Sunday, September 11, 2011

கைஸரை விரட்டியவர்கள் கைஸரியத்தையும் விரட்டுவார்களா?

'இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை (வாழ்க்கை நெறியை) எவரேனும் விரும்பினால் (அது) ஒரு போதும் அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.' (அல்குர்ஆன் 3:85)


எகிப்திலும் துனீசியாவிலும் அண்மையில் இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சி நவீன கால கைஸரையும் கிஸ்ராவையும்  ஆட்சிக் கட்டிலிலிருந்து விரட்டியதோடு உலகிலுள்ள ஏனைய கைஸர்களுக்கும் கிஸ்ராக்களுக்கும் சாவு மணி அடிப்பதாகவே அமைந்தது. சில கைஸர்களுக்கும் கிஸ்ராக்களுக்கும் காலம் கடந்து ஞானம் பிறந்த போதிலும் ஒருவர் மாத்திரம் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆயிரக் கணக்கானோரைக் கொன்று குவித்துக் கொண்டும்  இஸ்லாத்தை தாரைவார்த்து முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டுமிருக்கிறார்.

அல்லாஹ் பாராமுகமானவன் அல்ல என்பதையும் எல்லோருடைய மூச்சுக்கும் முடிவு உண்டு என்பதையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவருக்குப் புத்தியில்லை. அரபுலகத் தலைவர்கள் தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரபிஸம், சோசலிசம், கம்யூனிசம், கேப்பிடலிசம் மட்டுமல்லாமல் தேவைப்படும் போது உணவுப் பண்டங்களுக்கு கறிவேப்பிலை இடுவது போன்று இஸ்லாத்தையும் பேசி மக்களை ஏமாற்றி வந்தனர். இவர்கள் என்னதான் கொள்கைகள் (இஸங்கள்) பேசி வந்தாலும் கூட நாட்டில் அநீதி, அராஜகம், அட்டூழியம், அனாச்சாரம் தண்டவமாடுவதை சகித்துக் கொள்ள முடியாத மக்கள் கொதித்தெழ ஆரம்பித்துள்ளனர். அதிகாரப் போதையில் மூழ்கி ஆட்சி சுகம் அனுபவித்துக் கொண்டிருந்த சர்வாதிகாரிகளுக்கு இவ்வாறானதோர் இழிவே ஏற்படும் என அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆட்சி பீடத்தில் எல்லைமீறி பலவந்தமாக அமர்ந்திருந்த சர்வாதிகார ஆட்களை விரட்டுவதில் வெற்றி கண்ட மக்கள் அவர்கள் சார்ந்திருந்த கொள்கைகளையும் விரட்டுவதில் வெற்றி காண்பார்களா?

            ஆட்களை விரட்டுவதைப் போன்று அவர்கள் சார்ந்திருந்த கொள்கைகளையும் விரட்டுவது சுலபமான காரியம் அல்ல.  காரணம் எதிரியின் எதிரி நண்பன் எனும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே பல கொள்கை, கோட்பாடுகளைக் கொண்ட பல கூட்டத்தினர் தமக்கிடையேயுள்ள முரண்பாடுகளை ஒருபுறம் வைத்து விட்டு எதிரியை விரட்டுவதற்காக ஒன்று சேர்ந்தனர். ஆனால் எதிரி விரட்டியாடிக்கப்பட்ட பின்னரும் இவர்கள் அனைவரும் ஒரே அணியாக இருந்து செயல்படுவார்கள் என்பதை ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது. மேற்குலகம் அரபுலகில் நிலைநாட்ட நாடும் சந்தர்ப்பவாத ஜனநாயகம் இதற்கு தடையாக அமையும் என்பது திண்ணம்.

            100% முஸ்லிம்கள் வாழும் மாலத் தீவில் முன்னால் ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்காக எதிர் கட்சியினர் அனைவரும் கைக்கோர்த்து கொண்டனர். அவரது பதவி நீக்கத்தின் பின்  ஒன்றுபட்டவர்கள் பிரிந்து விட்டதனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. காரணம், தனி நபர்களை விரட்டும் நோக்கத்திற்காகவே அவர்கள் ஒன்றுபட்டார்களே தவிர, கொள்கை ரீதியாக அல்ல. இதனால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள் எதுவும் நடைபெற வில்லை. இதனால் முன்னால் சர்வாதிகார ஆட்சி தற்போதைய ஜனநாயக ஆட்சியை விடவும் ஏற்ற்க் கொள்ளத்தக்கது எனும் கருத்து மாலத்தீவு மக்களிடையே பரவலாக நிலவுகின்றது. இவ்வாறான ஒரு நிலை எகிப்து, டியுனீசியாவில் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எகிப்தின் தஹ்ரீர் சதுக்கத்தில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களில்  இஸ்லாம் ஒன்றே தீர்வு என்ற அசையாத நம்பிக்கை கொண்டோருடன், மதச்சசார்பற்ற ஜனநாயக அரசு சுலோகம் தாங்கிய ஆர்ப்பாட்டக் காரர்களும் இருந்தார்கள். இவ்விரு சாராரையும் ஒன்று சேர்ப்பது சுலபமான காரியமல்ல.

