2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு. |
2002 April மாதம் WSWS.COM இணையத்தளத்தில் வெளியான இக்கட்டுரை காம்ப் டேவிட் பற்றி பல விடயங்களை தெளிவுபடுத்துவதால் அதன் தமிழாக்கத்தை இங்கே பதிவிடுகிறேன்.2000 ஆண்டு இடம்பெற்ற காம்ப் டேவிட் உச்சி மாநாடு தோல்வியடைய பாலஸ்தீனியர்களே காரணம் என சியோனிச ஊடங்கங்கள் பொய்ப் பிரச்சாரம் செய்துவந்தனர்.அவை சுத்தப் பொய் என்று இந்தக் கட்டுரை தெளிவாக தெளிவுபடுத்துகிறது.இந்தக் கட்டுரையில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்.இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன்.
பாலஸ்தீனிய ஆண், பெண் மற்றும் சிறுவர்களை படுகொலை செய்ததை நியாயப்படுத்துவதற்கு இஸ்ரேலிய இராணுவப் படைகளுக்கு சியோனிச அமெரிக்க ஆதரவு செய்தி ஊடகத்தின் ஒரு அதிகப்படியான பிரசாரம் தேவைப்பட்டிருக்கிறது. பொய் சொல்வதே பொழுதுபோக்காகிவிட்டது. வாய்மை தோல்வியடைந்தது. அரசு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என்றும், போர் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்களாகவும் செய்தி ஊடகம் சித்தரித்தது.
பொய் பிரச்சாரத்திற்கு ஆதாரமான பொய் 2000 ஜூலையில் நடைபெற்ற இஸ்ரேலிய- பாலஸ்தீனிய காம்ப் டேவிட் உச்சிமாநாடு பற்றிய அதிகமாக திரிக்கப்பட்ட பிரச்சாரத்தை முன்வைத்தலில் சம்பந்தப்பட்டுள்ளது. அதாவது அப்போதைய இஸ்ரேலி பிரதமர் எகுட் பராக்கினால் அளிக்கப்பட்ட பாலஸ்தீனம் தனி நாடாக அமைவது குறித்து ஒரு தாராளமான திட்டத்தை யாசிர் அரஃபாத் உதறித் தள்ளினார் என்றும் இதனால் வன்முறை வெடித்தது, அது 18 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது என்று அமெரிக்க செய்தி ஊடகமானது முடிவின்றி திரும்ப திரும்ப கூறிவருகிறது.
உதாரணத்திற்கு Daniel Pipes மற்றும் Jonathan Schanzer எழுதிய கட்டுரையை ஏப்பிரல் 15, வால்ஸ்ட்ரீட் பத்திரிக்கை பிரசுரித்துள்ளது. இதில் இஸ்ரேல் இராணுவம் தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளிலிருந்து வாபஸ் பெறுவதற்கு எதிராக விவாதிக்கின்றன. அந்தக் கட்டுரையில் அவர்கள் வெளிப்படுத்துவதாவது :
``இஸ்ரேல் பிரதம மந்திரி எகுட் பாராக், ஜூலை 2000ல் 2000-ல், அமெரிக்க அதிபர் கிளிண்டனை யாசிர் அரஃபாத் உடன் ஒரு உச்சிமாநாடு நடத்த ஏற்பாடு செய்தார். காம்ப் டேவிட்டில் அவர் முன்னெப்போதும் கண்டிராத சலுகைகளை வழங்கினார். லெபனானிய விவகாரத்தை முடித்தது போலவே பாலஸ்தீனிய விவகாரத்தையும் முடிப்பார் என அனைவரும் நம்பினர். ஆனால் நடந்தது என்னவென்றால் ஹெஜ்பொல்லாவும் பாஸ்தீனியர்களும் பாராக் பின்வாங்கியதிலிருந்து நேர் எதிர்மாறான படிப்பினையை கற்றுக்கொண்டார்கள். 'மிகச்சிறிய அரபு நாடான' பாலஸ்தீனை சேர்ந்த ``இஸ்லாமிய படைகள் எப்படி இஸ்ரேல் நாட்டை `தோல்விக்கும் பின்வாங்குதலுக்கும்` உள்ளக்கின என்று ஹெஜ்பொல்லா ஆணவமாக கூறிற்று.
"அரஃபாத்தைப் பொறுத்தமட்டில், இஸ்ரேலின் நல்லெண்ணத்தால் ஊக்குவிக்கப்படுவதை விடுத்து, அவர் ஒரு பலமற்ற, தன்னம்பிக்கையற்ற இஸ்ரேலை பார்த்தார். ஹெஜ்பொல்லாவின் வெற்றியால் ஊக்குவிக்கப்பட்டு அரஃபாத்தும் பாலஸ்தீனிய அரசியல் அங்கமும் அவர்களின் இலக்குகளை பகுதி அளவிலேனும் கொண்டு வரக்கூடிய அரசியல் செயலாட்சித் திறத்தில் ஈடுபாட்டை இழந்துவிட்டது. இதற்கு பதிலாக அவர்கள் ஹெஜ்பொல்லா வன்முறை மாதிரியைக் கடைப்பிடித்து முழு வெற்றியடைய முயலுகின்றனர்.
