கப்படாது, எப்போதும் நினைவுகூரப்படுவான். அல்லாஹ் மறுத்துரைக்கப்படாது, நன்றி பாராட்டப்பட்டுக் கொண்டிருப்பான்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களது இவ்வறிவிப்பு இப்னு கதீரில் இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வைப் பயந்து வாழும் முத்தகீன்களை அறிஞர் ஷபீஃ வலி (ரஹ்) அவர்கள் மூவகைப்படுத்தியுள்ளார்கள்.



     1. இறைநிராகரிப்பிலிருந்தும் இணை வைப்பிலிருந்தும் இணைவைப்பிலிருந்தும் தம்மை முழுமையாக விடுவித்துக் கொண்டோர். ஆனால், தமது பலவீனங்கள் மற்றும் சமூகச் சூழல்களினால் எல்லா விதமான பாவங்களிலிலும் ஈடுபடுவார்கள். இவர்கள் மிகக் குறைந்த தரத்தைச் சார்ந்தோர்.


     2. பாவங்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட போதும் கூட அல்லாஹ்வும் அவனது தூதரும் மனங்கொள்ளாததைச் செய்பவர்.
 

      3.உத்தம நிலையை அடைந்தோர் : அல்லாஹ் அல்லாதவர்களினதும், அல்லாதவைகளினதும் நிலையை விட்டு தமது உள்ளத்தைப் பாதுகாத்து அல்லாஹ்வின் நினைவாலும் அவனது திருப்தியை சதா வேண்டியவர்களாகவும் இருப்போர்.

இம் மூன்று நிலைகளையும் அல்குர்ஆன் முத்தகீன்கள் என்ற வகுப்புக்குள்ளேயே நோக்கியுள்ளது என தனது மஆரிபுல் குர்ஆனில் அறிஞர் ஷபீஃ வலி (ரஹ்) அவர்கள் விளக்கப்படுத்திகிறார்கள்.

வசனத்தின் இரண்டாவது பகுதி, நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம் என்கிறது. எப்போது மரணம் வரும் என்பது மனிதனுக்கே தெரியாத ஒன்று. எனவே ஒரு முஸ்லிம் எப்போதும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொள்வான். தமது ரப்பை சந்திப்பதற்கான ஆசையையும், ஆர்வத்தையும் தனக்குள் முடியுமான அளவு வரவழைத்துக் கொள்வான். யார் தனது இரட்சகனை முஸ்லிமாகச் சந்திக்க விரும்புகிறானோ அவன் தனது அனைத்துப் பொழுதிலும் முஸ்லிமாகவே இருக்க வேண்டும்.

தக்வாவைப் பற்றிக் கூறியதன் பின்னர் கருத்தாழமிக்க விசயத்தை, மிகச் சூசகமாக, அனுதாபத் தோரணையுடன் இறைவன் கூறுகிறான். அது தான் அவனுக்கு முழமையாக சரணடைவதும், அவனுக்கு வழிப்படுவதும், அவனது திட்டத்தைப் பின்பற்றுவதும், அவனது வேதத்தை தீர்ப்புச் செய்யும் ஒன்றாக ஏற்றுக் கொள்வதுமாகும்.

முஸ்லிமாக மரணமடைய விரும்பும் ஒருவர் தூய்மையாக இஸ்லாத்தைப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும். கலப்படங்களுடன் அவன் வாழ முடியாது. சிறுபான்மை, நிர்ப்பந்தம், சமூக அழுத்தம் என்றெல்லாம் பலியாகி விடுவதில்லை. மார்க்கத்தின் ஓரத்தில் நின்று பின்பற்றப்படுவதில்லை இஸ்லாம். அது ஒரு வாழும் வாழ்க்கை நெறியாக மிளிர வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை முழுமையாக இஸ்லாத்தில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது :

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள்.

இதற்கேற்ப ஒருவர் தனது வாழ்வின் அனைத்துப் பொழுதையும் ஆக்கிக் கொள்ளும் போதே அவரது மரணம் இஸ்லாமாக அமையும்.

வசனத்தின் இறுதிப் பகுதி, நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பிடித்துக் கொள்ளுங்கள். பிரிந்து விடாதீர்கள் என்கிறது. இந்த இரண்டு அடிப்படைகளும் பின்பற்றப்படும் போதே முஸ்லிம் சமூகத்தின் இருப்பை நிலைபெறச்செய்து அதன் பங்களிப்பை நிறைவேற்ற வழி செய்யும். இவையிரண்டையும் இழந்து காணப்படும் சமூகம் ஜாஹிலிய்யக் கூட்டமைப்பாகவே கருதப்படும். ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வுடைய வழிகாட்டலின் போக்கில் ஒன்றுபடுவதில்லை. மாறாக பல்வேறு ஜாஹிலிய்ய வாழ்க்கைப் போக்குகளை நடைமுறைப்படுத்துகின்றனர். அவர்களுக்குப் பல்வேறு அடிப்படைகள் மீது உருவாக்கப்பட்ட பல்வேறு அடிப்படைகள் மீது உருவாக்கப்பட்ட பல்வேறு தலைமைகள் காணப்படும். சமயத் தலைமைகள், அரசியல் தலைமைகள், கல்வி கலாச்சாரத் தலைமைகள் எனப் பல்வேறு தலைமைகiளின் செல்வாக்கிற்கும் அதிகாரத்திற்கும் உட்பட்டிருப்பார்கள்.

முஸ்லிம் சமூகம் என்பது அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பற்றிப் பிடித்து ஐக்கிய சமூகமாக இருக்கும். அதற்கு ஐக்கியம் இஸ்லாத்திலிருந்தும் தக்வாவிலிருந்தும் ஊற்றெடுத்திருக்கும். அதன் அடிப்படைகள் அல்லாஹ்வின் கயிறாகிய மார்க்கமும், திட்டமும் ஆகும். வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் ஒன்று சேர முற்படுவதும் குறகிய கால இலட்சியங்களை அடைந்து கொள்வதற்காக ஓரணி சேர்ந்து முஸ்லிம் சமூகத்தின் ஐக்கியம் அல்ல. அல்லாஹ்வின் கயிற்றையே பலமாகப் பிடித்திருப்பார்கள். ஆத்மீக, ஒழுக்க விசயங்களில் இஸ்லாத்தைப் பின்பற்றி அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார விசயங்களில் மதச்சார்பற்ற தன்மையைப் பின்பற்றும் ஒரு சமூகம் எப்போதும்ஒன்றுபட மாட்டாது. அவ்வப்போது தற்காலிக ஒற்றுமைகள் தோன்றினாலும், நான் என்ற போக்கு, தலைமைத்துவ ஆசை, அதிகார வெறி, குடும்ப - கோத்திர வெறி, பிரதேசவாதம் போன்றவை இதனை தவிடுபொடியாக்கி விடும். இதனை வரலாறு பலமுறை அனுபவித்து விட்டது.

அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்து ஐக்கியமும், சகோதரத்துவமுமே வேண்டப்பட்டதாகும். அதனைக் கொண்டே அல்லாஹ் முதல் ஜமாஅத்தாகிய ஸஹாபிகள் (நபித் தோழர்கள்) சமூகத்திற்கு அருள் புரிந்தான். எப்போதெல்லாம் அடியார்கள் இதனை விரும்புகிறார்களோ அப்போதெல்லாம் இந்த அருள் கிடைக்கும்.


அல்குர்ஆன் விளக்கம் வழங்குபவர் : மௌலவி : ஆ.ர்.ர்.ஆ.முனீர் (முஹம்மதீ)

No comments:

Post a Comment