Saturday, June 4, 2011

இந்தத் தாலிபான்கள் யார்?

காபூல் நகர மேயராக சுருங்கியுள்ள ஹமீத் கர்ஸாஈ 2001 இல் அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தபோது அமெரிக்கக் காங்கிரஸின் தலையாட்டி பொம்மையாக நிலைநிறுத்தப்பட்டார். ஆப்கான் குண்டுகள், மனிதப் பிணங்கள் இரத்தக் கறைகள் படிந்த தேசமாகவே உடைத்து உருமாற்றப்படுகின்றது. தெற்காசியாவில் எழுச்சிபெறும் இஸ்லாமிய அலைகளை தடுத்து நிறுத்த 90 களில் சி.ஐ.ஏ. தீட்டிய திட்டமும் இன்றைய பயங்கரவாதத்திற்கெதிரான ஒபாமாவின் போரும் கருத்திலும் உள்ளடக்கத்திலும் எவ்விதத்திலும் வேறுபடவில்லை. வரலாறு நிச்சயம் இவர்களை மன்னிக்காது.

1992 இல் ரஷ்யப் படைகளிடமிருந்து ஆப்கான் முழுமையாக மீட்கப்பட்ட பின்னர் முஜாஹிதீன்களிடையே வெடித்த உள்நாட்டுப் போர் அந்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரும் துரதிஷ்டமே. முன்னாள் ஜனாதிபதி புர்ஹானுத்தீன் ரப்பானி தலைமையிலான அரச தரப்புப் படை குல்புத்தீன் ஹிக்மத்தியார் தலைமையிலான ஹிஸ்புல் இஸ்லாமி, அப்துல் அலி மிஸ்ராவி தலைமையிலான ஹிஸ்புல் வஹ்தா, ஜெனரல் உஸ்பகி அப்துர் ரஷீத் துஸ்தூம் தலைமையிலான படை என நான்கு படைகளும் மோதும் நிலை உருவானது. குறிப்பாக றப்பானியின் அரச படைக்கெதிராகவே ஏனைய படைகள் ஒன்று கூடின. 

இம்மோதல்கள் ஆப்கானின் பொருளாதாரத்தை பின்னோக்கித் தள்ளியதோடு பாதுகாப்பு, அரசியல் ஸ்திரம் என்பவற்றையும் பாதித்தது. இதனால் றப்பானியின் அரசாங்கத்தால் எதையும் சமாளிக்க முடியாத நிலை தோன்றியது. தலைநகரில் தோன்றிய சிவில் யுத்தம் நாட்டின் பெரும்பாலான நகரங்களுக்கும் பரவியது. இந்நிலையில் 1994 ஒக்டோபரில் ஆப்கான் களத்தில் புதியதோர் படைப்பிரிவு தாலிபான் என்ற பெயரில் இறங்கியது. தென்பகுதியான கந்தகாரிலிருந்து களமிறங்கிய இப்படைதான் இன்று தெற்காசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்தின் பணிக்குழு வொன்று 1993 ஏப்ரலில் பாகிஸ்தான் வந்தது. அறேபிய ஆப்கான் எனப் பெயர் குறிக்கப்பட்ட கோவைகளை (Files) ஆராய்வதற்காகவே இக்குழு அங்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இது இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆப்கான் நிலைமைகளை நுணுக்கமாக ஆராய்ந்தது. ஆய்வின் முடிவுகளையும் விதப்புரைகளையும் காங்கிரஸிடம் ஒப்படைத்தது. இதில் குல்புதீன் ஹிக்மத்தி யாருக்கான பாகிஸ்தானிய உதவிகள் பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடனான அவரது தொடர்புகள் என்பன நிறுத்தப்படவேண்டுமென்று கோரப்பட்டிருந்தது. இதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது அமெரிக்க நிருவாகம் அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கியது. 

