Wednesday, October 12, 2011

சிரியா மீதான ரஷ்ய மற்றும் சீனாவின் தடுப்பதிகாரம்.(Veto)

Cartoon By Latuf Carlos.
 சர்வதேச உறவுகளை இன்னும் சூடாக்குவதை உறுதியாக்கும் நடவடிக்கையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை செவ்வாயன்று  ஐ.நா.பாதுகாப்புச் சபையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கும், சர்வதேச பொருளாதாரத்தடைகள் விதிப்பதற்கும் கொண்டுவரப்பட்ட சிரிய ஆட்சியைக் கண்டிக்கும் ஐரோப்பிய ஆதரவுடைய தீர்மானம் ஒன்றைத் தடுப்பதற்குத் தங்கள் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தின.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை விரோதப் போக்குடன் இதைக் கண்டித்தன; குறிப்பாக ரஷ்யாவை அது சிரிய மக்களின் இழப்பில் தன் நலன்களைச் சிரியாவில் காப்பதற்கு இதைச் செய்துள்ளது என்று குற்றம் சாட்டின. மிகவும் திமிர்த்தனமான தாக்குதலானது அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸிடம் இருந்து வந்தது; அமெரிக்கா “ஒரு அவசர அறநெறிச் சவாலைத் தீர்க்கவும், பிராந்தியச் சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பெருகிய அச்சுறுத்தலைத் தீர்ப்பதில் தவறவிட்டதற்காக” ஐ.நா.விடம் அமெரிக்கா சீற்றம் கொண்டுள்ளது என்று அவர் அறிவித்தார்.

ரஷ்யா, சீனா ஆகியவற்றைப் பெயரிடாமல், லிபியாவில் நேட்டோவின் தற்போதைய அப்பட்டமான நவ காலனித்துவ தலையீட்டுடன் இணைவாக இதைச் சுட்டிக்காட்டப்பட்டதை உதறித்தள்ளிய ரைஸ், “அத்தகைய கருத்து சிரிய மக்களுக்குத் துணை நிற்காமல் சிரிய ஆட்சிக்கு ஆயுதங்களை விற்பவர்கள் எளிதாகப் பேசுவது” என உதறித்தள்ளினார். சிரியத் தூதர் பஷர் ஜபாரி அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்பதின்மூலம் “இனக் கொலையில் பங்கு பெறுகிறது” என்று குற்றம் சாட்டியபோது ரைஸ் வெளிநடப்புச் செய்தார். அமெரிக்கா பலமுறையும் இஸ்ரேலைக் குறைகூறும் தீர்மானங்களை அதன் தடுப்பதிகாரச் சக்தியைக் கொண்டு தடுத்துள்ளது.



 ரைஸின் கருத்துக்கள் பாசாங்குத்தனமானவை. சிரிய ஆட்சியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டிக்கையில், அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சக்திகள் அப்பிராந்தியத்தில் தங்கள் நட்பு அரசாங்கங்கள் எடுக்கும் அடக்குமுறை வழிவகைகளைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்துவதில்லை; இதில் சௌதி முடியாட்சியும் அடங்கும்; இந்த ஆண்டு வரை எகிப்திய சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியும் அடங்கும்; பலவற்றுள் இந்த இரு நாடுகளின் பெயர்கள்தான் குறிக்கப்படுகின்றன. லிபியாவில் உள்ளதைப் போல் அமெரிக்க மற்றும் ஐரோப்பியச் சக்திகளின் அக்கறை ஜனநாயக உரிமைகள் பற்றியவை அல்ல; மாறாக மத்திய கிழக்கில் தங்கள் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களை முன்னேற்றுவிப்பதுதான்.

