Sunday, August 7, 2011

குர்ஆன் ஒன்று திரட்டப்படுதல்


நபி(ஸல்) அவர்கள் தனக்கு அருளப்பட்ட குர்ஆனை முழுமையாக மனதில் சுமந்தவர்களாக இருந்தார்கள்.
...ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல்(அலை) நபியவர்களை சந்திப்பார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எடுத்தோதிக் காட்டுவார்கள். (புகாரி 4997)
சஹாபாக்களில் பலரும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். அவர்களில் பிரபலமான ஏழு பேரின் பெயர்கள் கீழ் வரும் மூன்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
1) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத், ஸாலிம், முஆத், உபய் பின் கஃப் ஆகிய நால்வரிடமிருந்து குர்ஆனை எடுத்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 4999)
2) நபி(ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தவர்கள் யார்? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், உபய் பின் கஃப், முஆத் பின் ஜபல், ஜைத் பின் ஸாபித், அபூ ஜைத் ஆகிய நால்வர் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: கத்தாதா(ரஹ்) புகாரி 5003)
3) அபூதர்தா, முஆத் பின் ஜபல், ஜைத் பின் ஸாபித், அபூ ஜைத் ஆகிய நால்வரைத் தவிர வேறு யாரும் நபியவர்கள் மரணிக்கும் போது குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருக்கவில்லை என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸாபித். புகாரி 5004)
மேற்குறிப்பிட்ட மூன்றாவது ஹதீஸ் நான்கு சஹாபாக்கள் மட்டுமே குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்ததாக கூறுகிறது - இதற்கு அறிஞர்கள்,  விளக்கம் கூறும்போது, அனஸ்(ரலி) அவர்களுக்கு தெரிய வந்தது இந்த நால்வர் மட்டும் தான் அல்லது தாங்கள் முழுமையாக மனனம் செய்ததை நபியிடம் முழுமையாக ஓதிக்காண்பித்தவர்கள் இந்நால்வர் மட்டுமாக இருக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.
ஏனெனில் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்த சஹாபாக்களின் எண்ணிக்கை அதிகமாகும். அவர்களின் பெயர்கள்:
நான்கு கலீஃபாக்கள், தல்ஹா, ஸஃத், இப்னு மஸ்ஊத், ஹீதைஃபா, ஸாலிம், அபூஹுரைரா, அப்துல்லாஹ் பின் அஸ்ஸாஇப், அப்துல்லாஹ் பின் அப்பாஸ், அப்துல்லாஹ் பின் அம்ர், அப்துல்லாஹ் பின் உமர், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஆயிஷா, ஹஃப்ஸா, உம்மு ஸலமா, உபாதா பின் அஸ்ஸாமித், முஆத், முஜம்மி பின் ஜாரியா, ஃபுளாலா பின் உபைத், மஸ்லமா பின் முக்லித்.
இவர்களில் சிலர் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின்பே மனனம் செய்தலை நிறைவு செய்தார்கள். இந்த விபரங்கள், அபூ உபைத் அல் காஸிம் அவர்களின் "அல்-கிராஆத்" என்ற நூலை மேற்கோள்காட்டி, ஸுயூத்தி அவர்களின் "அல்இத்கான்" பாகம் 1, பக்கம் 72ல் இடம் பெற்றுள்ளது.