"இதனால் அரஃபாத் பாராக்கின் மிகவும் தாராளமான ஒப்பந்தங்களை அடியோடு நிராகரித்ததில் ஒன்றும் ஆச்சரியப்படத் தேவையில்லை. அரஃபாத் பதிலுக்கு எந்தவிதமான மறுவேண்டுதலையும் கூட வைக்கவில்லை. இங்கு முழு வெற்றி என்பது இஸ்ரேலை அடியோடு அழிப்பதுதான், அந்நாட்டோடு ஒத்துப்போவதல்ல. காம்ப் டேவிட்டின் இப்படிப்பட்ட நல்லதொரு கோரிக்கையை அவர் ஏற்காதபொழுது இதற்கும் குறைவான கோரிக்கைகளை அரஃபாத்தால் எப்படி ஒப்புக் கொள்ளமுடியும்?"
மேற்கூறிய கூற்றுகள் அவர்களின் அறிவுக்கெட்டியவரை முழுமையாக பொய்யானவை. ஜூலை 25, 2000 அன்று காம்ப் டேவிட் பேச்சு வார்த்தைகள் மேரிலாண்டில் தோல்வியடைந்தன. இஸ்ரேலியர்களும் அமெரிக்கர்களும் உச்சிமாநாடு தோல்வியடைந்ததற்கு பாலஸ்தீனியர்களே காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர். நிறைய ஆதாரங்கள் இக்கூற்று முழுவதும் பொய் என்று இப்போது நிருபிக்கின்றன.
பொய் பிரச்சாரம் முடிச்சவிழ்கிறது
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஜெருசலத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகள் தோல்வியுற்றன என்று அறிவித்தார். ``இஸ்ரேலியர்கள் தங்கள் நிலையிலிருந்து அதிகமாக விட்டுக்கொடுத்தனர்`` என்று கூறி, பாலஸ்தீனர்கள் மீது குற்றம் சாட்டினார்.
அந்தக் காலக்கட்டத்தில் பாலஸ்தீனியர்கள் எதுவும் கூறவில்லை. ஏனென்றால் மேலும் பேச்சுவார்த்தைகளால் தீர்வு காண முடியும் என திடமாக இன்னும் நம்பினர். இதனால் இஸ்ரேலின் வலதுசாரி அணி பாராக்கை ஒரு சூதுவாதற்ற முட்டாள் என்றும், அரஃபாத்துடன் சமரசம் செய்துகொள்வது என்பது முடியாத காரியம் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை என்றும் சித்தரித்தன. மேலும் இஸ்ரேலை முழுமையாக அழித்துவிடுவார் என்றும் கூறின.
கிட்டத்தட்ட ஓராண்டிற்கு பின்னர், சியோனிஸ்டுகளது பிரச்சாரத்தை மறுத்து நிறைய கட்டுரைகள் வெளியாயின. அப்போது இராணுவப் போராட்டம் பத்து மாதமாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுபற்றி முதலில் வெளிப்படையாக பேசியவர் றொபர்ட் மால்லி (Robert Malley) என்பவர். இவர் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் மத்திய கிழக்கு நிபுணர், கிளிண்டனின் கீழ் காம்ப் டேவிட்டின் அமெரிக்க குழுவில் உறுப்பினராய் இருந்தார்.
றொபர்ட் மால்லி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஜூலை 8, 2000 அன்று ஒரு கட்டுரை எழுதினார். ``காம்ப் டேவிட் தோல்விக்கான பொய்கள்`` என்பதே அது. அதில் அவர், பாலஸ்தீனியரின் நியாயமான அபிலாசைகளில் அநேகமாக எல்லாவற்றையும் இல்லாவிட்டாலும் பெரும்பான்மையானவற்றை அவர் ஒப்புக்கொண்டதன் மூலம் பாராக் இஸ்ரேலின் பாதுகாப்பை தியாகம் செய்துவிட்டார் என்பது உட்பட பல பொய்களை மறுத்தார்.
மால்லி பின்வருமாறு எழுதினார்; ``ஆம் மேஜைமேல் வைக்கப்பட்ட திட்டங்கள் இதற்கு முன்பு எந்த இஸ்ரேலிய தலைவரும் விவாதித்ததில்லை. இந்த விவாதம் பாலஸ்தீனியர்களோடோ, வாஷிங்டனோடோ நடைபெற்றதில்லை. ஆனால் கனவில் காண்பதைப் போன்ற அளிப்பு என்று கூறப்படும் இந்த திட்டம், குறைந்த பட்சம் பாலஸ்தீனிய முன்னோக்கில் சிறந்த திட்டமல்ல.
