(குறிப்பு: இந்தக் கட்டுரை 2002 ம் ஆண்டு, அமெரிக்காவின் "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" உச்சத்தில் இருந்த நேரத்தில் எழுதப்பட்டது.)
செய்மதித் தொலைபேசி மூலம் பின்லாடன் தனது தயாருடன் உரையாற்றியதைக் கூட தாம் பதிவு செய்து வைத்திருப்பதாக அமெரிக்க சர்வதேச உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தெரிவித்து ஒரு வாரமாகவில்லை. எங்கிருந்தோ வந்த இரண்டு விமானங்கள் நியூயோர்க்கின் உலக வர்த்தக மையக் கட்டடத்தை இடித்துத் தள்ளின. இந்தச் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திலேயே, யார் இதன் சூத்திரதாரி என்பதை ஊகித்தது அமெரிக்க அரசு. ஆப்கானிஸ்தான் மலைக்குகையொன்றிலிருந்து கொண்டே பின்லாடன்தான் இந்தக் காரியத்தைச் செய்து முடித்ததாகவும் அறிவித்தது. நடந்த சம்பவத்திற்குப் பழிவாங்குவதற்காக தாம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து பின்லாடனைப் பிடித்து வரப்போவதாக அறிவித்தது. பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு ஆப்கானிஸ்தான் எங்கேயிருக்கிறது எனத் தெரியாவிட்டாலும் (நஷனல் ஜோக்கிராபிக் நடாத்திய கணக்கெடுப்புகளின்படி) தமது அரசின் போருக்கு ஆதரவளித்தனர். செப்டம்பர் 11 தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே பல நாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த அமெரிக்க அரசு அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கும் திட்டத்தை முன்வைத்ததை பிரிட்டிஷ் பத்திரிகையொன்று தெரிவித்தது.
நியூயோர்க் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி இன்றுவரை முன்னுக்குப்பின் முரணான தகவல்களே வந்துள்ளன. புலனாய்வு அறிக்கைகள் பல ஊகங்களை அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்பட்டன. எரிந்து இடிந்து நொருங்கிக் கிடந்த இடிபாடுகளிலிருந்து கடத்தல்காரரின் பாஸ்போட் கண்டெடுக்கப்பட்டதாகவெல்லாம் செய்திகள் வந்தன. இதற்கிடையே கட்டடம் எரிந்தபோது எழுந்த புகைமண்டலத்தில் சாத்தானின் முகம் தெரிந்ததாக கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் சிலர் புரளி கிளப்பி விட்டனர். நடந்த சம்பவம் ஆண்டவரின் தீர்ப்பு என்றும், ஓரினச் சேர்க்கையாளரும், பெண்ணிலைவாதிகளும் குற்றவாளிகள் என ஒரு கிறிஸ்த்தவ மதப்பிரசாரகர் உளறித் திரிந்தார். ஒருவேளை இது உலக அழிவின் ஆரம்பம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
மறுபக்கத்தில் பின்லாடனோ அல்லது அல்-கைதா இயக்கமோ தாக்குதலுக்கு எவ்வித உரிமையையும் கோரவில்லை. அதே நேரம் பாலஸ்தீனத்திலும் ஈராக்கிலும் தமது சகோதரர்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவிற்கு, "இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்," என்று கருத்துத் தெரிவித்தனர். இந்த ஒளிநாடாக்களை ஒளிபரப்பியதன் முலம் சர்வதேசப் பிரபலத்தைப் பெற்றது, "அரபு சி.என்.என்." என அழைக்கப்படும் அல்-ஜசீரா தொலைக் காட்சிச்சேவை. சி.என்.என் கூட இவர்களிடம் செய்தி கேட்டுக் கெஞ்சுமளவிற்கு அல்-ஜசீராவின் முக்கியத்துவம் உணரப்பட்டது. செய்தி வர்த்தகத்தில் நிலையான இடத்தைப்பிடிக்க விரும்பும் அல்-ஜசீரா தொடர்ந்து பல 'பின்லாடனின் வீடியோக்களை' ஒளிபரப்பிப் புகழ் தேடியது. ஆனால் வரவர அதன் நம்பகத் தன்மை குறைந்து வருவது அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது எங்கிருந்து வருகிறது அல்லது நம்பிக்கையான இடத்திலிருந்து வருகிறதா என ஆராயாமல் கிடைக்கும் ஒளிநாடாக்களை ஒளிபரப்பி வருவதால் அவற்றின் நிஜத்தன்மை பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது.