ஒரே ஏட்டில் எழுதப்படுதல்

நபி(ஸல்) அவர்கள் குர்ஆனை எழுதுவதற்கு அலி, முஆவியா, உபய் பின் கஃப், ஜைத் பின் ஸாபித் போன்ற சஹாபாக்களை நியமித்திருந்தார்கள். வஹி இறங்கியவுடன் எழுதுபவர்களை அழைத்து அதனை எழுதும் படி கட்டளையிடுவார்கள்.
அதே போல் சஹாபாக்களில் பலரும் தாங்கள் ஓதுவதற்காக தாங்களாக முன் வந்து குர்ஆனை எழுதிவைத்திருந்தார்கள்.
இப்படி குர்ஆன் முழுவதும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் ஒரே ஏட்டில் முழுமையாக எழுதப்படவில்லை. அதாவது சிலரிடம் சில சூராக்களும் வேறு சிலரிடம் வேறு சில சூராக்களும் என்கிற நிலையே இருந்தது. இவ்வாறு இருக்கும் நிலையிலேயே நபியவர்கள் மரணமடைந்தார்கள்.
நபியின் மரணத்திற்குப் பின்பு, அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி பனிரெண்டாம் வருடம் நடைபெற்ற யமாமா யுத்தத்திற்கு பின்பு குர்ஆன் ஒரே ஏட்டில் எழுதப்பட்டது. அதுபற்றிய விபரம்:
ஜைத் பின் ஜாபித்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். யமாமா யுத்தத்திற்குப் பின்பு அபூபக்ர்(ரலி) என்னை கூப்பிட்டு ஆள் அனுப்பினார்கள். நான் அவர்களிடம் சென்ற போது அவர்களோடு உமர்(ரலி) அவர்களும் இருந்தார்கள். அப்போது அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள். யமாமா யுத்தத்தில் குர்ஆனை மனனம் செய்த காரீகள் அதிகமாக கொல்லப்பட்டு விட்டனர். வேறு போர்களில் இன்னும் அதிக காரீகள் கொல்லப்படலாம் என்று நான் அஞ்சுகிறேன். அப்படி நடந்தால் குர்ஆனின் பல பகுதிகள் இல்லாமல் போய்விடும். ஆகவே குர்ஆன் முழுமையாக(ஒரே ஏட்டில்)ஒன்று திரட்டப்படுவதற்கு நீங்கள் உத்தரவிட வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன் என உமர் என்னிடம் வந்து கூறினார். அதற்கு நான் உமரிடம், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நாம் எப்படிச் செய்வதென்றேன், அதற்கு உமர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி என்னிடம் இது பற்றி திரும்பத்திரும்ப பேசியபின் அல்லாஹ் என் மனதில் அது பற்றிய தெளிவை ஏற்படுத்தினான். உமரின் கருத்தை நான் சரியென கருதுகிறேன். [இவ்வாறு அபூபக்ர்(ரலி) அவர்களுக்கும் உமர்(ரலி) அவர்களுக்கும் நடந்த உரையாடலை ஸஜத்(ரலி) அவர்களிடம் அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்].
