கிப்லா மாற்றமும் உலகத் தலைமைத்துவமும்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
கிப்லா மாற்றமும் உலகத் தலைமைத்துவமும்
ரமலானுக்குப் பின் அண்ணலார் மிக அதிகமாக நோன்பு நோற்ற மாதம் ஷஅபான் மாதம். இது இஸ்லாமிய வரலாற்றில் முதன்மையான மற்றொரு நிகழ்வுக்கு சாட்சி வகிக்கும் மாதமும் கூட. பராஅத் இரவு பற்றிய விவாதங்களுக்கிடையே, எல்லோரும் மறந்து போன வரலாற்று நிகழ்வு அது. பைத்துல் முகத்தஸை நோக்கி தொழுது கொண்டிருந்த முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப மக்காவில் உள்ள கஅபாவை நோக்கித் தொழ ஆரம்பித்தது ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஷஅபான் மாதம் முதலே ஆகும்.
கிப்லா மாற்றம் என்பது தொழுகையின் சட்ட அம்சங்களுடன் தொடர்புடைய ஒரு பிரச்சினை மட்டுமன்று. தொழுகையின் போது கிப்லாவை நோக்கித் தான் நிற்க வேண்டுமா, கிப்லாவை நோக்கித் திரும்பினால் போதுமா? ஆகியவை எல்லாம் சட்ட நூல்களில் அடி முதல் நுனி வரை அலசி ஆராயப்பட்டுள்ளன என்றாலும் கிப்லா மாற்றம் தொடர்பான வரலாற்று ஆய்வுகளை அதிகம் காண முடிவதில்லை. கஅபாவை கிப்லாவாக நிர்ணயிப்பதற்கு முன் முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தில் உள்ள பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தனர். ஓரிறைக் கோட்பாட்டின் அடையாளச் சின்னமாக எல்லாக் காலத்திலும் திகழ்ந்த கஅபாவிற்கு பதிலாக, துவக்கத்தில் பைத்துல் முகத்தஸை கிப்லாவாக நிர்ணயம் செய்ததற்கான காரணம் என்ன?
அதைக் குறித்து குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள் : “(இதற்கு முன்பு) எந்தத் திசையை நோக்கி நீர் தொழுது வந்தீரோ, அதனைக் கிப்லாவாக நாம் ஆக்கி வைத்திருந்ததெல்லாம் யார் இறைத்தூதரைப் பின்பற்றுகிறார்கள்; யார் மாறிச் சென்று விடுகிறார்கள் என்பதை நாம் அறிவதற்காகத்தான்! இது (கிப்லா மாற்றம் மிக்க கடினமாகவே இருந்தது. ஆனால் அல்லாஹ் காட்டிய நேர்வழியைப் பெற்றிருந்தவர்களுக்கு அது சிறிதும் கடினமாக இருக்க வில்லை.” (2:143)
அரேபியர்கள் குருட்டுத்தனமான ஒரு சார்புத் தன்மை கொண்டவர்களாகவும், இனப் பெருமைப் பாராட்டுவதில் கர்வம் கொள்ளக்கூடியவர்களாகவும் இருந்தனர். குலப்பெருமையில் மூழ்கித் திழைத்த அவர்களுக்கு கஅபாவை விட்டுவிட்டு அவர்களின் பண்பாட்டுப் பிண்ணனியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத, பைத்துல் முகத்தஸை மையமாக ஆக்குவது என்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது. இந்த இனப்பெருமைக்கு சாவு மணியடிக்கும் விதத்தில்தான் பைத்துல் முகத்தஸ் கிப்லாவாக ஆக்கப்பட்டது. இத்தகைய குறுகிய கண்ணோட்டத்தையும் தீண்டாமையையும் இதயத்தில் வைத்துப் பூசிப்பவர்களுக்கு இறைச் செய்தியின் உன்னதத்தை உள்வாங்கிக் கொள்வது சாத்தியமாக இருக்கவில்லை. அதனால்தான் இத்தகைய குறுமதியாளர்களையும் மண்ணின் மைந்தர்கள் என வாதிடுவோர்களையும் இறைமார்க்கத்தில் இணைந்திடுகின்ற பரந்த மனப்பாண்மை கொண்டவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்பது தான் துவக்கத்தில் பைத்துல் முகத்தஸைக் கிப்லாவாக நிர்ணயம் செய்ததில் உள்ள இறை விவேகம்.