"குடியேற்றக்காரர்களுக்கு இடம் அளிக்க, இஸ்ரேல் மேற்குக் கரையில் 9சதவீத நிலத்தை இணைத்துக் கொள்ளும். இதற்குப் பதிலாக புதிய பாலஸ்தீனிய அரசு, இஸ்ரேலின் சில பகுதிகள் மீது 1/9 நிலத்தில் இறையாண்மை செலுத்தும். மேற்குக் கரை மற்றும் காசாவை உள்ளடக்கிய 91% பாலஸ்தீனிய நாடு பல அமெரிக்க, இஸ்ரேலியர்கள் நினைத்ததைவிட அதிகம். ஆனால் அரஃபாத் எவ்வாறு தனது மக்களுக்கு சாதகமற்ற 9:1 நில பங்கீட்டை எடுத்துக்கூறுவார்?
"ஜெருசலேத்தில் கிழக்கு பாதியிலுள்ள பல அரபுகள் வாழும் பகுதிகள் மேலும் பழைய நகரின் முஸ்லிம் மற்றும் கிறிஸ்த்தவர் வாழும் பகுதிகளின் மேலும் பாலஸ்தீனியர்களுக்கு இறையாண்மை அளிக்கப்பட்டிருக்கும். பாலஸ்தீன Al Aqsa Mosque மூன்றாவது அதிக புனிதமான முஸ்லீம் மசூதி அமைந்துள்ள இடமான Haram Alsharif (Noble Sanctuary) மீது ஆதிக்கம் செலுத்தும். யூதர்களின் மலைக் கோவில் (Temple Mount) என்று அழைக்கப்படும், இந்த பகுதி முழுவதின் மேலும் இஸ்ரேல் இறையாண்மை செலுத்தும்.
அவர் பாலஸ்தீனியர்கள் அளித்த பெரிய சலுகைகளையும் கூட உறுதிப்படுத்தினார்: ``பாலஸ்தீனியர்கள் ஜூன் 4, 1967 அன்று இஸ்ரேலை ஒட்டி இருந்த எல்லைகளுக்கு உட்பட்ட பாலஸ்தீனிய அரசை உருவாக்க வேண்டுமென்று விவாதித்தனர். குடியேற்றக்காரர்களுக்காக இஸ்ரேல் மேற்குக்கரை நிலத்தை இணைத்துக்கொண்டதை ஒப்புக்கொண்டனர். கிழக்கு ஜெருசலேத்தின் யூத பகுதிகளின்மேல் இஸ்ரேலிய இறையாண்மையை ஒப்புக்கொண்டனர். 1967-ல் ஆறு நாள் யுத்தத்துக்கு முன்னால் இவை இஸ்ரேலை சேர்ந்தவை அல்ல. அகதிகள் திரும்பி வருவதற்கான உரிமையை நிலை நாட்டும்பொழுது, அதே சமயம் திரும்பி வரும் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அப்பொழுதுதான் இஸ்ரேலின் ஜனத்தொகை மற்றும் பாதுகாப்பு நிலைகள் பாதுகாக்கப்படும். ஹஃபீஸ் - அல் - ஆசாதின் சிரியா வராதது ஒருபுறம் இருக்கட்டும், இதுவரை இஸ்ரேலுடன் விவாதித்த எந்த அரபு கட்சியும் - அன்வர் - எல் - சதாத்தின் எகிப்தோ, மன்னர் ஹூசைனின் ஜோர்டானோ மேற்கூறிய சமரசங்களுக்கு நெருங்கிக் கூட வந்ததில்லை.
இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து மேலும் பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டன. இவற்றை வலது சாரி இஸ்ரேலிய செய்தி ஊடகம் "Camp David Revisionism" என்று தாக்கியது.
July 23 அன்று Camp David-TM Palestinian's தலைமை பேச்சாளர் Ahmed Qureia, மால்லியின் கருத்துக்களை ஆதரித்து ஒரு செய்தியாளர் மாநாட்டை கூட்டினார். ``Barak அனைத்தையும் கொடுத்தார்; பாலஸ்தீனியர்கள் அனைத்தையும் மறுத்தனர்`` என்ற கூற்றை ``கடந்த முப்பது ஆண்டுகளின் மிகப்பெரிய பொய்`` என கூறினார். Newyork Review of Books, நியூயோர்க டைம்ஸ் மற்றும் பாலஸ்தீனிய விவாதக்குழு மூன்றும் Camp David பேச்சுவார்த்தைகள் பற்றிய உண்மைகளை வெளியிட்டன. இவை சியோனிச பொய்ப் பிரசாரவாதிகளின் கூற்றுக்களை எதிர்த்தது.
காம்ப் டேவிட்டில் நடந்ததென்ன?