இதைவிட அல்-ஜசீரா பேட்டியெடுத்ததாகச் சொல்லி மோசடித் தகவல்களும் பத்திரிகைகட்கு அனுப்பப்பட்டுள்ளன. பின்லாடனின் வலதுகரம் என்று சொல்லப்பட்ட ஒருவரின் பேட்டி பிரபலமாகப் பேசப்பட்டது. அதில் "அந்த வலதுகரம்", வெகுவிரைவில் அணுவாயுதம் பாவித்து பெருநாசம் விளைவிக்கக்கூடிய தாக்குதலை நடத்தப்போவதாக தெரிவித்திருந்தது. பின்னர் அந்தப்பெயரில் யாரும் அல்-கைதா இயக்கத்தில் இல்லை என்றும் அல்-ஜசீரா செய்தியாளர்கள் யாரும் அப்படி ஒரு பேட்டியை எடுக்கவில்லையென்றும் தெரியவந்தது. இந்தப்பேட்டி முழுக்க ஒரு மோசடிச் செய்தி என்பது அம்பலமானதும், ஒரு ஆசியப் பத்திரிகை தனது வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு, யாரிடமிருந்து செய்தி வந்தது என்பதை ஆராய்ந்துள்ளது. இன்றுவரை செய்தியின் மூலம் மர்மமாகவேயுள்ளது. இதன்பிறகு பின்லாடன் ஆதரவாளர்கள் யாராவது அல்-கைதா பேரில் விளையாடுகிறார்களா, அல்லது வெளிநாட்டு அரசின் உளவுத்துறையொன்று இவ்வாறான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான்களும் அல்-கைதாவும் விரட்டப்பட்டவுடனேயே அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் அல்-கைதாவின் ஆவணங்கள் தேடி நாடு முழுவதையும் குடைந்தெடுத்தார்கள். சி.என்.என் தொலைக்காட்சிச் சேவை, அல்-கைதா அணுவாயுதங்கள் தயாரித்தது பற்றிய குறிப்புகளை கண்டெடுத்ததாகக் காட்டியது. அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த இரசாயனச் சூத்திரங்களும், பௌதீகக் குறிப்புகளும் அணுவைப் பற்றியும், அணுகுண்டு வெடிப்பின் விளைவுகளைப் பற்றியும் எழுதியிருந்தது உண்மைதான். ஆனால் இவையொரு பல்கலைக்கழக இரசாயன-பௌதீக பேராசிரியரின் அல்லது மாணவனின் குறிப்புப் புத்தகம்போலக் காணப்படுவதாக அவற்றை சி.என்.என் ற்கு மொழிபெயர்த்துக் கொடுத்த மொழிபெயர்ப்பாளர் கூறியுள்ளார். மேலும் இந்த 'ஆதாரம்' போர்க்கருவிகள், வெடிகுண்டுகள் தயாரிப்பது பற்றிய பிற குறிப்புப் புத்தகங்களுடனே கண்டெடுக்கப்பட்டள்ளது. இதனால் எங்கோ ஒரு பயிற்சி முகாமில் அல்-கைதா உறுப்பினர்களுக்குப் போர்க்கருவிகள் பற்றிய வகுப்புகள் நடைபெற்ற போது பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கூட மேற்படி 'ஆதாரத்தைப்' பத்திரிளையாளர் மாநாட்டில் காட்டினார்.