ஹிக்மதியார் ரஷ்யாவுக்கெதிரான போரில் தான் எதிர்பார்த்த அனைத்தையும் அடைந்துகொண்டார். ஆனால், இன்னும் ஹிக்மதியார் மாறவில்லை. தனது நண்பரான பாகிஸ்தானின் தீர்வுத் திட்டத்தை அவர் புறக்கணிக்கின்றார் என அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மந்திர ஆலோசனை வழங்கியது. 1978 இல் ரஷ்யா ஆப்கானை ஆக்கிரமித்தது முதல் அமெரிக்கா வின் ஆப்கானுக்கான உதவிகள் அனைத்தும் பாகிஸ்தான் ஊடாகவே கிடைத்தன.

அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் 93 இல் மேற்கொண்ட இவ்விஜயத்தை அடுத்து பாகிஸ்தான் அமெரிக்க மத்திய உளவு நிறுவனத்துடன் இணைந்து செயற்பட முன்வந்தது. இதன்மூலம் அமெரிக்காவின் அச்சுறுத்தல் களிலிருந்த விடுபடலாம் என்று பாகிஸ்தான் எண்ணியது. அதேவேளை, பயங்கரவாதத் திற்கு ஆதரவளிக்கும் நாடு என்ற விமர்சனத்திலிருந்து விலகிக் கொள்ளலாமென்று எண்ணியது.
இதன்படி அமெரிக்காவைத் திருப்திப்படுத்த எண்ணிய பாகிஸ்தான் அமெரிக்காவின் அனைத்து ஆணைகளுக்கும் அடிபணிந்தது. ஆப்கானுக்கு உதவி வழங்கும் பாகிஸ்தான் உளவு அதிகாரிகளை பதவிநீக்கியது. போதைவஸ்து கடத்தல்காரர்களையும் அமெரிக்காவிடம் ஒப்படைத்தது. முடிவில் ஆப்கான் அரச தரப்புப் படையான ஷா மஸ்ஊத் தலைமையில் செயற்பட்ட படையை பலவீனப்படுத்த இரு நாடுகளும் உடன்பட்டன. ஹிக்மத்தியாரை வளைத்துப் போடவும் திட்டங்களைத் தீட்டின. இதன்மூலம் இஸ்லாமிய ஆட்சி உதயமாகப் போகின்றது என்ற கனவுகளைச் சுமந்திருந்த ஆப்கானின் போராட்டத்தை திசை மாற்றுவதே இவர்களின் நோக்காக இருந்தது. 

அப்போதைய பாகிஸ்தான் வெளிநாட்டமைச்சர் இக்குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சாரத்தில் இறங்கினார். அதேவேளை, பாகிஸ்தானின் அப்போதைய உள்நாட்டமைச்சர் ஜெனரல் நஸ்ருல்லாஹ் பாபர் புதிய படைப்பிரிவொன்றை உருவாக்குவதற்கான அரசாங்க அங்கீகாரத்தைப் பெற்றார். ஆப்கான் போராட்டத்தில் இப்படைப்பிரிவை களமிறக்கி உள்நாட்டில் குழப்ப நிலைகளைத் தூண்டுவதன் மூலம் இஸ்லாமிய ஆட்சி உதயமாவதைத் தடுப்பதே அதன் பிரதான நோக்கமாக இருந்தது.

பாகிஸ்தானின் அறபு மத்ரஸாக்களில் கற்று வந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆப்கான் மாணவர்களை நஸ்ருல்லாஹ் பாபர் ஒன்றுசேர்த்தார். இவர்கள் ரஷ்யாவுடனான போராட்டத்தின் போது களத்தில் குதித்து சாதனை படைத்தனர். ரஷ்யாவின் வீழ்ச்சியை அடுத்தே தாய்நாட்டைப் பிரிந்து பாகிஸ்தானில் கல்விபெற காலடி எடுத்து வைத்தவர்கள். 