அமெரிக்காவும் மற்ற முக்கிய ஐரோப்பியச் சக்திகளும் ஏற்கனவே சிரியாவில் “ஆட்சி மாற்றம்” என்பதைத் தங்கள் செயற்பட்டியலில் இருத்திவிட்டன; ஆகஸ்ட் மாதமே சிரிய ஜனாதிபதி பஷர் அசாத் இராஜிநாமா செய்யவேண்டும் எனக் கோரின. பிரான்ஸ், பிரட்டன் மற்றும் ஜேர்மனி ஆகியவை “அனைத்து நெறியையும் அசாத்” இழந்துவிட்டார் என்று அறிவித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் தங்கள் நலன்களுக்கு இன்னும் வளைந்துகொடுக்கக் கூடிய ஆட்சியை அங்கு நிறுவ முற்படுகின்றன; குறிப்பாக சிரியாவின் நட்பு நாடான ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அதைத் தனிமைப்படுத்தவதற்கும் ஆகும்.


 வாஷிங்டனுடன் இணைந்த வகையில், பிரிட்டிஷ் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக் நேற்றைய இத்தடுப்பதிகாரம் “பெரும் தவறு, வருந்தத்தக்கது” என்றார். “நம்மால் முடிந்த அளவிற்கு அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில்” பிரிட்டன் முயற்சிகளை இருமடங்கு ஆக்கும் என்று ஹேக் தீயமுறையில் அறிவித்தார். இந்த வாக்கு “பாதுகாப்புச் சபைக்கு ஒரு சோகமான தினம்” என்று முத்திரையிட்ட பிரெஞ்சுத் தூதரகம் ஜேராட் அரோட் சிரியாவிற்குள் இருக்கும் அசாத் மீதான எதிர்ப்புக்களுக்கு “உறுதியான ஆதரவு” உண்டு என்று உறுதிமொழியளித்தார். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஏற்கனவே தத்தம் தனித்தனிப் பொருளாதாரத் தடைகளை சிரியா மீது சுமத்தியுள்ளன; இதில் ஐரோப்பிய சக்திகளைப் பொறுத்தவரை, சிரியாவில இருந்து எரிசக்தி இறக்குமதிகள் மீது கடுமையான தடை ஏற்கனவே சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை சிரியாவைச் சுரண்டுவதற்கு, அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் ஐ.நா. தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும் என்று தெளிவாக நம்பியிருந்தன. செவ்வாய் தீர்மானமான இலக்கு வைக்கப்படும் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆயுதங்கள் அளிப்பதைத் தடுப்பது என்பது முதலில் ஆகஸ்ட் மாதமே முன்வைக்கப்பட்டது. ஆனால் இறுதித் தீர்மானமும், சிரியாவின் “தீவிர, முறையான” மனித உரிமைகள் மீறப்படல் பற்றியதைக் கண்டிக்கும் தீர்மானமும்,  பாதுகாப்புச் சபையை 30 நாள் அவகாசத்திற்குப் பின் குறிப்பிடப்படாத நடவடிக்கைகளை சிரியாவிற்கு எதிராகப் பரிசீலிக்க அனுமதிக்கும்.

வாக்கெடுப்பின் போது சீனா.
 லிபியாவில் பெரும் இழப்புக்களைத் தாங்கியுள்ள ரஷ்யா மற்றும் சீனா இதே போன்ற செயல் சிரியாவில் வரக்கூடாது என்பதற்கு எதையும் செய்யத்தயாராக இருந்தன. லிபியாவைப் பொறுத்தவரை, நேட்டோ சக்திகள் “குடிமக்களைப் பாதுகாப்பதற்கு” பறக்கக் கூடாத பகுதி என்ற விதியைச் சுமத்துவதற்கு பெற்றிருந்த தீர்மானத்தை, முழு அளவிலான வான்தாக்குதலை லிபியாவின் சர்வதிகாரியை அகற்றுவதற்கும் கடாபி எதிர்ப்புச் சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் பயன்படுத்தியது. இதன்விளைவாக, லிபியாவில் கணிசமான பொருளாதார நலன்களைக் கொண்டிருந்த ரஷ்யா மற்றும் சீனா ஆகியவைகள் இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டது.