ஜைத்(ரலி) தொடர்ந்து கூறுகிறார்கள்: அபூபக்ர் தொடர்ந்து என்னைப்பார்த்து, நீங்கள் விவரமான இளைஞர் நபி(ஸல்) அவர்களுக்கு வஹியை எழுதுபவராக இருந்திருக்கிறீர்கள் உங்களை நாங்கள் சந்தேகிக்கவில்லை. குர்ஆனை பலரிடமிருந்து பெற்று ஒன்று சேருங்கள் என்றார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக மலைகளில் ஒரு மலையை நகர்த்தும் படி அவர்கள் என்னைப் பணித்திருந்தால் குர்ஆனை ஒன்று சேர்க்கும் படி இட்ட கட்டளையை விட கனமானதாக இருந்திருக்காது. அப்போது நான் (அபூபக்ர், உமர் இருவரையும் நோக்கி) அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யலாம்? என்றேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக இது நல்ல செயல்தான் என்று கூறி அபூபக்ர் என்னிடம் திரும்பத்திரும்ப பேசினார்கள்- அதனால் அபூபக்ர் உமர் ஆகியோரின் மனதில் எதுபற்றிய தெளிவை அல்லாஹ் ஏற்படுத்தினானோ அதுபற்றிய தெளிவை என் மனதிலும் ஏற்படுத்தினான்.
அதன் பின் குர்ஆனை பலரிடமிருந்து பெற்று மரப்பட்டைகளிலிருந்தும், கற்தகடுகளிலிருந்தும் மனிதர்களின் இதயங்களிலிருந்தும் ஒன்று சேர்த்தேன். சூரத்துத் தவ்பாவின் கடைசி இரண்டு வசனங்களை அபூ குஜைமா அல் அன்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன் மற்றவர்களிடம் கிடைக்கவில்லை, (ஒன்று சேர்க்கப்பட்ட) அந்த முழு குர்ஆன் அபூபக்ர் அவர்களிடம் அவர்கள் மரணிக்கும் வரையிலும் இருந்தது. பின்பு உமரிடமும் அதன்பின் அவர்களின் மகள் ஹஃப்ஸாவிடமும் இருந்தது. (அறிவிப்பவர்: ஜைத் பின் ஸாபித்(ரலி) நூல்: புகாரி 4986)
குர்ஆனை ஒன்று திரட்டுவதில் ஜைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் மிக கண்ணும் கருத்துமாக இருந்து நுட்பமான வழி முறையை கையாண்டிருக்கிறார்கள் என்பது மேற்கூறிய செய்திகளால் இருந்து தெரியவருகிறது. அதாவது மனப்பாடத்திலிருந்து மட்டும் அவர்கள் கேட்டு எழுதவில்லை. எல்லா வசனங்களையும் எழுத்து வடிவிலும் பெற்ற பின்பே எழுதியிருக்கிறார்கள். அதில் வெறும் இரண்டு வசனங்கள் மாத்திரம் பலரிடம் மனனத்தில் இருந்தாலும் கூட அபூ குஜைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே எழுத்து வடிவில் இருந்தது என்பதை குறிப்பிட்டுச் சொல்வதை கவனிக்கவும்.