            மேற்குலகம் அரபுலகில் நிலைநாட்ட நாடும் சந்தர்ப்பவாத ஜனநாயகம் ஒரு போதும் தீர்வாக அமையப் போவதில்லை. அவ்வாறான ஜனநாயக அரசின் மூலம் குளிர்காயப் போவது இஸ்ரேல்தான்.  ஜனநாயக அரசின் மூலம் அரபுலகம் தீர்வு காண நாடுவது கானல் நீர் மூலம் தாகம் தீர்க்க முயற்சிப்பது போன்றாகும். வீரம், விடாப்பிடியான போராட்டக் குணம், வைராக்கியத்தை விட்டுக் கொடுக்காத மனப்பாங்கு , எதையும் பொருத்துக் கொள்ளும் சகிப்புத் தன்மை போன்ற பண்புகளையும், உட்திறமைகளையும் பொதுவாகவே கொண்டுள்ள அரபியர்களுக்கு ஜனநாயகம் ஜீரணிக்க முடியாத அந்நியமான கோட்பாடாகும்.

பொதுவாக 100% ஜனநாயகத்தைக் கடைபிடிக்கும் அரசு உலகில் எங்குமே இல்லை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அரபுலகில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நாடும் மேற்குலகெங்கும் சந்தர்ப்பவாத, நயவஞ்சக ஜனநாயகத்தையே காணக்கூடியதாக உள்ளது. ஜனநாயகத்தில் பொதுவாகப் பேசப்படும் தேர்தல் முறைமை, கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள் போன்றவற்றில்  நிலையான கோட்பாடு எங்கும் இல்லை. கருத்துச் சுதந்திரம் எனும் பெயரால் ஈருலகத் தலைவர் உத்தம நபிக்கெதிராக அபாண்டத்தைச் சுமத்திய  சல்மான் ருஷ்தியை ஆதரித்தது மாத்திரமல்லாமல், பரிசு வழங்கி கவுரவித்த மேற்குலகு, அரச குடும்பங்களின் உண்மை நிலை பற்றி எழுதப்பட்டவற்றை அம்பலப்படுத்தாமல் தணிக்கை செய்தும் தடை விதித்தும் நடந்து கொண்டமை சந்தர்ப்பவாத ஜனநாயகத்திற்குப் போதுமான சான்றாகும்.

மனித உரிமைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜனநாயகவாதிகளின் கண்களுக்கு அபூகுரைப் சிறைச் சாலை தென்படாமல் போனது நயவஞ்சக ஜனநாயகத்திற்கு மற்றுமொரு சான்றாகும். தேர்தல் மூலமே ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் மேற்குலக ஜனநாயகவாதிகள் அல்ஜீரியத் தேர்தல் முடிவுடன் நடந்து கொண்ட விதத்தை சந்தர்ப்பவாத நயவஞ்சக ஜனநாயகம் என்று கூறாமல் வேறு என்னவென்றுதான் கூறுவது?

            ஜனநாயகத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் நாகரிகம் தெரியாதவர்கள் என சந்தேகிக்கப்படலாம். இறையாண்மையை மையமாகக் கொண்டுள்ள இஸ்லாமிய அரசியல் முறைமையைப் புரியாதவர்களே ஜனநாயகத்தால் கவரப்படக் கூடும். இஸ்லாமிய அரசியல் முறைமையை சரியாகப் புரிந்து கொண்டால் ஜனநாயகத்தை விடவும் இஸ்லாம் ஒன்றே நிரந்தரத் தீர்வு என்பதனைப் புரிந்து கொள்வார்கள். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட வரண்ட சட்ட திட்டங்கள் நிரந்தரத் தீர்வாக ஆகவே முடியாது.

            அரசியலில் ஆணிவேராகக் கருதப்படும் ஆட்சியாளர் தெரிவில் இஸ்லாமிய அரசியலுக்கும் ஜனநாயக அரசியலுக்குமிடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஷூராவின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களின் பைஅத்தைப் பெற்ற தலைவருக்கும், வாக்காளர்களின் ஓட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குமிடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு உண்டு. தலைவருக்கு பைஅத் செய்தவர் கடைசிவரை விசுவாசத்தோடு பக்கபலமாகவே இருப்பார். ஆனால் ஓட்டு போட்டு தனது தலைவரைத் தேர்ந்தெடுத்தவரிடம் இதனை எதிர்பார்க்க முடியாது. ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் பொருத்தமான ஆட்சியாளர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதற்கான எவ்விதமான உத்தரவாதமும் கிடையாது. தனது சொந்த சிறிய விவகாரங்களில் கூட சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் இல்லாதவர்களுக்கும் கூட நாட்டுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் ஜனநாயகத்தில் உண்டு.