மூடத்தனமான அரபு தேசியவாத்திற்குப் பதிலாக மனித குலத்தை ஒன்றாகக் கருதுகின்ற, சமமாகப் பாவிக்கின்ற நிலையை அண்ணலாரிடம் பயிற்சி பெற்ற முஸ்லிம் சமூகம் பெற்று விட்டதால் பைத்துல் முகத்தஸின் தலைமைப் பதவியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என அல்லாஹ் கருதியதாலேயே இந்தக் கிப்லா மாற்றம் நடைபெற்றது. கிப்லா மாற்றம் என்பது தொழுகையின் திசை மாற்றச் சடங்காக மட்டும் இருக்க வில்லை என்பதே இதன் பொருள்.
கிப்லா மாற்றத்தைப் பிரகடனம் செய்வதற்கு முன்னோடியாக மேலே விவரிக்கப்பட்ட விவாதத்தை அல்லாஹ் ஆரம்பிப்பது இப்படித்தான்; “ மக்களில் அறிவீனர்கள், ( இவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?) இவர்கள் எந்த கிப்லாவை முன்னோக்கிக் கொண்டிருக்கிறார்களோ அதிலிருந்து (திடீரென) இவர்களைத் திருப்பியது எது? என நிச்சயம் கேட்பார்கள். (நபியே! அவர்களிடம்) சொல்வீராக : கிழக்கு, மேற்கு அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களை அவன் நேரான வழியில் செலுத்துகின்றான். மேலும் இவ்வாறே (முஸ்லிம்களான) உங்களை நாம் உம்மத்தன் வஸத்தன் – சமநிலையுடைய சமுதாயமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்கு சான்று வழங்குபவர்களாயும், இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராயும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக! (2 : 142 – 143)
இந்த வசனத்தை விளக்கி மௌலானா மௌதூதி எழுதுகின்றார் : முஹம்மது நபியின் சமுதாயத்தின் தலைமைத்துவத்தைக் குறித்த பிரகடனம் இது. இவ்வாறே என்ற சொல்லில், முஹம்மது நபியின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு நேரிய வழியை அறிந்து கொள்ளவும், அதன் மூலம் முன்னேறி உம்மத்தன் வஸத்தன் என்ற உயர் தகுதியைப் பிடிக்கவும் காரணமான வழிகாட்டுதலின் பக்கமும், கிப்லாவை மாற்றிய நிகழ்வின் பக்கமும் என இரண்டையும் சுட்டிக்காட்டும் குறிப்பு உள்ளது. கிப்லா ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று மட்டுமே அதனைக் குறித்து அறிவீனர்கள் புரிந்து வைத்திருந்தனர். உண்மையில், பைத்துல் முகத்தஸிலிருந்த கிப்லாவை கஅபாவுக்கு மாற்றியது உலகத் தலைமைத்துவப் பதவியிலிருந்து அல்லாஹ் இஸ்ரவேலர்களை அதிகாரப்பூர்வமாக அகற்றி விட்டான். முஹம்மது நபியைப் பின்பற்றியவர்களுக்கு அந்தப் பதவியை அளித்துள்ளான் என்பதன் அடையாளமாகும். (தஃப்ஹீமுல் குர்ஆன் பாகம் 1, பக்கம் 108, குறிப்பு 144)
பின்னர் கிப்லா மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ பிரகடனம் அருளப்பட்டது. “நபியே! உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தை நோக்குவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதோ, நீர் எந்தக் கிப்லாவை விரும்புகின்றீரோ அதன் பக்கமே நாம் உம்மை திருப்பி விடுகின்றோம். மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா ஆலயம்) பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இனி நீங்கள் எங்கிருப்பினும் (தொழுகைக்காக) அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புவீராக!” (2:144).
உம்முடைய முகம் அடிக்கடி வானத்தை நோக்குவதை நாம் காண்கின்றோம் என்றும், நீங்கள் விரும்புகின்ற கிப்லாவின் திசையை நோக்கி நாம் உம்மைத் திருப்பி விடுகின்றோம் என்றும் கூறப்பட்டிருப்பதை விளக்கும்போது அவர் எழுதுகின்றார்: “…….இஸ்ரேலியர்களின் தலைமைப் பதவி முடிவடைந்து விட்டது எனவும், பைத்துல் முகத்தஸின் தலைமைப் பதவி முடிவடைந்து விட்டது எனவும், இப்றாஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய மையத்தை நோக்கித் திரும்பும் வேளை வந்து விட்டது எனவும், அண்ணலார் அவர்களே எண்ணத் தொடங்கி விட்டார்கள். (பாகம் 1, பக்கம் 111, குறிப்பு 146).
