Friday, August 5, 2011

கண்ணியம் முழுவதும் அல்லாஹ்வுக்கேஎவரேனும் கண்ணியத்தை விரும்பினால் - கண்ணியம் முழுவதும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவனை நோக்கி உயர்ந்து செல்வது தூய்மையான சொல் மட்டுமே! இன்னும் நற்செயல் அதனை மேலே உயர்த்துகிறது. மேலும் எவர்கள் தீய சூழ்ச்சிகள் செய்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனை இருக்கிறது. மேலும் அவர்களுடைய சூழ்ச்சிகள் தானாகவே அழியக் கூடியவையாக இருக்கின்றன.
சூரா அல் பாத்திர் - ன் பத்தாவது வசனமாகிய இது மக்காவில் அருளப்பட்டதாகும். இவ்வசனத்தில் மூன்று அடிப்படை உண்மைகள் கூறப்பட்டுள்ளன.

மனிதர்கள் இயல்பிலேயே கண்ணியத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு விரும்புவார்கள். அவர்கள் அதனைப் பட்டம் பதவிகளினூடாகவும், சொத்து செல்வங்களை அதிகப்படுத்திக் கொள்வதினூடாகவும் சமூக அங்கீகாரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்வதினூடாகவும் அடைந்து கொள்ள முயல்கின்றனர். ஆனால் இவையெல்லாம் போலியானவை. தற்காலிகமானவை. அடிப்படை அற்றவை என்பதை உணரத் தவறி விடுகின்றனர். உண்மையில் கண்ணியம் என்பது முழு இறைமைத்துவத்திற்கும் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியதாகும்.

ரசூல் (ஸல்) அவர்கள் மக்காவில் தனது பிரச்சாரப் பணியில் ஈடுபட்ட போது, குறைஷித் தலைவர்கள் பயந்ததெல்லாம் முஹம்மத் (ஸல்) அவர்களின் செய்திக்கு அங்கீகாரம் கிடைத்துவிடுமென்றால், அரபுலகில் தமது தலைமைத்துவ அந்தஸ்தும், கௌரவமும் இல்லாமல் போய் விடும் என்பதனாலேயாகும். எனவே தான் ரசூலுல்லாஹ்வின் இஸ்லாமிய இயக்கத்தையும், அதன் தலைவரையும் ஆரம்பப் பொழுதிலேயே தீர்த்துக் கட்ட முயற்சித்தனர். அவர்களால் யதார்த்த பூர்வமான கண்ணியத்தை உணர்ந்து கொள்ள முடியாமல் போய் விட்டது.

உண்மையான கண்ணியத்தை இறை அடிமைத்துவத்தின்மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். அது உலக வாழ்விலிருந்து மறுமை வரை நீண்டு நீடித்ததாகும்.  இவ்வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள் :

யார் உலகிலும், மறுமையிலும் கண்ணியத்தை விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடப்பதை கடமையாக்கிக் கொள்ளட்டும்.

ஆகவே, கண்ணியத்தை அல்லாஹ்விடமிருந்து மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும். கண்ணியத்தை கௌரவத்தை ஒருபோதும் சடத்துவ அளவுகோல்களை அடியாகக் கொண்டு பெற முயலக் கூடாது. அவை எவ்வளவு தான் கவர்ச்சி மிக்கவைகளாகவும், சமூக அங்கீகாரத்துக்குரியவைகளாக இருந்தாலும் சரியே. அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

இறைநம்பிக்கையாளர்களை விட்டு விட்டு நிராகரிப்போரைத் தம் நண்பர்களாக்கிக் கொண்டு அவர்களின் கண்ணியத்தை தேடிச் செல்கிறார்களா? உண்மையில் எல்லாவிதமான கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். (அந்நிஸா : 129)

தனது சுயவிருப்பு, வெறுப்புக்களின் அடிப்படையில் மேலாதிக்கம் செலுத்துதல், தனக்காக எல்லா விதமான சக்திகளையும் திரட்டிக் கொள்ளுதல், தனக்குப் புகழாரம் தேடி மேன்மையடைய விரும்புதல் இவை யாவும் அல்குர்ஆனின் நோக்கில் இஸ்ஸத் என்பதற்கு மாறான உலுவ் என்ற இழிநிலையாகும். இதனை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது :

அந்த மறுமை வீட்டையோ எவர்கள் உலகில் பெருமையடிக்கவும், அராஜகம் விளைவிக்கவும் விரும்ப மாட்டார்களோ அவர்களுக்கே உரித்தானதாக்கினோம். (அல்கஸஸ் : 83)
 எனவே, அல்லாஹ்வுக்கு மட்டுமான கண்ணியத்தை அவன் காட்டிய வழியிலேயே பெற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுக் கொண்டதனால் கண்ணியத்துக்குரியவர்களாக ஆகுகின்றனர். அதுபோலவே முஃமின்களும் அல்லாஹ்வின் தூதர் கொண்டு வந்ததை ஏற்று நடைமுறைப்படுத்துவதனால் கண்ணியத்திற்குரியவர்களாக ஆகுகின்றனர்.

கண்ணியம் அல்லாஹ்வுக்கம் அவனது தூதருக்கும் முஃமின்களுக்கும் உரியதாகும். (அல்முனாஃபிகூன் : 18)

வசனத்தின் அடுத்த பகுதி கண்ணியத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டலையும் நிபந்தனைகளையும் தருகிறது.

அவனை நோக்கி உயர்ந்து செல்வது தூய்மையான சொல் மட்டுமே!

தூய்மையான சொல் என்பது உள உணர்வுகளுடன் உணர்ச்சி பூர்வமாக வெளியிடப்படும் உண்மையின் மீது அமைந்த வார்த்தைகள், கருத்துக்கள், சிந்தனைகள் யாவுமாகும். மனோஇச்சைகளுடன் சடவாத அழுத்தங்களுடன் பகுத்தறிவு வாதங்களுடன் முன் வைக்கப்படும் கருத்துக்கள், சிந்தனைகள், கோட்பாடுகள் யாவும் அசுத்தமானவைகளாகும். அவற்றிற்கு எந்தப் பெறுமானமும் அல்லாஹ்விடமோ அவனது தூதரிமோ முஃமின்களிடமோ கிடையாது.

வெறும் தூய சொற்கள் மட்டும் மேல் நோக்கிச் செல்வதில்லை. அவ்வார்த்தைகளுக்கு ஏற்புடையதாக செயல்பாடுகள் அமையும் போதே அவை மேல்நோக்கிச் செல்லும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் இவை யாவும் அல்லாஹ்வைச் சூழ்ந்து தேனீக்கள் ரீங்காரமிடுவது போன்று இவ்வார்த்தைகளை மொழிந்தவனை நினைவு கூர்ந்து கொண்டிருக்கும்.

உண்மையில் இவ்வார்த்தைகளை மொழிகின்றவன் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வையும் அவனது கட்டளைகளையும் மட்டுமே புகழுக்குரியவைகளாக மதிக்கின்றவனாகவும், அல்லாஹ் அல்லாத அனைத்து கடவுளரையும், எல்லாவித அடிமைத்துவங்களையும் நிராகரிக்கின்றவனாகவும் அல்லாஹ்வை மட்டுமே அனைத்தை விடவும் மிகப் பெரிய சக்தியாக, வல்லமையுள்ளவன் என்ற நிலையில் வாழ்ந்து காட்டும் போதே இப்பேற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இன்னும் நற்செயல் (அமலுஸ் ஸாலிஹாத்) என்ற பிரயோகம் இவ்வசனம் இறங்கிய கால நேர பின்னணிகளுடன் நோக்கும் போது விசாலமான புரிதல்களை உண்டுபண்ணுகிறது. அமலுஸ்ஸாலிஹ் என்பது தொழுகையும், நோன்பும், ஸகாத்தும், ஹஜ்ஜும், திலாவத்தும், திக்ருமா? இவ்வசனம் இறங்கிய போது தொழுகையோ நோன்போ, ஸகாத்தோ கடமையாக்கப்பட்டிருக்கவில்லை. மது, சூது எதுவுமே தடுக்கப்பட்டிருக்கவில்லை. அப்படியாயின் அமலுஸ் ஸாலிஹ் என்றால் என்ன? இக்கேள்விக்கு டாக்டர் இஸ்ரார் அஹ்மத் அவர்கள் பின்வருமாறு விடை காண்கிறார் :

எவற்றை சத்தியமானவை என்று ஏற்று மொழிந்து உறுதி கொண்டிருந்தார்களோ அவற்றின் பால் மக்களைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்த தஃவா? அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டுவதற்கான போராட்டம் இகாமதுத்தீன், அவற்றால் ஏற்படும்  கஷ்டங்களை, துயரங்களைப் பொறுத்துக் கொள்ளும் ஸப்ர், புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அடிமைகளை விடுவிப்பதற்கான அல்இன்பாக் பீ ஸபீலில்லாஹ் போன்றவையே. பின்னர் இவற்றுடன் தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ், உம்ரா மற்றும் ஏனைய நபிலானவைகள் இணைந்து கொண்டன. எனவே, இவற்றினூடாக இறைநெருக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதுவே உண்மையான கண்ணியமாகும்.