ரஷ்யாவிற்கு சிரியாவில் இன்னும் கூடுதலாக இழப்பதற்கு உள்ளது. டமாஸ்கஸுடன் மாஸ்கோ நீண்டகால பொருளாதார, மற்றும் மூலோபாயப் பிணைப்புக்களைக் கொண்டுள்ளது. மாஸ்கோ டைம்ஸ் கருத்துப்படி,  ரஷ்யத் தூரகம் சிரியாவிற்கு 1.1 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதிகளையும் 2009ல் 19.4 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்ட முதலீடுகளையும் கொண்டிருந்தது எனக் கூறியதாகத் தெரிகிறது. ரஷ்ய நிறுவனங்ளும் கூட்டு எண்ணெய் வணிகத்திலும், கட்டமைப்புத்துறையிலும், கணிசமான ஆயுதங்கள் விற்பனையிலும் தொடர்பு கொண்டவை ஆகும். சிரியத் துறைமுகமான டார்ட்டௌஸில் தன் கடற்படைக் கப்பல்களுக்கான பணிமனை ஒன்றை ரஷ்யா கொண்டுள்ளது; முன்னாள் சோவியத் குடியரசுகளைத் தவிர இத்தகைய இராணுவ வசதி சிரியா ஒன்றில்தான் உள்ளது. சீனாவும் சிரியாவில் கணிசமான பொருளாதார நலன்களைக் கொண்டுள்ளது.

ஐ.நா. தீர்மானத்தை எதிர்க்கையில் ரஷ்ய தூதர் விடாலி சுர்க்கின் “இதுமோதல் தத்துவ அடிப்படையைத் தளமாகக் கொண்டுள்ளது” என்றும் அச்சுறுத்தல் நடவடிக்கை எதுவும் “ஏற்க இயலாதது” என்று விவரித்தார். அசாத் அகல வேண்டும் என்னும் மேற்கின் அழைப்புக்களுடன் சேர்ந்து, இத்தீர்மானம் சிரியாவில் “முழு அளவு உள்நாட்டுப்போரைத் தூண்டியிருக்கக் கூடும்”, அது “முழு மத்தியக் கிழக்கிலும் அழிவை ஏற்படுத்தக்கூடும்” என்று அவர் எச்சரித்தார். 

ரஷ்ய வெளியுறவு அமைச்சரகச் செய்தித் தொடர்பாளர் அலெக்சாந்தர் லுகஷேவிச் மாஸ்கோவில் நிருபர்களிடம் கூறினார்: “ஆரம்பத்திலேயே நாங்கள் லிபியா பற்றிய ஐ.நா.தீர்மானத்தை ஒட்டி நடந்த மேற்கத்தைய கூட்டணிகள், நேட்டோ ஆகியவற்றிற்கு முன்மாதிரியாகக் கூடாது, அவை முற்றிலும் ஏற்கத்தக்கதில்லை என்று எச்சரித்தோம்.” ரஷ்யா முன்வைத்த தீர்மானம் சிரிய விவகாரங்களில் தலையீடு கூடாது, சிரிய உள்நாட்டு மோதல்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியதானது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் நிராகரிக்கப்பட்டது.

ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பு அதிகாரங்களுடன், “எழுச்சி பெற்றுவரும் பொருளாதாரங்கள்” எனப்படும் BRICSகுழு நாடுகள் என்று அழைக்கப்படுபவை –தென் ஆபிரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகியவை—தீர்மானத்தில் பங்கு பெறவில்லை. இந்நாடுகள் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆக்கிரோஷ நடவடிக்கைகள் உலகின் மற்ற பகுதிகளிலும் தலையீடுகளுக்கு வகை செய்யும் என்றும் அவற்றின் நலன்களைச் சமரசத்திற்கு உட்படுத்திவிடும் என்றும் கவலை கொண்டுள்ளன.