கிப்லா மாற்றம் தொடர்பான விவாதம் இவ்வாறு முடிவடைகிறது: நீர் எங்கிருந்து புரப்பட்டுச் சென்றாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் திருப்புவீராக. உங்களுக்கு எதிராக மக்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கக் கூடாது என்பதற்காக நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின் போது) அதன் பக்கமாக திருப்புங்கள். – ஆனால் அவர்களைச் சேர்ந்த அக்கிரமக்காரர்கள் தர்க்கித்துக் கொண்டுதான் இருப்பார்கள். எனவே நீர் அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். எனக்கே அஞ்சுவீர்களாக! எதற்காகவெனில், நான் என் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்க வேண்டும் என்பதற்காகவும், மேலும் நீங்கள் நேரிய பாதையை அடையக்கூடும் என்பதற்காகவும்தான். (2:150)
இந்த வசனத்தில் அடிக்குறிப்பிட்டுள்ள பகுதியை விளக்கி மௌதூதி எழுதுகின்றார் : இஸ்ராயீலர்களிடமிருந்து பறிக்கப்பட்டு இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள உலக தலைமைத்துவம் என்பது ஓர் அருட்கொடையாகும். ஒரு சமுதாயத்திற்கு இம்மையில் கிடைக்கின்ற மிகச் சிறந்த நன்மை என்னவெனில், அவர்களை உலக மக்களின் தலைவர்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஆக்குவதாகும். இறையச்சம், சத்திய மார்க்கத்தின் மூலம் மனித சமூகத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகும். இந்தப் பதவியும் சிறப்பும் ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்படுவதன் பொருள், அல்லாஹ்வின் அருட்கொடை அவர்களுக்கு முழுமையாக கிடைத்தது விட்டது என்பதாகும். கிப்லா மாற்றம் தொடர்பான இந்தக் கட்டளை மேலே குறிப்பிடப்பட்ட சிறப்புத் தகுதி உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதன் தெளிவான அடையாளமாகும்.
சுருக்கத்தில் இஸ்ராயீலர்களிடம் இருந்த உலகத் தலைமைத்துவத்தைப் பறித்து முஹம்மது நபியின் சமூகத்திடம் ஒப்படைப்பதற்கான நிகழ்வாகவே இருந்தது கிப்லா மாற்றம். இங்கே சில கேள்விகள் எழுகின்றன. ஏன் அல்லாஹ் இப்படி ஒரு முடிவை எடுத்தான்? இஸ்ராயீலர்களிடமிருந்து தலைமைப் பதவியைப் பறிக்கின்ற போது அவர்களிடம் காணப்பட்ட குறைபாடுகள் என்னென்ன?
இஸ்ராயீலர்களிடமிருந்த குறைபாடுகளையும் தகுதியின்மையையும் திருக்குர்ஆன் இவ்வாறு பட்டியலிடுகிறது :
1.பரம்பரை வாதம்
“ஒரு யூதராகவோ (கிறிஸ்தவர்கள் வாதிக்கின்றபடி) ஒரு கிறிஸ்தவராகவோ இல்லாத எவரும் சுவனம் புக மாட்டார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். இவை அவர்களின் நப்பாசைகளே ஆகும்.” (2:111)
இன்னுமோர் இடத்தில் அவர்களின் பாரம்பர்ய வாதத்தைக் குறித்து கூறுகிறது : “(யூதர்கள் கூறுகின்றார்கள்:) நீங்கள் யூதர்களாக இருங்கள்; நேர் வழி பெறுவீர்கள்! (கிறிஸ்தவர்கள் கூறுகின்றார்கள்:) நீங்கள் கிறிஸ்தவர்களாக இருங்கள்; நேர்வழி பெறுவீர்கள்! (அவர்களிடம்) சொல்வீராக : இல்லை, நான் அனைத்திலிருந்தும் முகம் திருப்பி இப்ராஹீமின் வழிமுறையை ஏற்றுக் கொண்டுள்ளேன். மேலும் அவர் இணை வைப்பவர்களில் ஒருவராய் இருக்கவில்லை.” (2:135)
மனித சமூகத்தை ஒன்றாகக் கருதுகின்றவர்களுக்கே உலகத் தலைமைப் பதவியை நிர்வகிக்கின்ற தகுதி உள்ளது எனும் படிப்பினையை இந்த வசனத்தில் அவர்களின் பாரம்பர்ய வாதத்தைக் கடுமையாக விமர்சித்த வண்ணம் அல்லாஹ் கூறுகின்றான்.
2.சத்தியத்தை மறைத்தல்
கிப்லா மாற்றம் தொடர்பான விவாதம் தொடங்குவதற்கு சற்று முன்பு, இஸ்ராயீல்கள் சத்தியத்தை மறைக்கின்றனர் எனக் குர்ஆன் குற்றம் சாற்றுகிறது.