தென்னமெரிக்காவில் பிறேசில், ஆர்ஜன்ரீனா, பராகுவே ஆகிய நாடுகள் சந்திக்கும் எல்லைப் பகுதியில் நயாகரா போன்ற மிகப்பெரிய நீர்வீழ்ச்சியிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தை அடிக்கடி சுட்டிக்காட்டிய அமெரிக்க அரசு, அங்கே அல்-கைதாவின் செயற்பாடுகள் அதிகரித்துவருவதாகக் கூறியது. சி.என்.என் கூட தன்பங்கிற்கு இதுகுறித்த செய்திகளை அடிக்கடி ஒளிபரப்பியது. ஆப்கான் சென்ற சி.என்.என் செய்தியாளர் அங்கே யாருடைய வீட்டுச் சுவரிலோ மாட்டப்பட்டிருந்த நீர்வீழ்ச்சிப் படத்தைக் காட்டி, அல்-கைதாவின் தென் அமெரிக்கத் தாக்குதல் திட்டத்திற்கான ஆதாரமாக காட்டிப் பேசினார். உண்மையில் இந்த "நீர்வீழ்ச்சியின் கதை" புரியாத புதிராகவுள்ளது. இந்தப் புதிரின் முடிச்சை அவிழ்க்க தென்னமெரிக்கா சென்ற சில பத்திரிகையாளர்கள், எந்தவொரு அல்-கைதா நடமாட்டத்தையும் காணவில்லை. அவர்கள் கண்டதென்னவோ கள்ளச் சந்தை வியாபாரிகளை மட்டும்தான். அவ்விடத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் லெபனானிய குடியேறிகள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அமெரிக்காவின் விசமப் பிரச்சாரம் காரணமாக தற்போது அங்கே உல்லாசப் பிரயாணிகள் வருவது குறைந்து விட்டதாக உள்ளூர்வாசிகள் குறைப்பட்டனர்.
பத்திரிகையாளர்கள் துருவித்துருவி விசாரித்தபோது பல எதிர்பாராத தகவல்கள் கிடைத்தன. அந்த நீர்வீழ்ச்சிப் பிரதேசம் மிகப்பெரிய நல்ல தண்ணீர் சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. பிரமாண்டமான நீர் மின்சார உற்பத்திச்சாலையும் இயங்கி வருகின்றது. உலகின் மூன்றாவது பெரிய சந்தையான தென் அமெரிக்கக் கண்டத்தின் மையத்தில் அந்தப் பிராந்தியம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக நடக்கலாம் என ஒரு எழுத்தாளர் எதிர்வு கூறினார். பெருகிவரும் உலகமக்கள் தொகைக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது வருங்காலத்தில் குறைந்து போகலாம். இதனால் தேசங்கடந்த வர்த்தக ஸ்தாபனங்கள் இப்போதே நீர்நிலைகளைக் கைப்பற்றப் போராடுகின்றன. தென்னமெரிக்க நீர்வீழ்ச்சியை வருங்காலத் தண்ணீர் வியாபாரத்திற்காகக் கைப்பற்றும் உள்நோக்கோடுதான் அல்-கைதாப் புரளி பரப்பப் பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்க இடமுண்டு.
இந்தோனிஷியாவில் அதிகளவு உல்லாசப் பிரயாணிகள் போகும், பாளித்தீவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம்கூட அல்-கைதாவின் கணக்கில் எழுதப்பட்டுள்ளது. மீண்டும் பின்லாடன் தனது வேலையைக் காட்டிவிட்டார் என்ற கருத்துப் பரப்பப்பட்டது. ஆனால், இந்தோனிசியாவில் அரச மட்டத்தில்கூட யாரும் இதை நம்பத் தயாரில்லை. எப்போதும் ஆளும்வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும், அமெரிக்காவைப் பின்பற்றும் வணிகப் பத்திரிகையொன்று, இது இந்தோனிஷியாவைச் சீர்குலைக்க அமெரிக்க சி.ஐ.ஏ யின் சதியென்று தலையங்கம் தீட்டியது. கிழக்குத் திமோர் சுதந்திர நாடாகிய காலத்திலிருந்து, இந்தோனிஷிய ஆளும் வர்க்கத்தின் மத்தியில் மேற்குலகு பற்றிய அவநம்பிக்கை, அதிருப்தி காணப்படுகின்றது. அதை நிச்சயப்படுத்துவது போல், உல்லாசப் பிரயாணிகளை இந்தோனிஷியாவைத் தவிர்க்குமாறு மேற்குலக அரசுகள் விடுத்த அறிவிப்புகள் கடுமையான கண்டனத்திற்குள்ளாகியது. "செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவிற்குப் போக வேண்டாம்" என்று, தமது பிரஜைகளைத் தாம் அறிவுறுத்தவில்லையென்றும், அண்மையில் கூடிய ஆசியான் மகாநாட்டில் விசனம் தெரிவிக்கப்பட்டது.