லிபியாவைப் பற்றிய வெளிப்படையான குறிப்பில், தென் ஆபிரிக்கத் தூதர் Baso Sangqu பாதுகாப்புச் சபை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, அதன் தீர்மானங்கள் செயல்படுத்துவது உரிய வரம்பிற்கு அப்பால் சென்றுவிடுகின்றன என்று கூறும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சிரியா மீது தண்டனை நடவடிக்கைகள் சுமத்தப்படுவது குறித்துத் தான் கவலைப்படுவதாகவும், அவை “மற்ற நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோடி” எனத் தான் நம்புவதாகவும் தென் ஆபிரிக்கா கூறியுள்ளது.  தென் ஆபிரிக்கா பங்கு பெறாதது குறித்து விளக்குகையால், பாதுகாப்புச் சபை ஆட்சிமாற்றத்திற்கான மறைமுகச் செயற்பாட்டுத்திட்டத்தில் பங்கு கொள்ளக்கூடாது என Sangquவலியுறுத்தினார். 

பிரிட்டனும் பிரான்ஸும் ஏற்கனவே தெளிவாக்கிவிட்டதைப் போல், ஐ.நா. தீர்மானத்தின் தோல்வி அசாத் ஆட்சியை அகற்றுவது விரைவாக்கப்படுவதைத் தடுக்காது. அமெரிக்காவும் தன் நட்பு நாடுகளும் பாதுகாப்புச் சபைக்கு முன் புதிய தீர்மானம் ஒன்றை முன்வைப்பது குறித்துப் பரிசீலித்துவருவதாக கார்டியன் கூறியுள்ளது. இதே சக்திகள் சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னும் தங்கள் பிரச்சாரத்தை மற்ற நாடுகளிலும் கூடுதலாகச் செய்வர் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை

கடந்த வார இறுதியில் இஸ்டான்புல்லிலுள்ள சிரிய எதிர்ப்புக் குழுக்கள் கூடி ஒரு சிரியத் தேசியக் குழுவை அமைத்தன—இது லிபியாவில் நேட்டோ ஆதரவிலுள்ள மாற்றுக்கால தேசியக் குழுவின் வழிவகையில் உள்ளது. “சர்வதேச சமூகத்திடம் இருந்து” இது ஆதரவை நாட இருக்கிறது. புதிய அமைப்பை அறிவித்து, பாரிசை தளமாகக் கொண்ட உயர்கல்வியாளர்  Burhan Ghalioun குழு அசாத்திற்கு அமைதியான எதிர்ப்பிற்கு அழைப்புவிடுத்து சிரியாவில் வெளியார் தலையீட்டையும் எதிர்க்கிறது. ஆனால் வாஷிங்டன் போஸ்ட் எதிர்ப்பு குழுக்களுக்கு பெருகும் ஆதரவு குறித்து, குறிப்பாக சிரியாவிற்குள், என்பதைத் தெரிவித்து சர்வதேச இராணுவத் தலையீட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

சிரிய தேசியக் குழு இரக்கமற்ற அசாத் ஆட்சியை விட சிரிய மக்களின் நெறியான ஜனநாயக விழைவுகள் எதையும் பிரதிபலிக்கவில்லை. அதேபோல் லிபியாவிலுள்ள தேசியக் குழுவை விடவும் பிரதிபலித்துவிடவில்லை. சிரிய முலாளித்துவத்தின் பிளவுப் பிரிவு அமைப்புக்களின் சிதைந்த கூட்டணிதான் இது. இப்பிரிவுகள் தங்கள் ஜனநாயக விரோத ஆட்சியை டமாஸ்கஸில் மேற்கத்தையச் சக்திகளின் ஆதரவுடன் நிறுவ முற்படுகின்றன.