“அல்லாஹ்விடமிருந்து வந்த ஒரு சான்றைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதனை மறைப்பவனை விடப் பெரிய அக்கிரமக்காரன் யார்? மேலும் நீங்கள் செய்து கொண்டிருப்பவைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.” (2:140)
கிப்லா மாற்ற விவாதத்தின் இறுதியில் சத்தியத்தை மறைத்து வைக்கக் கூடியவர்களுக்கு கிடைக்கக் கூடிய இம்மை – மறுமை தண்டனைகள் குறித்து குர்ஆன் விளக்கியுள்ளது.
(2:159,160 & 174) உத்தம சமுதாயம், சமநிலைச் சமுதாயம் ஆகிய சிறப்புகளைப் பெற்ற ஒரு சமூகத்தினரிடம் சத்தியத்திற்கு சான்று பகர்தல் எனும் மிக முக்கியமான தகுதி இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
3. தவறான விளக்கம் அளித்தல்.
அல்லாஹ் கூறுகின்றான் : “சொற்ப விலைக்கு விற்று, சிறிது இலாபம் பெறுவதற்காக தமது கைகளாலேயே ஒரு (சட்ட) நூலை எழுதிப் பின்னர், இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்று (மக்களை நோக்கிக்) கூறுவோருக்குக் கேடுதான்! எனவே, அவர்களுடைய கைகள் எழுதியதும் அவர்களுக்குக் கேடுதான். மேலும் அதனைக் கொண்டு அவர்கள் சம்பாதித்ததும் அவர்களுக்குக் கேடுதான்!” (2:79)
வேத வசனங்களிலிருந்து சுயநலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கானவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு மீதியுள்ளவற்றைப் புறக்கணிக்கவும் செய்கின்ற இஸ்ராயீல்களின் தீய பழக்கத்தைக் குர்ஆன் கண்டிக்கிறது : “நீங்கள் வேதத்தின் ஒரு பகுதியை நம்பி, மறு பகுதியை நிராகரிக்கிறீர்களா? உங்களில் இவ்வாறு செய்பவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறெந்தக் கூலியும் இல்லை. மறுமை நாளிலோ மிகக்கடுமையான வேதனையின் பக்கம் அவர்கள் திருப்பப்படுவார்கள். மேலும் நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற (இழி) செயல்கள் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை.” (2:85). இஸ்ராயீல்களின் தகுதியையும், பதவியையும் பறித்து இவ்வுலகிலேயே இழிவுபடுத்தப்படுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது குர்ஆன்.
4. இறைச் சட்டங்களைப் பரிகசிப்பது.
அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளை மதிக்காமல் இறைச் சட்டங்களையும் இறைத்தூதரின் போதனைகளையும் பரிகாசம் செய்த இஸ்ராயீல்களைக் குர்ஆன் கண்டிக்கிறது. பசுவின் மீது கொண்ட பக்தியின் காரணமாக அதை வழிபடும் பழக்கத்தைக் கொண்ட இஸ்ராயீல்களை அதிலிருந்து விடுபடச் செய்யவும், அது தவறு என்பதை உணர்த்தவும் பசுவை அறுக்கும்படி கூறப்பட்டபோது அவர்கள் கடைப்பிடித்த நிலைப்பாடு இதற்கு எடுத்துக்காட்டாகும். (2: 67 – 74)
ஓர் உத்தம சமுதாயத்திடம் இருக்க வேண்டிய சிறப்புத் தன்மைகள் தவிர அடிப்படை மனித இயல்புகளான மன வலிமை, உறுதி, விவேகம், வீரம், கடின உழைப்பு, விடுதலை வேட்கை, குறிக்கோள் மீதான பற்று, அர்ப்பணிப்பு, விவகாரங்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல், திட்டமிடல், மக்களைச் செயல்படத் தூண்டும் ஆற்றல் ஆகிய குணங்களை இழந்த நிலையில் இருந்தனர் இஸ்ராயீல்கள் என்பதை திருக்குர்ஆன் ‘அல்பகரா’ அத்தியாயத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது.
இத்தகைய ஆன்மீக, மனித வள ஆற்றல்கள் மேலிடுகின்ற போது தான் இறைவனின் பிரதிநிதி எனும் பொறுப்பு ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்படுகிறது. இத்தகைய ஒரு குழுவினர் உலகில் இல்லை என்றால், மனித வள ஆற்றல்களை மட்டுமே கொண்ட, உலக விவகாரங்களில் மேம்பட்டு நிற்கின்றவர்களுக்கு அல்லாஹ் உலகத் தலைமைப் பதவியை வழங்குகின்றான். இதுவும் அல்லாஹ்வின் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
நன்றி : சமரசம் செப்டம்பர் 2009
தமிழில் – சுல்தானா
No comments:
Post a Comment