விரும்பிய படியெல்லாம் தமது நலன்களுக்கு எதிரான நாடுகளை, இயக்கங்களை அல்கைதாவுடன் தொடர்பு படுத்திவிடுவது மேற்குலக நாடுகளின் வழக்கமாகிவிட்டது. மதசார்பற்ற ஈராக்கை அல்-கைதாவுடன் தொடர்புபடுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன. சொந்த நாட்டிலேயே யாரும் இதை நம்பத் தயாராயில்லை. இதே போல லெபனானிய ஹெஸ்புள்ளாவுடன், நேபாளிய மாவோயிஸ்டுக்களுடன் எல்லாம் தொடர்பு படுத்தி கதைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றிற்கெல்லாம் எந்தவித ஆதாரமும் இல்லை. இதே நேரத்தில் ரஸ்யாவின் செச்சனியப் பிரிவினை வாதிகளுக்கும் அல்-கைதா இயக்கத்திற்குமிடையே உண்மையிலேயே தொடர்பிருப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்படுகிறது. ரஸ்ய அரசு அவ்வப்போது அலறினாலும், இதை மேற்குலகச் செய்தியூடகங்கள் சிறுமைப் படுத்திவருகின்றன. ஆப்கானிஸ்தானில் வைத்து தலிபான் காலத்தில் செச்சனியப் போராளிகளுக்குப் பயிற்சியளிக்ப் பட்டதும், அல்-கைதாவின் அரபுப் போராளிகள் செச்சனியாவில் ரஸ்ய இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டதும் மறுக்க முடியாத உண்மைகள்.
1998 வரை பின்லாடன் என்ற பெயரையும், 2001 வரை அல்-கைதா என்ற பெயரையும் உலகம் கேள்விப்பட்டிருக்கவில்லை. இந்தப் பெயர்களை உலகம் முழுக்க அறியச்செய்து பிரபலமாக்கியது சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்க அரசுதான். இவ்வாறு தனது எதிரிகளுக்கு உலகப்புகழ் தேடிக்கொடுத்ததில் அமெரிக்க அரசுக்கு ஆதாயமில்லாமலில்லை. பனிப்போர்க் காலத்தில், சோவியத் யூனியனையும், "சர்வதேசக் கம்யூனிஸ்ட் சூழ்ச்சிகளையும்" காட்டி அரசியல் நடாத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகள் என சந்தேகிக்கப்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மேற்கைரோப்பாவில் நேட்டோ இராணுவம் அமைக்கப்பட்டு, ஆயுத உற்பத்தி விற்பனை அதிகரிக்கப்பட்டது.
உலகில் எந்தெந்த நாடுகளில் "கம்யூனிச அபாயம்" தோன்றியதோ, அங்கெல்லாம் அமெரிக்க இராணுவத் தலையீடு இடம்பெற்றது. தற்போது சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் கம்யூனிச அபாயமும் இல்லாமற் போய் விட்டது. அதன் அர்த்தம் எதிரிகள் இல்லையென்பது தான். ஆனால்,எதிரிகளற்ற சூழ்நிலையில் ஆயுத உற்பத்தி-விற்பனை நிறுவனங்கள் எவ்வாறு இலாபமடையமுடியும்? நோயாளிகள் பெருகினால் தானே, மருந்துக் கம்பனிகளுக்கு இலாபம் கிடைக்கும்? அதேபோல், போர்கள் நடந்தால், அல்லது உலகில் பாதுகாப்புப் பற்றிய அச்சம் நிலவும் வரையில், ஆயுதக் கம்பனிகளுக்கு ஆதாயம். எதிரிகளற்றுத் தவித்த அமெரிக்காவிற்கு, எங்கிருந்தோ வந்த பின்லாடனும் அல்-கைதா இயக்கமும் நிச்சயமாகத் திருப்தியைக் கொடுத்திருக்கும். முன்பு சோவியத் யூனியன் இருந்த இடத்திற்கு அல்-கைதாவும், கம்யூனிஸ்ட்டுகள் இருந்த இடத்திற்கு முஸ்லீம்களும் வந்து விட்டார்கள்.
