Monday, September 26, 2011

இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்

Irgun emblem. The map shows the British Mandate of Palestine, which the Irgun claimed in its entirety for a future Jewish state.


"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமாகவிருந்தது. அரேபியர்கள் அதிகமாக வசித்த நாட்டில், புதிதாக யூத குடியேறிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்குவதை, அன்றைய காலனியாதிக்க பிரிட்டன் விரும்பவில்லை. பல அகதிக்கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பாலஸ்தீனத்தில் மேற்குறிப்பிட்ட யூத தீவிரவாத இயக்கங்கள், பிரிட்டிஷ் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டன் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இஸ்ரேல் விடுதலைப் போராட்டம் என்பது, ஒரு சில பயங்கரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மட்டுமே என்பதும், பயங்கரவாதிகள் வெற்றிகரமாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிக் காட்டினர் என்பதும் இன்று பலருக்கு ஆச்சரியமடைய வைக்கும் செய்தி தான். அதுமட்டுமா? முன்னாள் இர்குன் பயங்கரவாத தலைவர் தான் பின்னர் இஸ்ரேலின் ஆறாம் பிரதமரான "மேனகிம் பெகின்" ! 

The King David Hotel after the bombing.
Menachem Begin As A 6th Prime Minister Of Israel.
Menachem Begin As A Rabbi.


இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டதும், மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள், இம்முறை அரபு பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. பல அரேபிய கிராமங்கள் இர்குன், மற்றும் ஸ்டேர்ன் கங் காடையர்களால் சுற்றிவளைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வெறியாட்டம் பற்றிய செய்திகள் பிற அரபு கிராமங்களுக்கும் பரவவே, ஆயிரக்கணக்கான மக்கள், ஜோர்டானுக்கும், லெபனானுக்கும், எகிப்துக்கும் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அப்படி இடம்பெயர்ந்த அரேபியரின் வீடுகள், நிலங்கள், ஐரோப்பாவில் இருந்து வந்த யூத குடியேறிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் என்ற தேசம், பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடப்பட்ட நிலங்களின் மீது உருவானது. இதனால் தற்போதும் இஸ்ரேல் சுதந்திரதினம் கொண்டாடும் அதே காலத்தில், பாலஸ்தீனர்கள் "தேசிய பேரழிவு" என்று துக்கதினமாக அனுஷ்டிக்கின்றனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரண்டு தேசங்களின் உருவாக்கத்திற்கு ஐ.நா. மன்றம் அனுமதி வழங்கிய போதும், அயல்நாட்டு அரேபியர்களின் படையெடுப்பை இஸ்ரேலிய படைகள் முறியடித்ததை சாட்டாக வைத்து, பாலஸ்தீன பிரதேசங்கள், இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்று வரை தொடரும் இந்த ஆக்கிரமிப்பின் போது, மெல்ல மெல்ல அரபு நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அங்கே யூத குடியேற்றங்கள் உருவாவதும் 60 ஆண்டு கால தொடர்கதை. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "அபார்ட் ஹைட்"(பிரித்து வைத்தல்) என்ற பாகுபாடு, இன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலவுகின்றது. உதாரணமாக, இரண்டு அரபு கிராமங்களுக்கு இடையில் ஒரு யூத கிராமம் உருவாகும். அங்கே அனைத்து வசதிகளுடனும் நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டு, எங்கிருந்தோ வரும் யூத குடும்பங்களுக்கு வழங்கப்படும். அங்கேயே பாடசாலை, மருத்துவமனை போன்ற வசதிகளுடன், பிற இஸ்ரேலிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் என்பன, சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் அரசாங்கமே கொடுக்கும். அதேநேரம் அரபு கிராமங்கள் கவனிப்பாரற்று பாழடைந்து செல்லும். பூர்வீக பாலஸ்தீன அரேபியர்கள், அயல் கிராம யூத விவசாயிகள் அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில், அதாவது தமது சொந்த நிலங்களிலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாபம். குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டும், யூத கமக்காரர்கள் தமது உற்பத்திபொருட்களை ஏற்றுமதி செய்து அதீத லாபம் சம்பாதிக்கின்றனர். வேலையில்லா பிரச்சினை அதிகரித்தாலும், நகரங்களுக்கு வேலை தேடி செல்வதை, இஸ்ரேலிய படைகளின் வீதித்தடைகள் தடுக்கின்றன. மேலும் வரட்சி காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு, பாலஸ்தீன கிராமங்களை மட்டுமே வெகுவாக பாதிக்கின்றது.