பாராக் ஜூலை1999-ல் பதவிக்கு வந்து பாலஸ்தீனியர்களுடன் முடிவான பேச்சுவார்த்தை நடத்த உறுதியளித்தார். மார்ச் 2000 கடைசியில் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் ஆரம்ப வாக்குறுதிகளை அதிகமாக பாராக் அளித்தார். மே 2000-ல் பேச்சுவார்த்தைகளின் சாராம்சம் இஸ்ரேல் செய்திதாள்களுக்கு கசிந்தது. இது லிக்குட், ஏனைய வலது சாரி கட்சிகள் மற்றும் இஸ்ரேலிய செய்தி ஊடகம் ஆகியனவற்றால் குரோதமான பிரச்சாரத்தை எதிர்கொண்டது. இதற்கு பதிலாக பாராக், தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை என்று அஞ்சிய அரஃபாத் மற்றும் பாலஸ்தீனியர்களின் ஆலோசனைகளை மீறி, அமெரிக்க ஆதரவுடன் ஒரு உச்சிமாநாட்டை நடத்துமாறு வலியுறுத்தினார். அரஃபாத்திற்கு தயக்கங்கள் இருந்த போதும், கிளிண்டன் அவரை கலந்துகொள்ளுமாறு தூண்டினார், காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
Newyork Review of Books, ஆகஸ்ட் 9, 2000 அன்று நடந்த நிகழ்ச்சிகளை தெளிவாக பிரசுரித்தது. இதன் தலைப்பு "Camp David : The Tragedy of Errors". இதனை எழுதியவர்கள் மால்லி மற்றும் இஸ்ரேலிய - பாலஸ்தீனிய உறவுகளில் முக்கிய பணியாற்றிய ஹூசைன் ஆகா (Hussein Agha) ஆகியோராவர்.
Barak பல ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டு இஸ்ரேல் கடைப்பிடிக்க வேண்டிய பல இடைக்கால நடவடிக்கைகளை செயல்படுத்தவில்லை. இவை பின்வருமாறு: "மேற்குக் கரையில் இருந்து மூன்றாவதாக பகுதி அளவிலான இராணுவ துருப்புகளை இடமாற்றம், ஜெருசலேத்தை ஒட்டிய மூன்று கிராமங்களை பாலஸ்தீனிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மாற்றம், ஒஸ்லோ ஒப்பந்தத்திற்கு முன்னால் சிறைப்படுத்தப்பட்ட பாலஸ்தீனியர்களை விடுதலைசெய்தல்" ஆகியவையாகும்.
மால்லியும் ஆகாவும் தங்களது சொந்த சூத்திரப்படுத்தல்களில் மிகவும் ராஜ தந்திரிகளாக இருந்தாலும், பாராக் பாலஸ்தீனியர்களுக்கு என்று முழுமையாக அல்லது ஒன்றுமில்லாததாக திட்டத்தை அளித்தார் என தெளிவுபடுத்துகிறார்கள். ஒன்றில் இஸ்ரேல் அர்த்தத்தில் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட சமாதானம், அல்லது மீண்டும் புதுப்பிக்கப்பட்ட வன்முறை அச்சுறுத்தல் எனும் பொருள் தொக்கி நிற்க பாராக் அச்சுறுத்தினார். பாராக் திட்டம் என்னவெனில் அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் அரஃபாத்தை தனிமைப்படுத்தி அவருக்கு அதிக அழுத்தம் கொடுப்பதாகும். மால்லி மற்றும் ஆகா குறிப்பிடும் விவரப்படி, "மேற்கத்திய அரசுகள் அரஃபாத்தை அவரது பிடிவாதத்தின் பின் விளைவுகள் குறித்து அச்சுறுத்த வேண்டியது. பேச்சுகள் தோல்வியடைந்தால், பாலஸ்தீனியர்கள் மீது குற்றம் சுமத்தப்படும், அவர்களுடனான உறவுகள் குறைக்கப்படும்." மேலும் அக்கட்டுரை கூறுவதாவது: "அதே மாதிரி, பாராக் காம்ப் டேவிட் பேச்சுவார்த்தைகளின் போது திரும்ப திரும்ப அமெரிக்காவை வேறு மாற்று வழிமுறைகளைப் பற்றி குறிப்பிடவேண்டாம் என வலியுறுத்தினார். அதேபோல் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் மீண்டும் உச்சிமாநாடு தொடராது என்றார்."