குர்ஆன் பிரதியெடுக்கப்படுதல்    
 
இஸ்லாம் பல நாடுகளிலும் பரவியபோது குர்ஆனின் ஏழு ஹர்ஃப் முறைப்படி (ஏழு ஹர்ஃப் பற்றி பின்பு காண்போம்) ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறையில் குர்ஆனை மக்கள் படித்தார்கள். அதேபோல் குர்ஆனின் வார்த்தைகளை தங்கள் பகுதி உச்சரிப்பின்படி படித்தனர். இதனால் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் கூடினால் குர்ஆனை ஓதுவதில் வேறுபாட்டை கண்டனர். ஒவ்வொரு பகுதியினரும் தாங்கள் ஓதுவதே சரியான முறை என்றும் மற்றவர்களுடைய கிராஅத் தவறு என்றும் கூறினர். இதனால் பல இடங்களில் குர்ஆனை ஓதுவதில் சர்ச்கைகள் எழுந்தது. ஆகவே ஒரே வித கிராஅத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றினைப்பது அவசியமானது. உஸ்மான்(ரலி) அவர்கள் தங்கள் ஆட்சி காலத்தில் அதனைச் செய்தார்கள். அதுபற்றியவிவரம்:
அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அர்மீனிய்யா மற்றும் அதர்பய்ஜான் போர் நாட்களில் ஷாம் வாசிகளுக்கும் இராக் வாசிகளுக்கும் குர்ஆனை ஓதுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைக் கண்டு கவலை கொண்ட ஹுதைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்கள் கலீஃபா உஸ்மான்(ரலி) அவர்களிடம் வந்து, யூத கிருத்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டது போல் இந்த உம்மத்தும் வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன் பிடித்து நிறுத்துங்கள் என்று கூறினார்கள். உடனே ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த மூல குர்ஆனைப் பெற்று, ஜைத் பின் ஸாபித், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், ஸஈத் பின் அல்ஆஸ், அப்துர்ரஹ்மான் பின் அல்ஹாரிஸ் ஆகிய நால்வர் குழுவிடம் அதனைப் பிரதி எடுக்கும் படி உஸ்மான்(ரலி) அவர்கள் பணித்தார்கள். அப்போது உஸ்மான்(ரலி) இந்நால்வரில் குறைஷிகளாகிய பிந்திய மூவரையும் பார்த்து. நீங்கள் குர்ஆனின் ஏதேனும் வார்த்தையை எந்த விதத்தில் எழுதுவது என்று(மதீனாவாசியாகிய) ஜைத் பின் ஸாபித்தோடு முரண்பட்டீர்களென்றால் அந்தவார்த்தையை குறைஷிகளின் பேச்சு வழக்குப்படியே எழுதுங்கள். ஏனெனில் குர்ஆன் குறைஷிகளின் பேச்சுவழக்கில் தான் இறங்கியது என்றார்கள்.
அதன் படி அவர்கள் நால்வரும் குர்ஆனை பல பிரதிகளாக எழுதி முடித்தபோது மூல குர்ஆனை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் உஸ்மான்(ரலி) திருப்பிக் கொடுத்தார்கள். பிரதி எடுக்கப்பட்டதை எல்லாப்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். மேலும் அதற்கு முன்பிருந்த எல்லா குர்ஆன் பிரதிகளையும் எரித்துவிடும்படி கட்டளையிட்டார்கள். நூல்: புகாரி 4987
இந்தச் செய்தி மூலம், குர்ஆனை ஏழு ஹர்ஃப் முறைப்படி ஓதுவது அனுமதியிருந்தாலும் அதனால் கருத்து வேறுபாடு ஏற்படுவதை தவிர்க்கவும், மேலும் அரபுமக்கள் ஒவ்வொரு பகுதியினரும் குர்ஆனின் வார்த்தைகளை தங்களின் பகுதி வழக்ப்படி உச்சரிக்கும் நிலையை மாற்றவும் உஸ்மான்(ரலி) அவர்கள் ஏற்பாடு செய்ததை அறிகிறோம்.
அதாவது குர்ஆனை ஒரே முறையில் எல்லோரும் ஓதுதல். பல பகுதிகளின் பேச்சு வழக்கம் (எழுத்து உச்சரிப்பு) மாறு பட்டாலும் குர்ஆனின் வார்த்தைகள் மக்கா குறைஷிகளின் வழக்கப்படி மொழியப்படுதல். உஸ்மான்(ரலி) அவர்களின் உத்தரவினால் எழுதப்பட்ட குர்ஆனின் பிரதிகளின் எண்ணிக்கை ஏழு என்றும் நான்கு என்றும் ஐந்து என்றும் மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
1) அபூ ஹாத்தம் அஸ்ஸஜிஸ்தானி(ரஹ்) அவர்கள் கூறினார்கள். எழுதப்பட்ட குர்ஆன் பிரதிகள் ஏழு. அவை மக்கா, ஷாம், யமன், பஹ்ரைன், பஸரா, கூஃபா ஆகிய ஆறு பகுதிகளுக்கும் ஒவ்வொன்று அனுப்பப்பட்டு மதீனாவில் ஒன்று வைக்கப்பட்டது. (ஆதாரம்: இப்னு அபீதாவூத் அவர்களின் கிதாபுல் மஸாஹிஃப் என்ற நூல்).
2) பெரும்பான்மை உலமாக்கள், உஸ்மான்(ரலி) அவர்களால் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகளின் எண்ணிக்கை நான்கு என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள். கூஃபா, பஸரா, ஷாம் ஆகியவற்றுக்கு ஒவ்வொன்று அனுப்பிவிட்டு, ஒன்றை தன்னிடம் (மதீனாவில்) வைத்துக் கொண்டார்கள். (ஆதாரம்: அபூ அம்ர் அத்தானீ அவர்களின் அல் முக்னிஉ என்ற நூல்).
3) ஐந்து பிரதிகள் எடுக்கப்பட்டது என்ற கருத்தை இமாம் ஸுயூத்தி அவர்கள் தனது அல் இத்கான் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