இப்பாதையின் இயல்பை மூன்றாவது பகுதி கூறுகிறது :

மேலும் எவர்கள் தீய சூழ்ச்சிகள் செய்கிறார்களோ, அவர்களுக்குக் கடுமையான வேதனை இருக்கிறது. அவர்களுடைய சூழ்ச்சிகள் தானாகவே அழியக் கூடியவையாக இருக்கின்றன.

மனிதர்களை அவர்கள் காலகாலமாக வணங்கிக் கொண்டிருக்கும் சிலை வணக்கத்திலிருந்து விடுவிப்பதென்பதும், அவர்களிடம்தில் வேரூன்றியிருக்கும் சிந்தனைகள், நம்பிக்கைகளிலிருந்து விடுவிப்பதென்பதும் மிகக் கஷ்டமானதாகும். இது ஒரு நீண்ட முயற்சியை வேண்டிய நிற்பதாகம். ஒவ்வொரு தனிமனிதராக இதற்கு முயற்சிக்க வேண்டும். அவர்களுக்குப் பின்னாலேயே திரிய வேண்டும். இவ்வாறாக முயன்று கொண்டிருக்கும் போதே எதிரிகள் தமது பகைமை உணர்வுகளை வெளிக்காட்ட ஆரம்பிப்பர். முதலில் தூற்ற ஆரம்பிப்பர். பின்னர் ஊரை விட்டு விரட்டுதல், கொலை செய்தல் என சூழ்ச்சி செய்வர். அவற்றை மிகப் பொறுமையுடன் முகம் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைக்கோ, உடன்படிக்கைக்கோ செல்லக் கூடாது. ஏனெனில் அவை ஒரு போதும் பயனளிக்கப் போவதில்லை.

நபியே! நீர் கூறும் : அல்லாஹ்வால் இறக்கப்பட்ட இப்புத்தகததை நான் நம்புகிறேன். மேலும் உங்களுக்கு மத்தியில் நீதத்தை நிலைநாட்டுமாறு ஏவப்பட்டுள்ளேன் என்கிறது அல்குர்ஆன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுமனே ஒர் உபதேசியல்ல. நீதியும் நேர்மையும் மிக்கதோர் அமைப்பை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்திக் காட்ட வந்தவர்களாவர்.

பிழையான, கெட்ட வார்த்தைகளை எடுத்து வருவோர் சத்தியத்தை தாழ்த்தி விட எவ்வளவு தான் முயன்ற போதிலும் அவை தோல்வியுற நேரிடும்.

ஆம்! முஸ்லிம்கள் யாதார்த்தபூர்வமான தேடல்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் போலியான, தற்காலிக கௌரவங்களுக்கு ஆளாகி அல்லாஹ்வின் கண்ணியத்தை இழக்க நேரிடும். இணைவைப்பும் ஏனைய எல்லாவித ஜாஹிலிய்யத்துகளும் அரசோச்சும் சமூகமொன்றில் வாழும் முஸ்லிம்களின் கூரிய அவதானத்திற்குட்படுத்தப்பட வேண்டிய வசனமாகும் இது. அவர்களின் உண்மையான கண்ணியத்தைக் கோடிட்டுக் காட்டி, மிகப் பெரிய அமலுஸ் ஸாலிஹாத் எது என்பதையும் அது வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.

ஆதார மூலங்கள் :

 இப்னு கஸீர்
 ரூஹுல் மஆனி
 தப்ஹீமுல் குர்ஆன்
 ததப்புருல் குர்ஆன்

 மீஸாக்


அல்குர்ஆன் விளக்கம் வழங்கியவர் : மௌலவி : ஆ.ர்.ர்.ஆ.முனீர் (முஹம்மதீ)
SOURCE FROM - ONE REALISM

No comments:

Post a Comment