பாலஸ்தீனியர்கள் மத்தியில் கோபம் அதிகரித்துவருகின்ற நிலையின் கீழ் மற்றும் ஒஸ்லோ உடன்பாடுகள் தங்களின் சமூக நிலைகளை முன்னேற்றமடையச் செய்யவில்லை என்று ஏமாற்றமடைந்த சூழ்நிலையின் கீழ், இது அரஃபாத்தை உறுதியற்ற அரசியல் நிலைப்பாட்டில் விட்டது. இரு கட்டுரை ஆசிரியர்களும் எழுதுகிறவாறு, "காசாவிலிருந்தும் மேற்குக் கரையிலிருந்தும் பார்வையிடும்போது, ஒஸ்லோ வழிவந்தவையாக, வாக்குறுதி பஜனைப் பாடல்கள் காலங்கடத்தப்பட்டன அல்லது நிறைவேற்றப்படவில்லை. ஒஸ்லோ உடன்பாட்டிற்கு ஆறு வருடங்களுக்குப் பிறகு அதிக இஸ்ரேலிய குடியிருப்புகள், சுதந்திரமாக சென்று வர இயலாமை மற்றும் மோசமான பொருளாதார நிலைமை ஆகியவையே மிஞ்சின.
இதிலிருந்து அவர்கள் முடிவாக கூறியதாவது, ``காம்ப் டேவிட் அரஃபாத்துக்கு தனது அச்சத்தையே அதிகப்படுத்தியது. இந்த உச்சிமாநாடு, பாலஸ்தீனியர்களை துரிதமாக ஒரு உடன்பாட்டை எட்டுமாறு கட்டாயப்படுத்தியது. அவ்வாறு செய்யாவிட்டால் அரசியல் பின்விளைவுகள் தீவிரமாக இருக்கும் என்றும் அச்சுறுத்தப்பட்டன. இஸ்ரேல் தனது முந்திய கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டாலும் கூட அமெரிக்கா உச்சிமாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் அரஃபாத்துக்கு தயார் செய்வதற்கு நேரம் மறுக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு அமெரிக்க-இஸ்ரேலிய சதித்திட்டமே என மனதில் ஊர்ஜிதமாயிற்று``.
கிளிண்டன் அரஃபாத்தை காம்ப் டேவிட்டுக்கு வரவழைப்பதற்கு ஒரு வாக்குறுதி அளித்தார். உச்சிமாநாடு தோல்வியடைந்தால் பாலஸ்தீனியர்கள் குற்றம் சாட்டப்படமாட்டார்கள் என்பதே அது. ஆனால் இந்த வாக்குறுதி பயனற்றது என்பது நிரூப்பிக்கப்பட இருந்தது.
பராக் எதையும் எழுத்து வடிவத்தில் செயல்படுத்தவில்லை. உண்மையில் பாலஸ்தீனியர்கள், எந்த நேரமும் பின் இணைப்பைச் சேர்த்துக் கொள்ளக் கூடியதான தெளிவற்ற வாக்குறுதிகளை அங்கீகரிக்கும்படி கேட்கப்பட்டனர். அவர்கள் பின்வருமாறு எழுதுகின்றனர், `` கறாராகக் கூறினால் இஸ்ரேல் எந்தத் திட்டத்தையும் அளிக்கவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும், பாலஸ்தீனியர்கள் வெற்றியடையக்கூடாது என்பதே இஸ்ரேலின் கொள்கையும் திட்டமும் ஆகும்.
காம்ப் டேவிட்டில் முன் வைக்கப்பட்ட ஆலோசனைகள் எழுத்து வடிவாக்கப்படவில்லை. வாய் பேச்சு வாக்குறுதிகள் மட்டுமே அளிக்கப்பட்டன. முன்மொழிவுகள் விளக்கப்படவுமில்லை. எழுத்து வடிவாக்கப்பட்டிருந்தாலும் கூட அமெரிக்க ஆலோசனைகள் காம்ப் டேவிட்டில் ஒரு சில பக்கங்களுக்கு மேல் பிடிக்காது. பாராக்கும் அமெரிக்கர்களும் அரஃபாத் அதிக தீவிரமாக விவாதம் நடத்துவதற்கு முன்னர், இவற்றை பொதுவாக 'பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாக' ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தினர்."
பாராக்கின் முன்மொழிவுகள்
பராக்கின் முன்மொழிவுகள் பாலஸ்தீனியரின் அபிலாசைகளுக்கு கொடுக்கப்பட்ட "மிகவும் தாராளமான" சலுகைகளுக்கு முற்றிலும் புறம்பானவை. அவரது திட்டம் ஒரு வருங்கால பாலஸ்தீனிய நாட்டுக்கு ஒரு ஸ்திரமான அஸ்திவாரத்தை வழங்கி இருக்காது, மாறாக இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேலின் ஆளுகைக்கு உட்பட்ட, மற்றும் அதனைச் சார்ந்திருக்கும் ஒரு அரபு சேரிக்கான கட்டமைப்பு ஆகும்.