குர்ஆன் பற்றிய சில விவரங்கள்

குர்ஆனின் சூராக்கள் அவற்றின் அளவை கவனித்து நான்கு வகை:
1) (அத்திவால்) நீளமானவை: அவை ஏழு. 1)பகரா 2)ஆல இம்ரான் 3)அந்நிஸா 4)அல்மாயிதா 5)அல் அன்ஆம் 6)அல் அஃராஃப் 7)அல் அன்ஃபால், அத்தவ்பா (இரண்டும் இணைந்து)
2) (அல்மிஊன்) நூறுகள்: அவை நூறு வசனங்களை விட சற்று அதிக வசனங்களைக் கொண்ட சூராக்கள். அல்லது நூறு வசனங்களுக்கு சற்று குறைவான வசனங்களை கொண்டவை.
3) (அல் மஸானீ) மீண்டும் மீண்டும் ஓதப்படுபவை: (முதல் இரண்டு வகைகளை காட்டிலும் அதிகமாக திரும்பத்திரும்ப இவை ஓதப்படுவதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவை இரண்டாவது வகையை விட குறைந்த எண்ணிக்கையிலான வசனங்களை கொண்டவை.
4) (அல் முஃபஸ்ஸல்) பிரிக்கப்பட்டது: (இந்த வகை சூராக்கள் அதிகமான ''பிஸ்மில்லா(ஹ்)"க்களால் பிரிக்கப்பட்டிருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளன). இவ்வகை, மூன்று பிரிவுகளைக் கொண்டது.
ஒன்று, (திவாலுல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் நீளமானவை - அவை சூரத்துல் ஹுஜ்ராத்திலிருந்து சூரத்துல் புரூஜ் வரையிலாகும்.
இரண்டு, (அவ்ஸாத்துல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் நடுத்தரமானவை - இவை சூரத்துல் புரூஜ் முதல் சூரத்துல் ளுஹா வரையிலாகும்.
மூன்று, (கிஸாருல் முஃபஸ்ஸல்) முஃபஸ்ஸலில் சுறுக்கமானவை - இவை சூரத்துல் ளுஹா முதல் குர்ஆனின் இறுதி (அந்நாஸ்) வரையிலாகும்.
குர்ஆனின் சூராக்கள்(அத்தியாயங்கள்)எண்ணிக்கை 114 (நூற்றி பதினான்கு).
குர்ஆனின் ஆயத்துக்கள் (வசனங்கள்) மொத்தம் 6200 (ஆராயிரத்து இருநூறு) ஆகும். (இதை விட கூடுதல் எண்ணிக்கையும் கூறப்படுகிறது அதற்கான காரணம், சில நிறுத்தங்களை ஆயத்து முடிவதாக சிலர் கருதுவதால்)
குர்ஆனின் வார்த்தைகள் மொத்தம்: 77439 ஆகும். (சிலர் 77437 என்றும் வேறுசிலர் 77277 என்றும் கூறுகின்றனர்).
குர்ஆனின் எழுத்துக்கள் மொத்தம்: 323015 ஆகும். (சிலர் 321000 என்றும் வேறுசிலர் 340740  என்றும் கூறுகின்றனர்).
குர்ஆனை ஓதுவதற்கு எளிதாக கீழ்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
ஜுஸ்வுக்கள் (பாகங்கள்) - 30 (முப்பது)
ஹிஸ்புக்கள் (குழுக்கள்) - 60 (அறுபது) (அதாவது இரண்டு ஹிஸ்புக்கள் சேர்ந்து ஒரு ஜீஸ்வு ஆகும்)
ருப்உக்கள் (கால் பகுதிகள்) - 240 இருநூற்றி நாற்பது (அதாவது நான்கு ருப்உக்கள் சேர்ந்து ஒரு ஹிஸ்பு ஆகும்)



  

   
    அப்துர்ரஹ்மான் மன்பயீ, Makkah

No comments:

Post a Comment