பொதுவாக இந்தக்காலம் பின்லாடனை அல்லது அல்-கைதாவைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட செய்திகளே வந்த வண்ணமிருந்தாலும், அல்-கைதா அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையற்ற ஒரு சிறு குழுவல்ல. தேசிய மட்டத்திற் செயற்படும் பிற ஆயுதபாணிக் குழுக்களிலிருந்து அல்-கைதா மாறுபட்டது. இதன் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சவூதி அரேபிய, எகிப்தியப் பிரஜைகளைக் கொண்டிருந்தபோதும், அவர்களது போராட்ட வாழ்வு தென்னாசியாவில் அரபு பேசாத ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்தது. ரஸ்யர்களின் அடக்குமுறையிலிருந்து முஸ்லீம் சகோதரர்களை விடுதலை செய்யும் நோக்கில் அங்கே போனவர்கள், இன்று ரஸ்ய இராணுவம்வெளியேறிவிட்ட நிலையில் உலகில் பிற முஸ்லீம் நாடுகள் மீது இயல்பாகவே தமது பார்வையைத் திருப்பினர்.
அன்று இவர்களின் தாய்நாடான சவூதி அரேபியாவிலும், எகிப்திலும் அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள், "கடவுள் நம்பிக்கையற்ற" சோவியத் யூனியனை எதிரியாகக் காட்டி, போருக்கு அனுப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று சோவியத் யூனியனின் அபாயம் கடந்த காலமாகிவிட்ட நிலையில், உள்நாட்டுப் பிரச்சினைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. நாடு திரும்பிய ஆப்கான் போராளிகள், தமது நாட்டுச் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சொந்த மக்களை அடக்கியாண்டு வருவதையும், அதற்கு அமெரிக்கா துணையாகவிருப்பதையும் கண்டனர். இதுதான் அவர்களது கோபம் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பியதற்கான காரணம். மேலும் இன்னமும் தீர்க்கப்படாத பாலஸ்தீனப்பிரச்சனையும், இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கு அமெரிக்கா நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருவதும் அவர்களது சீற்றத்தை அதிகரிக்கச் செய்தது.
ஒரே நாடென்றில்லாமல், பல நாடுகளிலிருந்து வந்த தொண்டர் படை உறுப்பினர்களை ஆப்கானில் வைத்துச் சந்தித்தவர்கள், தமது அனுபவங்களை, கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதன் அடிப்படையில் பொஸ்னியாவிலும், கொசோவாவிலும், செச்சனியாவிலும் முஸ்லீம் சகோதரர்களுக்கு உதவச் சென்ற அல்-கைதா ஒரு சர்வதேச இயக்கம் என்பதை நிரூபிக்கின்றது. இன்றுவரை இவர்களின் இயங்கு தளம் அரபு நாடுகளாகவும் மத்திய ஆசியாவாகவுமே இருந்து வருகின்றது. இந்த நாடுகளை அமெரிக்க மேலாண்மை அரசின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை செய்வதையே தமது இலட்சியமாகக் கொண்டுள்ளனர். தமது போரை விரிவுபடுத்தி அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடாத்தியிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. உலகில் மிகப்பெரிய வல்லரசுடன் மோத வேண்டியிருப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் ஏற்கெனவே இன்னொரு வல்லரசான சோவியத் யூனியனுடன் மோதி அதை வீழ்த்திவிட்டதாக பெருமையோடு சொல்லித் திரிகின்றனர்.
SOURCE FROM -- (கலையரசன், 30.12.2002)[kalaiy.blogspot.com/]
No comments:
Post a Comment