ஒஸ்லோ உடன்படிக்கைகள் பாலஸ்தீனியர்கள் வரலாற்றுரீதியான பாலஸ்தீனத்தில் 78சதவீதப் பகுதியில் இஸ்ரேலின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டதையும் அடிப்படையாகக் கொண்டன. மீதி 22 சத வீதப் பகுதி மீது பாலஸ்தீனியர்கள் இறையாண்மையை செலுத்துவர் என்ற கருதுகோளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தன. இதற்கு மாறுபாடாக, பாராக்கின் ``தாராளம்`` என்று கூறப்படும் காம்ப் டேவிட் திட்டம் ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள் 242 மற்றும் 338 ஐ நிராகரித்தது. இத்தீர்மானங்கள் 1993- ன் ஒஸ்லோ உடன்படிக்க்ைகளுக்கு அடிப்படையானவை.
அவர் வழங்கியதில் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
* பாராக்கின் முன்மொழிவு பாலஸ்தீனத்தை இஸ்ரேலினால் சூழப்பட்ட 4 வெவ்வேறு பகுதிகளாக பிரித்தது: வடக்கு மேற்குக்கரை, நடுவண் மேற்குக்கரை, தெற்கு மேற்குக்கரை மற்றும் காசா. இஸ்ரேலை சார்ந்ததும் அதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளும், இராணுவ சாவடிகளும் இந்த பகுதிகளை மேலும் பிரிக்கும். பாலஸ்தீனிய எந்தப் பகுதியும் அடுத்தடுத்து இருக்காது. பாலஸ்தீனிய மக்கள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தை உள்ளும் வெளியிலும் இஸ்ரேலியர் கட்டுப்படுத்துவர். இவ்வாறு பாலஸ்தீனிய பொருளாதாரம் சக்திமிக்க அண்டை நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
* இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் ஒன்பது சதவீதத்தை இணைத்துக்கொண்டது. இதற்கு பதிலாக இஸ்ரேல் தனது நாட்டில் ஒரு சதவீதத்தை தான் பாலஸ்தீனியர்களுக்கு தந்தது.
* இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலிருந்து மேலும் ஒரு 10 சதவீத நிலப் பகுதியை, கால வரம்பற்ற "நீண்ட கால" குத்தகை வடிவில் கேட்டது.
* பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேம் மீதான உரிமையை விட்டுக்கொடுக்குமாறு கேட்கப்பட்டனர். அதனை அவர்கள் தங்களின் எதிர்கால பாலஸ்தீனத்தின் தலைநகரமாக தீர்மானித்திருந்தனர். இது பிறகு நடந்த பேச்சுவார்த்தைகளில் மாற்றிக்கொள்ளப்பட்டது. பிற்பாடு பாலஸ்தீனியர்கள் தங்களின் இறையாண்மையை கிழக்கு ஜெருசலேமிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட அரபு பகுதிகளில் செலுத்தலாம் என்பதை அனுமதிக்கும் முன்மொழிவு பின்சேர்க்கப்பட்டது. ஆனால் இந்த அரபு பகுதிகள் இஸ்ரேல் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளால் சூழப்பட்டிருக்கும். இவை தனித்தனியே இருப்பது மட்டுமல்லாமல், எஞ்சியுள்ள பாலஸ்தீன அரசிலிருந்தும் தனிமைப்பட்டிருக்கும். Arafat-ஐ அவமானம் செய்யும் நோக்கத்துடன், இஸ்ரேலின் எல்லைப்பகுதிகளில் கால்வைக்காமல் அரஃபாத் பாலஸ்தீனப் பகுதிகளைப் பார்வையிட, இஸ்ரேலியர்கள் பாதாள சுரங்கம் அமைப்பதாகக் கூறினர்.
* இஸ்ரேல் மேற்குக்கரையில் 69 சியோனிச குடியேற்றப்பகுதிகள் மீது ஆதிக்கம் செலுத்தும். இப்பகுதிகளில் 85% யூதக் குடியேற்றக்காரர்கள் வாழகின்றனர். ஒஸ்லோ உடன்பாட்டிற்குப் பிறகு சட்ட விரோதமான குடியேற்றங்கள் 52 சதவீதம் அதிகரித்தன. கிழக்கு ஜெருசலேம் உள்பட யூதர்கள் ஐனத்தொகை இரு மடங்கிற்கும் அதிகமாக ஆகியுள்ளது.
* 1948-ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதற்குப் பின்னர் இடம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீண்டும் பூர்வீக பகுதிகளுக்கு திரும்பி செல்லும் எந்தவிதமான உரிமையையும் கைவிட வேண்டும்.
மேற்கூறிய அத்தனையும் அச்சுறுத்தலாக அமைந்தது. பாலஸ்தீனிய பேச்சாளர்கள் கருத்தின்படி ``நிரந்தர நிலை குறித்து முதல் பேச்சு வார்த்தைகளுக்குள் நுழையும் முன்பே பிரதமர் பாராக், அவருடைய திட்டம் முதலும் கடைசியும் சிறந்ததாகவும் இருக்கும், இதை பாலஸ்தீனியர்கள் ஒப்புக்கொள்ளாவிடில், இஸ்ரேல் "ஒருதலைப்பட்சமான பிரிவினையை' அக்கறையுடன் எண்ணிப்பார்க்கும் (பேச்சுவார்த்தையைக் காட்டிலும் தீர்வைத் திணிக்கும் மறைமுகப் பொருள்தரும் வார்த்தை) என்று வெளிப்படையாகவே பலமுறை பாலஸ்தீனியர்களை அச்சுறுத்தினார்.