இன்னும் பரந்த முறையில் ஐ.நா. தீர்மானம் ரஷ்யா மற்றும் சீனாவின் தடுப்பு அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளது உலக அழுத்தங்கள் அதிகப்படுவதைத்தான் குறிக்கும். இந்த ஆண்டு முன்னதாக லிபியத் தீர்மானத்தில் பங்கு பெறாத நிலையில், இப்பொழுது இரு நாடுகளும் அதேபோன்ற செயல் மீண்டும் நடத்தப்படுவதைத் தடுக்க உறுதியான தெளிவுடன் இருந்தன; இதனால் அவற்றின் அமெரிக்க, ஐரோப்பிய உறவுகள் சேதம் அடையலாம் என்ற திறன் இருந்தபோதிலும் கூட. இதில் உண்மையான ஆபத்து, முக்கிய மூலோபாயப் பொருளாதார நலன்கள் குறித்த கடுமையான போட்டியானது, அணுசக்தி கொண்டுள்ள நாடுகளிடையே பரந்த பூசலைத் தூண்டும் திறன் உடையது என்பதுதான்.



பின் குறிப்பு 

உலகில் நடக்கும் விடயங்களை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.நாம் எவ்வளவு ஏமாற்றப்படுகிறோம் என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.உலக சனத்தொகையில் ஒன்றரை பில்லியன் முஸ்லிம்கள் இருந்தும் உலகில் 55 க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் இருந்தும் நமது முஸ்லிம் நாடுகளுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்க யாருமே இல்லையே என்னும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.இந்த பதிவு சிரியாவின் ஜனாதிபதிக்கு ஆதரவான பதிவல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன் மக்கள் ஒரு தெளிவு பெறவே இந்த பதிவை இங்கே பிரசுரித்தேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இதே மாதிரி தடையுத்தரவு லிபியாவுக்கு எதிராக கொண்டு வந்த போது இந்த இரு நாடுகளும் மெளனமாக இருந்துவிட்டு தற்போது சிரியாவுக்காக எழுந்து நிட்பதேன்றால் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது.மேற்கு நாடுகளுக்கோ அல்லது சீனா மற்றும் ரஷ்யாவுக்கோ மத்திய கிழக்கில் முக்கியமாக முஸ்லிம் நாடுகளில் ஜனநாயகத்தை (இதுவும் ஒரு குப்பை) நிலைநிறுத்த வேண்டும் என்று எந்த விதமான எண்ணமும் இல்லை.அவர்களின் முழு நோக்கமும் வியாபாரம் தான்.சிரியாவில் பில்லியன் கணக்கில் முதலிட்டுள்ள ரஷ்ய மற்றும் சீனா போன்ற நாடுகள் தற்போதைய ஆட்சி மேற்குலகின் ஆதரவுடன் வீழ்ந்தால் அவர்களின் வியாபாரம் பாதிக்குமே என்பதே முதலும் கடைசியுமான எண்ணம்.நேட்டோவுடன் சேர்ந்து  கொண்டு மேற்குலக நாடுகளும் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட போராளிக் குழுவும் லிப்யாவில் பெரிய மனித அவலத்தை நிலைநிறுத்திக் கொண்டு மேற்குலகின் வியாபர நலன்கள் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.அதே போல் இங்கு சிரியாவில் கொஞ்சம் வித்தியாசமாக ஏற்கனவே மனித அவலத்தை மேட்கொண்டிருக்கும் ஆட்சியாலனுடன்  சேர்ந்து கொண்டு ரஷ்யாவும் சீனாவும் இன்னுமொரு மனித அவலத்தை மேடை எற்றிக்கொண்டிருக்கின்றன.கடைசியில் இழப்புகளை சந்த்திக்கப்போவது மக்களே அன்றி வேறு யாருமல்ல.

 

இது www.wsws.com இணையத்தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கமாகும்.இக்கட்டுரையை எழுதியவர் MR.Peter Symond என்பவராவார்.எல்லா கட்டுரைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே.தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும்.
ஜசாகள்ளஹு ஹைர்.
உங்கள் நண்பன் 
எம்.ஹிமாஸ் நிலார்.

No comments:

Post a Comment