            தேர்தல்களில் வாக்களிப்போரில் கணிசமானோர் அறிவுப்பூர்வமாக சிந்திப்பதை விட்டுவிட்டு உணர்வுப் பூர்வமாக சிந்தித்தே வாக்களிக்கின்றனர். தேர்தல் காலங்களில் நிலவும் விலைவாசி, புறக்கவர்ச்சிகள், இனவாத உணர்வுகள் வாக்குகளில் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகள் முன்வைக்கும் வாக்குறுதிகள் தேர்தல் முடிவுகளில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன. தேர்தல் தினத்திற்கு முன்னைய நாள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு பாட்டில் சாராயமும் ஒரு உணவுப் பொட்டலமும் கூட எதிர்பார்க்கப்பட்ட தேர்தல் முடிவுகளை தலை கீழாக மாற்றிய வரலாறு தெற்காசிய ஜனநாயகத்துக்கு உண்டு. அரசியல்வாதியின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி அல்லது உறவுக்காரர் அனுதாப வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கலாச்சாரம் எமக்கு புதிதான ஒன்றல்ல. இவ்வாறானதொரு ஜனநாயகக் கலாச்சாரம்  அரபுலகில் நிலைநாட்டப்படுவதை விடவும், இருந்த சர்வாதிகாரம் பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும். அமெரிக்க ஜனநாயகத்தை சுவைத்துக் கொண்டிருக்கும் ஈராக்கியருள் அதிகமானோர் இதே கருத்திலேயே உள்ளனர்.

            மேற்குலகம் அரபுலகில் நிலைநாட்ட நாடும் சந்தர்ப்பவாத ஜனநாயகம் அரபுலக அரசியல் நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வாக அமையப் போவதில்லை என்பதையும் இஸ்லாம் ஒன்றே நிரந்தர தீர்வாக அமையும் என்பதனை விளக்குவதற்காகவே ஸூரா ஆல இம்ரானில் இடம்பெற்றுள்ள இவ்வசனத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். இதே ஸூராவில் இதே கருத்தை வலியுறுத்தும் விதமாகவே பின்வரும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன:

 “நிச்சயமாக இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்”. (அல்குர்ஆன் 3:19)

“அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்து படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்”. (அல்குர்ஆன் 3:83)