மால்லியும் ஆகாவும் பாலஸ்தீனியர்கள் மட்டுமே உருவாக்குவதற்கான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதாகப் படம்பிடித்துக்காட்டுகிறார்கள். இது தன்னை ``நேர்மையான தரகர்கள்`` என்று காட்டிக் கொள்ளும் அமெரிக்காவிற்கு பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கிறது.
கிளிண்டனும் பாராக்கும் தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினரின் பண்டுஸ்டான்களுக்கு (Tribal Bantustans) சமமான இன ஒதுக்கல் ஒன்றை பாலஸ்தீனியர்கள் ஒப்புக்கொள்ள நிர்பந்தம் செய்ய முயற்சித்தனர் என்று மால்லியும் ஆகாவும் கூறுகின்றனர்.
தலைமை பாலஸ்தீனியப் பேச்சாளர் அப் அலா மாராக்கின் முன்மொழிவுகளை ஒப்புக்கொள்ளாத பொழுது, அமெரிக்க ஜனாதிபதி சினத்துடன் சீறினார்: ``இது ஒரு பித்தலாட்டம். இது உச்சிமாநாடு அல்ல. அவநம்பிக்கையில் இத்தகைய பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா மூடிமறைக்க நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். நான் போகிறேன்!``. உச்சிமாநாடு முடியும் தருவாயில் கோபமடைந்து கிளிண்டன் அரஃபாத்தை நோக்கி கூறியதாவது, ``இஸ்ரேலியர்கள் சமசரசங்களுக்கு உடன்படுகிறார்கள். நீங்கள் உடன்படாவிடில், நான் வீட்டிற்கு செல்கிறேன். நீங்கள் பதினான்கு நாட்களாக இங்கு இருக்கிறீர்கள். எந்த கோரிக்கைகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. இவற்றிற்கு பின்விளைவுகள் உண்டு. தோல்வி சமாதான முயற்சிகளை முடிவுக்குக் கொண்டுவருவதாக அர்த்தப்படுத்தும்.... நாசமாகப் போகட்டும், இவற்றின் பின்விளைவுகளை அனுபவிக்கட்டும்."
பாலஸ்தீனியத் தலைமை மீது இத்தகைய அச்சுறுத்தல் முதலிலிருந்து இருந்தது - பாராக் வழங்குவதில் கையெழுத்திடல் மற்றும் ஒரு முழுமையான பாலஸ்தீன நாடு உருவாவதை விட்டுவிடுதல் அல்லது இஸ்ரேலினது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் கோபத்திற்கும் ஆளாகுதல்.
ஷரோன் இராணுவ வழியைக் கடைப்பிடித்தார்
Deborah Sontag, என்பவர் Newyork Times, July 26, 2001 இதழில் ஒரு கட்டுரை எழுதினார். "And Yet So Far" என்பது அதன் தலைப்பு. இக்கட்டுரை காம்ப் டேவிட் பற்றிய பல சுவையான தகவல்களைக் கொண்டிருக்கிறது, ஆனால் அடுத்து என்ன நடந்தது என்று விவரிப்புது மிக முக்கியத்துவம் உடையதாக இருக்கிறது. காம்ப் டேவிட்டுக்குப் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி அவர் எழுதுவதாவது:
``காம்ப் டேவிட் கூட்டம் தோல்வியடைந்த பின்னர், எவ்வளவு ராஜ தந்திர நடவடிக்கைகள் நடைபெற்றன என்று ஒருசில இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள் மற்றும் அமெரிக்கர்களே அறிவர். விவாதத்திற்கு ஒரு நல்ல ஆதாரம் கிடைத்தது என்று, இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனியப் பேச்சாளர்கள் ஆகஸ்டு, செப்டம்பரில் 50 விவாதக் கூட்டங்களை நடத்தினர். அவற்றுள் பெரும்பாலானவை ரகசியமாக நடைபெற்றன. ஜெருசலேத்தில் கிங் டேவிட் ஹோட்டலில் நடைபெற்றன.
"ஆகஸ்டு மற்றும் செப்டம்பரின் பொழுது (தலைமை பாலஸ்தீன பேச்சாளர் Saeb) Erekat-ம் Gilad Sher என்ற மூத்த இஸ்ரேல் பேச்சாளரும் ஒரு நிரந்தர சமாதான உடன்படிக்கையில் இரண்டு அத்தியாயங்களை வடிவமைத்தனர். இது தலைவர்களுக்குத் தவிர ஏனையோருக்கு மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டது -ஏனைய பேச்சாளர்களில் இருந்தும் கூட இரகசியமாக வைக்கப்பட்டது, என்று திரு எரெக்காத் குறிப்பிட்டார்.