ஆப்கான் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்பொருட்டு ரஷ்யாவை விரட்டியடித்ததன் பின்னர் முஜாஹிதீன்களில் பலர் பாகிஸ்தானில் தஞ்சமடைந்தி ருந்தனர். இவர்களும் தாலிபான் படைப்பிரிவில் இணைக்கப் பட்டனர். மாணவர்களால் இயக்க முடியாத விமானங்கள் கனரக ஆயுதங்கள் என்பவற்றை இயக்குவதற்கு அவர்கள் பயிற்று விக்கப்பட்டனர். அப்போது பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் பெனாஸிர் பூட்டோ என்பது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தான் அரசு அறபு மத்ரஸாக்களின் நிருவாகிகளது ஒத்துழைப்போடு இப்புதிய படைப்பிரிவை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. இவர்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்கள் கற்கும் பாகிஸ்தான் மத்ரஸாக்கள் இழுத்து மூடப்பட்டன.

"இஸ்லாத்தில் ஜிஹாத் பர்ளு ஐனாகும். அறிவு கற்பதோ பர்ளு கிபாயாவாகும். எனவே இக்கணமே நீங்கள் போராட்டத் துக்கு வெளிக்கிளம்புவது உங்கள் மீது கடமையாகும். உங்கள் தாய்நாட்டு மண்ணிலே சீர்குலைந்து போயுள்ள இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிலைநாட்டுவது உங்கள் மீதான கடமையாகும். உங்கள் கடமையை நிறைவேற்றி விட்டு நீங்கள் கல்வியைத் தொடரலாம்" என்று பாகிஸ்தான் அரசதரப்பால் தாலிபான்கள் போதையூட்டப் பட்டனர். பாகிஸ்தான் அரசதரப்பு மேற்கொண்ட இவ்வகை மூளைச் சலவைக்கு ஆட்பட்ட மத்ரஸா மாணவர்கள் போராட்டத்திற்கான உத்வேகத்தைப் பெற்றனர்.

உண்மையில் அமெரிக்க உளவு நிறுவனம் மற்றும் பாகிஸ்தான் அரச இயந்திரத்தின் உள்நோக்கத்தை அப்பாவி மத்ரஸா மாணவர்கள் அப்போது புறிந்துகொள்ளவில்லை. 1994 ஒக்டோபர் 31 இல் தாலிபான்கள் ஆப்கானியக் களத்தில் இறக்கப்பட்டனர். 30 லொறி களைக் கொண்ட பாகிஸ்தான் வியாபாரக் கூட்டமொன்று சமன், கந்தஹார் ஆகியவற்றினூடே மத்திய ஆசியாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது அவற்றைத் தாக்குவதற்கு ஆப்கானியப் படைகள் முயன்றன. 

இச்சந்தர்ப்பத்திலேயே தாலிபான்கள் ஆப்கானியப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் சாக்கில் களத்தில் குதித்தன. தொடர்ந்து கந்தஹார் மாநிலத்தைத் தாலிபான்கள் கைப்பற்றினர். நாளடைவில் பல்வேறு நகரங்கள் கிராமங்கள் ஏன் மாநிலங்கள்கூட தாலிபான் களின் காலடியில் விழுந்தன. தாலிபான்கள் இஸ்லாத்தைப் பற்றிக் கூறிவந்த பாரம்பரியமான கருத்துக்கள் ஆப்கானின் பழங்குடி மக்களிடையே வரவேற்பைப் பெறலானது. 

இப்போது ஆப்கானின் போராட்டக் களமும் முற்றிலும் வேறுதிசை நோக்கி நகர்த்தப் பட்டது. ஹிக்மத்தியாரின் படைப்பிரிவு தோற்கடிக்கப் பட்டது. அவரது ஆயுதக் கிடங்குகளும் கைப்பற்றப் பட்டன. இதன்மூலம் சீ.ஐ.ஏ.யும் பாகிஸ்தானும் எதிர்பார்த்த இலக்கு எட்டப்பட்டது. மற்றொரு புறத்தில் ஷா மஸ்ஊத் தலைமையிலான அரசபடையும் பலவீனப்படுத்தப்பட்டது.