மேற்குறிப்பிட்ட அவலநிலை தான் பல பாலஸ்தீன இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களை நோக்கி தள்ளும் காரணிகள். அவர்களை பொறுத்தவரை தினசரி அவமானப்பட்டு வாழ்வதை விட சாவது மேல் என்ற நிலைமையே, பல தற்கொலை போராளிகளையும் உருவாக்குகின்றது. மாறாக வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுவதை போல மூளைசலவை செய்யப்படுவதால் அல்ல. இந்த காரணிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாலேயே, இஸ்ரேல் கடந்த அறுபது வருட காலமாக முடிவுறாத யுத்தங்களுக்குள் தப்பிப்பிழைக்க வேண்டி உள்ளது.

மிக உன்னிப்பாக அவதானித்தால், ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் இஸ்ரேல் என்ற வடிவில் 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை காணலாம். அதன் வரலாற்றை பார்த்தாலே புரியும். முதலாம் உலகயுத்த முடிவில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில், மிகக் குறைந்த அளவு அரபு மொழி பேசும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அதே காலகட்டத்தில் ரஷ்யா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான அளவு யூத குடும்பங்கள் வந்து குடியேறி இருந்தன. அவர்கள் பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் இருந்து காணிகளை வாங்கி கூட்டுறவு முறையில் அமைந்த விவசாய கிராமங்களை உருவாக்கினர். அப்போது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச சித்தாந்தம் செல்வாக்கு செலுத்தியதால், இந்த யூதர்களும் தமது மாதிரி கிராமங்களை கம்யூனிச அடிப்படையிலேயே உருவாக்கினர். அதாவது அங்கே கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்த அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பண்ணை நிர்வாகிக்கும், தொழிலாளிக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. கிடைத்த லாபம் அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு போகும் நேரம், குழந்தைகள் போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டனர். தற்போது இஸ்ரேலிய தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு, இந்த பண்ணைகள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இத்தகைய பொதுவுடைமை மாதிரிக்கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசம், அபகரிக்கப்பட்ட மாற்றான் மண்ணில் உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் மேற்கு ஐரோப்பிய யூதர்கள்.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்து, ஹிட்லர் யூத மகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கதைகள் உலகம் முழுவதும் அனுதாபத்தை தோற்றுவித்த நேரம், "சியோனிஸ்டுகள்" எனப்படும் யூத தேசியவாதிகள், மேற்குலக நாடுகளின் உதவியுடன் போரில் தப்பிய யூத அகதிகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர். அவர்கள் கண்ணில் இஸ்ரேல் தேசம் பற்றிய கனவு இருந்தது. ஆனால் அவர்கள் சென்ற இடம் யாருமே வாழாத வெறும் கட்டாந்தரையாக இருக்கவில்லை. அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த அரபு பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டியிருக்கா விட்டால், அவர்களின் நிலங்களைப் பறித்து யூதர்களை குடியிருத்தியிருக்காவிட்டால், அன்று இஸ்ரேல் என்ற தேசம் சாத்தியமாகியிருக்க மாட்டாது. ஏற்கனவே எமக்கு தெரிந்த உதாரணம் வரலாற்றில் உள்ளது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களில் சென்ற ஆங்கிலேயர்கள், அங்கே பூர்வீக செவ்விந்தியரின் நிலங்களை பறித்து, அங்கே ஆங்கிலேய காலனிகளை உருவாக்கி, பின்னர் அவற்றை இணைத்து "அமெரிக்கா" என்ற தேசம் பிரகடனம் செய்தனர்.



ARTICLE FROM - KALAIYAGAM.BLOGSPOT.COM
PHOTOS FROM - WIKIPEDIA.COM







No comments:

Post a Comment