நாம் இங்கு விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட வசனத்தில் இஸ்லாம் அல்லாத தீனை (மார்க்கத்தை) எவர் தேடுகின்றாரோ அவரிடமிருந்து எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும்,மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் அவர் இருப்பார் என்றும் கூறப்பட்டிருக்கும் கருத்தை நாம் சரிவரப் புரிந்து கொள்வதற்கு இவ்வசனங்களில் இடம் பெற்றிருக்கும் `தீன்’ எனும் சொல்லின் அகராதி அர்த்தத்தைப் புரிந்து கொள்வது அவசியமாகும். தீன் எனும் சொல் ஆட்சியதிகாரம், கீழ்ப்படிதல், வாழ்வியல் நெறிகள், பழக்கங்கள், நடைமுறைகள் எனப் பல அர்த்தங்களைப் பொதிந்துள்ளது. இவ்வனைத்து அகராதிக் கருத்துக்களையும் உள்ளடக்கியதாகவே தீன் (மார்க்கம்) எனும் சொல்லை விளங்கிக் கொள்ள வேண்டும். ஷாஹ் வலியுல்லாஹ் தஹ்லவி (ரஹிமல்லாஹு) தீன் எனும் சொல்லை அரசியல் அமைப்புச் சட்டம் என்று மொழி பெயர்த்துள்ளமையும் கவனிக்கப்பட வேண்டிய கருத்தாகும். இபாதத்துகள் தீனின் ஒரு பகுதியே அன்றி முழு தீனுமல்ல என்பதனைப் புரிந்து கொள்வது அவசியமாகும். மனித வாழ்வுக்கு தேவையான சமூக, பொருளாதார அரசியல் சட்டங்களையும், வாழ்வியல் நெறிகளையும் புனித அல்குர்ஆனும் சுன்னாவும் தெளிவுபடுத்தாது விட்டுவிடவில்லை. இபாதத்துக்களில் ஏற்படும் பித்அத்துகள் பற்றிப் பேசப்படும் அளவுக்கு அரசியல் பித்அத்துகள் பேசப்படுவதில்லை. இறைச் சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு மனித சட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவது ஷிர்க்கின் பிரதான வாயிலைத் திறந்துவிடும் செயலாகும். அல்குர்ஆனையும் சுன்னாவையும் சரிவரப் புரிந்து கொள்ளாமையும் அந்நிய ஆட்சி காரணமாக எம்மில் குடி கொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மை தாக்கங்களும் இஸ்லாமியத் தீர்வை நோக்கி நகர்வதற்கு தடையாக உள்ளன.
            இதுபோன்றதொரு மனோநிலை தான் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய தீபகற்பத்தில் நிலவியது. அக்காலக் கட்டத்தில் இருபெரும் வல்லரசுகளாக விளங்கிய பாரசீகப் பேரசும், ரோமானிய சாம்ராஜ்யமும் உலக அரசியலில் செல்வாக்கு செலுத்தி வந்தன. அரபுலகின் முக்கியப் பிரதேசங்கள் இவ்விரு வல்லரசுகளின் கீழ் ஆளப்பட்டு வந்தன. அரசமைப்பு என்றாலே கைஸரும், கிஸ்ராவும் நினைவுக்கு வருமளவுக்கு இவ்வவிரு வல்லரசுகளின் அரசியல் சிந்தனைகள் அரபுலகில் வியாபித்து இருந்தன. இவ்விரு ஆட்சி அல்லாத வேறோர் ஆட்சியை அவர்களால் கற்பனை செய்து கூடப் பார்த்திட முடியாத ஒரு சூழலிலேயே மதினாவில் மகத்தான இஸ்லாமியப் புரட்சி தோன்றியது. கைஸரையும் கிஸ்ராவையும் ஆட்சிக் கட்டிலிலிருந்து விரட்டியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்திருந்த கொள்கைகளையும் ஒழித்துக் கட்டிய மகத்தான மதீனத்துப் புரட்சி அது.
            அந்த மகத்தான இஸ்லாமியப் புரட்சியை ஏற்படுத்திய மாமனிதனின் சிறப்புப் பட்டம் அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) என்பதாகும். அம்மாமனிதர் உருவாக்கிய அரசியலையும்  தூய தேசத்தையும் அல்லாமா சையத் சுலைமான் நத்வி பின்வருமாறு விளக்குகின்றார்.

            நீதி நியாயத்தின் மேல் கட்டப்பட்ட ஓர் அரசாங்கம் எழுப்பப்பட்டது. இறைவன் இயற்றிய சட்டங்களே அவ்வரசாங்கத்தின் சட்டங்கள்! அவ்வரசாங்கத்தின் ஆட்சி இறைவனின் ஆட்சி! அவ்வரசாங்கத்தில் பார்க்கப்போனால் ஒவ்வொரு மனிதனும் ஆள்பவனாகவும் இருந்தான்! ஆளப்படுபவனாகவும் இருந்தான்! ஏனென்றால் இஸ்லாமிய அரசென்பது மன்னர்களுடைய, மன்னர் குடும்பங்களுடைய  முடியாட்சி அல்ல. மாறாக, அரசாட்சி முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனுடைய பிரதிநிதிகளாக இருந்து அரசை நடத்த வேண்டியது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கடமையான ஒன்று. இறைவனைத் தவிர வானக் குடையின் கீழ், வையகப் பரப்பின் மேல் யாரொருவரும் அரசாட்சி செலுத்த முடியாது. இறைவனுடைய சட்டங்களைத் தவிர வேறு யாருடைய சட்டங்களும் அங்கு செயல்படுத்தப்படவில்லை. ஆட்சி செலுத்தப்படுவோரின் இனம் சார்ந்த, மொழி சார்ந்த, கொள்கை சார்ந்த, நிறம், குலம், கோத்திரம் சார்ந்த எவ்விதமான தராதரமும் அங்கே பார்க்கப்படவில்லை.

            இவ்வாறானதொரு தூய தேசத்தை உருவாக்க வித்திட்ட மகத்தான மார்க்கத்தை அவர்கள் வரட்சியின் பின் பொழியும் பெருமழைக்கு ஒப்பிட்டுள்ளளார்கள். எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மழைநீர் எம்மிடம் தாராளமாக இருக்கும் போது நாம் ஏன் கானல் நீரைத் தேடிச் செல்ல வேண்டும்?


ARTICLE BY THAAHIR M NIHAAL ( ASHARI ).
ARTICLE FROM - AL HASANAATH.

1 comment:

  1. இஸ்லாமிய ஆட்சி என்பது கிலாபா ஆட்சியா ? ஜனநாயக ஆட்சியா?

    கோஞ்ஞம் தெளிவாக சொல்லவும் !!!

    ReplyDelete