ஆயினும் 1998 மார்ச்சில் அரசபடையிடமிருந்து தாலிபான்கள் பெரும்தோல்வி யைத் தழுவினர். அடுத்த கட்டமாக என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிய தாலிபான் களின் ஒரே கோஷம் நாம் இஸ்லாமல்லாத அத்தனை சக்திகளையும் முறியடிப்போம். ஆப்கானில் நிஜமான இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவோம் என்பதே. 

ஆனால், ஆப்கானில் தாலிபான்கள் களமிறங்கியது முதல் இன்றுவரை அந்நாடு எதிர்கொண்ட, எதிர்கொண்டு வரும் இழப்புகளும் வலிகளும் வருத்தங்களும் வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதுமே நிகழ்ந்ததில்லை. இன்று இஸ்லாத்தின் பெயரால் ஆப்கானில் நிகழும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்களும் துப்பாக்கிச் சமர்களும் இலட்சக்கணக்கான மக்களை பலியெடுத்துவிட்டது. 

ஆப்கானை நகரகத்தின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்துவதற்கு அமெரிக்கா விதித்த சதி வலையில் பாகிஸ்தான் வீழ்ந்தது. பாகிஸ்தானின் சதிவலையில் தாலிபான்கள் உருவாகினர். ரப்பானிக்கும் ஹிக்மத்தியாருக்கு மிடையில் ஏற்பட்ட அதிகாரச் சண்டை ஆப்கானிஸ்தானில் ஒரு இஸ்லாமிய ஆட்சி உதயமாகுமென்ற கனவை உடைத்துச் சரித்துவிட்டது. 

இன்று தாலிபான்களை வேட்டையாட களமிறங்கி யிருக்கும் பாகிஸ்தானின் அரசபடைகள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை படுகொலை செய்து வருகிறது. அமெரிக்கா வின் பொறியிலிருந்து இன்னும் யூஸுப் கிலானியின் அரசு விடுபடவில்லை என்பதையே களநிலவரங்கள் காட்டுகின்றன. காபூல் நகர மேயராக சுருங்கியுள்ள ஹமீத் கர்ஸாயி 2002 இல் அமெரிக்கா ஆப்கானை ஆக்கிரமித்தபோது அமெரிக்கக் காங்கிரஸின் தலையாட்டி பொம்மையாக நிலைநிறுத்தப் பட்டார். ஆப்கான் குண்டுகள், மனிதப் பிணங்கள் இரத்தக் கறைகள் படிந்த தேசமாகவே உடைத்து உருமாற்றப்படு கின்றது. 

தெற்காசியாவில் எழுச்சி பெறும் இஸ்லாமிய அலைகளை தடுத்து நிறுத்த 90 களில் சி.ஐ.ஏ. தீட்டிய திட்டமும் இன்றைய பயங்கரவாதத்திற்கெதிரான ஒபாமாவின் போரும் கருத்திலும் உள்ளடக்கத்திலும் எவ்விதத் திலும் வேறுபடவில்லை. வரலாறு நிச்சயம் இவர்களை மன்னிக்காது.


ARTICLE BY - சகோதரர் ரவுப் செய்ன் 

1 comment:

  1. வாளால் வாழ்க்கை நடத்திய முகம்மதுவும் குரானும் ஒரு போதும் மக்களை நிம்மதியாக வாழ விடாது. ஆப்பானிஸ்தான் அழந்து கொண்டிருப்பது ஆப்பானிஸ்தானத்து மக்களால்தான்.மண்ணின் மதத்தைவிட்டுவிட்டு அரேபிய நாட்டு மதத்தைப்பின்பற்றும் வரை அநத நாட்டில் அமைதி திரும்பாதுஇஅழிவ நிற்காது

    ReplyDelete