"அதே நேரத்தில் அமெரிக்க அதிபரின் நடுநிலை மத்யஸ்தம் செய்பவர்கள் கிளிண்டனின் நிரந்தர சமாதான முன்மொழிவுக்கு உருவம் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். இது டிசம்பரில் வெளியானது. ஆனால் Martin Indyk எனும் முன்னாள் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர், ஆகஸ்டு மற்றும் செப்டம்பரிலேயே இரு தரப்பினர் முன் இதனை சமர்ப்பிப்பதற்கு தயாரிக்கப்பட்டிருந்தது என தெரிவித்தார்."
Sontag கட்டுரை மிகவும் முக்கியமானது. இது பாலஸ்தீனியரது விட்டுக்கொடுக்கா போக்கு என்பதை பொய் என அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல் - காம்ப் டேவிட் இறுதிக் கெடு தோல்வி அடைந்த பின்னரும் கூட தீவிர பேச்சு வார்த்தைகள் நடந்தன என்பதை அம்பலப்படுத்துகிறது. மேலும் மிக முக்கியமான தகவலை Sontag வெளியிடுகிறார். சியோனிச ஆதரவு செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள், அரஃபாத் அல்ல ஏரியல் ஷரோனே சமாதான உடன்படிக்கை நிறைவேறும் எந்தவிதமான சாத்தியத்தையும் வேண்டுமென்றே தகர்த்தார்.
Sontag கூறுவதாவது: ``Al Aqsa Mosque-க்கு வெளியே உள்ள திடலுக்கு மிகவும் பாதுகாப்பாக ஷெரோன் சென்றது, மலைக் கோவில் மீது யூத இறையாண்மையை நிலை நிறுத்துவதற்காக செய்யப்பட்டது. இந்த செய்கையினால் பாலஸ்தீனியர்கள் ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்ரேலியர்கள் அதனை நசுக்க கொல்லும் படையைப் பயன்படுத்தினர். வன்முறை சுழற்சி ஆரம்பித்தது....."
அப்பொழுதும் கூட, விவாதங்கள் டிசம்பர் வரை தொடர்ந்தது. இருப்பினும், "தேர்தல்கள் அடுத்து வர இருந்ததால் இஸ்ரேலால் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன மற்றும் பேச்சுவார்த்தைக்கு எதிரான பொது மக்கள் கருத்தின் அழுத்தம் தடுக்கப்பட முடியாததாக இருந்தது" என்று அப்போதைய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் Shlomo Ben Ami கூறினார்."
Sontag முடிவாக, ``பிப்ரவரி 2001-ல் நடைபெற்ற இஸ்ரேலிய தேர்தலில் பாராக் ஷரோனிடம் படுதோல்வி அடைந்தார். அப்போதுதான் சமாதான முயற்சி தோல்வியடைந்தது. காம்ப் டேவிட் இல் ஆறு மாதங்கள் முன்பு அல்ல`` என்று கூறினார்.
காம்ப் டேவிட்டுக்கு பிறகு நடந்த எந்த பேச்சுவார்த்தைகளையும் உண்மையாகவே பாராக்கைப் பொறுத்தவரை நல்ல நம்பிக்கையுடன் நடத்தினரா என ஒருவர் கேள்வி எழுப்ப முடியும். கிளிண்டன் செப்டம்பர் 27, 2000 அன்று அனைத்துத் தரப்பு பேச்சாளர்களையும் வாஷிங்டனுக்கு அழைத்தார். செப்டம்பர் 28 அன்று ஷெரோன் வேண்டுமென்றே கலவரத்தை தூண்டும் வகையில் மலைக் கோவிலுக்கு விஜயம் செய்தார். பாராக் ஒருமுறை கூட ஷரோனின் செய்கைகளை குறை கூறவில்லை. ``அமைதி முயற்சியை அழிக்கவே" பாராக் ஷெரோனுடன் சேர்ந்து நேரடியாக சதி செய்கிறார், அவர்கள் முடிவு செய்த ``இராணுவ திட்டத்திற்கு "ஒரு கருவியாகவே" மலைக் கோவில் / Haram Al Sahrif``- ஐ தேர்ந்தெடுத்தனர் என்று அரஃபாத் வலியுறுத்தினார்.
இது www.wsws.com இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமாகும்.இக்கட்டுரையை எழுதியவர் MR.Chris Marsden என்பவராவார்.எல்லா கட்டுரைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே.தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும்.
ஜசாகள்ளஹு ஹைர்.
உங்கள் நண்பன்
எம்.ஹிமாஸ் நிலார்.
No comments:
Post a Comment